எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
20-ம் நூற்றாண்டு டிசம்பர் 8, 1999, இதழ் மிகவும் அருமை. அதிலிருந்து அநேக நல்ல விஷயங்களை அறிந்துகொண்டேன். முக்கியமாக “20-ம் நூற்றாண்டு—சரித்திரம் படைத்த வருடங்கள்” என்ற தொடர் கட்டுரை சுருக்கமாக இருந்தாலும், அதிக தகவல்கள் கொண்டிருந்தது. இந்த கடைசி நாட்களில் நான் ஆவிக்குரிய நிலையில் இன்னும் விழிப்புடனிருக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இது வளர்த்திருக்கிறது.
எம். வி., பிலிப்பைன்ஸ்
கிட்நாப்பிங் “கிட்நாப்பிங்—உலக பயங்கரம்” (டிசம்பர் 22, 1999) என்ற தொடர் கட்டுரையில் இருந்த தகவல்கள் என்னே அருமை! டிசம்பர் 24-ம் தேதி இந்திய விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தில், என்ன நடக்கப்போகிறது என உலகமே ஆவலாய் பார்த்துக்கொண்டிருந்தபோது இந்தப் பத்திரிகை வந்தது பொருத்தமாக இருந்தது. கிட்நாப்பிங்கை கட்டுப்படுத்துவதற்கு உங்கள் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை படித்து அதிகாரிகள் அவற்றை கடைப்பிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
ஏ. எஸ்., இந்தியா
கோமா பேஷன்ட் மிச்சிக்கோ ஒகாவா-வின் அனுபவத்தை பிரசுரித்ததற்காக மிக்க நன்றி. (“கஷ்டங்களை சகிக்க நம்பிக்கை கைகொடுத்தது,” டிசம்பர் 22, 1999) அவருடைய கணவனுக்கு விபத்து நேரிடும்போது நான் ஐந்து நாள் குழந்தை. இத்தனை வருடங்களாக அவர் சுயநினைவின்றியே வாழ்ந்து வருகிறார் என்பதை நினைக்கும்போது துக்கம் நெஞ்சை அடைக்கிறது! யெகோவாவின் உதவியாலேயே பரிதாபமான நிலைமைகளிலும் மச்சிக்கோ சகித்திருந்து, தன் இரு மகன்களையும் கஷ்டப்பட்டு வளர்த்திருக்கிறார்.
எல். என்., ஐக்கிய மாகாணங்கள்
அந்தக் கட்டுரை என் இதயத்தின் ஆழத்தை தொட்டு, நெகிழ வைத்தது. நான் தனியாக வாழ்ந்து வருகிறேன். சமீபத்தில்தான் எனக்கு கேன்ஸர் இருப்பது தெரியவந்தது. இந்தக் கட்டுரையை வாசித்ததிலிருந்து, மிச்சிக்கோ இவ்வளவு கஷ்டங்கள் மத்தியிலும் யெகோவாவுக்கு உண்மையாய் இருந்ததற்காக அவரை அப்படியே கட்டி அணைத்து, வாழ்த்த வேண்டும், நன்றி சொல்ல வேண்டும்போல் இருக்கிறது. முன்பு, என் வாழ்க்கையில் ஏதாவது அற்புதம் நடக்கும் என நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இப்போது, எந்த அற்புதத்தையும் எதிர்பார்க்காமல், மிச்சிக்கோவைப்போல வெறுமென யெகோவாவின் சித்தம் என்னவோ அதுவே நடக்க விரும்புகிறேன்.
எம். எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
இரத்தமில்லா சிகிச்சை “இரத்தமில்லா சிகிச்சை—அமோக வரவேற்பு” (ஜனவரி 8, 2000) என்ற தொடர் கட்டுரை சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சிகளை விளக்கியது. நான் நர்ஸிங் கல்லூரியில் படித்து வருகிறேன், எனக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்ததால், என் தோழிக்கும் என் ஆசிரியைக்கும் இந்தப் பத்திரிகையின் பிரதிகளை கொடுத்தேன். முன்பு இவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகளைப் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் இப்போது அவர்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய சரியான தகவல்களையும், இந்தக் கட்டுரைகளையும் பெற்றுக்கொள்வதில் சந்தோஷமடைந்தனர்.
ஆர். பி., ஸ்விட்ஸர்லாந்து
1998-ம் ஆண்டு என் மகன் ஒரு மோட்டார் விபத்தில் சிக்கினான். அதில் அவனுடைய கால் நொறுங்கிவிட்டது. அவன் மருத்துவர்களிடம் தனக்கு இரத்தம் ஏற்றக்கூடாது என உறுதியாக கூறிவிட்டான். ஆனால் அந்த மருத்துவமனையோ இரத்தமின்றி ஆப்ரேஷன் செய்ய முடியாது என சொல்லிவிட்டது. அதனால் அவனை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றினோம். அந்த மருத்துவமனை ஊழியர்கள், இவனுடைய ஹெமடோக்ரிட், அதாவது இரத்தவோட்டத்தில் சிவப்பணுக்களின் அளவு 35-ஐ எட்டினால்தான் ஆப்ரேஷன் செய்வோம் என காத்துக்கொண்டிருந்தனர். (அப்போது அதன் அளவு 8.1-க்கு குறைந்திருந்தது.) அவன் எப்படியும் செத்துவிடுவான் என அவர்கள் நினைத்திருந்ததால், அவனுக்கு சிகிச்சை எதுவும் அளிக்காமல் ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், காலை உயர்த்தி வைப்பது, எரித்ரோப்பாய்டீன் பயன்படுத்துவது போன்ற இரத்தமில்லா சிகிச்சை முறைகளை பயன்படுத்தியபோது ஹெமடோக்ரிட் அளவு 35.8 ஆக உயர்ந்தது! அதன் பிறகு நடந்த ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்தபோதிலும், தாமதமாக செய்ததால், அநேக நிரந்தரமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு மற்றவர்களுக்கு நடக்காமலிருக்க, ஒவ்வொரு மருத்துவரும் நர்ஸூம் அனஸ்தீஸியாலஜிஸ்ட்டும் இந்தக் கட்டுரைகளை வாசிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
எல். எல்., ஐக்கிய மாகாணங்கள்
இரத்தமில்லா சிகிச்சைக்கான யெகோவாவின் சாட்சிகளுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள இப்போது அநேக மருத்துவர்கள் முன்வருகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது ஆறுதலாய் இருக்கிறது. இந்த பத்திரிகையை உடனடியாக என் மருத்துவருக்கு கொடுக்கப்போகிறேன். இது அவருக்கு நிச்சயம் பயன்படும்.
யு. எம்., ஐக்கிய மாகாணங்கள்
எனக்கு ஆப்ரேஷன் நடக்கவிருந்த சரியான நேரத்தில் இந்த பத்திரிகை கிடைத்தது. அதிகளவு இரத்தத்தை நான் இழந்திருந்தேன். அந்த சமயத்தில், நான் ஏன் இரத்தம் ஏற்றிக்கொள்ள மாட்டேன் என்பதை மருத்துவமனை ஊழியர்களுக்கும், என் குடும்ப அங்கத்தினர்களுக்கும் விளக்க இந்தப் பத்திரிகையை பயன்படுத்தினேன். யெகோவா தேவனால்தான் இப்போது நான் பூரணமாக குணமடைந்திருக்கிறேன்.
கே. பி., ஐக்கிய மாகாணங்கள்