Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கரும்பு—இனிக்கும் இராட்சசப் புல்!

கரும்பு—இனிக்கும் இராட்சசப் புல்!

கரும்பு—இனிக்கும் இராட்சசப் புல்!

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

‘இனிப்பில்லா பண்டம் குப்பையிலே!’ இது புது மொழி. சர்க்கரையில்லாத உலகத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள். நினைப்பே கசக்கவில்லையா! ஆனால், சர்க்கரை இல்லாவிட்டால் விடியவே விடியாதா, என்ன? என நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மைதான், இருந்தாலும் நம் அறுஞ்சுவை உணவில் ஒரு சுவை மைனஸ். நாகரிக உலகின் அன்றாட வாழ்க்கையில் சுவைக்கு சுவை கூட்டுவது சர்க்கரையே. இதனால்தான் சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியும், வியாபாரமும் சக்கைபோடு போடுகிறது.

கியூபாவிலிருந்து இந்தியா வரை மற்றும் பிரேஸிலிலிருந்து ஆப்பிரிக்கா வரை என கரும்பு விவசாயத்தின் எல்லை விரிந்துகொண்டே செல்கிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தொழிலாகவும் விளங்குகிறது. ஒருகாலத்தில் சர்க்கரை உற்பத்தி உலகத்தையே ஒரு கலக்கு கலக்கியது. உலகத்திலேயே மிகப் பெரிய, அதிக லாபத்தை ஈட்டும் தொழில் என இது பெயரெடுத்தது. கரும்பு இவ்வுலகத்தையே ‘வில்லாக’ வளைத்துவிட்டது என்றுகூட சொல்லலாம். இது எந்த விவசாயப் பயிரும் செய்யாத சாதனைகளை புரிந்திருக்கிறது.

இந்த இனிக்கும் தாவரத்தைப் பற்றிய தித்திக்கும் விஷயங்களை நீங்களும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், வாருங்கள் இப்போது ஒரு டூர் போவோம். நாம் போகும் இடம் ஆஸ்திரேலியாவிலுள்ள க்வீன்ஸ்லாந்து. இங்கு உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவு கொஞ்சமாக இருந்தபோதிலும், இவ்விடம்தான் உலக ஏற்றுமதி சந்தையில் முதலிடத்தை வகிக்கிறது. இங்கு செய்யப்படும் திறம்பட்ட விவசாயமும், சிறப்பான தயாரிப்பு முறைகளுமே உலக சர்க்கரை ஏற்றுமதியில் முதலிடத்திலிருக்கும் இடங்களுள் ஒன்றாக இவ்விடத்தையும் நிறுத்தியுள்ளது.

க்வீன்ஸ்லாந்தில் கரும்பாய் அரும்பும் புல்

செழிப்பாக ஓங்கி வளர்ந்திருக்கும் கரும்புகள்மேல் கோபங்கொண்ட சூரியன், தன் கதிர்வீச்சுகளால் பலமாக தாக்கினாலும், இங்குள்ள ஈரப்பதமுள்ள வெப்பக்காற்று கரும்புகளை தாலாட்டுகிறது. ஒய்யாரமாய் நின்றுகொண்டிருக்கும் கரும்புகளுக்கிடையில் ஒரு பெரிய மெஷின் மெல்ல மெல்ல நகர்கிறது. இந்த மெஷின் கரும்புகளின் சுவையை ருசித்தபடி அவற்றை வெட்டி வெட்டி பக்கத்திலேயே வந்துகொண்டிருக்கும் டிரெய்லரில் போடுகிறது. கரும்பு வெட்டப்படும்போது பீறிட்டு வெளிவரும், தித்திப்பான சாறின் மணமே நம் மனதில் தித்திக்கிறது. இந்த சாறுதான், சர்க்கரையாக மாறி உங்கள் நாவில் இனிக்கப் போகிறது, அது தன் பயணத்தை துவங்க தயாராயிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில், அறுவடைக்கு மெஷின் பயன்படுத்தப்படுவதெல்லாம் இப்போதுதான், கொஞ்ச காலத்திற்கு முன்பு வரையிலும் தொழிலாளர்களே அறுவடை செய்து வந்தனர். அநேக நாடுகளில் இன்றும் தொழிலாளர்களே அறுவடை செய்கின்றனர். இப்போது உங்கள் மனத்திரையை ஆன் செய்யுங்கள். வெயில் கொளுத்தும் மதிய வேலை. வேலையாட்கள் வயலில் கரும்புகளை வெட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆறாய் பெருக்கெடுக்கும் வேர்வையையும் பொருட்படுத்தாது அவர்கள் கரும்புத் தோட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு கையால் கரும்புகளை பிடித்து, மெல்ல சாய்த்து, அடியில் அரிவாளை வீசுகிறார்கள். வீச்சு தாங்காத கரும்புகள், அப்படியே சாய்கின்றன. சாய்ந்த கரும்புகளை ஓரமாக மற்ற கரும்புகளுடன் அடுக்குகிறார்கள். இப்படியே அரிவாள்களுக்கு அடிபணிந்து கரும்புகள் சாய, அறுவடைக்காரர்கள் இராணுவ வீரர்களைப்போல் முன்னேறிக்கொண்டே போக, கரும்பு தோட்டம் காலியாகிவிடும். ஆனால், இப்போதோ உலகம் முழுவதிலும் நிலைமை மாறிவருகிறது, அநேக நாடுகள் அறுவடைக்காக மெஷின்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.

ஆஸ்திரேலியாவிலுள்ள பெரும்பாலான கரும்புத் தோட்டங்கள், அதன் கிழக்கு கரையோரத்தில்தான் அமைந்துள்ளன. இந்த கரும்புத் தோட்டங்களில் பெரும்பாலானவை அங்குள்ள புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப்புக்கு அருகில் சுமார் 2,100 கிலோமீட்டருக்கு நீண்டுள்ளன. (ஆங்கில விழித்தெழு!, 1991, ஜூன் 8 இதழில் வெளிவந்த “கிரேட் பேரியர் ரீஃப்-க்கு போவோமா?” என்ற கட்டுரையை பார்க்கவும்.) இவ்விடத்தில், வருடம் முழுக்க சீதோஷண நிலை ஈரமாயும், வெப்பமாயும் இருப்பதால், கரும்புகள் கிடுகிடுவென செழித்து வளர்கின்றன. இங்கு சுமார் 6,500 விவசாயிகள் தங்கள் சிறிய வயலை நம்பியே வாழ்கின்றனர். இவர்களுடைய வயல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், ஆஸ்திரேலியாவின் கடற்கரையே களைகட்டுகிறது. சரி, இப்போது நாம் வேறொரு இடத்திற்கு போவோம் வாருங்கள்.

அங்கிருந்து வெகுதூரம் வந்தபிறகு, ஒரு நகரம் கண்ணுக்குத் தெரிகிறது. அதுதான், க்வீன்ஸ்லாந்து கரையின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் பன்டபெர்க். அங்கிருக்கும் ஒரு சிறிய மலையிலிருந்து இறக்கும்போது கண்ணில் படும் காட்சியை உங்களால் நம்பவே முடியாது. மலைத்துப் போவீர்கள்! உங்கள் கண்ணுக்கெட்டும் தூரம் வரை நீங்கள் பார்ப்பதெல்லாம் கரும்பு. அவை அழகாக தலையசைத்து நம்மை வரவேற்கின்றன. அவற்றின் நிறங்களை என்னவென்று வர்ணிப்பது! ஒவ்வொரு வயலிலுள்ள கரும்புகளும் வெவ்வேறு வண்ணங்களில் உள்ளன. கரும்புகள் செழிப்பாக வளர்ந்துள்ள இடம் பச்சை நிறத்திலும், முற்றிய நிலையிலுள்ள இடம் மஞ்சள் நிறத்திலும், இப்போது விவசாயம் செய்யப்படாத இடம் அல்லது சமீபத்தில் அறுவடை செய்யப்பட்ட இடம் ப்ரௌன் நிறத்திலும் உள்ளன. இவை எல்லாம் சேர்ந்து ஏதோ தரைக்கு மொசைக் போட்டதுபோல தென்படுகிறது.

ஜூலை மாதத்தில் இங்கு குளிர் அதிகம், அந்த சமயத்திலேயே அறுவடையும் துவங்கும். வெவ்வேறு நிலையிலுள்ள கரும்புகள் வளர வளர வெட்டப்படுவதால் டிசம்பர் மாதம் வரைக்கும் அறுவடை நீடிக்கும். இதுவரையிலும் நாம் கரும்புத் தோட்டத்தில் நடக்கும் வேலைகளை பார்த்தோம், இப்போது இதிலிருந்து சர்க்கரை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாமா! அறுவடை செய்யப்பட்ட கரும்பை என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக ஒரு சர்க்கரை ஆலைக்குப் இப்போது போகலாம். அந்த ஆலைக்கு போகும் முன் கரும்பைப் பற்றி முதலில் தெரிந்துகொள்வது நல்லது. அதனால் அந்த பகுதியிலேயே இருக்கும் ஒரு சர்க்கரை ஆய்வு மையத்திற்கு சென்ற பிறகு ஆலைக்கு செல்லலாம். இங்குள்ள விஞ்ஞானிகள் புதிய கரும்பு வகைகளை உருவாக்குவதோடு, கரும்பு விவசாயத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்க ஆராய்கின்றனர்.

கரும்பு விவசாயத்தின் துவக்கம்

அந்த சர்க்கரை ஆய்வு மையத்திற்கு சென்று, நாம் விஷயத்தை சொன்னவுடன் அங்குள்ள ஒரு விஞ்ஞானி, கரும்பைப் பற்றியும் அது எவ்வாறு வளர்கிறது என்பதைப் பற்றியும் நமக்கு விளக்க சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்கிறார். அவர் விளக்கத் துவங்குகிறார், கரும்பு முதன்முதலில் தென்மேற்கு ஆசியாவிலும் நியூ கினியாவிலுமுள்ள மழைக் காடுகளில் காணப்பட்டன. கரும்பு ஒரு புல் குடும்பத்தைச் சேர்ந்தது. தரையில் வளரும் புல், தானியச் செடி, மூங்கில் போன்ற வித்தியாசப்பட்ட தாவரங்கள் எல்லாமே இந்த குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த செடிகள் எல்லாமே ஒளிச்சேர்க்கை மூலமாக தங்கள் இலைகளில் சர்க்கரை உற்பத்தி செய்கின்றன. ஆனால், இவை எல்லாவற்றிலும் கரும்பு வித்தியாசமானது. அது அதிகளவான சர்க்கரையை உற்பத்தி செய்து அதை தன் உடல் பாகத்தில் அல்லது தண்டில் ஜூஸாக சேமித்து வைத்துக்கொள்கிறது.

கரும்பு விவசாயம் பண்டைய இந்தியாவில் புகழ் பெற்றிருந்தது. பொ.ச.மு. 327-ல் மகா அலெக்ஸாந்தரின் போர்ச் சேனையில் இருந்த ஒரு எழுத்தாளர், அங்கிருந்தவர்கள் “சுவையான தாவரத்தை சாப்பிட்டார்கள், அந்த தாவரம் தேனீயின் உதவி ஏதுமின்றி கிடைத்த தேன் போன்று இனித்தது” என எழுதியிருந்தார். அநேக கண்டுபிடிப்புகளால் உலகம் வேகமாக வளர ஆரம்பித்தது. 15-ம் நூற்றாண்டின்போது கரும்பு உற்பத்தி வேகமாக முன்னேறி, எல்லா இடங்களுக்கும் பரவியது. இன்று ஆயிரக்கணக்கான கரும்பு வகைகள் உள்ளன, ஒவ்வொரு வருடமும் உற்பத்தியாகும் நூறு கோடி டன் கரும்புகள் 80-ற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவையாகும்.

பெரும்பாலான பகுதிகளில், கரும்பு விவசாயம் செய்வது முக்கியமாக அவற்றை நடுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. வேலையாட்களுக்கு அதிக கூலி கொடுக்க வேண்டியுள்ளது. கரும்புகள் எவ்வாறு தோட்டத்தில் நடப்படுகின்றன? நன்கு வளர்ந்து முற்றிய கரும்புகள், 40 சென்டிமீட்டர் நீளத்தில் துண்டு துண்டாக வெட்டப்படுகின்றன. பிறகு அந்த துண்டுகள் 1.5 மீட்டர் இடைவேளையில் தள்ளித்தள்ளி நடப்படுகின்றன. இவ்வாறு நடப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றிலுமிருந்து 8 முதல் 12 கரும்புகள் முளைக்கின்றன. இவை பெரிதாய் வளர்ந்து அறுவடைக்கு தயாராக 12 முதல் 16 மாதங்கள் எடுக்கின்றன. ஒவ்வொரு கரும்பும் அதன் இலையுடன் 4 மீட்டர் உயரத்திற்கு வளர்கிறது. அப்படிப்பட்ட அடர்ந்த கரும்புத் தோட்டத்திற்குள் நடந்து செல்ல ஒருவருக்கு அதிக தைரியம் தேவை. திடீரென ஏதோ ஒருவித சப்தம் கேட்கிறது, அது காற்றில் இலையோடு இலை உரசும் ஓசையா அல்லது பக்கத்தில் பாம்பு ஏதும் இருக்கிறதா என்று எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘இந்த அடர்ந்த தோட்டத்துக்குள் நிச்சயம் போய்தான் ஆகவேண்டுமா?’ என நம் இதயம் கேட்கிறது. அதனால் ஏன் இந்த வம்பு என அங்கிருந்து திரும்பி, தோட்டத்தை சுற்றி நடையைக் கட்டினோம். அதுதான் பாதுகாப்பானது!

கரும்புகளுக்கு வில்லன்களான சில பூச்சிகளையும், நோய்களையும் அழிப்பதற்கு அநேக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுள் அநேக ஆராய்ச்சிகள் நல்ல பலன்களை கொண்டுவந்திருக்கிற போதிலும், சில எதிர்பார்த்த அளவுக்கு இருக்கவில்லை. உதாரணமாக, கரும்பு வண்டுகள் கரும்புகளுக்கு மிகப் பெரிய வில்லனாக இருந்து வந்தன. இவற்றை எப்படியாவது க்வீன்ஸ்லாந்திலிருந்து ஒழிக்க வேண்டுமென்று 1935-ல் இதற்கு ஒரு எதிரியை ‘ஹீரோவாக’ அறிமுகப்படுத்தினார்கள். ஹவாய் நாட்டு கரும்புத் தேரைகளை கொண்டுவந்து, க்வீன்ஸ்லாந்தின் வடக்குப் பகுதிகளிலிருந்த கரும்புத் தோட்டங்களில் விட்டார்கள். எதிர்பார்த்தது ஒன்று நடந்ததோ விபரீதம். இவை கரும்பு வண்டுகளைத் தவிர மற்ற பூச்சிகளை பிடித்து தின்ன ஆரம்பித்தன, இதனால் கட்டுப்பாடின்றி இனவிருத்தியடைந்தன. காலப்போக்கில், வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் இந்த ‘ஹீரோ’ கரும்புக்கு பெரிய ‘வில்லனாக’ மாறிவிட்டது.

அறுவடையின்போது . . .

இப்போது இரவு நேரமாகிவிட்டது. அந்த அழகான கரும்புத் தோட்டத்தை நிலா வெளிச்சத்தில் ரசித்தவாறு உட்கார்ந்திருந்தபோது, ஒரு விவசாயி தோட்டத்தை நோக்கி நடந்து சென்றார். இந்த நேரத்தில் இவர் என்ன செய்யப் போகிறார் என்று ஆவலாய் பார்க்கிறோம். ஓங்கி வளர்ந்து கம்பீரமாக நின்றுகொண்டிருந்த கரும்புகளை அந்த விவசாயி தீ வைப்பதைப் பார்த்து அதிர்ந்து போனோம். நெருப்பு ஜுவாலைகள் கைநீட்டி வானத்தைத் தொடுகிறது, நாம் பார்த்து பதறிக்கொண்டிருந்த சில நிமிடங்களில் அந்த வயலே தீக்காடாய் மாறுகிறது. இந்த மனிதர் ஏன் இப்படி செய்தார் என்ற கேள்வி நம் முகங்களில் படர, பின்பே உண்மை விளங்கியது. இந்த கரும்புகளில் சோகை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால் அறுவடை செய்யும்போதும், ஆலையில் வேலை செய்யும்போதும் கஷ்டமாக இருக்கும். அதனால் அவற்றை அறுவடைக்கு முன்பே அகற்றுவதற்காகத்தான் எரித்துவிடுகின்றனர் என்பதை அறிந்துகொள்கிறோம். ஆனால் இப்போது அநேக பகுதிகளில் இவ்வாறு அறுவடைக்கு முன்பு எரிப்பதில்லை. எல்லா இடங்களிலும் பரவிவரும் இம்முறை, அதாவது எரிக்காமல் அறுவடை செய்யும் முறை பச்சை கரும்பு அறுவடை என அழைக்கப்படுகிறது. இதனால் அநேக பலன்கள் உள்ளன. இதனால் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கிறது, அத்துடன் வயலுக்கு ஒரு இயற்கையான பாதுகாப்பு ‘போர்வை’ கிடைக்கிறது. இந்த ‘போர்வை’ மண் அரிப்பை தவிர்ப்பதோடு, தேவையற்ற களைகள் வளர்வதையும் தடுக்கிறது.

அநேக நாடுகளில் கூலியாட்களைக் கொண்டு அறுவடை செய்யப்படுகிறபோதிலும், மற்ற நாடுகள் பெரிய கரும்பு வெட்டும் மெஷின்களை பயன்படுத்துகின்றன. இந்த பிரமாண்டமான பெரிய மெஷின் கரும்புத் தோட்டத்தை அழகாக செதுக்கி கரைத்துவிடுகிறது. இது கரும்புகளின் மேல்பாகத்தையும் கீழ்பாகத்தையும் வெட்டி வீசிவிட்டு, அதன் தண்டு பகுதியை துண்டு துண்டாக வெட்டுகிறது. இப்போது செய்ய வேண்டியதெல்லாம் ஆலைக்கு அனுப்ப வேண்டும் அவ்வளவுதான், அந்தளவுக்கு இது எல்லா வேலைகளையும் செய்துவிடுகிறது. விவசாயி தன் தோட்டத்திலுள்ள கரும்புகளை தொழிலாளிகளைக் கொண்டு அறுவடை செய்கிறார் என்றால், அவர்களால் ஒரு நாளில் சுமார் 5 டன் கரும்பை அறுவடை செய்யக்கூடும். அந்த வேலையை கரும்பு வெட்டும் மெஷினிடம் கொடுத்தால் ஒரே நாளில் 300 டன் கரும்பை வெட்டி மலையாக குவித்துவிடும். வருடத்திற்கு ஒரு முறை என அறுவடை செய்யப்படும் ஒவ்வொரு தோட்டமும் அதே அளவு சர்க்கரையுடைய கரும்பை மறுபடியும் பிறப்பிக்கும், அதன் சர்க்கரை அளவு குறைந்தவுடன் கரும்பை மாற்ற வேண்டும்.

கரும்புகளை வெட்டிய பின்பு, அவற்றை அப்படியே விட்டுவிட்டு சாவகாசமாக பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்க முடியாது, உடனடியாக ஆலைக்கு அனுப்ப வேண்டும். ஏனெனில், வெட்டிய பிறகு அவற்றிலுள்ள சர்க்கரை சீக்கிரத்தில் கெட்டுவிடும். ஆலைக்கு இவற்றை உடனடியாக அனுப்புவதற்காக குறுகிய தண்டவாளங்களில் ஓடும் ட்ரேம் என அழைக்கப்படும் வாகனம் க்வீன்ஸ்லாந்தில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, 4,100 கிலோமீட்டர் தூரத்திற்கு ட்ரேம் தண்டவாளங்கள் போடப்பட்டுள்ளன. கரும்பை அள்ளி திணித்துக் கொண்டு சிறிய ட்ரேம் பெட்டிகள் கிராமப்புறங்களில் ஊர்வலம் போகும் காட்சி பார்க்க சூப்பர்!

ஆலையில் . . .

இப்போது நாம் ஆலைக்கு செல்வோம். சர்க்கரை ஆலையை சுற்றிப்பார்ப்பது, அதைப் பற்றி தெரிந்துகொள்வது என்பது ஓர் ஆர்வமூட்டும் விஷயம். ஆலைக்குள் அடியெடுத்து வைக்கும் நம்மை வரவேற்பது கரும்புகளைத் தாங்கிய வேகன்களே! அவற்றிலுள்ள கரும்புகள் பெரிய பெரிய மெஷின்களில் கொட்டப்படுகின்றன. மெஷினின் வயிற்றுக்குள் போன கரும்புகள் சக்கைவேறு, சாறுவேறாக தனித்தனியே வெளியேறுகின்றன. இந்த மீதமான சக்கை காயவைக்கப்பட்டு, அந்த முழு ஆலைக்கும் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதைத்தவிர கூடுதலாக இருக்கும் சக்கை, பேப்பர் உற்பத்தி மற்றும் கட்டுமானப் பொருட்கள் உற்பத்திக்கு அனுப்பப்படுகிறது.

கரும்புச் சாறிலுள்ள அழுக்குகளெல்லாம் நீக்கப்படுகிறது, சுத்தமான சாறு எடுக்கப்படுகிறது. சுத்தம் செய்யும் இந்த முறையில் அகற்றப்பட்ட அழுக்கு புழுதி என அழைக்கப்படுகிறது, இது உரமாக பயன்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் மற்றொரு பொருளான மொலேஸஸ், வீட்டுப் பிராணிகளுக்கு உணவாகவும் ரம் மற்றும் தொழிற்சாலை ஸ்பிரிட்டை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கரும்புகள் வாரி வழங்கும் பொருட்களையும், அவற்றை செய்யும் முறைகளையும் காண்பதே கண்கொள்ளா காட்சி.

இப்போது, தேவையற்ற நீரை நீக்குவதற்காக சாறு கொதிக்க வைக்கப்படுகிறது. பின்பு கிடைக்கும் கெட்டியான குழம்பில் சின்ன சின்ன சர்க்கரை படிகங்கள் (sugar crystals) போடப்படுகின்றன. அந்த குழம்பு கெட்டியாக கெட்டியாக, இந்த படிகங்களில் அதிகம் ஒட்டிக்கொள்கிறது. இதனால் அந்த படிகங்கள் பெரிதாகிவிடுகின்றன. அதன் பிறகு, அவை தனியே பிரிக்கப்பட்டு காயவைக்கப்படுகின்றன. இப்போது ப்ரௌன் நிறத்தில் சர்க்கரை தயாராகிவிட்டது. இவை தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு, நம் அனைவருக்கும் கிடைக்கும் வெள்ளை நிற சர்க்கரையாக மாற்றமடைகிறது.

இன்று நாம் சென்றிருந்த இந்த டூர் இனிப்பாய் தித்திக்கவில்லையா? இனி நீங்கள் அருந்தப்போகும் டீ அல்லது காபி முன்பைவிட அதிக தித்திப்பாய் சுவைக்கப்போகிறது. ஒருவேளை இப்போதே உங்கள் நாவில் நீர் சுரக்கலாம். ஆனால் உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா? அப்படியானால் சர்க்கரை பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள். பதிலாக, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்காக கிடைக்கும் ஸ்வீட்டனரை உபயோகிக்க வேண்டியதுதான்.

நம் வாழ்க்கைக்கும் நாவிற்கும் தித்திப்பூட்டிய கரும்பை, சாறிலிருந்து சக்கைவரை பலன்களை அள்ளி வழங்கும் இந்த அருமையான கரும்பை, அற்புதமாக வடிவமைத்து சிருஷ்டித்தவரை பாராட்ட நம் மனம் துடிக்கவில்லையா!

[பக்கம் 28-ன் பெட்டி]

கரும்பா? பீட்ரூட்டா?

சர்க்கரை கரும்பிலிருந்து மட்டுமல்ல பீட்ரூட்டிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. உலகில் தயாரிக்கப்படும் சர்க்கரையில் குறைந்தபட்சம் 65 சதவீதம் வெப்பமண்டலப் பகுதிகளிலுள்ள கரும்புகளிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. மற்ற 35 சதவீதம், சர்க்கரை பீட்ரூட்டிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இவை மேற்கு, கிழக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்கா போன்ற குளிர்ப்பிரதேசங்களில் காணப்படுகின்றன. இவ்விரண்டு சர்க்கரைகளுக்கும் இரசாயன வித்தியாசங்கள் இல்லை.

[பக்கம் 29-ன் படம்]

அறுவடைக்கு முன் கரும்பு எரிக்கப்படுகிறது

[பக்கம் 29-ன் படம்]

மெஷினைக் கொண்டு கரும்பு அறுவடை செய்தல். பக்கத்தில் ட்ரெய்லரை ஒரு டிராக்டர் இழுத்து வருகிறது

[பக்கம் 27-ன் படத்திற்கான நன்றி]

பக்கங்கள் 27-30-ல் உள்ள படங்கள்: Queensland Sugar Corporation