Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்டார்க்டிகா—கடைசி எல்லை

அன்டார்க்டிகா—கடைசி எல்லை

அன்டார்க்டிகா—கடைசி எல்லை

ஆஸ்திரேலியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்

அன்டார்க்டிகாவின் சில பகுதிகளில் எப்படிப்பட்ட கடுங்குளிர் நிலவுகிறது என்பதை ஒரு எழுத்தாளர் இவ்விதம் விளக்குகிறார்: “இரும்பை கீழே போட்டால் அது கண்ணாடிபோல சிதறிவிடும் . . . ஐஸ்ஸில் துளைபோட்டு மீன் பிடித்தால் ஐந்தே நொடிகளில் அந்த மீன் கல்போல உறைந்துவிடும்.” இங்கே வழக்கத்தை மீறிய நிலைமைகள் காணப்படுகின்றன. புல் பூண்டு என்று எதுவுமே இல்லாமல் ஒரு அழகு. சில சமயங்களில் தோன்றி நம்மை மயங்க வைக்கும் தென்துருவ விண்ணொளி. இதையெல்லாம் பார்த்தால் நாம் வேறு ஒரு உலகத்துக்கு வந்துவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றும்.

ஆனால் அன்டார்க்டிகா இந்த உலகில்தான் உள்ளது. இதை ஒரு மாபெரும் இயற்கை ஆய்வுக்கூடத்திற்கு ஒப்பிடலாம். பூமி, வளிமண்டலம், மனித நடவடிக்கைகள் உட்பட உலக சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஆகியவற்றை இந்த ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்யலாம். தற்சமயம் இப்படிப்பட்ட ஆய்வுகளில்தான் அறிவியல் அறிஞர்கள் மிகவும் அக்கறை காட்டுகின்றனர். தென்துருவப் பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆய்வின்படி ஏதோ கெட்டது நடப்பதற்கான அறிகுறி தெரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அன்டார்க்டிகா ஏன் விசித்திரமான ஒரு நிலப்பகுதியாக உள்ளது என்பதை நாம் முதலில் பார்க்கலாம்.

உலகில் தனித்திருக்கும் இந்த நிலப்பகுதி முரண்பாடுகள் மிக்கது. இது மிகவும் அழகானது, மனிதனின் கைகளால் கசக்கப்படாதது, ஆனால் மனிதன் உயிர் வாழ முடியாத இடம் இது. இங்குதான் அதிகமாக காற்றடிக்கிறது, கடுங்குளிர் பிரதேசம். இருந்தாலும், உலகிலேயே இந்த கண்டம்தான் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் இடம். இங்கு மற்ற நிலப்பகுதிகளில் இருப்பதைவிட மழை குறைவு. ஆனால், பூமி முழுவதிலுமுள்ள நல்ல தண்ணீரில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இங்கேதான் ஐஸ் வடிவில் தஞ்சமடைந்திருக்கின்றன. இங்கிருக்கும் ஐஸ்ஸின் சராசரி பருமன் சுமார் 2,200 மீட்டர்களாகும். இதனால் அன்டார்க்டிகா மிக உயரமான கண்டமாக, சமுத்திர மட்டத்துக்கு மேல் சுமார் 2,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது உலகில் ஐந்தாவது பெரிய கண்டமாகவும் உள்ளது. இவ்வளவு பெரிய கண்டத்தில் நிரந்தரமாக வீடுகட்டி, சொந்தம் கொண்டாடும் மனிதர் யாருமே இல்லை. சொல்லப்போனால் சுமார் ஒரு சென்டிமீட்டர் நீளமுள்ள இறக்கை இல்லாத ஒருவகை கொசு மட்டுமே இங்கே உள்ள நிரந்தர ‘ராஜா’.

செவ்வாய் கிரகத்துக்கு போய்வந்த ஓர் உணர்வு!

தைரியத்தைத் திரட்டி நீங்கள் அன்டார்க்டிகாவின் உள்ளே சென்றால் உயிரினங்கள் குறைந்துகொண்டே போவதைக் காணமுடிகிறது. வறண்ட பள்ளத்தாக்குகள் என்றழைக்கப்படும் பகுதிக்குள் செல்லும்போது உயிரினங்களே இல்லையோ என்றே நினைக்கத்தோன்றும். சுமார் 3,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்தப் போலார் பாலைவனங்கள் பெரும்பாலும் அன்டார்க்டிக்கிற்கு அப்பால் மலைகளில் அமைந்துள்ளது, இது மலைத்தொடராக கண்டம் முழுவதும் பரவி கிடக்கிறது, சில இடங்களில் இது 4,300 மீட்டருக்கும் உயரமாக எழும்பி நிற்கிறது. கடுங்குளிரான பலத்த காற்று வறண்ட பள்ளத்தாக்கு முழுவதிலும் வீசி விழுகின்ற பனிக்கட்டியை அடித்துச் சென்றுவிடுகிறது. இந்தப் பள்ளத்தாக்குகள்தான் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு மிகவும் நெருக்கமாக ஒத்திருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. ஆகவே செவ்வாய் கிரகத்துக்கு வைக்கிங் விண்வெளி சோதனை கலத்தை அனுப்புவதற்கு முன்பு அதை சோதனை செய்ய இதுவே மிகச் சிறந்த இடம் என்று கருதப்பட்டது.

ஆனால் வறட்சியான பள்ளத்தாக்குகளிலும் உயிரினங்களைக் காணமுடிகிறது! சிறு துவாரங்கள் நிறைந்த பாறைகளின் உள்ளே இருக்கும் வெற்றிடங்களில் மிகவும் கடினமான நிலைமைகளிலும் உயிர்வாழும் கிருமிகள், பாசிகள், காளான்களைக் காணலாம். சிறிதளவு ஈரமிருந்தாலே அவைகளுக்குப் போதும். இவை வாழும் இடத்திற்கு வெளியே அழகான பாறைகளை காணமுடியும்; இவை எண்ணிலடங்கா நூற்றாண்டுகளாக அன்டார்க்டிக்கில் வீசிவரும் ஓயாத காற்றினால் பளபளப்பாக்கப்பட்டு, கற்பனை செய்ய முடியாத புது புது வடிவத்தில் காணப்படுகின்றன.

கண்டுபிடிக்கப்படும் முன்னரே பெயர் சூட்டப்பட்டது

பண்டைய காலத்தில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானிகள் தென்பாதி கோளத்தில் மாபெரும் நிலப்பகுதி இருக்கலாம் என்று சந்தேகித்தனர். உதாரணமாக, வடபாதி கோளத்தில் இருப்பது போல தென்பாதி கோளத்திலும் ஒரு நிலப்பகுதி இருக்கவேண்டும் என்ற கருத்தை அரிஸ்டாட்டில் கூறினார். “வடபாதி கோளம் ஆர்க்டோஸ், கரடி என்ற நட்சத்திர கூட்டத்தின் கீழே இருப்பது போலவே தெற்கே உள்ள அறியப்படாத நிலம் அன்டார்க்டிகோவாக அதாவது அதற்கு எதிர்நிலையில் இருக்கவேண்டும் என அரிஸ்டாட்டில் (கி.மு. 384-322) வாதாடி”யதாக அன்டார்க்டிகா—கிரேட் ஸ்டோரீஸ் ஃபிரம் தி ஃபோரஸன் கான்டினட் என்ற புத்தகம் கூறுகிறது. ஆகவே, கண்டுபிடிக்கப்படுவதற்கு சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே பெயர் சூட்டப்பட்ட பெருமை அன்டார்க்டிகாவிற்கு உண்டு!

1772-ல் பிரிட்டன் நாட்டு ஆய்வாளர் கேப்டன் ஜேம்ஸ் குக் என்பவர், தெற்கே இருப்பதாக கருதப்பட்ட இந்த நிலப்பகுதியை தேடி கண்டுபிடிக்கும் எண்ணத்தோடு கப்பலில் பயணம் செய்தார். அவர் மாபெரும் பனிக்கட்டி பாறைகள் நிறைந்த ஓர் உலகினுள் பிரவேசித்து “பனிக்கட்டி தீவுகள்” என்று அவற்றை அழைத்தார். “அவற்றில் சில, சுமார் [மூன்று கிலோமீட்டர்] சுற்றளவும் 20 மீட்டர் உயரமும் இருந்தன. ஆனால், கொந்தளிக்கும் சமுத்திரத்தின் இராட்சத அலைகள் அவற்றின்மீது வந்து மோதின. இதிலிருந்து அலைகளின் வேகமும் எடையும் எவ்வளவு பலமாக இருந்தன என்பதை புரிந்துகொள்ளலாம்” என்று அவர் எழுதினார். இந்த கண்டத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் தென்திசை நோக்கிப் பயணித்த குக் 1773-ஆம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி ரெஸல்யூஷன் என்ற கப்பலோடும் அட்வென்ச்சர் என்ற ஒரு துணைக் கப்பலோடும் அன்டார்க்டிக் வட்டத்தை முதல் முறையாக கடந்தார். கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற மனஉறுதியோடு கடல் யாத்திரை செய்த குக் ஊக்கத்தை கைவிடாமல் பனிக்கட்டிகளையும் உடைத்துக் கொண்டு முன்னேறினார்; ஆனால் கடைசியில் அவருடைய கப்பலால் ஒரு அடி கூட முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது “தெற்கே பனிக்கட்டியைத் தவிர வேறொன்றையும் என்னால் பார்க்கவே முடியவில்லை” என்று அவர் தன் பதிவில் எழுதினார். அவர் இன்னும் 120 கிலோமீட்டர் பயணம் செய்திருந்தால் அன்டார்க்டிக் மண்ணில் கால் வைத்திருப்பார். ஆனால் அவரோ திரும்பிவிட்டார்.

ஆக அன்டார்க்டிகாவை முதலில் பார்த்தவர் யார்? முதல் முதலாக அதில் காலைப் பதித்தவர் யார்? இன்றுவரை அது யாருக்கும் நிச்சயமாக தெரியாது. திமிங்கலம் அல்லது நீர்நாயை வேட்டையாட சென்றவர்களாககூட இருக்கலாம், ஏனென்றால் குக் வீடு திரும்பியபின் அங்கே கரையோரத்தில் ஏராளமான நீர்நாய்களையும் பென்குவின்களையும் திமிங்கலங்களையும் பார்த்ததாக சொன்னதை கேள்விப்பட்ட வேடர்கள் அவ்விடத்துக்கு விரைந்தனர்.

ரத்தத்தால் சிவந்த பனிக்கட்டி

“வனவிலங்குகள் ஒரு பெரிய மந்தையாக இங்கே வாழ்ந்து வருவதை தற்செயலாக குக் அறிந்து உலகிற்கு வெளிப்படுத்தினார்” என்பதாக சாவுக்கேதுவான மோதல் என்ற ஆங்கில புத்தகத்தில் ஆலன் மூர்ஹெட் என்பவர் எழுதினார். இதனால் “அன்டார்க்டிக் விலங்குகளுக்கு ஏற்பட்ட கதி ஒரு பேரழிவு தான்” என்று மூர்ஹெட் கூறுகிறார். அன்டார்க்டிகா—கிரேட் ஸ்டோரீஸ் ஃபிரம் தி ஃபோரஸன் கான்டினட் என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவில் தென்துருவ பகுதியில் நீர்நாய் வேட்டை மோகம், தங்கம் வேட்டையை போல ஆனது. இந்த நீர்நாயின் தோலுக்கு சீனாவிலும் ஐரோப்பாவிலும் தீராத டிமான்டு எப்போதும் இருந்துவந்தது. நீர்நாய்கள் இருந்த இடங்களிலெல்லாம் அவற்றைத் துடைத்து அழித்துவிட்ட வேடர்கள் நீர்நாய் இன்னும் வேட்டையாடப்படாத இடங்களை நோக்கி விரைந்தனர்.”

நீர்நாய் வேட்டை முடிந்த பின்பு திமிங்கல வேட்டை ஆரம்பமானது. “தென் கடலில் எத்தனை திமிங்கலங்களும் நீர்நாய்களும் கொல்லப்பட்டன என்பது யாருக்கும் தெரியாது” என்று மூர்ஹெட் எழுதுகிறார். “ஒரு கோடியா அல்லது ஐந்து கோடியா? எவ்வளவு என்று யாராலும் சொல்ல முடியாது; ஏனெனில் ‘வெள்ளை’ பனிப்பிரதேசம் ரத்தத்தால் ‘சிவந்தது’. இது, எதுவரை தொடர்ந்தது? ரத்தம் சிந்துவதற்கு அந்த ஜீவன்கள் அற்றுபோகும்வரை.”

அன்டார்க்டிக் கடலில் ஏராளமான உணவு கிடைப்பதால் நீர்நாய் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் கடலில் கிடைக்கும் உணவை உண்டு கடற்கரையில் ரெஸ்ட் எடுத்துக்கொள்கின்றன. அதே சமயத்தில் இப்படிப்பட்ட பிராணிகளைக் கொன்றுதின்னும் நிலவாழ் விலங்குகள் அன்டார்க்டிக் பிரதேசத்தில் இல்லை. எனவே நீர்நாய் போன்ற இந்த கடல்வாழ் உயிரினங்கள் கோடைகாலத்தில் அன்டார்க்டிக் கடற்கரையில் தஞ்சம் புகுகின்றன. எனவே, இப்போது சர்வதேச சட்டங்கள் எல்லா அன்டார்க்டிக் தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் வேலி கட்டியிருக்கின்றன. இருந்தாலும், அன்டார்க்டிக் தந்திரமாக தாக்கப்படுகிறது என்பதற்கு அங்கே அறிகுறி தென்படுகிறது. சர்வதேச ஒப்பந்தங்களால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாது.

[பக்கம் 17-ன் பெட்டி]

இரு துருவங்கள்

இரண்டுக்கும் ஒற்றுமைகள் இருந்தாலும், வட துருவமும் தென் துருவமும் இருவேறு துருவங்களாக செயல்படுவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன; பின்வருபவற்றைக் கவனியுங்கள்.

வடதுருவ பகுதியில் பனியும் கடலும்தான் இருக்கின்றன, கையளவு நிலம்கூட கிடையாது. பூமியிலுள்ள ஐந்தாவது மிகப் பெரிய கண்டம்தான் அன்டார்க்டிகா. அதன் மையப் பகுதிக்கு அருகில் தென்துருவம் உள்ளது.

வடதுருவத்தை சுற்றிலும் மக்கள் குடியிருக்கும் நிலப்பகுதிகளான அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா சூழ்ந்திருக்கிறது. ஆனால், தென்துருவம் அமைந்திருக்கும் அன்டார்க்டிகாவைச் சூழ்ந்திருப்பது ஒரு பெருங்கடல். பூமியில் உள்ள கடல்களில் இதுவே அதிக கொந்தளிப்பானது.

ஆர்க்டிக் வட்டத்திற்குள் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. ஆயிரக்கணக்கான தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் வாழிடங்களாக இது திகழ்கிறது. ஆனால், அன்டார்க்டிகாவில் ஒரு மனிதன்கூட நிரந்தரமாக வாழவில்லை. கடற்பாசி, நுண்கிருமிகள், பாசி, கற்பாசி, இரண்டு மலர்செடிகள், ஒரு சில பூச்சிகள் மட்டுமே அங்கேயே நிரந்தரமாக வாழும் உயிரினங்களாகும்.

‘ஆண்டுதோறும் பனிக்கட்டியின் பரப்பளவு குளிர்காலத்தில் அதிகரித்து பின்னர் கோடையில் குறைவதால் அன்டார்க்டிகா சுருங்கி விரியும் கண்டம் என்றழைக்கப்படுகிறது’ என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. குளிர் உச்சநிலையில் இருக்கையில், 1,600 கிலோமீட்டர் வரை கடல் பனிக்கட்டியாக உறைந்துவிடுகிறது. ஆர்ட்டிக்கிலும் இதைப்போலவே பனி அதிகரிப்பதும் குறைவதும் நடைபெறுகிறது. ஆனால் அன்டார்க்டிகாவை விட ஆறு மடங்கு குறைவு. எனவே, உலகின் வானிலையை அன்டார்க்டிகா அதிகமாக பாதிக்கிறது.

[பக்கம் 17-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

அட்லான்டிக் பெருங்கடல்

இந்து மகா சமுத்திரம்

பசிபிக் பெருங்கடல்

டிரேக் பாதை

ஜேம்ஸ் ராஸ் தீவு

லார்ஸன் பனிப்பாளங்கள்

அன்டார்க்டிக் தீபகற்பம்

ரோனி பனித்தட்டுகள்

வின்சன் மாசிஃப் (மிக உயரமான மலை, 4,897 மீட்டர்)

ராஸ் பனி தட்டுகள்

எரிபஸ் மலை (செயல்திறமுள்ள எரிமலை)

அன்டார்க்டிக் மலைகள்

தென் துருவம்

பூமியில் இதுவரை பதிவாகியிருக்கும் மிகக் குறைந்த வெப்பநிலை அன்டார்க்டிகாவில்தான்—மைனஸ் 89.2 டிகிரி செல்சியஸ்

0 500 மைல் 500 கிமீ

[படத்திற்கான நன்றி]

U.S. Geological Survey

[பக்கம் 18, 19-ன் படம்]

நீல பனிப்பாறையில் பென்குயின்ஸ்

[படத்திற்கான நன்றி]

© 2000 Mark J. Thomas/Dembinsky Photo Assoc., Inc.

[பக்கம் 19-ன் படம்]

திமிங்கலம்

[பக்கம் 19-ன் படம்]

தென்துருவ நீர்நாய்கள்

[பக்கம் 19-ன் படம்]

தென் துருவத்தில்

[படத்திற்கான நன்றி]

போட்டோ: Commander John Bortniak, NOAA Corps

[பக்கம் 19-ன் படம்]

ராஸ் பனிப்பாளம்

[படத்திற்கான நன்றி]

Michael Van Woert, NOAA NESDIS, ORA