Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“கானகத்து கண்கவர் குடிமகன்”

“கானகத்து கண்கவர் குடிமகன்”

“கானகத்து கண்கவர் குடிமகன்”

ஸ்வீடனிலுள்ள விழித்தெழு! நிருபர்

ஜூன் மாதத்தில் ஒரு நாள் முதன்முதலாக என் விழி மேடையில் தோன்றினார் அந்தக் “கானகத்து கண்கவர் குடிமகன்”​—⁠அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள் இங்குள்ளவர்கள் சிலர். தோற்றத்திலோ கம்பீரம், நிறத்திலோ சாம்பல். யார் அந்தக் “கானகத்து கண்கவர் குடிமகன்”? திருவாளர் ஆந்தையாரே அவர். இவருக்கு லாப்லாந்து ஆந்தை என்ற மறுபெயரும் உண்டு.

வசீகர தோற்றமுடைய இந்த ராட்சச ஆந்தையார் பின்லாந்தின் சில பகுதிகளிலும், ஸ்வீடனின் வட பகுதியிலும், அதன் கிழக்கே நெடுந்தொலைவிலுள்ள சைபீரியா, அலாஸ்கா, கனடாவிலும் “குடியுரிமை” பெற்றிருக்கிறார். ஆனால் இந்தத் திருட்டு முழி ஆந்தையார் திருடனைப் போல தலைமறைவாகவே வாழ்கிறார். அவருடைய “வீட்டு” விலாசம் தெரியவில்லையென்றால், அவரை கண்டுபிடிப்பது கஷ்டமே. வீட்டை கண்டுபிடித்துவிட்டால், அவர் அச்சமின்றி அக்கம் பக்கம் அலைந்து திரிவதை அழகாக பார்க்கலாம்!

வேட்டையாடுவதில் சூரன்

அழகிய அங்க அடையாளங்களைக் கொண்ட ஆண் லாப்லாந்து ஆந்தையாரை பார்த்தேன். உணவுக்காக அங்குமிங்கும் நோட்டமிட்டுக் கொண்டிருந்த ஆந்தையார் தடாலென்று கிளையிலிருந்து கீழே ‘டைவ்’ அடித்தார். ஏதாவது இரையை பார்த்துவிட்டாரா? ஓ! இப்பொழுது புரிகிறது​—⁠தரையில் ஒரு சுண்டெலியன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்புறமென்ன! அடுத்தவினாடி அந்தச் சுண்டெலியன் அவருடைய கூரிய நகங்களுக்கிடையில்! அப்படியே அலாக்காக தூக்கிக்கொண்டு வானில் வருகையில் ஆந்தையாருடைய சிறகை கண்களால் அளவெடுத்தேன். அம்மாடியோ! ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை சுமார் 140 சென்டிமீட்டர்!

மற்ற ஆந்தையரைப் போல லாப்லாந்து ஆந்தையார் ஆண்டாண்டு இனப்பெருக்கம் செய்வதில்லை. சுண்டெலிகள் போன்ற சிறு பிராணிகளே இந்த ராட்சத ஆந்தையரின் உணவு. ஆகவே சில வருடங்களில் இவற்றிற்கு தட்டுப்பாடு என்றால் லாப்லாந்து ஆந்தையரின் இனப்பெருக்கமும் நின்றுவிடுகிறது! ஆனால் சுண்டெலிகள் அமோகமாக கிடைக்கும் ஆண்டுகளில், ஆந்தையார் வீட்டில் குஞ்சுகுளுவான்களும் அமோகமாக இருப்பார்கள்! நான்கு அல்லது அதற்கும் அதிகமான குஞ்சுகள் ஒவ்வொரு வீட்டிலும் கூச்சல் போட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம்.

ஜோடியைத் தேடி

வசந்தகாலம் ஆந்தையருக்கும் வசந்தகாலமே. ஏனென்றால் அது ஜோடி சேரும் காலம். வருங்கால ஆசை நாயகனை கவனமாக தேர்ந்தெடுக்கிறாள் ஆந்தை நாயகி. நமது பெண்களைப் போல் ஆடவனின் கட்டழகைக் கண்டு கண்மயங்க மாட்டாள் அவள். வேட்டையில் வேந்தனாக விளங்கும் ஆந்தையாரையே மாலை சூடுகிறாள் என பறவை ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கிறார்கள். ஜோடி சேர்ந்து குடும்பம் குட்டிகள் என்று வரும்முன் நாயகன் தினம் தினம் நாயகிக்கு விருந்தளித்து திருப்திப்படுத்த வேண்டும்.

சுண்டெலிகள் அமோகமாக கிடைக்கும் காலத்தில் வீட்டுக்காரர் வேட்டையாடி கைநிறைய எலிகளை சம்பாதிக்கிறார். ஆந்தையாருடைய சம்பாத்தியத்தில் சாப்பிட சாப்பிட ஆந்தை அம்மையாரின் உடலும் உருட்டுக் கட்டையாக பெருத்துக்கொண்டே போகிறது. எடை ஏற ஏற இடும் முட்டைகளின் எண்ணிக்கையும் ஏறுகிறது!

இனி வேட்டையாடும் வேலை முழுவதும் கணவன் தலையில். அதற்கு அதிக சக்தி வேண்டும். ஆந்தை அம்மையாரின் ஆசை கொஞ்சலும் கெஞ்சலும் வேட்டை நாயகனை வெளியே கிளப்புகிறது. அவளுடைய சக்தியோ முட்டையிடுவதிலும் இந்தப் பொக்கிஷங்களை பொத்தி காப்பதிலுமே கரைந்துவிடுகிறது.

வீட்டு விலாசத்தை தேடி

பாசமிக்க தந்தையாக பறந்து திரிந்து உணவு கொண்டு செல்வதை பைனாக்குலர் வழியாக பார்த்துக் கொண்டே இருந்தேன். அது செல்வதை பார்த்து பார்த்து ஒருவழியாக அதன் கூட்டைக் கண்டுபிடித்தேன். லாப்லாந்து ஆந்தைகள் சொந்தமாக கூடு கட்டுவதில்லை. பிற பறவைகள் புதர்ச்செடிகளில் அமைத்திருந்த பழைய கூடுகளிலேயே பெரும்பாலும் குடியேறுகின்றன. அப்படி கிடைக்கவில்லை என்றால், காய்ந்த மரப் பொந்துகளே அவற்றின் வீடு.

அந்த வீட்டிற்குள்ளே பார்த்தேன். ஆஹா! துருதுரு பார்வையோடு புசுபுசுவென்று இரண்டு சின்னஞ்சிறு குஞ்சுகள்! அவை கீச். . .கீச் என்று கோரஸாக கத்திக்கொண்டு, சற்று தள்ளி அமர்ந்து இருக்கும் தாயை பசிமயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் கூட்டின் பக்கத்தில் போனீர்கள் என்றால் அவ்வளவுதான். தன் கண்மணிகளுக்கு ஒரு ஆபத்து என்றால், தாய் பொறுத்துக்கொள்ள மாட்டாள்! சத்தம்காட்டாமல் பறந்து வந்து கூரிய நகங்களால் பதம் பார்த்துவிடுவாள். எனவே ஆந்தை குடும்பத்தை ஆராய விரும்புவோர் கொஞ்சம் தள்ளியே இருந்து ஆராய வேண்டும்.

போஷிப்பும் பயிற்றுவிப்பும்

வீட்டுக்குத் திரும்பும் தந்தை-ஆந்தையார் வேட்டையாடி பிடித்துவந்த எலியை அலகால் ஒரு குஞ்சுக்கு ஊட்டுவார். அதற்குள் அடுத்தது வாயைப் பிளந்துகொண்டு காட்டுக் கூச்சல் போடுவதை பார்க்க வேண்டுமே!

காச் மூச் என்று கத்திக்கொண்டிருந்த அந்த குஞ்சு உணவு வயிற்றுக்குள் போனதும் கப்சிப் ஆகிவிடுகிறது. கொஞ்ச நேரத்துக்கு முன்புவரை சூட்டிப்பாக இருந்த அந்தக் குஞ்சு இப்போது குடிபோதை தலைக்கு ஏறியதைப் போல துவண்டு படுத்துவிடுகிறது! சில நொடிகளில் புசுபுசுவென பஞ்சு குவியல் போல் சுருண்டு தூங்கிவிடுகிறது. ஏனென்றால் அதன் சக்தியெல்லாம் இப்பொழுது செரிமானத்திற்கே சென்றுவிடுகிறது. அதற்குள் அடுத்தது சென்றமுறை உண்ட மயக்கத்திலிருந்து கொஞ்ச கொஞ்சமாக தெளிய ஆரம்பிக்கிறது.

இப்படியே ஜூன் மாதத்தின் பாதிவரை உண்பதும் உறங்குவதுமாய் உல்லாசமாய் பொழுதைக் கழிக்கின்றன. அதற்குள் இந்தக் குஞ்சுகளுக்கு நான்கு வாரங்கள் ஆகிவிடும். தாயின் அழைப்பொலி கேட்டு மெல்லமெல்ல சிறகை அடித்து கூட்டைவிட்டு வெளியே வருகின்றன. ஆரம்பத்தில் கூட்டுக்குப் பக்கத்தில் மேலே கீழே இருக்கும் கிளைகளிலே மிக சாமர்த்தியமாக நடை பழகுகின்றன. தரையைவிட கிளைகளில் அதிக பயமில்லை, ஏனெனில் அங்கே விரோதிகளின் நடமாட்டம் அதிகமில்லை!

நடை பழகிய பின்னர் குஞ்சுகள் சிறுகிளைகளுக்கு இடையே அங்குமிங்கும் பறந்தோடி திரிய ஆரம்பிக்கின்றன. பறக்கும் திறமை வந்தவுடன் உணவை வேட்டையாட தொடங்கிவிடுகின்றன. வளரவளர தோற்றமும் மாறுகிறது, இப்பொழுது இவையும் ‘கானகத்து கண்கவர் குடிமகன்களே.’

[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]

© Joe McDonald

© Michael S. Quinton

[பக்கம் 19-ன் படத்திற்கான நன்றி]

© Michael S. Quinton

© Michael S. Quinton