Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘இரசாயன அலர்ஜி’—ஒரு மர்ம வியாதி

‘இரசாயன அலர்ஜி’—ஒரு மர்ம வியாதி

‘இரசாயன அலர்ஜி’—ஒரு மர்ம வியாதி

தென்றல் மெல்லத் தாலாட்டும்போது, புன்னகைத்து தலையாட்டும் பருத்தித் தோட்டத்திற்கு மத்தியில்தான் பாம் என்ற பெண்மணியின் வீடு இருந்தது. களைக்கொல்லிகளும் பூச்சுக்கொல்லிகளும் பருத்தி தோட்டங்களை நிரப்பின. எனவே, தோட்டத்தை தாலாட்டிய அதே காற்று, பாமின் வீடு உட்பட அங்கிருந்த எல்லாருடைய வீடுகளுக்கும் இரசாயனங்களை அள்ளி வந்துபோட்டது. 

பாமிற்கு தாங்க முடியாத தலைவலி, மயக்கம், குமட்டல் ஏற்படத் துவங்கின. கொஞ்ச நாட்களில், பூச்சிக்கொல்லியுடன் சம்பந்தமே இல்லாத மற்ற பொருட்களும் அவருக்கு அலர்ஜியாகின. உதாரணத்திற்கு சென்ட், டியோடரைஸர், லோஷன், வீட்டு டியோடரைஸர், பெயிண்ட், புதிய கார்ப்பெட், சிகரெட் புகை, சுத்தம் செய்யும் பொருள் போன்றவை அவர் உடல் நலத்தை இன்னும் மோசமாக்கின. பாமிற்கு வந்த இந்த சுகவீனங்கள் எல்லாமே இரசாயன அலர்ஜி (multiple chemical sensitivity [MCS]) a என அழைக்கப்படும் வியாதிக்குரிய பொதுவான அறிகுறிகளாகும்.

“ஒவ்வொரு நாளும் அநேக இரசாயனங்களை பயன்படுத்த வேண்டியிருக்கிறது, அவ்வாறு பயன்படுத்தும்போதெல்லாம் சோர்வு ஏற்படுகிறது, தலைசுற்றுகிறது, குமட்டலெடுக்கிறது. . . . சில சமயம், என் உடல் ஊதிவிடுகிறது, மூச்சு இரைக்கும், இதயம் படபடக்கும், நாடித்துடிப்பின் அளவு அதிகரிக்கும், திடீரென பயமும் நடுக்கமும் ஏற்படும், உடனே அழுதுவிடுவேன். அப்படிப்பட்ட சமயங்களில் நுரையீரலில் நீர் கட்டிவிடும், இதனால் நான் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்” என விழித்தெழு! நிருபரிடம் பேசும்போது பாம் சொன்னார்.

இந்த MCS-ற்குரிய அறிகுறிகள் எல்லோருக்கும் ஒரே விதமாக இருப்பதில்லை. தலைவலி, பயங்கர களைப்பு, தசை வலி, மூட்டு வலி, தோல்வியாதி, தடிப்புகள், ஜுரம், ஆஸ்துமா, சைனஸ் பிரச்சினைகள், மன அழுத்தம், மனஉளைச்சல், ஞாபக சக்தி குறைவு, கவனச் சிதறல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, வயிறு உப்புதல், குமட்டல், வாந்தி, குடல் சார்ந்த பிரச்சினைகள், திடீர் வலிப்பு போன்றவையும் இந்த நோய்க்குரிய அறிகுறிகளாகும். ஆனால் இந்த அறிகுறிகளில் பெரும்பாலானவை மற்ற வியாதிகளுக்கும் தோன்றுபவை.

வளர்ந்துவரும் MCS

ஐக்கிய மாகாணங்களில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வெவ்வேறு வயதுடையவர்கள் சோதிக்கப்பட்டனர். அவர்களுள் 15 முதல் 37 சதவீதத்தினருக்கு தினமும் பயன்படுத்தும் இரசாயனங்களால் அலர்ஜி ஏற்படுகிறது. உதாரணமாக, காரிலிருந்து வரும் புகை, சிகரெட் புகை, பெயின்ட், கார்ப்பெட், சென்ட் போன்றவற்றால் அலர்ஜி ஏற்படுவதாக அந்த அறிக்கை காட்டுகிறது. இருப்பினும், கணக்கெடுக்கப்பட்டவர்களில் வெறும் 5 சதவீதத்தினருக்கே MCS இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் பெண்கள்.

MCS வியாதி உள்ள அநேகர், தங்களுடைய நிலைக்கு பூச்சிக்கொல்லிகளும் கரைமங்களும்தான் காரணம் என சொல்கின்றனர். ஆனால் வருத்தகரமாக இவ்விரண்டும் நம்மை விட்டுப்பிரிவதே இல்லை. முக்கியமாக கரைமங்கள் எங்கும் பரவியிருக்கின்றன. கரைமம் உடனடியாக ஆவியாகிவிடும் தன்மையுடையதால் பொதுவாக எல்லாவற்றிலும் உடனடியாக கலந்துவிடுகிறது. இது முக்கியமாக பெயின்ட், வார்னிஷ், பசை, பூச்சிக்கொல்லி, சுத்தம் செய்ய பயன்படும் பொருட்கள் போன்றவற்றில் உள்ளன.

இந்த MCS-ஐப் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டுமா? இதனால் அவதிப்படுபவர்களுக்கு எதாவது உதவி இருக்கிறதா? இந்த வியாதி இல்லாதவர்கள் வியாதியஸ்தர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம்? இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள அடுத்த கட்டுரை உதவும்.

[அடிக்குறிப்புகள்]

a இந்த வியாதி பொதுவாக, “multiple chemical sensitivity” என அழைக்கப்படுவதால் இந்தக் கட்டுரையில் அவ்வாறே பயன்படுத்தியிருக்கிறோம். இருப்பினும் இது, “சுற்றுச்சூழல் சுகவீனம்,” “இரசாயனம் கூருணர்வு நோய்குறிப்பு” என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. அநேகரை பாதிக்காத இரசாயனம் சிலரை மோசமாக பாதிக்கிறது. இதையே இங்கு “அலர்ஜி” என குறிப்பிடுகிறோம்.