Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

போக்கிரித்தனத்தை உதறித் தள்ள உதவி

போக்கிரித்தனத்தை உதறித் தள்ள உதவி

போக்கிரித்தனத்தை உதறித் தள்ள உதவி

பிரான்ஸிலிருந்து விழித்தெழு! நிருபர்

பிரான்ஸில் பல சேரிப்பகுதிகளில் திடுக்கிடும் அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது என்பதை பெருகி வரும் சமீபகால சம்பவங்கள் பறைசாற்றுகின்றன. “ஆறு ஆண்டுகளில் நகர்ப்புற வன்முறை கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துவிட்டது” என சொல்கிறது பிரெஞ்சு பத்திரிகை லெக்ஸ்பிரெஸ். இது மட்டுமல்ல, வன்முறை செயல்களில் வாண்டுகளின் கைவரிசையும் கட்டுக்கடங்காமல் சென்றிருக்கிறது.

நாசவேலைகளில் ஈடுபடுதல், போதைப் பொருட்களை கடத்துதல், வழிப்பறிக் கொள்ளையடித்தல், தீ வைத்தல், திருடுதல் இவையெல்லாம் போக்கிரிகளுடைய தொழில். இந்தப் பட்டியல் இத்தோடு நின்றுவிடவில்லை. நாட்டிலுள்ள அரசு ஊழியர்களை குறிவைப்பதும் போக்கிரிகளின் அட்டகாசங்களில் அடக்கம். போலீஸ்காரர்கள், தீயணைப்பு துறையினர், ஓட்டுனர்கள், மற்றும் வேறு சிலரை வன்முறையால் அடிபணிய வைக்கின்றனர்.

வன்முறை தலைவிரித்தாடுவதற்கு காரணம்? “குடும்பங்கள் சீர்குலைவது, எந்தவித அதிகாரத்தையும் எதிர்ப்பது இந்தக் கொடுமையின் பின்னணி” என விளக்குகின்றனர் இரண்டு சமூகவியலாளர்கள். அதோடு, “[இளைஞர்கள்] அதிகாரிகளால் கைவிடப்படுவதும், அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு எந்த நம்பிக்கையும்” இல்லாதிருப்பதும் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

போக்கிரித்தனம் மிகுந்த இடங்களில் நம்பிக்கையூட்டும் பைபிள் செய்தியை யெகோவாவின் சாட்சிகள் தவறாமல் பிரசங்கிக்கின்றனர். சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட பிரெஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நூலாசிரியர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “யெகோவாவின் சாட்சிகள் புறநகர் பகுதிகளிலும் ஒதுக்குப்புற பகுதிகளிலும் நல்ல முறையில் ஊழியம் செய்கிறார்கள்​—⁠இவையெல்லாம் சமூக சேவையினராலும் போலீஸ்காரராலும் அரசாங்கத்தாலும் கைவிடப்பட்ட இடங்கள். இப்படிப்பட்ட தெருக்களுக்கும் கட்டடங்களுக்கும் அவர்கள் சென்று பேசுகிறார்கள், மக்கள் சொல்வதையும் செவிகொடுத்துக் கேட்கிறார்கள்.” அவர்கள் செய்யும் இந்த ஊழியம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விழித்தெழு! வாசகரான ஓர் இளைஞரிடமிருந்து வந்த கடிதம் இதைத்தான் உறுதிப்படுத்துகிறது.

“உங்களுடைய பத்திரிகைகளுக்கு என்னுடைய ஆத்மார்த்த நன்றி. நீங்கள் தனிப்பட்ட விதமாக எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். அது மட்டுமல்ல, என்னுடைய பெற்றோருடனும் எனக்கு நல்ல உறவு ஏற்பட்டிருக்கிறது. எனக்கு 16 வயது, நான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவன்.

“போக்கிரித்தனத்திலிருந்து என்னை வெற்றிகரமாக விடுதலை பெறச் செய்திருக்கிறீர்கள். அதனால் என்னுடைய மதத்தை நன்கு பின்பற்றுகிறேன், அதோடு பைபிளையும் படிக்கிறேன். நான் இப்பொழுது என்னுடைய பள்ளிப் படிப்பையும் தொடருகிறேன், அதற்காகவும் உங்களுக்கு நன்றி. எல்லாவற்றையும்விட, உங்களுடைய பத்திரிகைகள் வாயிலாக என்னுடைய அக்கம்பக்கத்தார் அநேகர் போக்கிரித்தனத்திலிருந்து விடுதலை பெற உதவி செய்திருக்கிறீர்கள். அந்தப் பத்திரிகைகளை ஒவ்வொரு மாதமும் படிப்பதற்காக அவர்களுக்கு தவறாமல் கொடுத்து வருகிறேன். நான் உங்களுக்கு மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.”