Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்டார்க்டிகா—ஆபத்திலிருக்கும் நிலப்பகுதி

அன்டார்க்டிகா—ஆபத்திலிருக்கும் நிலப்பகுதி

அன்டார்க்டிகாஆபத்திலிருக்கும் நிலப்பகுதி

விண்வெளி வீரர்கள் விண்வெளியிலிருந்து பூமியைப் பார்த்தபோது, அவர்களுக்கு நம்முடைய கிரகத்தில் பளிச்சென்று தெரிந்தது அன்டார்க்டிகாவின் பனிமூடிய பகுதியே என்று அன்டார்க்டிகா—தி லாஸ்ட் கான்டினட் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. “ஒரு பெரிய வெள்ளைநிற ‘லாந்தர்’ விளக்கு போல அது உலகின் அடிபாகத்தில் ஒளிவீசுகிறது” என்று விண்வெளி வீரர்கள் கூறினர்.

சுமார் 3,00,00,000 சதுர கிலோமீட்டர் ஐஸ் அன்டார்க்டிகாவில் உள்ளது, எனவே இது ஒரு மாபெரும் ஐஸ் உற்பத்திசாலையாக உள்ளது. இந்த நிலப்பகுதியில் விழும் உறைபனியால் பனித்தட்டுகள் உருவாகின்றன. புவியீர்ப்பு சக்தியால் இந்த பனித்தட்டுகள் மெதுவாக கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்கின்றன, பின்னர் கடலிற்குள் சறுக்கிவிழ அங்கே மாபெரும் பனிபாளங்கள் உருவாகின்றன.—பக்கம் 18-ல் பெட்டியை காண்க.

குறைந்து வரும் பனிபாளங்கள்

ஆனால் சமீப காலமாக பனி வேகமாக உருகிவிடுவதால் பனிபாளங்களின் அளவு குறைந்துவிட்டது, சில பனிபாளங்கள் மறைந்துவிட்டன. லார்சன் பனிபாளம் என்பது கிட்டத்தட்ட 1,000 கிலோமீட்டர் நீளமுள்ளது. 1995-ல் இதன் ஒரு பாகமான 1,300 சதுர கிலோமீட்டர் ஐஸ் நொறுங்கி ஆயிரக்கணக்கான பனிப்பாறைகளாக உடைந்துபோனதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

ஐஸ் குறைவதால் இதுவரை பாதிக்கப்பட்டிருப்பது அன்ட்டார்க்டிக் தீபகற்பமே. தென் அமெரிக்காவின் ஆண்டெஸ் மலைத்தொடரின் தொடர்ச்சியாக இருக்கும் இந்த S வடிவ தீபகற்பத்தில் கடந்த 50 வருடங்களில் 2.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடியிருக்கிறது. இதன் விளைவாக, ஒரு காலத்தில் உறைபனி சூழ்ந்திருந்த ஜேம்ஸ் ராஸ் தீவை இப்போது கப்பலில் சுற்றிவர முடிகிறது. ஐஸ் குறைந்துவிட்டதால் தாவரங்களின் வளர்ச்சி அதிகமாகியுள்ளது.

அன்டார்க்டிக் தீபகற்ப பகுதியில் மாத்திரமே குறிப்பிடத்தக்க அளவில் ஐஸ் உருகுவதால் உலகம் முழுவதும் உஷ்ணமாகிவிடுகிறது என்ற கருத்தை சில விஞ்ஞானிகள் நம்பத் தயாராக இல்லை. நார்வே நாட்டு ஆய்வு ஒன்றின்படி ஆர்க்டிக் ஐஸ்கூட குறைந்துகொண்டே வருகிறது. (வட துருவம் ஒரு நிலப்பகுதியின்மீது அமைந்தில்லை என்பதால் ஆர்க்டிக் ஐஸ் உண்மையில் உறைந்த கடல்நீராகவே உள்ளது.) உலகம் உஷ்ணமானால் என்னவெல்லாம் நடக்கும் என சொல்லப்பட்டதோ அது நடந்துவிட்டதற்கு இந்த மாற்றங்கள் அத்தாட்சி என்பது ஆய்வின் முடிவு.

வெப்பநிலை மாற்றங்களால் அன்டார்க்டிகா பாதிக்கப்பட்டது என்பதுதான் பெரிய பிரச்சினையா? இல்லை. அன்டார்க்டிக் முழு உலகிற்கும் ஆற்றும் தொண்டு என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். “நம்முடைய கோளத்தின் தட்பவெப்பநிலையை நிர்ணயம்செய்யும் ஒரு முக்கியமான என்ஜின்” என்பதாக அன்டார்க்டிகா கண்டம் விவரிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், இந்த நிலப்பகுதியில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்தால் எதிர்காலத்தில் உலகத்தின் தட்பவெப்பநிலை வெகுவாக பாதிக்கப்படலாம்.

ஆக்ஸிஜனின் இன்னொரு வகைதான் ஓசோன், இது வளிமண்டலத்தில் ஒரு அடுக்காக அமைந்திருக்கிறது. பூமியை தீங்கிழைக்கும் புறஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. இந்தப் புறஊதா கதிர்களே கண்கள் கெட்டுப்போவதற்கும் சரும புற்று நோய்க்கும் காரணம். இப்போது அன்டார்க்டிகாவுக்கு மேலே வளிமண்டலத்தின் ஓசோன் அடுக்கில் ஒரு ஓட்டை உருவாகியுள்ளது, அது ஐரோப்பாவைவிட இரண்டு மடங்கு பெரியது. இதனால், புறஊதா கதிர்கள் அதிகரித்துவருவதால் அன்டார்க்டிக்கில் ஆய்வாளர்கள் தங்கள் சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க வேண்டும். விசேஷமாக கோட்டிங் செய்யப்பட்ட கண்ணாடிகளை அணிந்து தங்கள் கண்களைப் பாதுகாக்க வேண்டும். இதனால் கடல்வாழ் விலங்குகள் எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாகும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

மென்மையான நிலப்பகுதி—மெதுவாக நடங்கள்

அன்டார்க்டிகாவை சுற்றிப்பார்க்க வருகிறவர்களுக்கு மேலே காணப்படும் தலைப்பு நல்ல வரவேற்பாக இருக்கும். ஏன் அப்படி? இதற்கு பல காரணங்கள் இருப்பதாக ஆஸ்திரேலிய அன்டார்க்டிக் பிரிவு கூறுகிறது. முதலாவதாக அன்டார்க்டிகாவின் சூழமைப்பு மிகவும் எளிமையானது; எனவே சுற்றுச்சூழல் எளிதில் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இரண்டாவதாக, தாவரங்கள் இங்கு மிகவும் மெதுவாக வளருவதால் பாசி வளர்ந்திருக்கும் ஒரு இடத்தில் காலை பதித்துவிட்டால் பத்து வருடங்கள் கழித்தும் அது மறையாமல் அப்படியே இருக்கும். அன்டார்க்டிகாவில் வீசும் பயங்கர குளிர் காற்றினால் தாவரங்களின் குடும்பமே அழிந்துவிடலாம். மூன்றாவதாக, கடுங்குளிரின் காரணமாக கழிவுபொருட்கள் அழுகுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். நான்காவதாக, தங்களுக்கே தெரியாமல் நுண்ணுயிர்களை ஜனங்கள் இங்கே கொண்டுவந்துவிடலாம்; மிகவும் தொலை தூரத்தில் இந்த கண்டம் தனித்திருப்பதால், இப்படிப்பட்ட நுண்ணுயிர்களால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. கடைசியாக, சுற்றுலா பயணிகளும் விஞ்ஞானிகளும் அடிக்கடி வந்துபோவது கரையோர பகுதிகளுக்குத்தான்—இந்தப் பகுதிகள்தான் கடல்வாழ் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் மிகவும் பிடித்தமான இடங்கள். அன்டார்க்டிகாவின் நிலப்பரப்பளவில் இது சுமார் 2 சதவீதமாக மட்டுமே இருப்பதால் சீக்கிரத்தில் இங்கு ஜனநெரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே இந்த மாபெரும் நிலப்பகுதியை நிர்வாகம் செய்வது யார் என்ற ஒரு கேள்வி எழும்புகிறது.

அன்டார்க்டிகாவில் யாருடைய ஆட்சி?

ஏழு நாடுகள் அன்டார்க்டிகாவை கூறுபோட்டுக் கொண்டாலும் அரசன் என்றோ குடிமக்கள் என்றோ எவரும் இல்லை என்ற நிகரில்லாத அந்தஸ்து ஒட்டுமொத்தமாக இந்த நிலப்பகுதிக்கு உண்டு. “உலகிலேயே அன்டார்க்டிகா மட்டுமே சர்வதேச ஒப்பந்தத்தால் ஆளப்படும் ஒரு நிலப்பகுதியாகும்” என்று ஆஸ்திரேலியன் அன்டார்க்டிக் பிரிவு அறிவிக்கிறது.

அன்டார்க்டிக் ஒப்பந்தம் என்றழைக்கப்பட்டு 12 அரசாங்கங்களால் கையொப்பமிடப்பட்ட ஒரு ஒப்பந்தம் 1961 ஜூன் 23-ஆம் தேதி அமுலுக்கு வந்தது. அது முதல் இதில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை 40-ஆக வளர்ந்துவிட்டிருக்கிறது. “மனிதகுலம் முழுவதும் நன்மையடையும் பொருட்டு அன்டார்க்டிகா தொடர்ந்து பிரத்தியேகமாக சமாதான நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும், சர்வதேச சச்சரவுகளுக்கு ஒரு இடமாக அல்லது காரணமாக இது ஒருபோதும் ஆகக்கூடாது என்பதை உறுதிசெய்வதே” இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

ஜனவரி 1998-ல் அன்ட்டார்க்டிக் ஒப்பந்தத்துக்கு அடிப்படையாக அமைந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசியல் அறிக்கை சர்வதேச சட்டமாக ஆனது. இந்த அரசியல் அறிக்கை, அன்டார்க்டிகாவில் குறைந்தப்பட்சம் 50 ஆண்டுகளுக்கு உலோகங்களையும் தாதுபொருட்களையும் பெறுவதற்காக சுரங்கம் வெட்டுவதை தடைசெய்கிறது. இந்த நிலப்பகுதியையும் அதன்மீது சார்ந்திருக்கும் கடலைச் சார்ந்த சூழியல் அமைப்பையும் அது “சமாதானத்துக்காகவும் விஞ்ஞானத்துக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள இடம்” என்பதாக குறிப்பிடுகிறது. இராணுவ நடவடிக்கைகள், ஆயுத பரிசோதனை, அணுசக்தி கழிவுப்பொருட்களை கொண்டுவந்து கொட்டுதல் ஆகியவை இங்கே தடைசெய்யப்பட்டுள்ளன. பனிசறுக்கு ஊர்தியை இழுத்து செல்லும் நாய்களுக்கும்கூட இங்கு தடைதான்.

அன்டார்க்டிக் ஒப்பந்தம் “சர்வதேச ஒற்றுமைக்கு வரலாறு காணாத உதாரணம்” என்பதாக வரவேற்கப்பட்டுள்ளது. ஆனால், யாருக்கு அன்டார்க்டிகாவை ஆட்சிசெய்ய உரிமை இருக்கிறது என்பது உட்பட தீர்வுகாணப்படாத பிரச்சினைகள் இன்னும் பல இருக்கின்றன. உதாரணமாக ஒப்பந்தத்தை யார் அமுலுக்கு கொண்டுவருவார், எப்படி? உறுப்பினராக இருக்கும் நாடுகள் எவ்விதமாக வளர்ந்துவரும் சுற்றுலா துறையை கையாளப்போகிறது? மென்மையாக இருக்கும் அன்டார்க்டிகாவின் சூழியலுக்கு இது மிகப் பெரிய ஆபத்தாயிற்றே. சமீப ஆண்டுகளில் அன்டார்க்டிகாவிற்கு வருடந்தோறும் 7,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துபோகிறார்கள். இது சீக்கிரத்தில் இரண்டு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் மற்ற பிரச்சினைகள் எழலாம். உதாரணமாக, அங்கே மதிப்புள்ள தாதுபொருட்களை அல்லது எண்ணெய் போன்றவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டால் என்ன ஆகும்? வியாபார நோக்குடன் எடுக்கப்படும் படையெடுப்பையும் தூய்மைக்கேட்டையும் ஒப்பந்தத்தால் தடுக்க முடியுமா? ஒப்பந்தங்கள் மாற்றப்படலாம், அன்டார்க்டிக் ஒப்பந்தம் ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. உண்மையைச் சொன்னால் இந்த ஒப்பந்தத்தின் 12-வது பிரிவு “ஒப்பந்தத்தில் உட்பட்டுள்ள பார்டிகளின் ஒருமித்த கருத்தின்படி எந்தச் சமயத்திலும் ஒப்பந்தத்தை திருத்துவதற்கு அல்லது மாற்றுவதற்கு” இடமளிக்கிறது.

ஆம், நவீன தொழில்மயமான உலகம் கடல் நீரில் கொட்டும் கழிவிலிருந்து அன்டார்க்டிகாவை எந்த ஒப்பந்தமும் பாதுகாக்க முடியாது. மனிதனின் பேராசையினாலும் அறியாமையினாலும் பூமியின் அடிபாகத்திலிருக்கும் அழகிய “வெள்ளை லாந்தர்” மாசடைந்துவிட்டால் அந்தோ பரிதாபம்! அன்டார்க்டிகாவை சேதப்படுத்தினால் அது மனிதகுலத்தை சேதப்படுத்துவதாகும். மனித உடலைப் போலவே முழு பூமியும் ஒன்றோடொன்று தொடர்புள்ளதாக இருக்கிறது, உயிரைக் காக்கவும் நம்முடைய சந்தோஷத்துக்காகவும் படைப்பாளர் அதை திறமையாக உரிய முறையில் இணைத்துள்ளார் என்பதே அன்டார்க்டிகா நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடமாகும்.

[பக்கம் 20-ன் பெட்டி/படங்கள்]

பனிப்பாளம் என்றால் என்ன?

அன்டார்க்டிகாவின் உட்பகுதியில் கொட்டும் பனிமழையிலிருந்து உருவாகும் பனி சிற்றாறுகள் கடற்கரைநோக்கி செல்கின்றன—சமீபத்தில் வந்த செயற்கை கோளின் படங்களின்படி சில சிற்றாறுகள் ஒரு வருடத்தில் அரை மைல் தூரத்தைக் கடக்கின்றன. இந்தப் பனி சிற்றாறுகள் பல ஒன்று சேர்வதால் மாபெரும் பனி ஆறுகள் உண்டாகின்றன. இவை கடலை அடைந்தவுடன் உறைந்துபோன இந்த ஆறுகள் தண்ணீரில் மிதக்கின்றன. இவையே பனிப்பாளங்கள் (ice Shelf). இதில் மிகப் பெரியது ராஸ் பனிப்பாளம். (இங்கே காட்டப்பட்டுள்ளது) ஏழு பனி சிற்றாறுகள் இதில் கலந்திருப்பதால் இதன் அளவு பிரான்சு நாட்டின் அளவாகும். சில இடங்களில் இது ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு பருமனாக இருக்கிறது. a

சாதாரணமான நிலைமைகளில் பனிப்பாளங்கள் முன்னோக்கி மட்டுமே செல்லும். இந்த சந்தர்ப்பத்தில் பனியாறுகள் இந்த பனிப்பாளத்தோடு சேர்ந்து பரப்பளவை அதிகரிக்கின்றன. பற்பசையை டியூபிலிருந்து வெளியே பிதுக்குவதைப் போல பனிப்பாளத்தின் விளிம்பு இன்னும் அதிகமாக கடலுக்குள் தள்ளப்படுகிறது. இப்படிப்பட்ட பெரிய பாளங்கள் சிறு துண்டுகளாக உடைந்து பனிப்பாறைகளாகின்றன. ஒருசில பனிப்பாறைகள் “13,000 சதுர கிலோமீட்டர் அளவுகூட இருக்கும்” என்று தி உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. ஆனால் சமீப ஆண்டுகளில் பனி பாளங்கள் உடைவது அதிகரித்திருக்கிறது, ஒருசில பனிப்பாளங்கள் மறைந்தே விட்டன. ஆனாலும் இதனால் கடல் மட்டம் உயரவில்லை. ஏன் அப்படி? ஏனென்றால் பனிப்பாளங்கள் மிதந்துகொண்டு இருப்பதால் அவற்றின் எடை தண்ணீர் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருக்கும். ஆனால் அன்டார்க்டிக்கின் நிலப்பரப்பிலுள்ள பனி உருகுமேயானால் அது 3,00,00,000 கனசதுர கிலோமீட்டர் அளவுள்ள நீர்தேக்கத்தை கடலுக்குள் கொட்டுவதற்கு சமமாக இருக்கும்! அப்போது கடல் மட்டம் கிட்டதட்ட 65 மீட்டர் உயர்ந்துவிடும்!

[அடிக்குறிப்பு]

a பனிப்பாளங்களை பனிகுன்றுகளோடு (pack ice) குழப்பிக்கொள்ளக்கூடாது. குளிர்காலத்தில் மேற்பரப்பிலுள்ள நீர் உறைந்துவிடும்போது பனித்தட்டுகள் (ice floes) உருவாகின்றன. இந்தப் பனித்தட்டுகள் ஒன்றுசேர்ந்து பனிகுன்றுகள் ஆகின்றன. கோடையில் இதற்கு நேர் எதிர்மாறானது சம்பவிக்கிறது. பனிப்பாறை (icebergs) பனிகுன்றுகளிலிருந்து தோன்றுவது கிடையாது, ஆனால் அவை பனிப்பாளங்களிலிருந்து தோன்றுகின்றன.

[படம்]

மிகப் பெரிய பனிக்கட்டிகள் ராய் பனிப்பாளத்திலிருந்து பிரிகின்றன. இந்த பனிப்பாளம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 65 மீட்டர் வரை உயருகிறது

[படத்திற்கான நன்றி]

Tui De Roy

[பக்கம் 22-ன் படம்]

வெட்டெல் நீர்நாய்க்குட்டி

[படத்திற்கான நன்றி]

போட்டோ: Commander John Bortniak, NOAA Corps