Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மொழிகள் பாலங்களா சுவர்களா?

மொழிகள் பாலங்களா சுவர்களா?

மொழிகள்—பாலங்களா சுவர்களா?

மெக்ஸிக்கோவிலுள்ள விழித்தெழு! நிருபர்

“ஒரு ஜனத்தின் சுக துக்கங்கள், அவர்களுடைய சமுதாய அமைப்பு, நம்பிக்கைகள், உணர்வுகள் ஆகியவற்றைத் துல்லியமாக புரிந்துகொள்வதற்கு வரலாற்றுப் பதிவைவிட அவர்களுடைய மொழியை ஆராய்வதே அதிக உதவியாக இருக்கும்.”

—மார்டின் அலான்சோ.

வரலாறு முழுவதிலும் மொழியின் தோற்றம், அதிலுள்ள வித்தியாசம், மாறிக்கொண்டே இருக்கும் அதன் தன்மை ஆகியவை கல்விமான்களை மிகவும் கவர்ந்துள்ளது. சரித்திரத்தில் நடந்த விவரங்களை சரித்திரப்பதிவுகளில் காணும்போது விறுவிறுப்பாக இருப்பது போல மொழி வரலாற்றில் இருக்கும் தகவல்களும் கல்விமான்களுக்கு விறுவிறுப்பாக இருக்கிறது. எப்படிப்பட்ட மாற்றங்கள் வந்தாலும் மனிதன் பேச்சுத்தொடர்பு கொள்வதற்கு மொழியே ஆதாரம்.

தற்போது உலகம் முழுவதும் சுமார் 6,000 மொழிகள் பேசப்படுவதாக பன்மொழி புலவர்கள் கூறுகின்றனர். பிராந்தியங்களில் பேசப்படும் கிளைமொழி இதில் சேர்க்கப்படவில்லை. இதில் அதிகமாக பேசப்படுவது மான்டரின் சீன மொழி. சீனாவில் 80 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த மொழியைப் பேசுகின்றனர். அதிகமாக பேசப்படும் அடுத்த நான்கு மொழிகள் ஆங்கிலம், ஸ்பானிஷ், இந்தி, பெங்காலி ஆகும்.

வித்தியாசமான கலாச்சாரங்களும் அவர்களின் மொழிகளும் சந்திக்கையில் என்ன நடக்கிறது? மக்கள் தனியே பிரிந்து மற்றவர்களோடு ஒட்டாமல் வாழும்போது அவர்களுடைய மொழிக்கு என்ன ஆகிறது? பேச்சுத்தொடர்பில் பாலங்களும் தடுப்புச் சுவர்களும் எவ்வாறு கட்டப்படுகின்றன என்பதை நாம் காண்போம்.

பிட்ஜின்ஸ், க்ரையோல், லிங்குவா ஃபிராங்காஸ்

புதிய நாட்டில் குடியேறுதல், நாடுகளிடையே வியாபாரம், சித்திரவதை முகாம்களில் சிறைப்படுதல் போன்ற நிலைமைகளில் பொதுவாக பேசுவதற்கு ஒரு மொழி இல்லாமல் போனபோது, பேச்சுத்தொடர்பின் இடைவெளியை பாலமிட்டு நிரப்புவதன் அவசியத்தை மக்கள் உணர்ந்தனர். அப்போது ஒரு மொழியை சுருக்கி, சுலபமாக்கி அதை பயன்படுத்த ஆரம்பித்தனர். இலக்கண சிக்கல்களை நீக்கி அவர்கள் சில வார்த்தைகளையே பயன்படுத்தி பொதுவான அக்கறைக்குரிய விஷயங்களை அளவளாவினர். இவ்விதமாகத்தான் செயற்கை மொழிகள் (பிட்ஜின்) தோன்றின. ஒரு செயற்கை மொழி எத்தனை சுருக்கமாக இருந்தாலும் தனக்கே உரிய மொழியியல் அமைப்பை அது கொண்டிருக்கிறது. ஆனால் அது எதற்காக தோன்றியதோ அந்த தேவை மறைந்துபோகும் போது அதுவும் மறைந்துவிடலாம்.

செயற்கை மொழியே ஒரு ஜனத்தின் முக்கிய மொழியாகும் போது புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டு அதற்கு மறுபடியும் இலக்கணம் வகுக்கப்படுகிறது. அதனால் அது ஒரு கலப்பு மொழியாகிவிடுகிறது, இதை பேசும் ஜனங்களுக்கென்று ஒரு கலாச்சாரமும் வந்து விடுகிறது. எனவே, கலப்பு மொழி (க்ரையோல்) அப்படிப்பட்ட கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதால் செயற்கை மொழியிலிருந்து வித்தியாசப்படுகிறது. இன்று ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீஸ், சுவாஹிலி இன்னும் மற்ற மொழிகளை அடிப்படையாக கொண்ட பல செயற்கை மொழிகளும் கலப்பு மொழிகளும் உலகம் முழுவதிலும் பேசப்பட்டு வருகின்றன. ஒரு நாட்டிற்குள் இவற்றில் சில முக்கிய மொழிகளாகவும் மாறிவிட்டிருக்கின்றன. உதாரணமாக பாப்புவா நியு கின்னியில் டோக் பிஸினும் வானுவாட்டுவில் செயற்கை ஆங்கிலமும்.

பேச்சுத்தொடர்பை ஊக்குவிக்கும் பாலங்களாக அமைந்திருப்பது லிங்குவா ஃபிராங்கா என்றழைக்கப்படும் கலவை மொழிகள். கலவை மொழிகள் என்பது வித்தியாசமான தாய்மொழிகளைக் கொண்ட இரண்டு தொகுதியினர் பேசும் பொது மொழியாகும். உதாரணமாக மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பல்வேறு பிராந்திய மொழிகளில் பேசுகிறவர்கள் சேங்கோ மூலம் ஒருவரோடொருவர் பேசிக்கொள்கிறார்கள். அரசியல் நிபுணர்கள் கலப்பு மொழியை பயன்படுத்துகின்றனர், அதற்கு ஆங்கிலத்தையும் பிரெஞ்சு மொழியையும் உபயோகிக்கின்றனர். செயற்கை மொழிகள் கலவை மொழிகளாக கருதப்படுகின்றன. க்ரையோலும் அப்படியே.

ஒரு தேசத்திற்குள் உள்ள பல பிராந்தியங்கள் தேசீய மொழியை உள்ளூரில் வித்தியாசமாக பேசலாம். இது வட்டார கிளைமொழி எனப்படுகிறது. உதாரணத்துக்கு இத்தாலியில் டஸ்கன். ஒரு பிராந்தியம் மற்றவர்களோடு அதிக தொடர்பில்லாமல் இருந்தால் வித்தியாசங்களும் அதிகமிருக்க வாய்ப்புண்டு. சில சமயங்களில் இந்த வட்டார கிளைமொழி மிகவும் வித்தியாசமாகி அது வேறொரு மொழியாகவே ஆகிவிடுகிறது. சில சமயங்களில் பன்மொழி புலவர்களாலே ஒரு மொழிக்கும் வட்டார கிளைமொழிக்கும் வித்தியாசம் கண்டுப்பிடிப்பது கடினமாக உள்ளது. மேலுமாக மொழி மாறிக்கொண்டே இருப்பதால் உபயோகத்தில் இல்லாத வட்டார கிளைமொழிகள் சிலசமயங்களில் மறைந்துவிடலாம். அதோடு அந்த மொழி பேசி வந்தவர்களின் கலாச்சாரமும் மறைந்துவிடலாம்.

மொழி என்பது கடவுள் அளித்திருக்கும் வரமாகும். (யாத்திராகமம் 4:11) மொழியில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்தால் இந்த வரம் எத்தனை லாவகமாக வளைந்துகொடுக்கிறது என்பதைக் காணமுடிகிறது. எந்த ஒரு ஜனமும் வேறு ஒரு ஜனத்தைவிட உயர்ந்தது இல்லை என்பதையும் மொழியிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் பின்தங்கிய மொழி என்பதாக எந்த மொழியையும் சொல்ல முடியாது. கடவுள் தந்திருக்கும் மற்ற வரங்களைப் போலவே மொழியும் அனைவருக்கும் பொதுவாகவே அருளப்பட்டிருக்கிறது. ஒருவர் எந்தக் கலாச்சாரத்தில் அல்லது இடத்தில் வாழ்ந்தாலும் சரி, இது உண்மை. ஆரம்பத்திலிருந்தே எல்லா மக்களின் மொழிகளும் முழுமையான விதத்தில் அதன் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கின்றன. ஒரு மொழியை எத்தனை பேர் பேசினாலும் சரி, ஒவ்வொரு மொழியும் மதிக்கப்பட வேண்டும்.

வரலாறும் சமூக காரணிகளும்

மனிதனின் கூடிவாழும் இயல்பை மொழியில் காணமுடிகிறது. கலாச்சாரங்களிடையே தொடர்பு ஏற்படுவது சகஜமே, அப்போது மொழியில் மாற்றம் ஏற்படுகிறது. பல தலைமுறைகளுக்கு பிறகும் இப்படிப்பட்ட தொடர்பு ஏற்பட்டதை அவர்களுடைய மொழி கலாச்சாரம் எடுத்துக்காட்டுகிறது.

உதாரணமாக, ஸ்பானிஷ் மொழியில் பல அராபிய வார்த்தைகள் இருக்கின்றன. இதற்கு காரணம் ஸ்பானிய பிராந்தியத்தை எட்டாம் நூற்றாண்டில் முஸ்லீம்கள் கைப்பற்றியபோது இதில் அராபிய வார்த்தைகள் கலந்துவிட்டன. அவை இன்றும் ஸ்பானிஷ் மொழியில் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்பானிஷ் மொழியை சிறிய மாற்றங்கள் செய்யப்பட்ட லத்தீனே என்று சொல்கிறார்கள். ஸ்பானிஷ் மொழியின்மீது கிரேக்கு, பிரெஞ்சு, ஆங்கிலம் இன்னும் மற்ற மொழிகள் ஏற்படுத்திய செல்வாக்கை நம்மால் கண்டுபிடிக்க முடியும். அமெரிக்காவில் பேசப்படும் ஸ்பானிஷ் மொழியில் அந்தக் கண்டத்தில் பண்டைய காலங்களில் வாழ்ந்த பழங்குடியினரின் பாஷையும் கலந்திருக்கிறது. உதாரணமாக, அங்கே பேசப்படும் ஸ்பானிஷ் மொழியில் மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த அஸ்டெக் மக்களின் நாகுதல் மொழியின் பல வார்த்தைகளை காணலாம்.

தாய்மொழி, ஒருவரை ஒரு தேசத்தோடு, அந்த தேசத்தில் உள்ள ஒரு பிராந்தியத்தோடு அடையாளப்படுத்துகிறது. அதைப்போலவே ஒரு மொழி பேசப்படும் விதத்திலிருந்து அவரது தொழில், வியாபாரம், கலாச்சாரம் போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம். ஒருவர் பேசும் விதத்திலிருந்து அவரது விளையாட்டு தொகுதி அல்லது குற்றவாளிகளின் அமைப்போடு அவருக்கு இருக்கும் தொடர்பைக்கூட அடையாளம் காண முடியும். பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. பன்மொழி புலவர்கள் இப்படிப்பட்ட வித்தியாசங்களை கொச்சை மொழி அல்லது புரியாத பாஷை அல்லது வட்டார கிளைமொழி என்றும் அழைக்கின்றனர்.

ஆனால் தேசங்கள், பாஷைக்காரர் அல்லது கலாச்சார தொகுதிகளிடையே விரோதங்கள் ஏற்படும்போது மொழி பாலமாக இல்லாமல் மக்களிடையே இருக்கும் பிரிவினைகளை இன்னும் மோசமாக்கும் ஒரு தடைச்சுவராக ஆகிவிடலாம்.

‘மொழி’மயமான எதிர்காலம்

பேச்சுத்தொடர்பு ஒரு சிக்கலான விஷயம். இன்று, பொது மக்களை சென்றெட்டுவதற்கு ஏராளமான தகவல் சாதனங்கள் இருப்பதால் மொழி சம்பந்தப்பட்ட சுவர்களைத் தகர்த்துவிடுவதற்காக முயற்சி செய்யப்படுகிறது. என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா-வின் பிரகாரம் ஆங்கிலம் முக்கிய மொழியாக அல்லது இரண்டாவது மொழியாக பேசப்படுகிறது. 7 பேரில் ஒருவர் ஆங்கிலம் பேசுகிறார். எனவே, ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டில்லாத அநேகர் உலகில் அதிகமாக பயன்படுத்தும் கலவை மொழி ஆங்கிலமே. அதிகமாக மக்களோடு பேச்சுத் தொடர்பு கொள்ளவும் பயனுள்ள தகவலை பரிமாற்றம் செய்துகொள்ளவும் இந்த மொழி உதவியாக இருக்கிறது.

மறுபட்சத்தில் மொழி வித்தியாசத்தின் காரணமாக பிரிவினைகள், விரோதங்கள், போர்கள் நடக்கின்றன. தி உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு கூறுகிறது: “எல்லா மக்களும் ஒரே மொழியை பேசினால் . . . தேசங்கள் மத்தியில் நல்லிணக்கம் அதிகரிக்கும்.” நிச்சயமாகவே, நல்லிணக்கம் ஏற்பட லிங்குவா ஃபிரான்கா என்ற ஒரே கலவை மொழி பேசுவது மட்டுமே போதாது; ஏராளமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். முதலாவதாக மக்களை ஒரே மொழியில் பேசவைக்க மொழியை தோற்றுவித்தவரால் மாத்திரமே முடியும்.

இன்று மனிதர்களோடு தொடர்புகொள்ள கடவுள் பைபிளைத்தான் முக்கியமாக பயன்படுத்துகிறார்; அதில் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையை ஒழித்து அதற்கு பதிலாக பரலோகத்திலிருந்து ஆளுகை செய்யும் தம்முடைய ராஜ்யத்தை ஏற்படுத்தப் போவதாக கூறியிருக்கிறார். (தானியேல் 2:44) அந்த அரசாங்கம் மனிதகுலம் முழுவதையும் இங்கே பூமியில் அமைதியான நீதியுள்ள ஒரு புதிய ஒழுங்கில் ஐக்கியப்படுத்தும்.—மத்தேயு 6:9, 10; 2 பேதுரு 3:10-13.

இப்போதேகூட ஒரு சுத்தமான ஆன்மீக மொழி—அதாவது, யெகோவா தேவனையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய உண்மை—எல்லா மொழிகளையும் தேசங்களையும் முற்காலங்களில் பிற மதங்களைச் சேர்ந்திருந்த லட்சக்கணக்கான ஆட்களையும் ஒன்றுசேர்த்து வருகிறது. (செப்பனியா 3:9) கடவுள் பாபேலில் செய்ததற்கு நேர் எதிர்மாறாக, எல்லா மக்களுக்கும் ஒரே மொழியை அளித்து மனிதகுலத்தை இன்னும் ஐக்கியப்படுத்துவார் என்பது உறுதி.

[பக்கம் 12-ன் பெட்டி]

மொழிகளின் ஆரம்பம்

சகல ஞானமுமுள்ள படைப்பாளரான யெகோவா தேவன் பரலோகத்தில் தேவதூதர்கள் வாழுமிடத்தில் மொழியைப் பயன்படுத்துகிறார். (யோபு 1:6-12 1 கொரிந்தியர் 13:1) மனிதர்களைப் படைத்தபோது கடவுள் அவர்களுடைய மனதில் மொழி ஞானத்தை பதித்து அதை விரிவுபடுத்துவதற்கான திறமையை அளித்தார். ஆதிகால மனிதன் மிருகத்தைப்போல உறுமிக்கொண்டு, கத்திக்கொண்டு பேசினான் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை. மறுபட்சத்தில், என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா பழங்கால சுமேரியர் மொழியின் எழுத்துவடிவத்தைப் பற்றி இவ்வாறு விளக்குகிறது: “சுமேரிய மொழியில் வினைச்சொல், . . . பல்வேறு முற்சேர்க்கை, இடைச்சேர்க்கை, பிற்சேர்க்கை ஆகியவற்றைப் பார்க்கும்போது அது மிகவும் சிக்கலான மொழி என்பது தெரிகிறது.”

பொ.ச.மு. 20-ஆம் நூற்றாண்டில், பூமியெங்கும் பரவி அதை ‘நிரப்பவேண்டும்’ என்ற கடவுளுடைய கட்டளைக்கு எதிர்மாறாக ஜனங்கள் செயல்பட்டனர். அவர்கள் மெசபொடோமியாவிலுள்ள சிநெயார் சமவெளியில் பாபேல் கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தனர். இதன் மூலம், ‘உன் குடுமி என் கையில் என்பது போல்’ மனித சமுதாயம் முழுவதையும் தங்கள் கைக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். அவர்கள் பொதுவாக பேசிய மொழியை கடவுள் தாறுமாறாக்கின போது பல்வேறு மொழிகள் தோன்றின. இதனால் அவர்களுடைய ஆபத்தான, கெட்ட எண்ணமுள்ள திட்டங்கள் தவிடுபொடியாயின.—ஆதியாகமம் 1:28; 11:1-9.

எல்லா மொழிகளும் தோன்றிய மூல மொழியை கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியே அடைந்தன. ஏனென்றால் ஒரே மொழியிலிருந்து எல்லா மொழிகளும் தோன்றவில்லை. இதையே பைபிள் ஆதரிக்கிறது. சிநெயாரில் கடவுளே பல புதிய சொற்களையும் சிந்தனைகளையும் அறிமுகப்படுத்தியதாக பைபிள் கூறுகிறது. இதனால் பல மொழிகள் தோன்றின.

[பக்கம் 12-ன் படம்]

பாபேலில் கடவுள் கலகக்கார மனிதரின் பாஷைகளைத் தாறுமாறாக்கினார்