Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செக்ஸ் தொல்லைகளை சமாளிப்பது எப்படி?

செக்ஸ் தொல்லைகளை சமாளிப்பது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர் . . .

செக்ஸ் தொல்லைகளை சமாளிப்பது எப்படி?

“பொண்ணுகள பாத்து விசில் அடிக்கிறதும், கத்தி கேலி பண்றதும்தான் பசங்களுக்கு வேல.”​—⁠கேர்லா, ஐயர்லாந்து.

“பொண்ணுங்க அடிக்கடி ஃபோன் பண்ணி ரொம்ப தொந்தரவு பண்ணுவாங்க.”​—⁠ஜேசன், ஐக்கிய மாகாணங்கள்.

“என் கைய புடிக்கிறதுக்காக ஒரு பையன் எவ்வளவோ முயற்சி பண்ணினான், அடிக்கடி என் கைய தொடுவான்.”​—⁠யூகிகோ, ஜப்பான்.

“என்னை, தப்பு செய்யச் சொல்லி பொண்ணுங்க பேச்சுலயே மயக்குவாங்க.” —⁠அலெக்ஸாந்தர், ஐயர்லாந்து.

“ஒரு பையன் ஸ்கூல் பஸ்ஸிலிருந்து என்ன பாத்து கத்தி கமெண்ட் அடிச்சிக்கிட்டிருந்தான். அவனுக்கு உண்மையாவே என்கூட சேந்து சுத்தனும்னெல்லாம் ஆசையில்ல, ஆனா என்னை கேலி பண்ணனும்னுதான் அப்படி கத்தினான்.”​—⁠ரோசலின், ஐக்கிய மாகாணங்கள்.

மோகத்துடன் ஒரு மாதிரி பார்ப்பது, ஒருவரைப் ‘பாராட்டும்போது’ தவறான ஆசையை வெளிப்படுத்துவது, அசிங்கமாக ஜோக்கடிப்பது, மோசமான எண்ணத்துடன் தொடுவது போன்ற செயல்களை சாதாரணமாக ஜனங்கள் வெறுக்கின்றனர். ஆனால், இப்படிப்பட்ட செயல்கள் தொடர்ந்து செய்யப்பட்டால், இதுதான் செக்ஸ் தொல்லை என்று அழைக்கப்படுகிறது. இதைப் பற்றி உலகளாவிய கணக்கெடுப்பு எடுப்பது சாதாரண விஷயமல்ல. இருந்தாலும் ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட சுற்றாய்வின்படி பெரும்பாலான பள்ளி செல்லும் இளைஞர்கள் இப்படிப்பட்ட தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

செக்ஸ் தொல்லை என்றால் என்ன? “செக்ஸ் விஷயத்தில் ஒருவரை தொல்லை பண்ணுவது . . . அது ஒருவேளை உடலோடு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் (காம எண்ணங்களுடன் ஒருவரை தொடுவது போன்றவை), வார்த்தைகளோடு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் (ஒருவருடைய தோற்றத்தைப் பற்றி விரும்பத்தகாத கமெண்டுகளை அடிப்பது போன்றவை) அல்லது வேறு வழிகளிலும் இருக்கலாம்” என டாக்டர் விக்டோரியா ஷா-வின் புத்தகமான செக்ஸ் தொல்லை மற்றும் செக்ஸ் வேறுபாடுகளை சமாளித்தல் (ஆங்கிலம்) சொல்கிறது. சில சமயங்களில் தகாத உறவுகொள்ளும்படி நச்சரித்து அநாகரீகமாக நடந்துகொள்வது

பள்ளியில் இப்படிப்பட்ட தொல்லைகளை நீங்கள் எதிர்பட்டால் பெரும்பாலும் உங்களை தொல்லைபடுத்துவது உங்கள் சகாக்களாகத்தான் இருக்கும். இருப்பினும் சில சமயங்களில், இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலை ஆசிரியர்கள் போன்ற பெரியவர்களே செய்கின்றனர் என்ற செய்தி அதிர்ச்சியூட்டுகிறது. செக்ஸ் தொல்லை என்ற விஷயத்தில் இன்று சிறிதளவான ஆசிரியர்களே பிடிபட்டிருக்கின்றனர்; ஆனால் இவர்கள் ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ போன்றிருக்கலாம் என்கிறது ரெட்புக் என்ற பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை.

இந்த தவறான நடத்தை நேற்று இன்று வந்ததல்ல. பைபிள் காலங்களிலேயே பெண்கள், சில சமயம் ஆண்கள்கூட இதை எதிர்பட்டிருக்கின்றனர். (ஆதியாகமம் 39:7; ரூத் 2:8, 9, 15) பைபிளும் இதைப் பற்றி ஏற்கெனவே முன்னறிவித்திருக்கிறது: “இறுதி நாள்களில் கொடிய காலங்கள் வரவிருக்கின்றன என அறிந்துகொள். தன்னலம் நாடுவோர், பண ஆசையுடையோர், வீம்புடையோர், செருக்குடையோர், பழித்துரைப்போர், . . . அன்புணர்வு அற்றோர், ஒத்துப் போகாதோர், புறங்கூறுவோர், தன்னடக்கமற்றோர், வன்முறையாளர்” போன்றோர் அப்போது இருப்பர். (2 தீமோத்தேயு 3:1-3, பொ.மொ.) அதனால் இந்த காலத்தில் வாழும் நீங்களும் செக்ஸ் தொல்லைகளை எதிர்ப்படலாம்.

கடவுளுடைய கருத்து

ஆனால் இந்த செக்ஸ் தொல்லையை எல்லா இளைஞருமே தொல்லையாக எடுத்துக்கொள்வதில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இதை சிலர் வேடிக்கையான விஷயமாக அல்லது தங்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகவே கருதுகின்றனர். ஐ.மா.வில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு அதிர வைக்கிறது. செக்ஸ் தொல்லைக்கு இரையான சுமார் 75 சதவீதத்தினர், தாங்களும் மற்றவர்களை தொல்லை படுத்தியிருப்பது உண்டு என ஒத்துக்கொண்டனர். இளம் பிள்ளைகள் இப்படிப்பட்ட நடத்தையில் ஈடுபடுவதை கவனிக்கும் பெரியவர்களும், இதை சீரியஸாக எடுக்காமல் சிறு பிள்ளைகள் ஏதோ விளையாட்டாக செய்கின்றனர் என விட்டுவிடுகின்றனர். விளைவு? இந்த பிரச்சினை இன்னும் மோசமாகிறது. ஆனால் இதை கடவுள் எவ்வாறு கருதுகிறார்?

கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள், எல்லாவித செக்ஸ் தொல்லைகளையும் எதிர்க்கிறது, கண்டிக்கிறது. செக்ஸ் விஷயத்திலுள்ள வரம்புகளை மீறி மற்றவர்களுடைய “உரிமைகளை தட்டிப் பறிக்கக்கூடாது” என பைபிள் நமக்கு அறிவுறுத்துகிறது. (1 தெசலோனிக்கேயர் 4:3-8, NW) குறிப்பாக இளம் ஆண்கள், “பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து” நடத்த வேண்டும் என்றும் சொல்கிறது. (1 தீமோத்தேயு 5:1, 2) அத்துடன் பைபிள் மற்றவர்களை “கிண்டல் செய்வதையும்” எதிர்க்கிறது. (எபேசியர் 5:3, 4, NW) ஆக, தொல்லைக்கு ஆளாகும்போது கோபப்படுவதிலும், அப்செட் ஆகிவிடுவதிலும், குழப்பமடைவதிலும், இழிவுபடுத்தப்படுவதாக நினைப்பதிலும் தவறேதுமில்லை.

நான் என்ன செய்வது?

சரி, ஒருவர் உங்களை இவ்வாறு தொல்லைபடுத்துகிறார் என்றால், அப்போது நீங்கள் என்ன செய்யலாம்? சில சமயங்களில் இதை கடுமையாக எதிர்க்காமல் இருப்பது அல்லது உறுதியின்றி பதிலளிப்பது போன்றவை அந்த தொல்லைக்கு தீனிபோட்டு வளர்ப்பதுபோன்று. உதாரணமாக பைபிள் இப்படிப்பட்ட சூழ்நிலைமையை எதிர்பட்ட ஒருவரைப் பற்றி சொல்கிறது. யோசேப்பை அவருடைய எஜமானின் மனைவி தொடர்ந்து செக்ஸ் விஷயத்தில் தொல்லை படுத்திவந்தார். ஆனால் யோசேப்போ அவரை வெறுமென தட்டிக்கழிக்கவில்லை. மாறாக, படிப்படியாக அதிகரித்து வந்த அவளுடைய தொல்லைகளை யோசேப்பு உறுதியாக எதிர்த்தார். (ஆதியாகமம் 39:8, 9, 12) இதுவே இன்றும் சிறந்த வழியாக இருந்துவருகிறது. செக்ஸ் தொல்லைகளை அடியோடு அகற்ற, நேரடியாக, உறுதியாக எதிர்ப்பதுதான் சிறந்த வழி.

ஆனால் தொல்லைபடுத்தும் எல்லோரும், உங்களை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவ்வாறு செய்வதில்லை. செக்ஸ் தொல்லையாக தோன்றும் ஒரு செயல், ஒருவேளை வெறுமென உங்களுடைய கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்கு செய்யப்பட்ட செயலாகவும் இருக்கலாம். அதனால், அந்த விரும்பாத நடத்தையை உடனே நிறுத்த வேண்டும் என்பதற்காக நீங்களே நாகரிகமற்ற விதத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைக்காதீர்கள். ‘இப்படி பேசுவது எனக்கு பிடிக்காது’ அல்லது ‘என் மேல கை வெக்கிறது எனக்கு பிடிக்காது, தயவுசெய்து தொடாதீங்க’ போன்ற வார்த்தைகளே போதும். முக்கியமான விஷயம், நீங்கள் சொன்ன வார்த்தைகளின் வலிமையை எக்காரணத்தைக் கொண்டும் குறைக்காதீர்கள். நீங்கள் சொன்னவற்றில் உறுதியாக இருங்கள். உங்கள் ‘இல்லை’ என்ற வார்த்தை எப்போதும் இல்லை என்றே இருக்கட்டும்! “அப்படியும் அவர்கள் கேட்காவிட்டால், நீங்கள் கண்டிப்பாக முகத்தில் அடித்தார்போல் நேரடியாக சொல்லித்தான் ஆக வேண்டும். பெரும்பாலும் அப்படித்தான் செய்ய வேண்டிவருகிறது” என்கிறார் இளம் பெண் அன்ட்ரே. ‘ஜாக்கிரதை, இந்த வேலையெல்லா எங்கிட்ட வேணாம்!’ போன்ற கடுமையான வார்த்தைகள் சிலசமயம் கை கொடுக்கலாம்.

ஆனால் பிரச்சினை ஒருவேளை பெரிதாக வெடித்தால், அதை தனியாக சமாளிக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் பெற்றோரிடமோ அல்லது மற்ற அனுபவமிக்க நபர்களிடமோ இதைப் பற்றி பேசுங்கள். உங்கள் நிலையை சமாளிக்க ஏதாவது நடைமுறையான ஆலோசனையை அவர்கள் கொடுக்கலாம். ஆலோசனைகள் சரிபட்டுவரவில்லை என்றால், பள்ளி அதிகாரிகளிடம்கூட விஷயத்தை சொல்லி, அவர்களை கவனிக்கச் சொல்லலாம். இது ஒருவேளை உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்பது உண்மைதான், ஆனால் அது உங்களை பாதுகாக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

தொல்லைகளை தவிர்த்தல்

தொல்லைகள் வரும்முன் காப்பதே நல்லது அல்லவா! அவ்வாறு இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? “யார் மீதோ உங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்பதைப்போன்ற அபிப்பிராயத்தை ஒருபோதும் மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள். ஏனென்றால், அதைப் பற்றி மற்றவர்களுக்கு தெரியவந்தால், அதிகமாக தொல்லை படுத்தக்கூடும்” என்று அறிவுறுத்துகிறார் அன்ட்ரே. நீங்கள் உடுத்தும் உடையும் இதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. “நான் அந்தகாலத்து பெண்களைப்போல இழுத்தி போத்திக்கொண்டு உடை அணிவதில்லை, இருந்தாலும் என் உடலைக் காட்டி மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வகையான உடைகளை தவிர்த்துவிடுகிறேன்” என்கிறார் இளம் பெண் மாரா. செக்ஸ் தொல்லைகளை எதிர்க்கும் நீங்களே மற்றவர்களின் உணர்ச்சிகளை தூண்டும் ஆபாசமான உடைகளை அணிந்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? நீங்கள் எப்படிப்பட்ட நபர் என எவ்வாறு புரிந்துகொள்வார்கள்? நீங்களே அவர்களை குழப்பிவிடுவீர்கள் அல்லவா! அதனால்தான், ‘நாணத்தோடும், தெளிந்த புத்தியோடும் தகுதியான வஸ்திரத்தை’ உடுத்தவேண்டும் என பைபிள் உற்சாகமளிக்கிறது.​—1 தீமோத்தேயு 2:⁠10.

நீங்கள் எவ்வாறு நடத்தப்படுகிறீர்கள் என்பது உங்கள் நண்பர்களைப் பொறுத்தும் இருக்கிறது. (நீதிமொழிகள் 13:20) “ஒரு குரூப்ல இருக்குற ஒரு பொண்ணு, மத்த பசங்க தன்னை பாக்கணும், அவங்கள தான் கவரணும்னு நினைச்சா, குரூப்ல இருக்குற எல்லா பொண்ணுங்களும் அப்படிதான்னு அந்த பசங்க நினைக்கலாம்” என்கிறார் ரோஸெலின். கார்லாவும் இதேபோன்று சொல்கிறார்: “மோசமான கமெண்ட்டுகள கண்டுக்காம விட்டுவிடுகிற ஆட்களோடும், மத்தவங்களோட கவனத்த ஈர்க்க விரும்புற ஆட்களோடும் நீங்க இருந்தா, நீங்களும் அப்படிப்பட்ட தொல்லைங்களுக்கு ஆளாவீங்க.”

இதற்கு பைபிள் ஓர் சிறந்த உதாரணம் கொடுக்கிறது. தீனாள் கானானியப் பெண்களின் நெருக்கமான தோழியாக இருந்தாள். ஆனால் கானானிலுள்ள பெண்களோ ஒழுக்கங்கெட்ட நடத்தைக்கு பேர்போனவர்கள். விளைவு, இந்த தவறான கூட்டுறவு தீனாளின் கற்பை சூறையாடியது. (ஆதியாகமம் 34:1, 2) அதனால்தான், “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போல் கவனமாய் நடந்து” கொள்ளுங்கள் என பைபிள் சரியாக அறிவுரை கொடுக்கிறது. (எபேசியர் 5:15) ஆம், நீங்கள் எவ்வாறு உடுத்துகிறீர்கள், என்ன பேசுகிறீர்கள் மற்றும் யாருடன் பழகுகிறீர்கள் என்பதைக் குறித்து “கவனமாய்” இருந்தால், செக்ஸ் தொல்லைகளை பெருமளவில் தவிர்க்கலாம்.

முக்கியமாக, கிறிஸ்தவ இளைஞர்களாக இப்படிப்பட்ட தொல்லைகளையெல்லாம் தவிர்ப்பதற்கான சிறந்த வழிகளுள் ஒன்று, உங்களுடைய மத நம்பிக்கைகளை அவர்களுக்கு தெரியப்படுத்துவதே. யெகோவாவின் சாட்சியான இளைஞன் தீமோன் சொல்கிறார்: “நான் ஒரு சாட்சின்னு தெரிஞ்சதும், அந்த பொண்ணுங்க என்ன தொல்ல பண்ணுறதயெல்லாம் நிறுத்திடுச்சிங்க.” “நீங்க ஒரு சாட்சின்னு அவங்ககிட்ட சொல்லிட்டா, அப்புறம் உங்கள நடத்துர விதமே தனிதான். ஏன்னா, நீங்க அவங்களவிட அநேக விதங்கள்ல வித்தியாசமானவங்கன்னும், உங்களோட ஒழுக்க தராதரத்துல உறுதியா இருப்பீங்கன்னும் அவங்க புரிஞ்சிக்குவாங்க” என்கிறார் அன்ட்ரே.​—மத்தேயு 5:15, 16.

நீங்கள் தொல்லை படுத்தப்பட்டால்

ஆனால் நீங்கள் என்ன முயற்சி செய்தாலும்சரி, முரட்டுத்தனமான, மோசமாக பேசும் ஆட்களை முற்றிலுமாக தவிர்த்துவிட முடியாது. ஆனால் ஒருவேளை அப்படிப்பட்ட தொல்லைகளுக்கு ஆளாகும் சமயத்தில், ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமோ அதுபோல நீங்கள் செயல்பட்டிருந்தால், கவலைப்பட வேண்டியதே இல்லை. நீங்கள் ஏதோ தவறு செய்துவிட்டதாக வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. (1 பேதுரு 3:16, 17) இருப்பினும் உங்கள் மனது உங்களை பாடாய்ப்படுத்தினால், உங்கள் பெற்றோரிடமோ கிறிஸ்தவ சபையிலுள்ள முதிர்ச்சிவாய்ந்த நபர்களிடமோ பேசி உதவி பெறுங்கள். நீங்கள் தொல்லைப் படுத்தப்படும்போது உங்களைப் பற்றி நீங்களே தாழ்வாக நினைத்துக்கொள்வது சகஜம்தான், “ஆனால், மனம்விட்டு பேசுவது மிகவும் நல்லது” என்கிறார் ரோஸலின். அத்துடன் “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் [யெகோவா] சமீபமாயிருக்கிறார்” என்பதையும் மறந்துவிடக்கூடாது.​—சங்கீதம் 145:18, 19, NW.

செக்ஸ் தொல்லைகளுக்கு எதிராக நிலைநிற்கை எடுப்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. ஆனால் நீங்கள் உறுதியாக இருக்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பலனில்லாமல் போகாது. உதாரணமாக, பைபிளில் காணப்படும் ஒரு இளம் சூலேமியப் பெண்ணின் பதிவை கவனியுங்கள். இன்று நடப்பதுபோல் இந்தப் பெண் தொல்லை படுத்தப்படவில்லை. அதிக சக்தி படைத்தவரும் செல்வந்தருமான யூதாவின் ராஜாவான சாலொமோன் இவளை விரும்பினார், அதை அவளிடம் பல முறை கூறினார். ஆனால் இவள் வேறொருவரை காதலித்ததால் சாலொமோனுடைய காதலை ஏற்றுக்கொள்ள மறுத்தாள். அதனால்தான் “நான் மதில்” என அவளால் பெருமையுடன் தன்னைப்பற்றி சொல்ல முடிந்தது.​—உன்னதப்பாட்டு 8:4, 10

ஒழுக்க விஷயத்தில் அவள் கொண்டிருந்த அதே உறுதியையும் திடத் தீர்மானத்தையும் நீங்களும் வெளிக்காட்டுங்கள். யாராவது உங்களிடம் இதுபோன்று நடந்துகொண்டால், “மதில்” போல நின்று அவற்றை தவிர்த்திடுங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் உங்கள் கிறிஸ்தவ தராதரம் தெரியட்டும். இப்படிச் செய்வதன்மூலம், நீங்கள் “குற்றமற்றவர்களும் கபடற்றவர்களு”மாக உங்களை நிரூபிக்க முடியும். இதன் மூலம் ‘யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தலாம்’.​—பிலிப்பியர் 2:15. a

[அடிக்குறிப்பு]

a செக்ஸ் தொல்லையைப் பற்றி கூடுதல் தகவல், விழித்தெழு! மே 22, 1996; ஆகஸ்ட் 22, 1995; மற்றும் மே 22, 1991 (ஆங்கிலம்) இதழ்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

[பக்கம் 23-ன் படம்]

உங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே ஒரு பாதுகாப்பு

[பக்கம் 23-ன் படம்]

தவறான கூட்டுறவை தவிர்ப்பதன்மூலம் நீங்கள் தொல்லைகளை தவிர்க்கலாம்