Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

கண்ணீர்விடும் நதிகள்

இந்துக்கள் பொதுவாக பண்டிகை நாட்களில் பூஜை முடிந்தபின் தங்கள் சிலைகளை அருகிலுள்ள நதியிலோ ஆற்றிலோ போட்டுவிடுவார்கள். முன்பெல்லாம் இந்த சிலைகளில் பூக்களிலிருந்தும் மற்ற செடிகளிலிருந்தும் தயாரிக்கப்பட்ட வண்ணங்களையே பூசினார்கள். அவ்வாறு செய்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் சிலை செய்பவர்கள் எப்போது பெயிண்டுகளை பூச ஆரம்பித்தார்களோ அப்போதே பிரச்சினையும் ஆரம்பித்துவிட்டது. பக்தர்கள் ஆயிரக்கணக்கான பெயின்ட் அடிக்கப்பட்ட சிலைகளை ஆறுகளிலும் ஏரிகளிலும் போட ஆரம்பித்தபோது விளைவை உடனடியாக காண முடிந்தது. இந்தியாவின் சில பகுதிகளிலுள்ள தண்ணீர் மிக மோசமாக மாசடைந்தது. இவ்வாறு தண்ணீர் மாசுபடுவதை குறைப்பதற்காக ஒரு நகரத்தில் வசிப்பவர்கள், எல்லா சிலைகளையும் ஒன்றுதிரட்டி ஒரு பெரிய காலி நிலத்தில் நொறுக்கிப் போட்டனர். இந்த முறையை இந்தியா முழுக்க கடைப்பிடித்தால், சிலைகளை செய்பவர்களே நவீன பெயின்டுகளை பயன்படுத்துவதற்கு பதில் பழையபடி தாவர வர்ணங்களை பூசுவர் என்கிறது டௌன் டூ எர்த் பத்திரிகை. “இல்லையென்றால், இந்துக்கள் வணங்கும் சிலைகளாலேயே அவர்கள் வணங்கும் ஆறுகள் மாசடையும்.”

பஞ்சத்திற்கு காரணம் மனிதன்

“இயற்கை சேதத்தால் ஏற்படும் உணவு பற்றாக்குறையைவிட மனிதனால் ஏற்படும் உணவு பற்றாக்குறை அதிகம். உதாரணமாக, மனிதனால் தூண்டிவிடப்பட்ட சண்டைகளும் பொருளாதார நெருக்கடிகளும் உணவுப் பற்றாக்குறையை மலைபோல உயர்த்தியிருக்கின்றன” என அறிக்கை செய்கிறது ஐக்கிய மாகாணங்களின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO). அந்த அமைப்பின் துணைத் தலைமை இயக்குநரான டாக்டர் ஹார்ட்விக் டி ஹேன் பின்வருமாறு சொல்கிறார்: “1984-ல், உலகத்தில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையில் 10 சதவீதம்தான் மனிதனால் ஏற்பட்டது. ஆனால் இப்போதோ 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.” இன்று, 35 நாடுகளிலுள்ள சுமார் 5.2 கோடி மக்கள் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். “1984-ல், ஆப்பிரிக்காவிலுள்ள சஹாராவின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு அடுத்தது இன்றுள்ள உணவு தட்டுப்பாடுதான்” என்கிறது அந்த அறிக்கை.

வேற்று கிரகத்தில் உயிரா?

“வேற்று கிரகத்தைச் சேர்ந்தவர்கள் நட்சத்திரங்களுக்கு அருகே ஆங்காங்கே வசித்துக்கொண்டிருக்கலாம் என அநேக வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கடந்த காலத்தில் அறிவித்தனர்” என்கிறது த நியு யார்க் டைம்ஸ். “இதனால் எண்ணிலடங்கா புத்தகங்கள், திரைப்படங்கள், டிவி தொடர்கள் உருவாகியிருக்கின்றன . . . அத்துடன் புத்திகூர்மையுள்ள வேற்று கிரக வாசிகளிடமிருந்து ஏதாவது தகவல் வருகிறதா என வானத்தையே அலசி ஆராய்ந்துகொண்டிருக்கும் பிரமாண்டமான நீண்ட டிஷ் ஆன்டெனாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.” ஆனால் இந்த ஆராய்ச்சிகளெல்லாம் வீணே என்கின்றனர் டாக்டர் பீட்டர் டி. வார்ட் மற்றும் டாக்டர் டொனால்ட் சி. ப்ரௌன்லீ. இவர்கள் இருவருமே பிரபல விஞ்ஞானிகளும் அரிய உலகம் என்ற ஆங்கில புத்தகத்தின் எழுத்தாளர்களுமாவர். “உயிர் வாழ்வதற்கு தேவையான பூமியிலுள்ள அம்சங்கள் வேறெங்குமில்லை. இதுவே ஓர் அரிய அதிசயம்,” இந்த கிரகத்தைத் தவிர வேறெங்கும் உயிரினங்கள் இருக்க முடியாது என்பதை சமீபத்திய விண்வெளி ஆய்வுகளும் தொல்பொருள் ஆய்வுகளும் மண்ணியல் ஆய்வுகளும் காண்பிப்பதாக அவர்கள் சொல்கின்றனர். “சிக்கலான உயிர் வேறெங்குமில்லாத அரிய ஒன்று என்பதை அநேகர் இதுவரை நம்பினர், இதை இப்போது நாங்கள் பகிரங்கமாக அறிவிக்கிறோம்” என்கிறார் டாக்டர் வார்ட். “நட்சத்திரத்தைப் போன்றுதான் சூரியனும் என அநேகர் இதுவரை சொல்லி வந்திருக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. பிரபஞ்சத்திலுள்ள வேறெந்த சுற்றுப்புறத்திலும் உயிர் வாழ்வது கூடாத காரியம். இதை கவனிக்கும்போது ஏதேன் தோட்டத்தைப்போல் உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாக பூமி அமைந்திருக்கிறது” என உறுதியாக சொல்கிறார் டாக்டர் ப்ரௌன்லீ.

மில்லென்னியம் உயிர்

“ஒருவர் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தால்கூட, ஏதாவது ஒரு முக்கிய நிகழ்ச்சியை எதிர்பார்த்திருந்தால், அவர் அதை பார்க்கும்வரை உயிருடன் இருப்பார். இவ்வாறு எப்படி நடக்கிறது என்பது புரியாத புதிராகவே இதுவரை இருக்கிறபோதிலும் இது அப்பட்டமான உண்மை” என நம்பிக்கை அளிக்கிறார் ஐக்கிய மாகாணங்கள், மேரிலான்ட், பெத்ஸ்டாவில் உள்ள வயோதிபம் பற்றிய தேசிய நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் சூஸ்மென். உதாரணமாக, அநேகர் தாங்கள் 2000-மாவது ஆண்டை பார்க்க வேண்டும் என்ற உறுதியான ஆசையை வளர்த்திருந்தனர், அதேபோல அவர்கள் ஆசை நிறைவேறிய பிறகே இறந்தனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், அந்தப் புதிய ஆண்டின் முதல் வாரத்தில் சராசரி இறப்பைவிட அதிகமானோர் இறந்தனர் என்கிறது லண்டன் செய்தித்தாளான த கார்டியன். 1999-ம் ஆண்டின் முதல் வாரத்தில் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையுடன் 2000-மாவது ஆண்டின் முதல் வாரத்தில் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் வாரத்தின்போது, சென்ற வருடத்தைவிட பிரிட்டனில் 65 சதவீதம் அதிகமானோரும், நியூ யார்க் நகரத்தில் 50 சதவீதம் அதிகமானோரும் இறந்திருக்கின்றனர். உலகத்தின் எல்லா பகுதிகளிலும் இப்படிப்பட்ட சதவீதம் காணப்பட்டது என சர்வதேச ஆயுசுகால மையத்தின் தலைவர் ராபர்ட் பட்லர் சொல்கிறார். “வாழ வேண்டும் என்ற உறுதியான ஆசை மிக சக்திவாய்ந்தது” என்கிறார் அவர்.

அதிக மொழிகளில் பைபிள்

“உலகத்திலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் புத்தகம் என்ற புகழ்மாலையை பைபிள் இன்னும் தக்கவைத்துக்கொண்டுள்ளது” என்கிறது மெக்ஸிகோ நகர செய்தித்தாளான எக்ஸல்சியோர். ஜெர்மன் பைபிள் சொஸைட்டியின் பிரகாரம், பைபிள் 1999-ல் இன்னும் 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்போது, முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதியாகவாவது 2,233 மொழிகளில் பைபிள் கிடைக்கிறது. இவற்றுள் “பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் முழுமையாக 371 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன; 1998-ல் இருந்ததைவிட 5 மொழி அதிகம்.” இவ்வளவு மொழிகள் எங்கேதான் பேசப்படுகின்றன? “ஆப்பிரிக்காவில்தான் பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் காணப்படுகின்றன, அங்கு 627 மொழிகளிலும், அதைத் தொடர்ந்து ஆசியாவில் 553 மொழிகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக்கில் 396 மொழிகளிலும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் 384 மொழிகளிலும், ஐரோப்பாவில் 197 மொழிகளிலும், ஐக்கிய மாகாணங்களில் 73 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன” என அந்த செய்தித்தாள் சொல்கிறது. இருப்பினும் “உலகில் பேசப்படும் மொழிகளில் பாதி அளவு மொழியில்கூட இன்னும் பைபிள் மொழிபெயர்க்கப்படவில்லை.” ஏனென்றால் மற்ற மொழிகளை பேசுவோர் வெகு சிலரே, அந்த மொழிகளில் பைபிளை மொழிபெயர்ப்பது என்பதும் ஒரு பெரிய சவால். அத்துடன், இந்த மொழிகளை பேசும் அநேகர் மற்றொரு மொழியை அறிந்திருக்கின்றனர், அவர்களுடைய மொழியில் ஒருவேளை பைபிள் மொழிபெயர்க்கப்படாவிட்டாலும் மற்ற மொழியில் அவர்களால் பைபிளை படிக்க முடியும்.