Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அளவுக்கு மிஞ்சினால் அலங்காரமும் நஞ்சு

அளவுக்கு மிஞ்சினால் அலங்காரமும் நஞ்சு

பைபிளின் கருத்து

அளவுக்கு மிஞ்சினால் அலங்காரமும் நஞ்சு

“தற்பெருமை அறிவை அழித்துவிடும்” என்றார் பிரெஞ்சு எழுத்தாளர் ஒருவர். ஆம், பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் தற்பெருமைக்காக தங்களுடைய உடலை ஊசியால் குத்தியிருப்பதை அல்லது கத்தியால் கிழித்திருப்பதை எண்ணிப்பார்க்கையில் இதில் அறிவுக்கு வேலையே இல்லை என்பது தெரிகிறது. உதாரணத்துக்கு 19-வது நூற்றாண்டு பெண்கள் அழகான கொடியிடையை பெறுவதற்காக இடுப்பை இறுக்கி மூச்சுக்கூட விடமுடியாதபடி வலித்தாலும் சகித்துக்கொண்டு இறுக்கமான உள்ளாடைகளை அணிந்தனர். சிலர் தங்களின் இடையளவு வெறும் 325 மில்லிமீட்டர் என பீத்திக்கொண்டனர். சிலர் அணிந்த இறுக்கமான உடையினால் விலா எலும்பு அவர்களுடைய கல்லீரலை கிழித்ததால் பரிதாபமாக உயிரையே இழந்திருக்கின்றனர்.

நல்ல வேளையாக அந்த ஃபேஷன் இப்போது இல்லை. ஆனால் தற்பெருமைக்காக அலைவது அன்று போலவே இன்றும் அப்படியே உள்ளது. ஆண்களும் பெண்களும் தங்கள் இயற்கையான தோற்றத்தை மாற்றிக்கொள்ள கஷ்டமான, ஆபத்தான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். உதாரணமாக, பச்சைக் குத்தும் இடங்களுக்கும் உடம்பில் துளைப்போட்டுக் கொள்ளுவதற்கென்று இருக்கும் கடைகளுக்கும் சமுதாயத்தில் கீழ்த்தட்டு மக்களே சென்றனர். இன்று இவற்றை ஷாப்பிங் சென்டர்களிலும் புறநகர் பகுதிகளிலும் காணமுடிகிறது. சமீப ஆண்டில், பச்சைக் குத்துவதென்பது ஐக்கிய மாகாணங்களில் வேகமாக வளர்ந்துவரும் சில்லறை வியாபாரத்தில் ஆறாவது இடத்துக்கு வந்துவிட்டது.

மிதமிஞ்சிய உடல் அலங்காரம் விசேஷமாக இளைஞர் மத்தியில் இன்று அதிகரித்துவருவதைக் காணமுடிகிறது. உடலின் பல பாகங்களில்—முலைக் காம்புகள், மூக்கு, நாக்கு, பிறப்புறுப்பிலும்கூட—குத்திக்கொள்வது அதிகமதிகமாக பிரபலமடைந்து வருகிறது. இன்னும் சிலருக்கு இப்படிப்பட்ட இடங்களில் குத்திக்கொண்டாலும் திருப்தி இல்லை. இவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று சூடுபோட்டுக் கொள்கிறார்கள், வெட்டிக் கொள்கிறார்கள், தோலுக்கு அடியில் எதையாவது வைத்து மேடு பள்ளங்களை உண்டுபண்ணி உடம்பை செதுக்கிக் கொள்கிறார்கள். a

பண்டைய கால பழக்கம்

உடலை அலங்கரிப்பது அல்லது தோற்றத்தில் மாற்றங்களைச் செய்வதென்பது புதிதல்ல. ஆப்பிரிக்காவில் சில இடங்களில் குறிப்பிட்ட ஒரு குடும்ப தொகுதியை அல்லது ஜாதியை அடையாளம் கண்டுகொள்வதற்காக பல நூற்றாண்டுகளாக அவர்களுக்கு சடங்குமுறைப்படி தோலைக் கீறுவதும் பச்சைக் குத்துவதும் பழக்கமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் இந்தப் பழக்கங்களை இந்த நாடுகளிலுள்ளவர்கள்கூட வெறுப்புடன் நோக்குகின்றனர். இந்தப் பழக்கங்களை வெகுசிலரே கடைப்பிடிக்கின்றனர்.

பைபிள் காலங்களில் பச்சைக் குத்துவதும், துளைப்போட்டுக் கொள்வதும் வெட்டி விகாரப்படுத்திக் கொள்வதும் பழக்கமாக இருந்தது. புற மதத்தினர் தங்கள் மத பழக்கங்களாக இவற்றைச் செய்துவந்தனர். யெகோவா தம்முடைய மக்களாகிய யூதர்களுக்கு இந்தப் புறமதத்தினரைப் பின்பற்றக் கூடாது என்று ஏன் தடைவிதித்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. (லேவியராகமம் 19:28) கடவுளுடைய சொந்த “விசேஷமான சம்பத்தாக” இருந்ததால் யூதர்கள் கீழ்த்தரமான பழக்கங்களிலிருந்து இவ்விதமாக பாதுகாக்கப்பட்டிருந்தனர்.—உபாகமம் 14:2.

கிறிஸ்தவ சுயாதீனம்

கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லாவிட்டாலும், அதிலுள்ள ஒரு சில நியமங்கள் கிறிஸ்தவ சபைக்கு பொருத்தமாகவே இருக்கின்றன. (கொலோசெயர் 2:14) ஆகவே, கிறிஸ்தவர்கள் மரியாதைக்குரிய, தகுதியான அலங்காரத்தை தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம். (கலாத்தியர் 5:1; 1 தீமோத்தேயு 2:9, 10) ஆனால் இந்த சுயாதீனம் முழுமையானதல்ல, வரம்புக்குட்பட்டது.—1 பேதுரு 2:16.

1 கொரிந்தியர் 6:12-ல் பவுல் இவ்வாறு எழுதினார்: “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது.” ஒரு கிறிஸ்தவனாக, மற்றவர்களைப்பற்றி சிந்தித்தே பாராமல் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தன்னுடைய சுயாதீனம் உரிமையளிப்பதில்லை என்பதை பவுல் புரிந்துகொண்டிருந்தார். மற்றவர்கள்பால் அவருக்கிருந்த அன்பு அவருடைய நடத்தையின்மீது செல்வாக்கு செலுத்தியது. (கலாத்தியர் 5:13) “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” என்று அவர் ஊக்கப்படுத்தினார். (பிலிப்பியர் 2:4) உடல் அலங்காரத்தைப் பற்றி சிந்திக்கும் எந்த ஒரு கிறிஸ்தவனுக்கும் அவருடைய சுயநலமற்ற நோக்குநிலை தலைச்சிறந்த முன்மாதிரியாக உள்ளது.

சிந்திக்கவேண்டிய பைபிள் நியமங்கள்

கிறிஸ்தவர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்து போதிக்க வேண்டும் என்பது அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளையாகும். (மத்தேயு 28:19, 20; பிலிப்பியர் 2:15) தன்னுடைய தோற்றத்தால் அந்த செய்தியை ஜனங்கள் கேட்க மறுக்கிறார்கள் என்ற நிலை ஏற்பட்டால் அப்படிப்பட்ட ஃபேஷனை ஒரு கிறிஸ்தவன் நிராகரிக்க வேண்டும்.—2 கொரிந்தியர் 4:2.

உடம்பில் துளைப்போட்டுக் கொள்வது அல்லது பச்சைக் குத்திக்கொள்வது போன்ற அலங்காரங்கள் குறிப்பிட்ட தொகுதியினர் மத்தியில் எவ்வளவுதான் பிரபலமாக இருந்தாலும் ஒரு கிறிஸ்தவன் தன்னைத்தான் இவ்விதமாக கேட்டுக்கொள்வது நல்லது: “நான் வசிக்கும் இடத்தில் இந்த அலங்காரத்தைப் பார்த்தவுடன் மக்கள் என்ன நினைப்பார்கள்? சமுதாயத்தின் சட்டங்களை மீறி நடக்கும் ஒரு தொகுதியைச் சேர்ந்தவர் என்று மக்கள் என்னை எடைபோடுவார்களா? என்னுடைய மனச்சாட்சி அதை அனுமதித்தாலும், நான் இவ்வாறு உடலைத் துளையிட்டு அல்லது பச்சைக்குத்திக்கொண்டு சபைக்கு வந்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? ‘உலகத்தின் ஆவிக்கு’ அத்தாட்சி இதுதான் என்று கருதுவார்களா? ‘தெளிந்த புத்தி’ இருக்கிறதா என்ற சந்தேகத்தைக்கூட அது எழுப்பிவிடுமா?”—1 கொரிந்தியர் 2:12; 10:29-32; தீத்து 2:12.

இவ்வாறு, உடலில் பச்சைகுத்திக்கொள்வது அல்லது துளைப்போட்டுக்கொள்வது போன்றவற்றால் உயிருக்கே ஆபத்து வரலாம். சுத்தம் செய்யப்படாத ஊசி கொண்டு பச்சைக் குத்துவதால் கல்லீரல் அழற்சியும் ஹெச்ஐவியும் பரவுவதற்கான வாய்ப்புண்டு. சாயங்களை பயன்படுத்துவதால் தோலில் கோளாறுகள் ஏற்படுவதுண்டு. துளைப் போடும்போது ஆறுவதற்கு மாதங்கள் ஆகலாம். ஆறும் வரை வலி இருந்துகொண்டே இருக்கும். இதனால் இரத்தத்தில் விஷம் கலந்துவிடும் வாய்ப்பு, இரத்தப்போக்கு, இரத்த கட்டிகள் உருவாகுதல், நரம்பு சேதம், ஆபத்தான இன்ஃபெக்‍ஷன் போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலுமாக இதை அழிப்பது அல்லது பழையநிலைக்கு தோலை கொண்டுவருவது சுலபமல்ல. உதாரணமாக எந்த நிறத்தில் எவ்வளவு பெரிதாக பச்சைக் குத்தியிருக்கிறோம் என்பதைப் பொறுத்து பல முறை லேசர் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். அதற்கேற்றாற்போல் செலவும் அதிகரிக்கும், வலியும் அதிகமாகும். சைக்கிள் டியூபில் பங்சர் ஆவது போல, உடலை ‘பங்சர்’ செய்துகொள்ள விரும்பினால் அழிக்க முடியாத தழும்போடு வாழ்க்கையை ‘ஓட்ட’ நேரிடும்.

ஒரு நபர் இந்த ஆபத்துக்களை ஏற்றுக்கொள்ளலாம் என்று முடிவுசெய்வாரா மாட்டாரா என்பது சொந்தத் தீர்மானம். ஆனால், ஒருவர் கடவுளைப் பிரியப்படுத்த விரும்பி கிறிஸ்தவராகும்போது தன்னை முழுமையாக கடவுளுக்கு அளிக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்கிறார். நம்முடைய சரீரங்கள் அவருடைய உபயோகத்துக்காக அளிக்கப்படும் உயிருள்ள பலியாக இருக்கின்றன. (ரோமர் 12:1) ஆகவே, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் உடல்களை சொந்த உடைமைகளாக கருதி இஷ்டத்துக்கு சேதப்படுத்துவதில்லை அல்லது உருக்குலைப்பதில்லை. விசேஷமாக சபையை நடத்த தகுதி பெறுகிறவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; அவர்கள் நிதானமானவர்களாக, தெளிந்த புத்தி, நியாயத்தன்மை ஆகியவற்றுக்கு பேர் போனவர்களாக இருக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 3:2, 3.

பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட பகுத்தறியும் ஆற்றலை வளர்த்து, அதைப் பயன்படுத்துவது மிதமிஞ்சிய இந்த உலக பழக்கங்களைத் தவிர்க்க கிறிஸ்தவருக்கு உதவிசெய்யும். உலக ஜனங்களில் சிலர் துன்புறுத்தப்படுவதில் அதிக இன்பத்தை அனுபவிக்கின்றனர். இந்த உலகின் பழக்க வழக்கங்கள் “தேவனுடைய ஜீவனுக்கு அந்நிய”மாயிருக்கின்றன. (எபேசியர் 4:18) எனவே இவற்றைத் தவிர்த்து தங்கள் நியாயத்தன்மையை எல்லா மனிதர் முன்பாகவும் வெளிக்காட்டலாம்.—பிலிப்பியர் 4:5.

[அடிக்குறிப்புகள்]

a இளைஞர்கள் விசேஷமாக பருவ வயதினர், சிகிச்சைக்காக அல்லது சிங்காரத்துக்காக வெட்டிக்கொள்வது வேறு, வேண்டுமென்றே வெட்டி விகாரப்படுத்திக்கொள்வது வேறு. இரண்டாவதாக கூறப்பட்டிருப்பது கவலைக்குரிய விஷயம். இது மனதளவில் பாதிக்கப்பட்டதற்கு அல்லது துர்ப்பிரயோகம் செய்யப்பட்டதற்கு அடையாளம். இதற்கு நிபுணர்களின் உதவி தேவைப்படலாம்.