ஓவியமான ஐம்பது வருடங்கள்
ஓவியமான ஐம்பது வருடங்கள்
ஆல்ஃப்ரட் லிப்பர்ட் சொன்னபடி
ஜெர்மனியிலுள்ள, மைசனின் தெருக்களில் சிறுவனாக விளையாடியது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. நான் பெரியவனாகும்போது, மர வேலையை நன்கு கற்று, நல்ல தச்சனாக ஆகவேண்டும் என என் அம்மா ஆசைப்பட்டார். ஆனால் என் பள்ளி ஆசிரியரோ, அருகிலிருந்த பீங்கான் கைவினைத் தொழிற்சாலையில் என்னை வேலைக்கு சேர்த்துவிடும்படி அம்மாவிடம் சொன்னார். என்னை அங்குதான் சேர்க்க வேண்டும் என ஏன் அந்த ஆசிரியர் கண்டிப்பாக சொன்னார்? காரணம், அவர் கண்கள் என் கைகளை பார்த்திருக்கின்றன. அழகான ஓவியங்களை வரையும் திறன் எனக்குள் இருந்ததை அவர் கவனித்திருக்கிறார். கடைசியில், ஆசிரியர் சொன்னபடியே அந்த தொழிற்சாலையில் சேர்க்கப்பட்டேன். அப்போது எனக்கு 14 வயது, உலகப் புகழ்பெற்ற அழகிய பீங்கானில் வரையும் ஓவியக்கலையை அப்போதிலிருந்தே பயில ஆரம்பித்தேன்.
மைசன் நகரில் சுமார் 300 வருடங்களாக பீங்கான் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பாவிலேயே, உயர்தர பீங்கான் தயாரிக்கும் முதல் தொழிற்சாலை இங்குதான் 1710-ல் நிறுவப்பட்டது. தயாரிக்கப்படும் பீங்கானில் ஓவியம் வரையும் கலையை இளைஞர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என நினைத்த அந்த தொழிற்சாலை சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு, அதற்கான ஒரு பள்ளியை துவங்கியது. அன்று நிறுவப்பட்ட பள்ளி இன்றும் இயங்கி வருகிறது. இங்குதான் நானும் கோழிக் கிறுக்கலாக கிறுக்கி கிறுக்கி மெல்ல மெல்ல அழகான சித்திரங்களை தீட்ட கற்றுக்கொண்டேன்.
பூக்கள், மரங்கள், மிருகங்கள், பறவைகள் போன்றவற்றை வரைந்து வர்ணம் பூசுவதில் இருக்கும் நுணுக்கங்களை இந்த பள்ளியில்தான் கற்றுக்கொண்டேன். பிற்காலங்களில் நான் செய்த எல்லா நுணுக்கமான வேலைகளுக்கும் இந்தப் படிப்பே அடிப்படையாக அமைந்தது.
இருவகை ஓவியம்
ஒளிபுகும் தன்மையுடைய ஒருவகை மண் கலவையாலானதுதான் பீங்கான். இதில் இரண்டு விதங்களில் ஓவியம் வரையலாம். பீங்கான் பளபளப்பாக்கப்படுவதற்கு முன்பே அதில் ஓவியம் வரைவது ஒருவகை. ஆனால் இவ்வாறு ஓவியம் தீட்டப்பட்ட பீங்கானில், அநேக சின்ன சின்ன துவாரங்கள் இருப்பதால் அதில் பயன்படுத்தப்படும் கலர், ஊறிப் பரவுகிறது. அத்துடன் அதில் வரையும்போது ஏதாவது தவறு ஏற்பட்டுவிட்டால், அதை திருத்துவது கஷ்டம், அதனால் இதில் ஓவியம் வரையும்போது அதிக கவனம் தேவை. அடுத்த வகை ஓவியமோ, பீங்கான் பளபளப்பாக்கப்பட்ட பிறகு வரைவது. இந்த வகை ஓவியம் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதிலும் விதவிதமாக பூக்களை இவ்வகையில் வரைவதுதான் என் ஓவியத்தின் தனித்தன்மை. அதுவும் எல்லாவற்றிலும் ஒரேமாதிரி வரையாமல், ஒவ்வொரு பீங்கானுக்கும் வித்தியாச வித்தியாசமான பூச்செண்டுகளை டிசைன் செய்ய வேண்டும். ஆகவே அழகான ஓவியங்களை கற்பனை செய்து, சிறப்பாக வரைய கற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக கவனச்சிதறல்களை தவிர்த்து, சிந்தனையை ஒருமுகப்படுத்துவதும் அவசியம்.
அநேக வருடங்கள் வண்ண வண்ண பூக்களை சித்திரங்களாக தீட்டிய பிறகு, மிகவும் கஷ்டமான வேலையை செய்ய ஆரம்பித்தேன். அது உயிருள்ள ஜீவன்களை அப்படியே தத்ரூபமாக வரைவது. மிருகங்களையும் பறவைகளையும் வரைய சிறுவயதில் கற்றுக்கொண்டது இப்போது பலனளித்தது.
சுவாரஸ்யமான சவால்
மிருகங்களை, மீன்களை, பறவைகளை வரைவது என்பது ஒரு சவால்தான். அவை பூக்களையோ, மரங்களையோ வரைவதுபோல அல்ல. இவற்றையெல்லாம் உயிரோட்டத்துடன் வரைய வேண்டும். இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல; இது ஒரு சுவாரஸ்யமான சவால் என சொல்லலாம். இவற்றை உயிரோட்டத்துடன் வரைய விரும்பும் ஓவியர் ஒருவர் தான் வரையப்போகும் மிருகம் அல்லது பறவையின் உடல் அமைப்பையும் பழக்கங்களையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். என்னுடைய பெரும்பாலான ஓவியங்கள் இன்று அதிகம் வேட்டையாடப்படும் காட்டு விலங்குகளை சித்தரித்துக்காட்டும்; உதாரணமாக, பெரிய பெரிய நீளமான கொம்புகளையுடைய மான்களை வரைந்திருக்கிறேன்.
மிருகங்களை தெரிந்துகொள்வதற்கான சிறந்த வழி, அவற்றை நாமே பார்த்து கற்றுக்கொள்வதுதான். உதாரணத்திற்கு, சில வருடங்களுக்கு முன்பு, மீன்களை ஓவியமாக வரையலாம் என நினைத்தேன். ஆனால் அவற்றை உயிரோட்டத்துடன் வரைவதற்கு மீன்களைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தேன். அதற்காக ஒரு பெரிய மீன் தொட்டியை வாங்கி அதில் வித்தியாச வித்தியாசமான மீன்களை விட்டேன். நானும் என் மனைவியும் அந்த தொட்டிக்கு முன்பு மணிக்கணக்காக உட்கார்ந்து, ஒவ்வொரு மீனின் அசைவையும் பழக்கங்களையும் கவனமாக பார்த்துக்கொண்டிருப்பது வழக்கம். அதிலிருந்த மீன்களைப் பற்றி நன்கு தெரிந்த பிறகே, அவற்றை வரைய ஆரம்பித்தேன்.
நல்ல ஓவியனுக்கு என்ன தேவை?
பீங்கானில் வரையும் ஒருவர், நல்ல ஓவியனாக ஆக என்ன தேவை என என் நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்பர். எல்லோருக்கும் தெரிந்த விதமாக ஒரு ஓவியருக்கு கலைத் திறன், தெளிவான கண் மற்றும் நடுக்கமில்லாத கை வேண்டும். ஆனால் அதுமட்டும் போதாது. ஒருவர் நல்ல ஓவியனாக ஆக, முதலில் தன்னைப் பற்றியும், தன் வேலையைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் சரியான மனநிலையை கொண்டிருப்பது அவசியம். ஒரு நல்ல ஓவியன் கைவினைஞனைப் போன்று, தன் திறமைகளை மென்மேலும் வளர்க்க கடினமாய் உழைப்பவன். தன்னிடமுள்ள திறமைகளை நன்கு பயன்படுத்தா விட்டால் அவற்றை இழக்க நேரிடும் என்பதை அறிந்திருக்கிறான். தான் ‘கற்றது கையளவு கல்லாதது உலகளவு’ என்பதை உணர்ந்தவனாக மற்றவர்களுடைய கருத்துகளை எப்போதும் கேட்டு ஆலோசனைகளை எப்போதும் ஏற்கிறான்.
மற்றொரு முக்கியமான விஷயம். நல்ல அனுபவம் வாய்ந்த ஓவியன், தன் வாடிக்கையாளரின் விருப்பம் என்னவாய் இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்படுவான். வீட்டை அலங்கரிப்பதற்காக பீங்கானை வாங்கும் வாடிக்கையாளர் எல்லா இடங்களிலும் காணப்படும், ஒரேவிதமான பீங்கானை வாங்கி கொஞ்ச நாட்கள் வைத்துவிட்டு தூக்கியெறிந்துவிட விரும்ப மாட்டார். மாறாக, அதை மதிப்புள்ளதாக, மற்றவர்களின் கவனத்தை கவர்வதாக, பார்த்தாலே ஒருவித சந்தோஷம் பொங்கச் செய்வதாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார். அதோடு வீட்டின் அழகையும் அந்தஸ்தையும் கூட்டி காட்டும் கலைப்பொருளாக இருக்க வேண்டுமென்றும் விரும்புவார். ஆக, தன் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை திருப்தி செய்யும் விதத்தில் அந்த ஓவியர் தன் கலைத் திறனை பயன்படுத்துவார்.
ஓவியமும் கடவுள் நம்பிக்கையும்
ஓவியனாக நான் வரைந்த எல்லா ஓவியங்களும், பைபிளை ஆழமாக படிக்கவும், கடவுளை உறுதியாக நம்பவும் தூண்டியிருக்கின்றன. எப்படி? பறவைகளின் வாழ்க்கை முறையை நன்கு அறிந்த வல்லுநர்களுடன் நான் அநேக தரம் வேலை செய்திருக்கிறேன். அவர்களுடைய புத்தகங்களில் நான் அநேக படங்களை வரைந்திருக்கிறேன். நான் இவற்றையெல்லாம் வரைவதற்கு முன்பு பரிணாமக் கோட்பாட்டை நம்பி வந்தேன். ஆனால் அநேக நூலாசிரியர்களுடனும் வல்லுநர்களுடனும் நெருக்கமாக பழகும்போது, உயிரின் துவக்கத்தைப் பற்றி பேச வேண்டிய சந்தர்ப்பம் எழுந்தது. அப்படிப்பட்ட உரையாடல் என் நினைப்பை மாற்றியது.
என்னை சிந்திக்க வைத்த விஷயம் என்னவென்றால், எல்லா வல்லுநர்களும் பரிணாமத்தையே நம்பினபோதிலும், ஒவ்வொருவரும் வித்தியாசமான கருத்துகளை கொண்டிருந்தனர். ஒருவருடைய கருத்து மற்ற வல்லுநரின் கருத்துகளுக்கு முரணாக இருந்தது. நான் பார்த்த வரையில் பரிணாமத்தைப் பற்றிய ஒரே கருத்து அல்லது ஒற்றுமையான கருத்து எங்குமில்லை. ஆக, வல்லுநர்களாலேயே பரிணாமத்தைப் பற்றிய ஒரே கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதபோது, மற்றவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வர்? அதனால் என்னுள் இருந்த பரிணாம கோட்பாட்டு நம்பிக்கை செத்தது. பரிணாமம் உண்மையல்ல என்றால், பூமியில் உயிர் படைக்கப்பட்டது என்பதே உண்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நான் படைப்பாளரை நம்ப ஆரம்பித்தேன்.
கடந்த ஐம்பது வருடங்களாக என் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களை மக்கள் ரசித்திருக்கின்றனர், இன்றும் ரசிக்கின்றனர். இது எனக்கு ஆத்மார்த்த திருப்தியை அளிக்கிறது. ஓவியம் மற்றும் பீங்கான்மீது நான் கொண்டுள்ள காதல் என்றும் ஒழியாது.
[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]
16, 17-ம் பக்க படங்கள்: Mit freundlicher Genehmigung der Staatlichen Porzellan-Manufaktur Meissen GmbH