உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
புகையிலையில் முதலிடம்
“உலகின் புகையிலை உற்பத்தியிலும் உபயோகத்திலும் முதலிடம்” சீனாவுக்கே, என்பதாக த ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிகல் அசோசியேஷன் குறிப்பிடுகிறது. “சீனாவின் ஜனத்தொகை 120 கோடி, அவர்களில் 30 கோடி ஆண்களும் 2 கோடி பெண்களும் புகை மன்னர்கள்.” சீனா நோய்த்தடுப்பு சங்கம், பீஜிங்கிலுள்ள புகைத்தல் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சீன கூட்டமைப்பு போன்றவற்றின் மருத்துவர்களும் மற்ற மேற்கத்திய மருத்துவர்களும் சேர்ந்து அந்த தேசம் முழுவதிலும் கிட்டத்தட்ட 1,20,000 நபர்களிடம் ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டனர். “புகையிலை என்னும் ‘கொள்ளை நோய்’ ஆரம்ப நிலையில்” சீனாவைத் தாக்கியிருக்கிறது என்பதே அதன் முடிவு. இதன் விளைவு எப்படியிருக்கும்? குறைந்தது “5 கோடி சீன புகை மன்னர்கள் சீக்கிரத்தில் புகைந்து போய்விடுவார்கள். அவர்களுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் மரணம் வரவேண்டிய அவசியமே இல்லை” என்பதாக அந்த அறிக்கை முன்னறிவிக்கிறது. புகைபிடிக்க ஆரம்பிப்பவர்களின் சராசரி வயதும் மூன்று வருடங்கள் குறைந்து விட்டன. 1984-ல் முதன் முதலில் புகையை இழுப்பவர்களுடைய சராசரி வயது 28, இப்போது அது 25-ஆகக் குறைந்து விட்டது என்பதையும் அந்த அறிக்கை எடுத்துக்காட்டியது. புகைப் பழக்கத்தால் இருதய நோய், நுரை ஈரல் புற்று நோய் போன்றவை ஏற்படுகின்றது என்பதைக்கூட இந்த தேசத்தில் பலர் அறியாமல் இருக்கின்றனர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
பெற்றோருக்கு ஹோம்வொர்க்
“ஒரு பிள்ளை நன்றாக படிப்பதன் ரகசியம் என்ன? அந்தப் பிள்ளையின் அப்பாவோ அம்மாவோ அவனுக்கு பாடங்களை அக்கறையுடன் கற்றுத் தருவதே. இதுதான் விஞ்ஞானிகளின் சமீபத்திய கண்டுபிடிப்பு.”—த டொரன்டோ ஸ்டார். கனடாவின் புள்ளியல் நிறுவனமும், மனித வளமேம்பாட்டு நிறுவனமும் சேர்ந்து ஒரு ஆய்வு நடத்தின. அதற்காக கனடாவில் வாழும் 23,000 பிள்ளைகளை 1994 முதற்கொண்டு தொடர்ந்து கவனித்து ஆராய்ச்சி செய்தன. அந்த பிள்ளைகளுடைய வயது 4 முதல் 11 வரை, அவர்களுடைய வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் ஆய்வாளர்கள் தொடர்ந்து கவனித்தனர். இந்தப் பிள்ளைகளின் பெற்றோர் அவர்களது படிப்பு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்தனர்; குறிப்பாக ஆரம்ப கல்வியின்போது பிள்ளைகளுக்கு கருத்தாக சொல்லித் தந்ததாக அந்த ஆய்வு விவரிக்கிறது. “ஆய்வு செய்யப்பட்ட 10 முதல் 11 வயது பிள்ளைகளில் 95 சதவீதத்தினர், பள்ளியில் படிக்கும்போது நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று எப்போதும் தங்கள் பெற்றோர் சொல்வார்கள் என்று சொல்லியிருக்கின்றனர்.” இவர்களில் 87 சதவீத பிள்ளைகளின் பெற்றோர் தங்களுடைய செல்வங்கள் “1-ஆம் வகுப்பிலிருந்து 3-ஆம் வகுப்புகளில் படித்தபோது கூடவே உட்கார்ந்து பாடம் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர்.” இந்த உதாரணங்களை அந்த ஆராய்ச்சி அத்தாட்சிகளாக எடுத்துக்காட்டுகிறது. டொரன்டோ மாவட்ட பள்ளி மன்றக்குழுவின் நிர்வாகி மேரி கோர்டன் பிள்ளை வளர்ப்பைப் பற்றிய திட்டங்களைக் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பிள்ளைகளை நல்ல விதத்தில் வளர்ப்பதற்கு பெரிய பணக்காரராகவோ அல்லது மெத்தப்படித்தவராகவோ பெற்றோர் இருக்க வேண்டிய அவசியமில்லை. பிள்ளைக்கு தவறாமல் பாடம் சொல்லிக்கொடுப்பது, அதன் தேவையை உணர்ந்து செயல்படுவது, பிள்ளைகளுடைய படிப்பு விஷயத்தில் ஆர்வமாக இருப்பது மிகவும் அவசியம் என்பதை இப்போது அறிந்துகொண்டோம். இவ்வாறு பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்கும்போதுதான் அதன் புத்திசாலித்தனம் வளருகிறது, எனவே, முதல் படியாக வீட்டில் அமல்படுத்துவதற்கு பெற்றோர் ‘ஹோம் வொர்க்’ செய்வது அவசியம்.”
டீனேஜரும் டெலிபோனும்
டீன் ஏஜ் பிள்ளைகள் போனை எடுத்துவிட்டால் போதும், அவர்கள் உலகையே மறந்துவிடுகின்றனர். இதைப் பற்றி சீச்சூக்கா என்ற பத்திரிகை சொல்வதைக் கேளுங்கள்: “அவர்களுக்கு பொழுது போகவில்லையென்றால் அல்லது ஜாலியாக பேசவேண்டும் என்றால் உடனே போனை கையில் எடுத்துக்கொள்வர்.” இருப்பினும், அவர்களில் அநேகர் எவ்வளவு நேரம் போனில் பேசுகிறார்கள், அதற்கு எவ்வளவு பில் ஆகிறது என்பதையெல்லாம் கண்டுகொள்வதேயில்லை. இதற்கு பரிகாரம்தான் என்ன? அந்த பத்திரிகை கொடுக்கும் ஆலோசனையை கவனியுங்கள்: அந்த இளசுகளே போன் பில்லை கட்ட வேண்டும் என்று சொல்வதே. முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது போன் பில்லை அவர்கள் கட்ட வேண்டும். “போன் என்பது அனைவரும் உபயோகிப்பதற்கே, மற்றவர்களும் போனை உபயோகிப்பர்” என்பதை அவர்களுக்கு அவ்வப்போது நினைப்பூட்ட வேண்டும் என்கிறது.
வச்ச குறி தப்பாது!
“வேகமான அசைவுகளையும் ஃபோட்டோ எடுக்கும் கேமராக்கள், பம்பார்டியர் வண்டின் (bombardier beetle) விநோத துப்பாக்கியை படமெடுத்தன. அப்போதுதான் இந்த வண்டு எவ்வாறு மயிரிழைகூட தப்பாமல் ‘சுடுகின்றது’ என்பது விஞ்ஞானிகளுக்கு தெரியவந்தது. வைத்த குறி தப்பாமல் விரோதிகளை ‘சுட்டுவிடும்’ இந்த உறுப்புகளின் திறமையை அப்போதுதான் அவர்கள் கண்டுபிடித்தனர்” என்று லண்டனில் இருந்து வெளியாகும் இன்டிபென்டன்ட் என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. சூடான அமிலத்தை எதிரிகளின் மேல் ஸ்ப்ரே போல் அடிப்பதற்கு அடிவயிற்றின் நுனியில் இருக்கும் கேடயத்தைப் போன்ற இரண்டு அமைப்புகள் இந்த வண்டுக்கு உதவுகின்றன. இவ்வாறு எதிரியை குறி வைத்து ‘சுடுவதற்கு’ ஒரு நொடி கூட ஆகாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதே திரவம் இந்த வண்டின் உடலில் பட்டால் அதற்கு எந்த கெடுதியும் ஏற்படுவதில்லை. எனவே, கூட்டமாக வந்து சீற்றமாக தாக்கும் எறும்பு போன்ற சிறிய பூச்சிகளிடமிருந்து தப்பிப்பதற்கு தன் உடல் மீதே இந்த அமில திரவத்தை அது பீச்சிக்கொள்ளும். இந்த ‘ஹீரோ’ தன் எதிரியை குறிவைத்து ‘சுட்டபோது’ அந்த கண்கொள்ளா காட்சியை நியூ யார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் படமெடுத்தனர். “பம்பார்டியர் வண்டு தன் அடிவயிற்றின் நுனியை சுழற்றி எதிரிகள் மீது அமில ஸ்பிரேயை அடிக்கும் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் அது நூல் பிசகாமல் எதிரியை சுடுகின்ற விஷயம் இப்போதுதான் தெரியவந்தது.”
கிச்சன் குழப்பம்
“சமையல் செய்வதற்காக பயன்படுத்தும் சாதனங்களிலும் இப்போது விஞ்ஞான யுகத்தின் ஆதிக்கம். எனவே இவற்றை சரியாக பயன்படுத்தத் தெரியாததால் இல்லத்தரசிகளுக்கு ‘கிச்சன் கோபம்’ அதிகரித்திருக்கிறது” என்பதாக லண்டனில் வெளியாகும் இன்டிபென்டன்ட் என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. அவசரத்திற்கு “ஒரு கப் சூப்பை மைக்ரோவேவ் அவனில் சுட வைப்பது, அல்லது ஒரு ஜதை சாக்ஸை வாஷிங் மெஷினில் துவைப்பது, அல்லது ஒரு மிக்ஸர் கிரைன்டரில் மாவரைப்பது போன்ற அற்ப விஷயங்கள்கூட இப்போது நவீன விஞ்ஞானத்தின் பிடியில். இந்த சாதனங்களை எப்படி உபயோகிப்பது என்பதை விளக்கும் புத்தகத்தை மணிக்கணக்காக படித்தால்தான் இந்த சின்ன விஷயங்களை செய்ய முடியும்.” நவீன தொழில் நுட்பம் எக்கச்சக்கமான அம்சங்களை வீட்டில் பயன்படுத்தும் சாதனங்களிலும் புகுத்தி விடுவதால் குழப்பம் ஏற்படுகிறது என்பதாக மனோதத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு அருமையான உதாரணம் வீடியோ பிளேயர். இந்தப் பிரச்சினையைக் குறித்து மேன்ச்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மனோதத்துவ பேராசிரியராகப் பணியாற்றும் கேரி கூப்பர் சொல்வதை கவனியுங்கள்: “இப்போது வேலை பார்க்கும் இடங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
புதிய மெஷினை பார்த்து மக்கள் நொந்துபோயிருக்கின்றனர். வீட்டிலாவது இந்த மெஷின்களின் பிடுங்கல்களிலிருந்து விடுதலையை நாடுகின்றனர். அங்கேயும் இவற்றின் ஆதிக்கத்தைப் பார்த்தால் அவர்களுக்கு ஆபீஸ் ஞாபகம்தான் வருகிறது.”சமைக்காமல் சாப்பிடலாமா?
அமெரிக்காவில், முளைகட்டிய தானியங்களை பச்சையாக உண்பதால் உணவோடு சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகமாக ‘முளைத்திருப்பதாக’ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதைப்பற்றி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பின்வரும் எச்சரிக்கையை ஃஎப்டிஏ கன்ஸ்யூமர் பத்திரிகையில் கொடுக்கிறது. உணவோடு சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலை ஒருவர் குறைக்கவேண்டும் என்று நினைத்தால் முளைகட்டிய தானியங்களை பச்சையாக சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். அநேகர் அல்ஃபால்ஃபா, கிளோவர், பீன்ஸ் போன்ற அவரை இனத்தைச் சேர்ந்த பயிர்களை முளைகட்டி பச்சையாக உண்கின்றனர். இவை முளைகட்டப்படும்போது ஏராளமான பாக்டீரியாக்கள் வளருகின்றன. இந்த பாக்டீரியாக்கள் நோய்களை ஏற்படுத்தியதாக பல நாடுகளிலிருந்து வரும் அறிக்கை காண்பிக்கிறது என்று த நியூ யார்க் டைம்ஸ் அறிவித்தது. சிறு பிள்ளைகள், வயதானோர், நோய் எதிர்ப்பு சக்தியில் குறை உள்ளவர்கள் போன்றோர் வெகு எளிதாக இந்த நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் இந்த பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு தலைகீழாக நின்று முயற்சிகள் செய்தனர். இதற்காக முளைகட்டிய பயிரை கிளோரினில் அல்லது ஆல்கஹாலில் கழுவிப்பார்த்தனர் . . . ஊஹூம், பாக்டீரியாவை சுத்தமாக நீக்கவே முடியவில்லை. “தானியங்கள் முளைவிடும்போது ஈரப்பசையும் மிதமான வெப்பமும் நிலவுகிறது. இந்த சூழ்நிலை பாக்டீரியாவுக்கு பன்னீர் தெளித்து வரவேற்பது போல. எனவே அவை அங்கே வளர்ந்து குடித்தனம் நடத்த ஆரம்பித்துவிடுகின்றன” என்பதாக டைம்ஸ் பத்திரிகை அறிவிக்கிறது.
மொழிகளின் சங்கமம்
லண்டன் நகரில் பள்ளியில் படிக்கும் மாணாக்கர்கள் எத்தனை மொழி பேசுகிறார்கள் தெரியுமா? குறைந்தது 307 என்பதாக த டைம்ஸ் செய்தித்தாள் அறிவிக்கிறது. லண்டனில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன என்பதை ஆய்வு செய்தவர்களில் ஒருவரான டாக்டர் ஃபிலிப் பேக்கர், இத்தனை மொழிகள் இங்கே சங்கமமாவதை அறிந்து அசந்துவிட்டார். அவர் சொல்வதைக் கேட்போமா? “தற்சமயம் உலகிலேயே அதிகமான மொழிகள் பேசப்படும் நகரம் எது என்ற கேள்வி எழுந்தால் விடை லண்டன்தான். இந்த விஷயத்தில் நியூ யார்க்கை வென்று, லண்டன் முதலிடத்தில் நிற்கிறது.” இது மட்டுமா? நூற்றுக்கணக்கான பேச்சு வழக்குகளும் இங்கே பேசப்படுகின்றன. கொடுக்கப்பட்டுள்ள 307 மொழிகள் என்ற எண்ணிக்கை இப்படிப்பட்ட பேச்சுவழக்குகளை உட்படுத்தவில்லை. பள்ளி செல்லும் 8,50,000 பிள்ளைகளில் மூன்றில் இரண்டு பிள்ளைகள் மட்டுமே தங்கள் இல்லத்தில் ஆங்கிலத்தில் பேசுகின்றனர். இங்கே பேசப்படும் மற்ற மொழிகள் முக்கியமாக இந்திய துணைகண்டத்திலிருந்து வந்தவர்கள் பேசுபவை. குறைந்தது 100 ஆப்பிரிக்க மொழிகள் இங்கே பேசப்படுகின்றன. ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 58 மொழிகளை பேசுகின்றனர் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?
பூஞ்சையின் வீரியம்
அதெலெட்ஸ் ஃபுட் என்பது பூஞ்சைகளால் காலில் வரும் நோய். பாதிக்கப்பட்டால் காலில் பயங்கர வலி இருக்கும். இந்த நோய் கால் விரலிலும் பாதங்களிலும் வரும், வேகமாக மற்றவர்களுக்கும் பரவும். தற்சமயம் ஜெர்மெனியில் படுவேகமாக இது பரவுகிறது என்பதாக டெர் ஷ்பீகல் செய்தித்தாள் அறிவிக்கிறது. இந்த நாட்டில் வாழ்பவர்களுள் 5 பேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் இன்னும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. நீராவிக்குளியல் செய்வதற்கான மையங்கள், நீச்சல் குளம், சில மத கட்டிடங்கள் போன்ற பொது இடங்களில் இந்த நோய் சுலபமாக தொற்றுகிறது. இங்கெல்லாம் ஜனங்கள் காலில் எதுவும் அணியாமல் நடப்பதால் நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம். இந்தப் பூஞ்சைகள் கண்களுக்கு தெரியாத விதைகளை வெளியிடுகின்றன, அவற்றை எளிதில் அழிக்க முடியாது. இந்த பூஞ்சை காலில் பரவாமல் இருப்பதற்காக சில மருந்துகளை காலில் ஸ்ப்ரே செய்கின்றனர் அல்லது நீரில்மருந்து கலந்து அதை ஒரு பேஸினில் வைத்திருப்பார்கள், காலை அதில் முக்கிவிட்டு உள்ளே செல்ல வேண்டும். இந்த இரண்டு முறைகளிலும் மருந்து காலில் இருப்பது சில வினாடிகளே. ஆகவே இந்த முறைகள் இந்த நோயை தடுப்பதற்கு பதில் பரப்பி விடுகின்றன. அப்படியென்றால் உங்கள் பாதங்களை பாதுகாப்பது எப்படி? குளிக்கும்போது அணியும் செருப்புகளை எப்போதும் அணிய வேண்டும் என்பதாக, பூஞ்சைகளைப் பற்றி நன்கு அறிந்த டாக்டர் ஹேன்ஸ் யுர்கன் டீட்ஸ் சொல்கிறார். ஈரப்பதம் இருந்தால்தான் பூஞ்சை நமது கால்களில் வளர்ந்து குடும்பமும் குடித்தனமும் நடத்தி எண்ணிக்கையில் பெருகும். எனவே, பாதத்தை ஈரப்பசையின்றி வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். பாதங்களில் துளியும் நீரின்றி நன்கு துடைக்க வேண்டும், முக்கியமாக விரல்களின் இடுக்குகளில் பொட்டு நீர்கூட இருக்கக்கூடாது.
கடல்நீர் - உப்பு = குடிநீர்!
கடல் நீரை குடிநீராக்குவது புதிய விஷயமல்ல. ஆனால், தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள ஒரு சிறிய தீவில் பயன்படுத்தப்படும் கடல் நீரை குடிநீராக்கும் முறை அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது என்பதாக த ஆஸ்ட்ரேலியன் செய்தித்தாள் அறிவிக்கிறது. சாதாரணமாக கடல் நீரை குடிநீராக்குவதற்கு ரசாயனங்களை உபயோகிப்பர். ஆனால் இந்தத் தீவில் “எந்தவித ரசாயனமும் பயன்படுத்தாமல் கடல் நீரை குடிநீராக்குகின்றனர். இந்த செயல்முறை இந்த தொழில்நுட்பத்தின் சரித்திரத்தில் ஒரு மைல்கல்” என்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. கங்காருத்தீவு என்றழைக்கப்படும் தீவில் வசிக்கும் பென்ஷோ இனத்தைச் சேர்ந்த 400 பேருக்கு குடிநீர் அளிப்பதற்கு இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. “கடல் நீரை, அதிக அழுத்தத்தில் ஒருவித சவ்வு வழியாக வெளியேற்றுகின்றனர். இந்த அழுத்தத்தால் நல்ல தண்ணீர் சவ்வு வழியாக வெளிவந்துவிடுகிறது, அதிகளவான உப்புள்ள நீர் சவ்வின் அந்தப் பக்கம் நின்றுவிடுகிறது. இந்த உப்புநீரை மறுபடியும் கடலில் கொட்டி விடலாம்.” இந்த ஆரம்ப வெற்றியைப் பார்த்தவுடன் எல்லா இடங்களிலும் பெரியளவில் எதிர்பார்ப்புதான். இருந்தாலும் இந்த முறை அதிகமாக செலவு பிடிக்கிறது. கடல் நீரை குடிநீராக்கும் மற்ற முறைகளோடு இந்த செலவை ஒப்பிட்டால் இந்த செலவும் குறைவுதான் என்பதாக த ஆஸ்ட்ரேலியன் அறிவிக்கிறது.
“பாஸ் மீட்டிங் போயிருக்காரு”
பெரிய கம்பெனிகளில் முக்கியமான அதிகாரிகளுக்கு செகரெட்ரியாக பணி செய்பவர்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் 148 செகரட்ரிகளிடம் கேள்வி கேட்கப்பட்டது, அவர்களில் 47 சதவீதத்தினர் தங்கள் பாஸ் பொய் சொல்லச் சொன்னார் என்பதை ஒப்புக்கொண்டனர் என்று த வால் ஸ்டீரீட் ஜர்னல் அறிவிக்கிறது. டெக்ஸாஸில் ஒரு பெண் 30 வருடங்களாக மார்க்கெட்டிங் அதிகாரிக்கு செகரெட்ரியாக பணி செய்கிறாள்; இவளால் இத்தனை ஆண்டுகள் எப்படி வேலையில் தாக்கு பிடிக்க முடிந்தது? தன்னுடைய பாஸ் அலுவலகத்தில் இருக்கும்போதே அவர் “மீட்டிங் போயிருப்பதாக” பொய் சொல்லி வந்தாள். சில சமயம் இப்படி பொய் சொல்லும்போது எக்கச்சக்கமான சிக்கலும் வந்துவிடுகிறது. அதிகாரியின் மனைவி, கணவன் எங்கே என்று கேட்கும்போது செகரட்ரி தெரியாது என்று சொன்னால் பிரச்சினை வெடித்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. இன்னொரு உதாரணத்தை கவனிக்கலாமா? ஒருவர் போன் செய்து தனக்கு வரவேண்டிய செக் என்னவாயிற்று என்று கேட்டார். செகரட்ரி, அலுவலகத்திலிருந்து இன்னும் செக்கை அவருக்கு தபாலில் அனுப்பவேயில்லை என்ற உண்மையை போட்டு உடைத்துவிட்டார். விளைவு? செகரெட்ரியின் வேலைக்கு உடனடி வேட்டு.