Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தெரியாதவை தெரிவிக்கும் உண்மைகள்

தெரியாதவை தெரிவிக்கும் உண்மைகள்

தெரியாதவை தெரிவிக்கும் உண்மைகள்

மனிதனின் புதிய கண்டுபிடிப்புகளால் காணாதவைகளையும் காண முடிகிறது. அதனால் என்ன பயன்? இனி கண்ணுக்கு தெரியாதவையும் உண்மையே என்று அடித்துக்கூற முடியும்.​—⁠பெட்டிச் செய்தியைக் காண்க.

இந்தப் பிரபஞ்சத்தில் நம் பூமிதான் நடுநாயகமாக வீற்றிருக்கிறது என்று நம்பிய காலமும் உண்டு. ஆனால், தொலைநோக்கி வழியே கண்டபோது, சூரியனைத்தான் நம் பூமியும் மற்ற கோள்களும் சுற்றி வருகின்றன என்ற உண்மை உறுதியானது. இன்று மனிதனிடம் உள்ள அபார சக்திப்படைத்த நுண்ணோக்கிகளின் உதவியால், அணுவையே அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து, ஒரு வகை அணு எவ்வாறு இன்னொரு வகை அணுவோடு இணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்பதை காண முடிகிறது.

நீரின்றி அமையாது உலகம் என்ற பொன்மொழியை கேட்டிருப்பீர்கள். இந்த நீரின் மூலக்கூறையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இதில் இரண்டு ஹைட்ரஜன் அணுவும் ஒரு ஆக்ஸிஜன் அணுவும் உள்ளன. ஆகவே தண்ணீர் எளிய மூலக்கூறுகளால் ஆனது. ஆனால் ஒரு சொட்டு தண்ணீரில் பல கோடி மூலக்கூறுகள் உள்ளன. இப்போது தண்ணீரின் மூலக்கூறையும், அதன் பண்புகளையும் ஆராய்ந்து, அரிய உண்மைகளை தெரிந்துகொள்வோம்.

தண்ணீரின் தன்னிகரற்ற தன்மை

ஒரு சொட்டு தண்ணீரை நாம் அற்பமாக நினைக்கலாம். ஆனால் அதன் பண்புகள் நம்மை அசரவைக்கின்றன. அவற்றின் மூலக்கூறுகளை அறிந்துகொள்வது அதைவிட மகா கஷ்டம். அதனால்தான் இங்கிலாந்தில், லண்டன் இம்பீரியல் காலேஜின் அறிவியல் எழுத்தாளர் டாக்டர் ஜான் எம்ஸ்லி தண்ணீரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “தண்ணீர் மூலக்கூறைப் பற்றி ஏராளமாக ஆராய்ச்சி செய்தாயிற்று. ஆனாலும் அதைப் பற்றி அவ்வளவாக தெரியவில்லை.” நியூ சயன்டிஸ்ட் என்ற பத்திரிகை இவ்வாறு கூறியது: “இந்தப் பூமியில் தண்ணீரைப் பற்றி தெரியாத மனிதனே இருக்க முடியாது. அதே தண்ணீரின் மர்மங்கள் எல்லாம் தெரிந்த மனிதனும் இருக்க முடியாது.”

எளிய மூலக்கூறை உடைய தண்ணீரைப் பற்றி டாக்டர் எம்ஸ்லி வியந்து கூறினார்: “தண்ணீரின் தன்மை நமக்கெல்லாம் தண்ணீர்காட்டுகிறது. H2O என்றாலே அது வாயுவாக இருக்க வேண்டும். ஆனால் நீர்மமாக உள்ளது. அது உறைந்து, பனிக்கட்டி என்ற திடநிலையை அடைகிறபோது, தண்ணீரில் மூழ்குவதற்கு பதில், மிதக்கிறது.” அமெரிக்கன் அறிவியல் முன்னேற்ற சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் பால் ஈ. கலாப்ஸ்டெக் தண்ணீரின் தன்னிகரற்ற தன்மையைப் பற்றி பின்வருமாறு கூறினார்:

“தண்ணீர் உறைந்ததும் மேலே மிதப்பதால் அடியில் இருக்கும் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் வாழ முடிகிறது. தண்ணீர் உறைந்ததும் மிதக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள்! மெல்ல மெல்ல ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் ஐஸாக மாறி, நீர்வாழ் உயிரினங்களை எல்லாம் கொன்றுவிடும்.” ஆகவே “காரண காரியங்களை சிந்திக்கக்கூடிய அபார அறிவுபடைத்த படைப்பாளரே இந்தப் பிரபஞ்சத்தை படைத்திருக்க வேண்டும் என்பதற்கு” தண்ணீரின் தன்னிகரற்ற தன்மையே சான்று என்கிறார் டாக்டர் கலாப்ஸ்டெக்.

தண்ணீர் உறைந்ததும் ஏன் மிதக்கிறது என்பது இப்போது விஞ்ஞானிகளுக்கு தெரிந்துவிட்டதாக நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது. தண்ணீர் விரிவடைகையில் அதை துல்லியமாக கணக்கிட விஞ்ஞானிகள் கோட்பாட்டின் அடிப்படையிலான மாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். “தண்ணீர் உறைகையில் அதிலுள்ள ஆக்ஸிஜன் அணு இடைவெளிவிட்டு விலகுவதால், ஐஸ் மிதக்கிறது” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தண்ணீரை கண்டால் அதிசயமே அதிசயிக்கும்! தண்ணீரின் எளிய மூலக்கூறு மனிதனுக்கு நன்றாகவே தண்ணீர்காட்டுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் மனித உடலில் முக்கால்வாசி தண்ணீரே நிறைந்திருக்கிறது! மூன்றே மூன்று அணுக்களை வைத்துக்கொண்டு ஆட்டம்போடுகிற இந்த தண்ணீரைப் பார்த்தால் உங்களுக்கும் வியப்பாக இருக்கிறதா? அதோடு, “அபார அறிவுடைய படைப்பாளரே இதை படைத்திருக்கிறார் என்ற உண்மையும் புரிகிறதா?” தண்ணீரைவிட சிக்கலான தன்மைகள் நிறைந்த பல மூலக்கூறுகள் உள்ளன.

சிக்கல் நிறைந்த மூலக்கூறு

பூமியில் 88 தனிமங்கள் உள்ளன. சில மூலக்கூறுகள் ஆயிரக்கணக்கான அணுக்களால் ஆனவை. உதாரணத்திற்கு ஒவ்வொரு உயிரினத்தின் பரம்பரை வரலாறு அனைத்தும் டி.என்.ஏ.-வில் (டிஆக்ஸி ரைபோ நியூக்கிக் ஆசிட்) அடங்கியுள்ளன. டி.என்.ஏ-விலோ எண்ணற்ற தனிமங்களின் கோடிக்கணக்கான அணுக்கள் உள்ளன!

நம்மை குழப்போ குழப்பென்று குழப்பும் டி.என்.ஏ. மூலக்கூறின் விட்டமோ வெறும் 0.0000025 மில்லிமீட்டர்! ஆகவே இதை சக்திவாய்ந்த நுண்ணோக்கியில் மட்டும் பார்க்க முடியும். இதில் நம் பரம்பரையே அடங்கியுள்ளது என்ற உண்மையை 1944-⁠ல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். அன்று முதல் சிக்கல்வாய்ந்த இந்த டி.என்.ஏ. மூலக்கூறை அக்குவேறு ஆணிவேறாக ஆராயவேண்டும் என்று விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் முனைந்தனர்.

டி.என்.ஏ.-வும், தண்ணீரும் உயிருக்கு அடிப்படையான இரு மூலக்கூறுகள். ஆனால் இதுபோல் எத்தனையோ மூலக்கூறுகள் உள்ளன. இத்தகைய மூலக்கூறுகள் உயிருள்ள பொருட்களிலும், உயிரற்ற பொருட்களிலும் உள்ளன. ஆகவே, உயிரற்ற பொருளே மெல்ல மெல்ல உருமாறி உயிரினமாக ஆனது என்று சொல்லிவிட முடியுமா?

உயிரற்ற பொருளே ஒரு செல் உயிரியாக மாறியது என்று பல காலமாக பலர் நம்பிவருகிறார்கள். இதற்கு ஆதாரம் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர் என்கிறார் நுண்ணுயிரியல் நிபுணர் மைக்கேல் டென்டன். அவர் கூறியது: “உயிர்வேதியியல் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டால், உயிரற்ற பொருளிலிருந்து உயிர் தோன்றியதற்கு சான்று கிடைத்துவிடும் என்று 1920-1930-களில் பல விஞ்ஞானிகள் நினைத்தார்கள்.” இதுவரை பரிணாமத்திற்கு சான்று கிடைக்கவில்லை. ஆனால் ஓர் உண்மை தெளிவானது. அது என்ன?

உயிரின் உன்னதம்

உயிரற்ற பொருளுக்கும் உயிருள்ள ஜீவராசிக்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளது. ஆனால் உயிரற்ற பொருள் மெல்ல மெல்ல உருமாறியதற்கு ஆதாரம் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் காத்துக்கிடக்கிறார்கள். உயிரற்ற ஜடப்பொருளையும் உயிருள்ள ஜீவனையும் இணைக்கவே முடியாது என்று டென்டன் கூறினார்: “1950-களில் உயிரியலில் மூலக்கூறு துறையில் எத்தனையோ அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. ஆனால் உயிரற்ற பொருளுக்கு உயிர் வந்தது என்பதை நிரூபிக்கவே முடியவில்லை.” ஆனால் விஞ்ஞானிகளுக்கு ஒரு உண்மை தெளிவாக புரிந்துவிட்டது என்கிறார் டென்டன். அதை இவ்வாறு விளக்கினார்:

உயிருள்ள ஒரு செல்லிற்கும், உயிரற்ற, ஆனால் சிக்கலான மூலக்கூறை உடைய ஒரு பனித்திவலைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசத்தை இனியும் இணைக்க முடியாது என்ற உண்மை எங்களுக்கு [விஞ்ஞானிகளுக்கு] தெரிந்துவிட்டது.”

எனவே, செயற்கை மூலக்கூறுகளை செய்வது எளிது என்று எண்ண வேண்டாம். மூலக்கூறுகளிலிருந்து உயிருள்ள செல் வரை என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “மூலக்கூறில் சிக்கலான தன்மைகள் நிறைந்திருப்பதால், ஒரு எளிய மூலக்கூறை உண்டாக்குவதுகூட மகா கஷ்டம்.” ஆனால் “உயிருள்ள ஒரு செல் செய்யும் வேலைகளோடு ஒப்பிடுகையில்” செயற்கையான மூலக்கூறுகள் கால்தூசுக்கு சமம் என்கிறது அப்புத்தகம்.

செல்கள் தனித்தும் வாழும், கூட்டாகவும் வாழும். உதாரணத்திற்கு பாக்டீரியா போன்ற ஒற்றை செல் உயிரியாகவும் வாழும், மனிதன் போன்ற பல்செல் உயிரியாகவும் வாழும். சராசரி அளவுள்ள சுமார் 500 செல்கள் சேர்ந்தால்தான், இந்த வாக்கியத்தின் இறுதியில் உள்ள முற்றுப்புள்ளிக்கு சமமாக இருக்கும். அவ்வளவு சிறிய செல்லிற்குள் நடக்கும் அதிசயங்களை நம் கண்கள் காண்பதில்லை. ஒற்றை செல்லை நுண்ணோக்கியில் காணும்போது அரிய உண்மை தெரிகிறது. அது என்ன?

செல்​—⁠பரிணமித்ததா படைக்கப்பட்டதா?

செல்களின் சிக்கலான தன்மையையும் அவற்றின் அபாரமான செயல்திறன்களையும் காண்கையில் நமக்கு பிரமிப்பாக உள்ளது. அறிவியல் எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “ஒரு சாதாரண செல்லின் வளர்ச்சிக்கு பல்லாயிரக்கணக்கான இரசாயன தூண்டுதல்கள், ஒருசேர நடைபெற வேண்டும். ஆனால், அந்தச் சின்னஞ்சிறிய செல்லிற்குள் எப்படி 20,000 இரசாயன தூண்டுதல்கள், ஒரே நேரத்தில் கட்டுக்கோப்பாக நடைபெறுகின்றன?

மினி என்றாலே மிகவும் பொடிசு. மைக்ரோ என்றால் பொடிசுவிலும் வடிகட்டின பொடிசு. ஆகவே மைக்கேல் டென்டன் இந்த மினி சைஸ் செல்லை, “ஒரு மினி மைக்ரோ தொழிற்சாலைக்கு” ஒப்பிட்டு, இவ்வாறு குறிப்பிட்டார்: “செல் என்ற இந்த மினி மைக்ரோ தொழிற்சாலையில் மூலக்கூறுகள் என்னும் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட நுண் கருவிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இத்தொழிற்சாலை பத்தாயிரம் கோடி அணுக்களால் ஆனது. மனிதன் எப்பேர்பட்ட கருவியை உண்டாக்கினாலும் இந்த உயிர் தொழிற்சாலையின் பக்கத்தில்கூட வர முடியாது.”

செல்லின் புதிரை விடுவிக்க விஞ்ஞானிகள் எவ்வளவோ முயல்கிறார்கள். ஆனால் அது மேலும் மேலும் அவர்களுக்கு புதிர் போடுகிறது. பிப்ரவரி 15, 2000 தேதியிட்ட த நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு கூறியது: “ஒருபுறம் செல்களைப் பற்றி உயிரியல் வல்லுநர்கள் நிறைய கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொருபுறம் அதைப் பற்றி புரியாத விஷயங்கள் புற்றீசல்கள் போல் வந்துகொண்டே இருக்கின்றன. மனித செல் அவ்வளவு பொடிசாக இருப்பதால் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் அந்தப் பொடி செல்களின் 1,00,000 ஜீன்களில் 30,000 ஜீன்கள் எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்கும். புரதங்களை தயாரிக்க எப்போது, எந்த ஜீனை திறப்பது, எதை மூடுவது, செல்லிற்கு செல் செய்திகளை கடத்துவது, செய்திகளை பெறுவது போன்ற முக்கிய வேலைகளை டான் டான் என்று செய்கின்றன.”

டைம்ஸ் பத்திரிகை செல்லைப் பற்றி வியந்து, இவ்வாறு கேட்கிறது: “செல் என்ற நுண் இயந்திரத்தின் சிக்கலான தன்மைகளை எப்படி ஆராய முடியும்? ஏழு கடல், ஏழு மலை தாண்டுவதைப் போல், எப்படியோ படாதபாடுபட்டு மனிதனின் ஒரேவொரு செல்லை முழுமையாக ஆராய்ந்துவிட்டாலும், இன்னும் 200 வகை மனித செல்கள் இருக்கின்றனவே!”

நேச்சர் என்ற பத்திரிகையில், “இயற்கையின் உயிருள்ள இன்ஜின்கள்” என்ற தலைப்பில் வெளியான கட்டுரை, மனித உடலின் ஒவ்வொரு செல்லிற்கு உள்ளேயே சிறு மோட்டார்கள் இருப்பதாக கூறியது. இந்த மோட்டார்கள் இயங்கி, அடினோசைன் முப்பாஸ்பேட் என்ற (adenosine triphosphate) சர்க்கரை மூலக்கூறை உண்டாக்குகிறது. இது செல்லிற்கு தேவையான ஆற்றலை தருகிறது. “செல் மூலக்கூறுகளின் செயல்களை எல்லாம் செய்யக்கூடிய ஒரு மூலக்கூறு இயந்திரத்தை நம்மால் வடிவமைத்து, தயாரிக்க முடியுமா? அப்படியே தயாரித்தாலும் அதை வைத்து என்ன செய்வோம்?” என்று வியக்கிறார் ஒரு விஞ்ஞானி.

செல்லின் செயல் திறனை யோசிக்க யோசிக்க ஆச்சரியத்தில் வாயைப் பிளக்கிறோம். நம் உடம்பில் உள்ள ஒரேவொரு செல்லை எடுத்துக்கொள்வோம். அதிலுள்ள டி.என்.ஏ.-வில் அடங்கியிருக்கும் செய்திகள் எழுத்தாக வடித்தால் இதுபோல் பத்து லட்சம் பக்கங்கள் நிறைந்துவிடும்! ஒரு செல் இரண்டாக பிரிந்து புதிய செல்லை உருவாக்குகிறது. அந்தப் புதிய செல்லிலும் அதே செய்தி அடங்கியிருப்பதுதான் இன்னும் வியப்பளிக்கிறது. ஒவ்வொரு செல்லிற்குள்ளேயும் அது செய்ய வேண்டிய கட்டளைகள் உள்ளன. நம் உடம்பில் மட்டும் ஒரு கோடி கோடி செல்கள் (ஒன்றுக்கு பக்கத்தில் பதினான்கு பூஜ்யங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்) உள்ளன. இப்போது கேள்வி என்னவென்றால், ஒவ்வொரு செல்லிற்குள்ளும் செய்தி வந்தது எப்படி? அவை தானாகவே செய்தியோடு தோன்றினவா? அல்லது, அபார திறம்படைத்த படைப்பாளர் செல்லிற்குள் செய்தியை வைத்தாரா?

உயிரியல் வல்லுனர் ரஸல் சார்ல்ஸ் ஆர்ட்டிஸ்ட் இவ்வாறு கூறினார்: “அறிவுக்கூர்மையுள்ளவரே செல்லை படைத்திருப்பார் என்பது அறிவுக்கு ஏற்றதாக உள்ளது. இல்லையென்றால், செல் எப்படி தோன்றியது, அது எவ்வாறு செயல்புரிகிறது என்பதை நம்மால் விளக்கவே முடியாது.” கடவுள்தான் செல்லை படைத்திருப்பார் என்று நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்களா?

படைப்பில் சீரும் ஒழுங்கும்

சில வருடங்களுக்கு முன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அப்போது பணிபுரிந்துகொண்டிருந்த புவியியல் பேராசிரியர் கெர்ட்லி F. மாத்தர் இவ்வாறு கூறினார்: “நம் பிரபஞ்சம் தற்செயலாக தோன்றியிருக்க முடியாது. ஏனென்றால் இதில் ஒவ்வொன்றும் இயற்கை விதிகளுக்கு உட்பட்டு சீராக இயங்குகின்றன. யாருக்கோ கட்டுப்பட்டு, பயபக்தியோடு ஒழுங்காக இயங்குவதைப் போல் உள்ளது. ஒவ்வொரு தனிமத்தின் அமைப்பும் கணக்கெடுத்து வடிவமைத்ததைபோல் இருப்பதால் அணு எண்களை துல்லியமாக கணக்கிட முடிகிறது.”

இனி, “இயற்கை போடுகிற துல்லியமான கணக்கை” சுருக்கமாக காண்போம். தங்கம், வெள்ளி, செம்பு, தகரம், இரும்பு போன்றவையே பண்டைய மக்களுக்கு தெரிந்த ஒருசில தனிமங்கள். a ஆர்சனிக், பிஸ்மத், ஆண்டிமனி போன்ற தனிமங்கள் இரசவாதிகளின் முயற்சியால் இடைக்காலத்தில் நமக்கு கிடைத்த பரிசுகள். 17-⁠ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலும் பல தனிமங்கள் கிடைத்தன. 1863-⁠ல் நிறமாலை நோக்கியின் (spectroscope) வரவால், ஒவ்வொரு தனிமத்தின் நிறத்தையும் காண முடிந்தது. இதனால் இண்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. தனிமங்களின் வரிசையில் 63-⁠ம் இடம் இண்டியத்திற்கு கிடைத்தது.

தனிமங்கள் தாறுமாறாக படைக்கப்படவில்லை என்பதை 18-⁠ம் நூற்றாண்டில் ரஷ்ய வேதியியல் வல்லுனர் டெமிட்ராய் ஐவனோச் மென்டல்லிவ் கூறினார். மார்ச் 18, 1869-⁠ல், “தனிமங்களின் அமைப்பு” என்ற தலைப்பில் தனது ஆய்வு கட்டுரையை ரஷ்ய வேதியியல் சங்கத்திற்கு படித்துக்காட்டினார்: ‘[தனிமங்கள்] தற்செயலாக தோன்றவில்லை. ஆனால் நிலையான, துல்லியமான சில இயற்கை விதிகளோடு உள்ளன என்பதை நிரூபிக்கும் ஒரு முறையை உருவாக்கவே நான் விரும்பினேன்.’

எதிர்காலத்தில் மேலும் பல தனிமங்கள் கிடைக்கும் என்பதை மென்டல்லிவ் தனது புகழ்பெற்ற ஆய்வு கட்டுரையில் விளக்கினார்: “நமக்குத் தெரியாத இன்னும் பல தனிமங்கள் எதிர்காலத்தில் கிடைக்கும். அவை அலுமினியம், சிலிக்கான் போன்ற தனிமங்களைப் போல் இருக்கும். அவற்றின் அணு எடை 65 முதல் 75 வரை இருக்கும்.” 16 புதிய தனிமங்கள் கிடைக்கும் என்று உறுதியாக கூறிய மென்டல்லிவ், அவற்றிற்காக தனிம வரிசை அட்டவணையில் இடம் ஒதுக்கினார். புதிய தனிமங்களுக்கு ஆதாரத்தை கேட்டபோது, அவர் அளித்த பதில்: “இவற்றிற்கு நான் ஆதாரம் தரவேண்டிய அவசியம் இல்லை. இயற்கை வகுத்திருக்கும் இலக்கணங்கள் [விதிகள்] நம் மொழி இலக்கணங்கள் போல் மாறுவதில்லை. நான் கூறிய தனிமங்கள் வெளிவுலகிற்கு தெரியும்போது, மக்கள் தெரிந்துகொள்ளட்டும்.”

அவர் கூறியதுபோல் புதிய தனிமங்கள் கிடைத்தன! தனிமங்களின் புதிய வரவைப் பற்றி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா இவ்வாறு கூறியது: “மென்டல்லிவ் சொல்லி 15 வருடங்களுக்குள், கேலியம், ஸ்கேண்டியம், ஜெர்மானியம் போன்ற தனிமங்கள் கிடைத்தன. அவர் சொன்னதுபோலவே அவற்றின் பண்புகள் இருந்தன. இதனால் மென்டல்லிவ் அமைத்த தனிம வரிசை அட்டவணை துல்லியமானது என்பது நிரூபணம் ஆகி, அவருக்கு புகழையும் சேர்த்தது.” 20 நூற்றாண்டிற்குள் எல்லா தனிமங்களும் கிடைத்துவிட்டன.

“தனிமங்களின் சீரான அமைப்பை காண்கையில், கண்டிப்பாக அவை தற்செயலாக தோன்றியிருக்க முடியாது” என்கிறார் வேதியியல் ஆராய்ச்சியாளர் இல்மர் W. மாரர். இதுவரை பார்த்ததிலிருந்து தனிமங்கள் தானாகத்தான் தோன்றியிருக்கும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், வேதியியல் பேராசிரியர் கிலிவ்லாண்ட் கோத்ரன் கூறுவதை கேளுங்கள்: “சில தனிமங்கள் கிடைப்பதற்கு முன்பே, [மென்டல்லிவ்] கிடைக்கும் என்றார். அவர் கூறியதை போலவே அவற்றின் பண்புகள் இருந்தன. எனவே, அவை தானாக தோன்றியிருக்கும் என்பதற்கு சிறு தடயம்கூட இல்லை. ஆகவேதான் ‘தனிமங்களின் விதி’ என்கிறோம். ‘தனிமங்களின் தற்செயல் நிகழ்வு’ என்று கூறுவதில்லை.”

இயற்பியல் வல்லுனர் P. A. M. டைரக், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்தவர். தனிமம் இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களோடும் எவ்வாறு சேர்ந்துகொள்கிறது என்பதை ஆராய்ந்த அவர், ஆச்சரியத்தில் இவ்வாறு கூறினார்: “கடவுளை மகா கணித மேதை என்று சொல்வதே மிகவும் பொருத்தம். அவர் இந்தப் பிரபஞ்சத்தை படைக்க அபாரமாக கணக்கு போட்டிருக்கிறார் என்பது பளிச்சென்று தெரிகிறது.”

தொலை தூரத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களை உடைய பிரமாண்டமான ஆகாய கங்கை முதல் அனுதின ஆக்கப் பொருட்கள்​—⁠நுண் அணுக்கள், மூலக்கூறுகள், உயிர் செல்கள்​—⁠வரை நம்மால் சாதாரணமாக பார்க்க முடியவில்லை. ஆனால் இன்றைய நவீன கருவிகளின் உதவியால் அவற்றையும் நம்மால் பார்க்க முடிகிறது! இவற்றின் பிரமாண்டத்தையும், சிக்கலான பண்புகளையும் அறியும்போது நாம் எம்மாத்திரம் என்கிற எண்ணமே மேலோங்குகிறது. உங்களுக்கு எப்படி இருக்கிறது? இவற்றிலிருந்து என்ன உண்மைகளை தெரிந்துகொண்டீர்கள்? இதுவரை உங்கள் கண்கள் காணாததை எல்லாம் கண்டீர்களா?

[அடிக்குறிப்பு]

a தனிமம் என்பது, அடிப்படைப் பொருள். ஒரே தன்மையைக் கொண்ட அணுக்களால் ஆன பொருள். இயற்கையிலேயே பூமியில் 88 தனிமங்கள் மட்டுமே கிடைக்கின்றன.

[பக்கம் 5-ன் பெட்டி/படம்]

மின்னல் வேகம்

மின்னல் வேகத்தில் ஓடுகிற குதிரைகள் தரையைத் தொடாமலே ஓடுமா என்று 19 நூற்றாண்டில் சிலர் பந்தயம் கட்டினார்கள். இவர்களது சந்தேகத்தை 1872-⁠ல் எட்வர்டு மைபிரிஜ் தீர்த்துவைத்தார். குதிரைகள் ஓடும்போது அவர் பல போட்டோக்கள் எடுத்து நிரூபித்தார். இவர் கண்டுபிடித்த முறையால் முதன் முதலில் அதிவேக திரைப்படம் எடுக்க உதவியது.

மைபிரிஜ், சிறு இடைவெளி விட்டு 24 கேமராக்களை வரிசையாக வைத்தார். ஒவ்வொரு கேமராவின் பட்டனோடு நூலை இணைத்தார். அந்த நூலை குதிரைகள் ஓடுகிற பாதையின் குறுக்கே கட்டிவிட்டார். குதிரைகள் ஓடிவரும்போது, ஒவ்வொரு நூலாக அறுந்து, கேமாரா கிளிக்காகின. பிறகு எல்லா போட்டோக்களையும் ஆராய்ந்து பார்த்ததில், சிலநேரங்களில் குதிரைகள் தரையைத் தொடாமலே மின்னெல பறந்து சென்றன.

[படத்திற்கான நன்றி]

நன்றி: George Eastman House

[பக்கம் 7-ன் படம்]

தண்ணீர் உறையும்போது மூழ்குவதற்கு பதில் ஏன் மிதக்கிறது?

[பக்கம் 7-ன் படம்]

டி.என்.ஏ. மூலக்கூறின் விட்டமோ 0.0000025 மில்லிமீட்டர்! ஆனால் அதிலுள்ள செய்திகளுக்கு லட்சக்கணக்கான பக்கங்கள் தேவை

[படத்திற்கான நன்றி]

கம்யூட்டரில் டி.என்.ஏ.-வின் தோற்றம்: Donald Struthers/Tony Stone Images

[பக்கம் 8-ன் படம்]

நம் உடலில் மொத்தம் ஒரு கோடி கோடி செல்கள் உள்ளன; ஒரே செல்லில் பல்லாயிரக்கணக்கான இரசாயன தூண்டுதல்கள் ஒருசேர நடைபெறுகின்றன

[படத்திற்கான நன்றி]

Copyright Dennis Kunkel, University of Hawaii

[பக்கம் 9-ன் படங்கள்]

தனிமங்கள் தாறுமாறாக படைக்கப்படவில்லை என்று அடித்துக்கூறினார் ரஷ்ய வேதியியல் வல்லுனர் மென்டல்லிவ்

[படத்திற்கான நன்றி]

நன்றி: National Library of Medicine