Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனசாட்சிக்கும் மனசாட்சிக்கும் போராட்டம்

மனசாட்சிக்கும் மனசாட்சிக்கும் போராட்டம்

மனசாட்சிக்கும் மனசாட்சிக்கும் போராட்டம்

ஆர்செனிக் அண்டு ஓல்ட் லேஸ் என்பது, 1944-⁠ம் ஆண்டு வெளிவந்த புகழ்பெற்ற திரைப்படம். அந்த சமயத்தில் நடந்த ஓர் கோர சம்பவத்தை சித்தரித்துக்காட்டிய அது, பார்வையாளர்களின் கண்களை குளமாக்கியது. ஆர்செனிக் என்ற ஒருவகை இரசாயனம் கலந்த எல்டர்பெர்ரி ஒயினை குடித்த அநேக வயதானவர்கள் அடுத்தடுத்து இறந்த கொடுமைதான் அது. ஆர்செனிக் என்பது ஒருவருடைய உடலில் வேகமாக பரவி, உயிரைக் குடிக்கவல்ல நச்சு என்ற அப்போதைய கருத்தை இது படமாக காட்டியது. ஆனால், அந்த படத்தில் காட்டப்பட்ட திடீர் இறப்புகளுக்கான உண்மையான காரணம், ஆர்செனிக் அல்ல, அதனுடன் ஒயினில் கலக்கப்பட்ட ஸ்டிரைக்னைன் மற்றும் சையனைட் என்ற நச்சு பொருட்களே.

“ஆர்செனிக் நச்சைப் பற்றி இன்று வெளிப்படுத்தப்படும் கருத்துகள் அல்லது நிலவிவரும் கருத்துகள் உண்மையானவை அல்ல” என த நியூ இங்லண்ட் ஜர்னல் ஆஃப் மெடிசன் என்ற பத்திரிகையில் எழுதுகிறார் டாக்டர் ராபர்ட் ஈ. காலாகர். இருப்பினும், “மாசுபடுத்தப்பட்ட குடிநீர், தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் அசுத்தம் போன்றவைகளால் ஏற்படும் ஆர்செனிக் நச்சு உலகின் அநேக பகுதிகளில் பொது மக்களை அதிகம் பாதிக்கும் ஓர் முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது. இது தோல், சிறுநீர்ப்பை, நுரையீரல், ஈரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் அல்லது அதுபோன்ற மற்ற நோய்கள் ஏற்படுவதற்கு வழியை திறந்து வைக்கிறது” என அவர் தொடர்ந்து எழுதுகிறார்.

இதுவரை படித்த விஷயத்திலிருந்து, ஆர்செனிக் என்பது ஆபத்தானது என்பதையும், எந்த சுகாதார மையமும் அவ்வளவு சாதாரணமாக இதை மருத்துவத்திற்கு பயன்படுத்த முன்வராது என்பதையும் நாம் புரிந்திருப்போம். ஆனால் கனடாவில் நடந்த இந்த சம்பவத்தை கவனியுங்கள். இந்த சம்பவத்தில் எவ்வாறு இரு சாராரின் மனசாட்சிக்கும் இடையில் போராட்டம் நடந்தது என்பதை கவனியுங்கள். டார்லின் என்ற நோயாளியின் மனசாட்சி ஒருபக்கம், மருத்துவர், நர்ஸ் மற்றும் மருந்து தயாரித்துக் கொடுப்பவரின் மனசாட்சி மறுபக்கம். டார்லின் சொல்வதை கவனமாக கேளுங்கள்.

“1996-⁠ம் ஆண்டு மே மாதத்தில்தான் எனக்கு பிரச்சினையே துவங்கியது. கன்றிப்போன நிலையிலிருந்த என் பற்களின் ஈறுகளிலிருந்து இரத்தம் அதிகமாக வெளிவந்தது. ஓன்டோரியோ, கிங்ஸ்டனில் உள்ள இரத்தம் சம்பந்தப்பட்ட டாக்டரான ஜான் மேத்யூஸை நான் சந்தித்தேன். என்னை பரிசோதித்த அவர், அக்யூட் ப்ரோமைலோசைடிக் லியூகேமியா (APL) என்ற யாருக்கும் சாதாரணமாக வராத ஒருவகை புற்றுநோய் எனக்கு வந்திருப்பதாக சொன்னார். அதைத் தொடர்ந்து அநேக டெஸ்டுகள் செய்யப்பட்டன, என் எலும்பு மச்சைகூட டெஸ்ட் செய்யப்பட்டது. டெஸ்டுகளுக்குப் பிறகு டாக்டர் மேத்யூஸ் APL என்றால் என்ன, அதற்கு என்ன மருத்துவம் கையாளப்படுகிறது என்பதையெல்லாம் பொறுமையாக என்னிடம் விளக்கினார். சாதாரணமாக இந்த நோய்க்கு கீமோதெரபியுடன் இரத்தத்தை மாற்றும் சிகிச்சையும் அளிக்கப்படுவதாக அவர் சொன்னார். ஆனால் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியோ என்னை இரத்தம் ஏற்றிக்கொள்ள அனுமதிக்கவில்லை. அதனால் அதை மறுத்துவிட்டேன்.

“மகிழ்ச்சிகரமாக, மருத்துவர்கள் என்னிடம் வாதாடிக்கொண்டில்லாமல், என் மனதை மாற்ற முயற்சித்து நேரத்தை வீணாக்காமல், உடனடியாக மாற்று மருத்துவத்தை தேட ஆரம்பித்தனர். அந்த மாற்று மருத்துவத்தில், கீமோத்தெரபி தீவிரமாக்கப்பட்டு அத்துடன் வைட்டமின் ஏ-விலிருந்து எடுக்கப்பட்ட மருந்தை பயன்படுத்தினர். இந்த சிகிச்சையால் கொஞ்சம் குணமடைந்தேன். ஆனால் ‘புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்’ என்பதுபோல அந்த நோய் என்னை முன்பைவிட மிகவும் கடுமையாக தாக்கியது. என் மூளை வீங்கியதால் ஏற்பட்ட தலைவலியை என்னால் தாங்க முடியவில்லை. தலையே வெடித்துவிடும்போல் இருந்தது. அத்துடன் எனக்கு அதுவரை கொடுக்கப்பட்ட சிகிச்சை அதற்கு மேல் ஒன்றும் வேலை செய்யவில்லை. அப்போது, இந்த நோயை பொறுத்த வரை இரத்தமேற்றுதலைத் தவிர வேறெந்த மருத்துவமும் இல்லை என்று அந்த மருத்துவர் கண்டிப்பாக சொல்லிவிட்டார். அத்துடன் நான் இன்னும் இரண்டு வாரங்கள்தான் உயிருடன் இருப்பேன் என்று நாளும் குறித்துவிட்டார்.

“அதன்பின் நாங்கள் அனைவரும் பித்து பிடித்தாற்போல் இருந்தோம். என்ன செய்வது ஏது செய்வதென்றே தெரியவில்லை. பலமுறை இரத்தம் டெஸ்ட் செய்யப்பட்டது. உயில் எழுதுவதிலும், சவ அடக்க ஏற்பாடுகளைச் செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டோம். இதற்கிடையில் டாக்டர் மேத்யூஸ், உயிர் பிழைக்க மற்றொரு வழி இருக்கிறது என்பதாக நம்பிக்கை அளித்தார். ஆனால் இந்த சிகிச்சை சில தடவை மாத்திரமே பயன்படுத்தி, வெற்றி காணப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். இருப்பினும் அநேக புகழ்பெற்ற தரமான மருத்துவ பத்திரிகைகளில் இந்த சிகிச்சையைப் பற்றி கட்டுரைகள் வந்திருக்கின்றன. உதாரணமாக பிளட் மற்றும் ப்ரோசீடிங்ஸ் ஆஃப் த நேஷனல் அகேடமி ஆஃப் சயின்சஸ் இந்த சிகிச்சையை விவரித்திருக்கின்றன. ‘APL-ஐ குணப்படுத்துவதற்காக, இரத்த நாளங்கள் வழியாக குறைந்த நச்சுத்தன்மை பெற்ற ஆர்செனிக் உடலுக்குள் செலுத்தப்படுகிறது என்பது அநேகருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்’ என இதைப் பற்றி ஆராய்ந்துகொண்டிருந்த அந்த மருத்துவரும் அவருடைய நண்பரும் ஏதோ ஒரு மருத்துவ பத்திரிகையில் வாசித்திருக்கின்றனர்.

“இப்போது ஓர் முடிவெடுக்க வேண்டிய கட்டத்தை எதிர்பட்டேன். அதாவது என் மனசாட்சியை ஓரங்கட்டிவிட்டு இரத்தம் ஏற்றிக்கொள்வதா அல்லது ஆர்செனிக்கோடு சம்பந்தப்பட்ட பிரபலமாகாத இந்த சிகிச்சையை ஏற்றுக்கொள்வதா? கடைசியில் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஆர்செனிக் சிகிச்சை முறையையே தெரிவு செய்தேன். a ஆனால் என் முடிவு மற்றவர்களையும் பாதிக்கும் என்று நினைத்துப் பார்க்கக்கூட இல்லை. இந்த முடிவால், மருத்துவர்கள், நர்ஸ்கள், மருந்தைத் தயாரித்து கொடுப்பவர், மற்ற மருத்துவ அதிகாரிகள் போன்றவர்களின் மனசாட்சி பெரிய போராட்டத்தையே நடத்தியிருக்கிறது.

“அதைத் தொடர்ந்து ஆர்செனிக் டிரைஆக்ஸைட்டை அளிக்கலாமா வேண்டாமா என்பதை உறுதி செய்துகொள்ள அரசாங்க அதிகாரிகளை மருத்துவர்கள் விசாரித்தனர். ஏனென்றால் அவ்வாறு உறுதிபெற்ற பிறகே அவர்கள் அந்த சிகிச்சையை அளிக்க முடியும். என் முடிவு முதலில் மருந்தை தயாரித்து கொடுப்பவரை பாதித்தது. இந்த சிகிச்சை முறை ஆபத்தானது என அவர் மனசாட்சி சொன்னதால் முதலில் அவர் மருந்தை சப்ளை செய்ய தயங்கினார். அதனால் எனக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மேத்யூஸ் மற்றும் டாக்டர் கால்ப்ரேய்த் அவரை சம்மதிக்க வைப்பதற்காக அந்த சிகிச்சையிலுள்ள நல்ல அம்சங்களை எடுத்து விளக்க வேண்டியதாயிற்று. அந்த சிகிச்சைக்குரிய எல்லா மருத்துவ ரீதியிலான ஆதாரங்களையும் அளித்த பிறகே மருத்துவமனை அதிகாரிகளும் அந்த மருந்தை தயாரித்து கொடுப்பவரும் மனதிறங்கினர்.

பிறகு, “ஆர்செனிக் மருந்தை தயாரித்து, உடனே பயன்படுத்தத்தக்கதாக அதை ஸ்டெரிலைஸ் செய்து வைக்க மருந்தைத் தயாரித்து கொடுப்பவர் ஒப்புக்கொண்டார். இப்போது அடுத்து வருவது நர்ஸ்கள். அங்கிருந்த நர்ஸ்களின் மனசாட்சி எனக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், அந்த மருந்து கலந்த பையை உயரமான ஸ்டான்டில் மாட்டிவிடக்கூட மறுத்துவிட்டனர். மருத்துவர்களே எல்லா பைகளையும் மாட்டினர். இதை நர்ஸ்கள் குத்துக்கல் போல பார்த்துக்கொண்டு நின்றனர். இந்த சிகிச்சையால் நான் நிச்சயம் செத்துவிடுவேன் என அவர்கள் நினைத்ததால், இதை நிறுத்திவிட்டு, இரத்தத்தை ஏற்றிக்கொள்ளும்படி என்னிடம் கெஞ்சினார்கள். இந்த சிகிச்சையைப் பொறுத்தவரை என் மனசாட்சியை மதிக்கும்படி தயவாக அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். அதேசமயம் அவர்கள் திறமையான நர்ஸ்கள் என்பதை மதிக்கிறேன் என்றும் சொன்னேன். அவர்கள் என் மீது கொண்டிருந்த அக்கறைக்காக நன்றி சொல்லி, அவர்களை அணைத்து, தங்கள் சொந்த கருத்துகளை ஒதுக்கிவைக்கும்படி சொன்னேன். இதனால் எங்களுக்குள் நல்ல உறவு ஏற்பட்டது. இந்த ஆர்செனிக் டிரைஆக்ஸைட் சிகிச்சை ஆறு மாதத்திற்கு தொடர்ந்தது. என் உடல் நிலையும் வேகமாக முன்னேறியது. அதனால் இந்த சிகிச்சையை இனி வீட்டில் தொடரலாம் என்று சொன்னார்கள்.

“விக்டோரியா சேவை அமைப்பைச் சேர்ந்த நர்ஸ்கள், என் வீட்டிற்கே வந்து என்னை கவனித்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இந்த நர்ஸ்களுக்கும் அதே பிரச்சினை. அந்த சிகிச்சையை எனக்கு அளிக்க அல்லது அந்த மருந்தை எனக்கு கொடுக்க இந்த நர்ஸ்களின் மனசாட்சியும் இடங்கொடுக்கவில்லை. அவர்களோடு நடந்த கூட்டங்களும், அத்தாட்சி கடிதங்களும், அநேக புகழ்பெற்ற மருத்துவ பத்திரிகைகளில் இந்த சிகிச்சையைப் பற்றி விளக்கிய கட்டுரைகளும் அவர்கள் மனதை மாற்றியது. கடைசியில் எனக்கு உதவ ஒப்புக்கொண்டனர். செப்டம்பர் 1997-⁠ல் அந்த சிகிச்சை முடிவடைந்தது.

“ஆனால் எனக்கு வந்த அந்த கேன்ஸர் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம். அது உடலில் டைம் பாம் இருப்பதுபோன்று, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என டாக்டர் சொன்னார். இருப்பினும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாக கழிக்க நான் கற்றுக்கொண்டேன். என்னுடைய வணக்கத்தை ஒருபோதும் கைவிடாமல், ‘“வியாதிப்பட்டிருக்கிறேன்” என எவரும் சொல்லாத காலம் வரும்’ என்ற பைபிள் நம்பிக்கையை மற்றவர்களிடம் சுறுசுறுப்பாக பிரசங்கிப்பதிலும் சந்தோஷப்படுகிறேன்.​—ஏசாயா 33:⁠24.

மருத்துவத் துறையிலுள்ள எல்லோருக்கும் ஓர் முக்கியமான பொறுப்பு இருக்கிறது, அது நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையை அளிப்பது. பொதுவாக இவர்கள் இதை கவனத்தில் கொண்டு சரியாக செயல்படுகின்றனர். தங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தங்களுடைய வரம்புகளுக்குள், சமீபத்திய மருத்துவமுறைகளைப் பயன்படுத்தி சரியான சிகிச்சை அளிக்கின்றனர். இந்த அனுபவம் காட்டுகிற விதமாக, மருத்துவர்களும், நர்ஸ்களும் மற்ற சுகாதார ஊழியர்களும், வளைந்துகொடுப்பவர்களாக, வயதுவந்த நோயாளிகளின் தீர்மானங்களுக்கும் மனசாட்சிக்கும் மதிப்பு கொடுப்பவர்களாக இருக்கும்போது அவர்களால் அதிகம் சாதிக்க முடிகிறது.

[அடிக்குறிப்பு]

a விழித்தெழு! இந்த அனுபவத்தை சொன்னாலும், எந்த குறிப்பிட்ட மருத்துவ முறையையும் ஆதரிப்பதில்லை.

[பக்கம் 20-ன் படம்]

டார்லின் ஷெப்பர்ட்