Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வியாதிப்பட்டோருக்கு உதவி

வியாதிப்பட்டோருக்கு உதவி

வியாதிப்பட்டோருக்கு உதவி

இந்த MCS வியாதி மருத்துவ ரீதியிலான பிரச்சினையாக இருப்பது மட்டுமல்லாமல் சமூக ரீதியிலான பிரச்சினையாகவும் இருக்கிறது. உதாரணத்திற்கு கொலோன் அல்லது சுத்தம் செய்யும் பொருட்களால் அலர்ஜி ஏற்படுவதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். மற்ற மனிதர்களை சந்திக்க வேண்டும், எல்லோருடனும் சிரித்து பழக வேண்டும் என்பது மனிதருடைய இயல்பு. ஆனால் அன்பான, சகஜமாக பழகும் நபரும்கூட MCS-ஆல் பாதிக்கப்படும்போது ஒதுங்கிவிடுகிறார், தனிமைப்படுத்தப்படுகிறார். “இதுவரை எனக்கு அநேக வியாதிகள் வந்திருக்கின்றன, ஆனால் இதுதான் இருப்பதிலேயே மிக மோசமான வியாதி. இதில் கொடுமை என்னவென்றால் பாதிக்கப்பட்டவரை தண்ணியில்லாத காட்டில் விட்டதுபோன்று தனிமைப்படுத்திவிடுவதுதான்” என்கிறார் ஷெல்லி.

வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில், MCS-ஆல் பாதிக்கப்பட்ட ஒரு நபரை மற்றவர்கள் விநோதமாக பார்க்கின்றனர், வித்தியாசமாக நடத்துகின்றனர். ஏன் அவ்வாறு சிலர் நடந்துகொள்கிறார்கள்? MCS என்ற சிக்கலான இந்த வியாதியை இதுவரை யாரும் முழுமையாக புரிந்துகொண்டதில்லை அத்துடன் இதை எப்படி சமாளிப்பதென யாருக்கும் தெரியாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்த வியாதியைப் பற்றி அதிகம் தெரியாது என்பது உண்மைதான் அதற்காக அந்த வியாதியுடையவர்கள் நடிக்கிறார்கள் என்று சந்தேகப்பட வேண்டும் என்றில்லையே. “அவர்கள் உண்மையாகவே இந்த நோயால் கஷ்டப்படுகின்றனர்” என்கிறது அமெரிக்க குடும்ப மருத்துவன் என்ற ஆங்கில பத்திரிகை.

MCS வியாதி குழப்பமான ஒன்றாக இருப்பதாலும், சரியாக புரிந்துகொள்ளப்படாததாலும் இதனால் பாதிக்கப்பட்டவர்களை நாம் கேவலமாக நடத்தக்கூடாது. ஒருவேளை அவ்வாறு செய்தால் நீதிமொழிகள் 18:13-ல் சொல்லப்பட்ட விதமாகத்தான் நாம் இருப்போம்: “காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.” அதற்கு மாறாக, கிறிஸ்து காண்பித்த அன்பை பாரபட்சமின்றி எல்லோருக்கும் காண்பிப்பது எவ்வளவு நன்றாக இருக்கும்! எதிர்காலத்தில் மருத்துவத்துறை எதை கண்டுபிடித்தாலும், இப்படிப்பட்ட அன்பை காண்பித்ததற்காக நாம் ஒருபோதும் வருத்தப்பட மாட்டோம்.

அன்பு காண்பித்தல்

கிறிஸ்து காண்பித்ததுபோன்ற அன்பு வைரத்தைப்போன்று அழகானது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை காட்டும்போது ஜொலிக்கிறது. MCS-ஆல் பாதிக்கப்பட்ட நண்பரிடமாக இரக்கம் என்ற குணத்துடன் இப்படிப்பட்ட அன்பு பிரகாசிக்க வேண்டும். அவ்வாறு செய்ய நாம் அந்த நபருடைய நிலையில் நம்மை வைத்து பார்க்க வேண்டும். அதே சமயத்தில், அன்பு ‘தன்னலம் நாடாது,’ அல்லது ‘இது என் உரிமை’ என்று பிடிவாதம் பிடிக்காது. மற்றவர்களின் நலனை முதலிடத்தில் வைக்கும். ‘நீடிய சாந்தமுள்ளவர்களாகவும், எல்லாவற்றையும் தாங்குபவர்களாகவும், விசுவாசிப்பவர்களாகவும், சகிப்பவர்களாகவும்’ நாம் வாழ இது உதவும். அப்படிப்பட்ட அன்பு “ஒருக்காலும் ஒழியாது.”—1 கொரிந்தியர் 13:4-8.

மேரி என்ற பெண்ணுக்கு MCS இல்லை, ஆனால் அவருடைய நண்பர்களுக்கு இருக்கிறது. “எனக்கு சென்ட் என்றால் ரொம்ப இஷ்டம், . . . ஆனால் MCS-ஆல் அவஸ்தைப்படுபவர்களை சந்திக்க போகும்போது அவற்றை நான் பயன்படுத்துவதில்லை” என எழுதுகிறார் மேரி. அவர் இவ்வாறு செய்வதன் மூலமாக, இயேசு சொன்னதுபோல ‘எனக்கு உதவிசெய்ய சித்தமுண்டு’ என சொல்கிறார். (மாற்கு 1:41) ட்ரெவெர் என்பவருக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே MCS இருக்கிறது. அவருடைய தாய் சொல்லும் வார்த்தைகள் இவை: “என் மகனுக்கு உதவி செய்வதற்காக என்னோடு வேலை செய்தவர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.” ஜாய் என்ற ஆஸ்திரேலியாவில் வாழும் ஓர் யெகோவாவின் சாட்சி MCS-ஆல் மிகவும் கஷ்டப்படுகிறார். இருப்பினும், நண்பர்களும் உறவினர்களும் தன்னை அடிக்கடி வந்து சந்திப்பதும், தன்னுடைய பிரச்சினைகளை புரிந்துகொண்டு நடப்பதும் இவருக்கு உற்சாகத்தை அளித்திருப்பதாக சொல்கிறார்.

அதே சமயத்தில், MCS உள்ளவர்களும், நறுமணப் பொருட்களை பயன்படுத்தும் மற்றவர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். “நம்முடைய வியாதி ஒரு பெரிய சுமை அதை நாம்தான் சுமக்க வேண்டும். மற்றவர்களுக்கு அவர்களுடைய சொந்த பிரச்சினைகள் இருக்கின்றன. இருந்தும் அவர்கள் நமக்கு உதவி செய்ய வரும்போது அதை பாராட்ட வேண்டும்” என்று விழித்தெழு! நிருபரிடம் சொன்னார் எர்னஸ்ட். ஒத்துழைப்பை கேட்கலாம் ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது. “சென்டையோ, கொலோனையோ பயன்படுத்தியிருக்கும் நபர் நான் ஏன் ஒரு மாதிரி இருக்கிறேன் என கேட்கும்போது, . . . எனக்கு நறுமணப் பொருள் அலர்ஜி இருக்கிறது, முக்கியமாக இன்று எனக்கு ரொம்ப தொந்தரவு பண்ணுகிறது என அவரிடம் சொல்வேன். அந்த நபர் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் இதை உடனடியாக புரிந்துகொள்வார்” என்கிறார் லோரெய்ன். ஆயினும் உங்களுக்கு MCS இருந்தால், அவர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்கு தேவை என்பதை உங்களுடைய நண்பர்களுக்கு அவ்வப்போது அன்பாக நினைப்பூட்டுவதில் எந்த தவறுமில்லை.

துவக்கத்தில் நாம் கவனித்த பாம் என்பவர் சொல்லும் வார்த்தைகளை கவனியுங்கள்: “நாம் இப்போது படும் கஷ்டங்கள் எல்லாம் கொஞ்ச நாளைக்கே.” “கொஞ்ச நாளைக்கே” என்று ஏன் பாம் சொன்னார்? ஏனென்றால் அவருடைய பைபிள் நம்பிக்கைப்படி, விரைவிலேயே கடவுளுடைய ராஜ்யம் எல்லா துன்பங்களையும் துடைத்து அழித்துவிடும். இன்னும் சொல்ல வேண்டுமானால், இன்று பலமான மனிதராக இருந்தாலும் அவர் ஏதாவது ஒரு சமயத்தில் மரணத்தை எதிர்ப்படுகிறார். ஆனால் கடவுளுடைய ராஜ்யம் அதையும் நீக்கிப்போடும்.—தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 21:3, 4.

அதற்கிடையில், இப்போது சுகப்படுத்த முடியாத வியாதியால் அவதிப்படுவோர் கடவுளுடைய ராஜ்யத்தை எதிர்பார்க்கலாம். அந்த ராஜ்யத்தில் ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.’ (ஏசாயா 33:24) இந்த உலகில் நமக்கு என்ன பிரச்சினை வந்தாலும், இயேசுவைப் போல நம் கண் எப்போதும் எதிர்காலத்தில் நாம் பெறவிருக்கும் பரிசின்மீது நோக்கமாயிருக்கக்கடவது.—எபிரெயர் 12:2; யாக்கோபு 1:2-4.

[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]

ஒருவருக்கொருவர் அன்பு காண்பித்தல்

MCS-ஆல் நீங்களோ உங்கள் நண்பரோ அல்லது உறவினரோ பாதிக்கப்பட்டிருந்தால், பின்வரும் சில பைபிள் நியமங்கள் உங்களுக்கு பெரும் உதவியாயிருக்கும்:

“மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”மத்தேயு 7:12.

“உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.”மத்தேயு 22:39.

“அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.” (எபிரெயர் 10:24, 25) நம் எல்லோருக்கும் அவ்வப்போது ஆவிக்குரிய உற்சாகப்படுத்துதல் அல்லது புத்திசொல்லுதல் தேவை; முக்கியமாக உடல் நிலை சரியில்லாமல் இருக்கும்போது நிச்சயம் தேவை. இதை உணர்ந்து செயல்படும் கிறிஸ்தவர்கள் பாராட்டத்தக்கவர்கள். MCS-ஆல் கஷ்டப்படும் சில கிறிஸ்தவர்கள் சபை கூட்டங்களுக்கு வர கடுமையாக முயற்சி எடுக்கின்றனர்; அவ்வாறு வர இயலாத நிலையிலுள்ள மற்ற சிலர் டெலிபோன் மூலம் கூட்டங்களை அனுபவிக்கின்றனர். சில சமயங்களில், இவர்களுக்கென்றே ராஜ்ய மன்றத்தில் பிரத்தியேகமான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவ்விடங்கள் நறுமணப் பொருட்களாலோ மற்ற இரசாயனங்களாலோ மாசுபடாத இடங்களாகும். ஆனால் இவ்வாறு எல்லா இடங்களிலும் எல்லா சமயங்களிலும் செய்ய முடியாது.

“நன்மைசெய்ய . . . மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (எபிரெயர் 13:16) நன்மை செய்ய வேண்டும் என்றாலே ஏதாவது ஒரு விதத்தில் நாம் தியாகம் செய்தாக வேண்டும். அப்படியானால் MCS-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டுமானால் நாமும் தியாகம் செய்ய வேண்டியது அவசியம் அல்லவா! அதே சமயத்தில், அப்படிப்பட்ட வியாதியஸ்தர்களும் மற்றவர்களிடமிருந்து அதிகத்தை எதிர்பார்க்கக்கூடாது. உதாரணத்திற்கு, சபைக்கு வரும்போது யாரும் சென்ட், கொலோன் எல்லாம் போடக்கூடாது என மூப்பர்களால் சட்டங்களை விதிக்க முடியாது. இவற்றைக் குறித்து அடிக்கடி அறிவிப்புகளும் செய்ய முடியாது. அதுமட்டுமல்ல, நறுமணப் பொருட்களை பயன்படுத்தும், ஆர்வமுள்ள புதிய நபர்கள் அல்லது பார்வையாளர்கள் சபைக்கு வரக்கூடும், அவர்களை ‘உள்ளே வரக்கூடாது’ என நாம் சொல்வதில்லை. மாறாக அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். நறுமணப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அவர்களை தரக்குறைவாக நடத்தவோ, அவர்களை சங்கடப்படுத்தவோ முடியாது.

“சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.” (1 பேதுரு 3:11) சந்தேகத்திற்கிடமின்றி, எந்தவித உடல்நல அசௌகரியங்களும் கிறிஸ்தவர்களிடையேயுள்ள சமாதானத்தை குலைத்துப்போட அனுமதிக்கக்கூடாது. ‘பரத்திலிருந்து வருகிற ஞானமோ, சமாதானம், சாந்தம், இரக்கம் போன்றவற்றால் நிறைந்திருக்கிறது’ என்கிறது யாக்கோபு 3:17. MCS உள்ளவர்களானாலும் இல்லாதவர்களானாலும் சமாதானத்தை விரும்புகிறவர்களாக இருந்தால், இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றோ கூடாது என்றோ யாரையுமே கட்டாயப்படுத்த மாட்டார்கள். அதேபோல, ஒருவர் இரக்கம் நிறைந்த நியாயத்தன்மையுள்ள மனிதராக இருந்தால், அவர் நறுமணப் பொருள் மற்றவர்களுடைய நலத்தை பாதிக்கும் என தெரிந்தும், ‘அவற்றை அணிய எனக்கு உரிமையிருக்கிறது, யாராலும் என்னை தடுக்க முடியாது’ என வாதாட மாட்டார். இதன் மூலம் இந்த இரு சாராருமே தாங்கள் “சமாதானத்தைத் தேடி” அதை ‘பின்தொடருகிறவர்கள்’ என நிரூபிப்பர்.—யாக்கோபு 3:18.

அதற்கு மாறாக, வியாதியஸ்தரோ மற்றவர்களோ இவ்வாறு வளைந்துகொடுக்காமல், நியாயமற்ற விதத்தில் நடந்துகொண்டால், அது நல்லதல்ல. எப்படி ஒரு கோடாரி கட்டைகளை இரு துண்டாக வெட்டி எறிந்துவிடுமோ அதேபோல இவர்களது குணமும் மனிதர்களிடையே இருக்கும் உறவை வெட்டிவிடும். இந்த குணத்தால் யாருக்கும் பிரயோஜனமே இல்லை. அப்படிப்பட்ட குணம் அந்த நபருக்கு பிரச்சினைகளை கொண்டுவருவதோடு, அவர் கடவுளுடன் வைத்திருக்கும் உறவையும் பாதிக்கிறது.—1 யோவான் 4:20.

அதுமட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கும் ஓர் மிகப் பெரிய ஆசீர்வாதம், யெகோவாவின் பரிசுத்த ஆவி. அந்த ஆவியை கொடுக்கும்படி யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபிப்போர், அதன் அருமையான கனிகளை வளர்த்துக்கொள்வர். முக்கியமாக, “பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பை” வளர்த்துக்கொள்வர். (கொலோசெயர் 3:14) இந்த ஆவி, கிறிஸ்து காண்பித்ததுபோன்ற அன்பை வளர்த்துக்கொள்ள மற்றவர்களுக்கும் உதவி செய்கிறது.—கலாத்தியர் 5:22, 23.

[பக்கம் 10-ன் படம்]

மற்றவர்களைப் போலவே MCS-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நண்பர்கள் தேவை