Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

லூயி பிரெயில் விழி இழந்தோரின் விளக்கு

லூயி பிரெயில் விழி இழந்தோரின் விளக்கு

லூயி பிரெயில் விழி இழந்தோரின் விளக்கு

‘கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.’ ‘எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்.’ ஆகவே கல்வி ஒரு அரிய பொக்கிஷம். ஆனால் கல்வியை கண்போல் கருதாத ஆசாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதுபோல் எழுதப் படிக்க தெரிந்தால்தான் கல்வி கற்றுக்கொள்ள முடியும் என்பது உண்மை. கல்வி என்ற ‘சுவரே’ இல்லாவிட்டால் ‘அறிவு’ என்ற சித்திரத்தை தீட்டவே முடியாது.

விழி இழந்தோர், எழுத்துக்களைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாக பல நூற்றாண்டுகளை கழித்தனர். ஆனால் 19-ஆம் நூற்றாண்டில் அந்த நிலை மாறிவிட்டது. பார்வையற்றோருடைய கல்விக் கண்ணை திறக்கவே முடியாது என்ற பரிதாப நிலையை மாற்ற ஒரு இளைஞன் முனைந்தான். இதனால், கோடிக்கணக்கான விழி இழந்தோர் கல்வி கற்று ‘கல்லாதவரே கண்ணில்லாதவர்’ என்ற முது மொழியை ‘கண்ணில்லாதவரும் கற்றவரே’ என்று மாற்றிவிட்டனர்.

வேதனையில் பிறந்த சாதனை

பிரான்ஸில் உள்ள குவ்ரே என்ற சிறிய கிராமத்தில் 1809-⁠ம் ஆண்டு லூயி பிரெயில் பிறந்தார். இந்த கிராமம் பாரிசில் இருந்து கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த கிராமத்தில்தான் அவரது அப்பா சீமோன் ரெனே பிரெயில், குதிரைகளுக்கு சேணம் தயாரித்து குடும்பம் நடத்திவந்தார். அப்போது லூயிக்கு வயது மூன்று. அப்பாவுடைய பட்டரையில் இருக்கும் தட்டுமுட்டு சாமான்களை வைத்து சுட்டி லூயி லூட்டி அடிப்பான். ஒருநாள் இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த போதுதான் நடக்க கூடாதது நடந்துவிட்டது. சேணம் தயாரிப்பதற்காக உபயோகிக்கும் கூரான ஊசி லூயியின் கண்ணை பதம் பார்த்துவிட்டது. அந்த விபத்தில் ஒரு விழி ஒளியை இழந்தது. ‘பட்டகாலிலே படும்’ என்பதுபோல அந்த விழியில் ஏற்பட்ட நோய் அடுத்த விழிக்கும் பரவி இன்னொரு கண்ணும் பார்வையை இழந்தது.

பெற்றவர்களுக்கு தாங்க முடியாத வேதனைதான், இருந்தாலும் பிள்ளை எதையாவது கற்றுக்கொள்ளட்டுமே என்று அந்த கிராமத்தில் இருந்த பள்ளியில் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து ‘உட்கார்ந்திருக்க’ லூயியை அனுப்பி வைத்தனர். இந்த விஷயத்தில் அந்த கிராமத்தின் பாதிரியார் ஸாக் பல்வே அவர்களுக்கு உதவினார். லூயிக்கு பார்க்கும் சக்தியில்லாவிட்டாலும் புரிந்துகொள்ளும் சக்தி அபாரமாக இருந்தது. ஒருதடவை கேட்டால் கப் என்று பிடித்துக்கொள்வான். சில வருடங்கள் அந்த கிளாசில் லூயி லீடராகக்கூட இருந்தான்! கண் உள்ள பிள்ளைகளுக்காக நடத்தும் பாடத்தில் விழி இழந்த பிள்ளையால் எவ்வளவுதான் கற்றுக்கொள்ள முடியும்? எனவே 1819-⁠ல் விழி இழந்த இளைஞருக்கான நிறுவனத்தில் பிரெயில் சேர்க்கப்பட்டான்.

அந்த நிறுவனத்தின் அமைப்பாளர் வாலன்டன் ஆவே என்பவர். கண்ணில்லாதவர்களால் கல்வி கற்க முடியாது என்ற நிலை இருந்த காலம் அது. ஆனால், விழி இழந்தோர் கல்வியையும் இழக்கக்கூடாது என்ற நல்ல எண்ணம் அவருக்கு. எனவே அப்படிப்பட்டவர்கள் ‘தடவியாவது’ படிப்பதற்காக ஒரு எழுத்து முறையை உருவாக்கினார். கற்பித்தவன் கண்ணைக்கொடுத்தவன் என்ற சொல்லுக்கு இணங்க குருடர்களுக்கு கண்ணைக் கொடுப்பதற்கு அவர் எடுத்த முயற்சி இது. இந்த ஆரம்ப கால ஆராய்ச்சியில், பெரிய எழுத்துக்களை தடித்த பேப்பரில் புடைத்திருக்கும்படி அச்சிட்டு அதன் மூலம் விழி இழந்தோர் படிப்பதற்கு வித்திட்டார். இந்த முறை அவ்வளவு பயனளிக்கவில்லை என்றாலும், பிற்காலத்தில் விழி இழந்தோர் கல்வி கற்பதற்கு அவர் எடுத்த இந்த சிறிய முயற்சிதான் பெரிய ஆலமரமாக செழித்தோங்கியது.

விழி இழந்தோருக்காக ஆவே ஒரு சிறிய நூலகத்தை ஏற்படுத்தினார்; அதில் இருந்த புத்தகங்கள் எல்லாம் எழுத்துக்கள் புடைத்திருக்கும்படி அச்சடிக்கப்பட்டவை, அவற்றை லூயி பிரெயில் படிக்கக் கற்றுக்கொண்டார். ஆனால், ஆமை வேகத்தில்தான் படிக்க முடிந்தது. இந்த முறையில் கல்வி கற்பது என்பது கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடித்த கதைதான் என்பதை பிரெயில் புரிந்துகொண்டார். ஏனென்றால், இதிலுள்ள எழுத்துக்கள் கண்ணுள்ளவர்கள் பார்த்து படிப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை அதனால் இது கண் இல்லாதவர்கள் தடவிப் படிப்பதற்கு ஒத்துவரவில்லை. இதில் இருந்த பிரச்சினை என்னவென்றால் இந்த எழுத்துக்கள் எல்லாம் பெரிதாக இருந்தன, இவற்றை பார்த்து படிப்பது எளிது ஆனால் தடவி படிப்பது கடினம். சொல்லி வைத்தாற்போல இவர்களது குறையை தீர்க்க ஒருவர் வந்தார்.

எதிர்பாராது வந்த உதவிக்கரம்

வருடம் 1821, அப்போது லூயி பிரெயிலுக்கு வயது 12. பிரான்சு ராணுவத்தில் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற சார்லஸ் பார்பியா அந்த நிறுவனத்திற்கு விஜயம் செய்தார். அவர் இருட்டின் எழுத்துக்கள் என்ற தகவல் பரிமாற்ற முறையை விளக்கினார், அது பின்னர் சோனோகிராபி என்றழைக்கப்பட்டது. போர்காலத்தில் எதிரிகளுக்கு தெரியாமல், எந்த ஒளியையும் பயன்படுத்தாமல் தகவல்களை பரிமாற்றம் செய்வதற்கு இருட்டின் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. இது விரல்களால் பேப்பரைத் தடவிப்பார்த்து எண்ணங்களை பரிமாற்றம் செய்யும் முறை. இதில், பேப்பரின் நீளவாக்கிற்கு இணையாக ஆறு புள்ளிகளையும் அகலத்திற்கு இணையாக இரண்டு புள்ளிகளையும் புடைக்க வைத்து சங்கேத முறையில் தகவலை அனுப்பினர். பேசும் வார்த்தைகளை சங்கேத முறையில் அடுத்தவருக்கு தெரிவிக்கும் இந்த முறையை கேள்விப்பட்டபோது அந்தப் பள்ளியில் படித்த மாணக்கர்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம். பிரெயில், இந்தப் புதிய முறையைக் கற்றுக்கொள்வதற்கு முனைந்தார். அதில் சில முன்னேற்றங்களை செய்தபோது அவருக்கு உற்சாகம் கரைபுரண்டது. இதன் பின், இந்த முறையை எளிமையாக்குவதற்காக அயராது பாடுபட்டார். இதைக் குறித்து அவருடைய டைரியில் பின்வருமாறு எழுதினார்: “உலக மக்களையும், நாட்டு நடப்புகளையும், அவர்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் பற்றி கண்களால் பார்த்து படித்து தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அவற்றை தெரிந்துகொள்ள வேறு வழியை கண்டிப்பாக கண்டுபிடித்தாக வேண்டும்.”

பகலிலும் சூரியனை பார்க்க முடியாதவர்களின் வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதே பிரெயிலின் நோக்கம். எனவே, இந்த சங்கேத மொழியை எளிமையாக்கும் லட்சியத்துடன், பிரெயில் அடுத்த இரண்டு ஆண்டுகள் அயராது உழைத்தார். கவனத்துடன் படிக்க வேண்டும் என்பதற்கு எழுத்தை எண்ணி எண்ணிப் படிக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதற்கிணங்க, புள்ளிகளை எண்ணி எண்ணி எழுத்துக்களை புரிந்துகொள்ளும் சங்கேத முறையை பிரெயில் கடைசியாக உருவாக்கினார்; இதற்காக நீளத்தில் மூன்று புள்ளிகளும் அகலத்தில் இரண்டு புள்ளிகளும் உள்ள ஒரு செவ்வக அமைப்பை பேப்பரில் ஏற்படுத்தி அதில் புள்ளிகள் புடைத்திருக்கும்படி செய்தார். 1824-⁠ல் அவர் 15 வயதாயிருக்கும்போது, ஆறு புள்ளிகள் கொண்ட இந்த புதிய முறையை வடிவமைத்து முடித்தார். அதைத் தொடர்ந்து அதே நிறுவனத்தில் அவர் ஆசிரியராகப் பணிபுரிந்தார், பின்னர் 1829-⁠ல் விழி இழந்தோர் எழுதிப் படிப்பதற்கான இந்த தலைசிறந்த முறையை பிரசுரித்தார். அது அவருடைய பெயரால் இன்றும் அழைக்கப்படுகிறது; பிரெயில் கண்டுபிடித்த எழுத்து முறைதான் கண்ணிழந்தோருக்கு வழிகாட்டியாக இருக்கிறது, இத்தனை ஆண்டுகளில் ஒரு சில மாற்றங்களே அதில் செய்யப்பட்டிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

உலகெங்கும் பிரெயில்

பிரெய்லின் இந்த புதிய முறையை விளக்கும் முதல் புத்தகம் 1820-களின் இறுதி ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. ஆனால், இதை அனைவரும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கல்வி கற்றுக்கொடுத்த நிறுவனத்தில்கூட 1854-ம் ஆண்டுதான் இது நடைமுறைக்கு வந்தது. இதைப் “பார்ப்பதற்கு” பிரெயிலுக்கு கொடுத்து வைக்கவில்லை, அவர் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இருப்பினும், இது எல்லா விதத்திலும் சிறந்த முறை என்பதை பிற்பாடு உலகம் ஏற்றுக்கொண்டது.

பார்வையற்றோரின் கண்களை திறப்பதற்காக, பிரெயில் எழுத்துக்களில் அநேக நிறுவனங்கள் இலக்கியங்களை பிரசுரித்திருக்கின்றன. காவற்கோபுர சங்கம் அநேக பைபிள் பிரசுரங்களை பிரெயில் முறையில் 1912-ஆம் ஆண்டு முதற்கொண்டே பிரசுரித்து வருகிறது. அந்த சமயத்தில் ஆங்கில பிரெயில் முறை அப்போதுதான் வளர்ந்துவந்தது. இன்றோ காவற்கோபுர சங்கம், பல நவீன அச்சிடும் முறைகளைப் பின்பற்றி பிரெயில் முறையில் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான பக்கங்களை எட்டு மொழிகளில் அச்சிட்டு, 70 நாடுகளுக்கு மேல் விநியோகித்து வருகிறது. சமீபத்தில், பிரெயில் முறையில் சங்கத்தால் விநியோகிக்கப்படும் பைபிள் இலக்கியங்களின் தேவை அதிகரித்திருப்பதால் இவற்றின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது.

கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு சிறுவன், கண்ணில்லாதவரும் உலகைக் “காண” வேண்டும் என்று அயராது பாடுபட்டான். அதன் விளைவாக இருளின் சிறையில் சிக்கி அடிமைகளாக இருந்த கோடிக்கணக்கானோருக்கு இன்று எழுதிப் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எளிமையாக்கப்பட்ட பிரெயில் முறையில் இவர்களால் கல்வி என்ற பொக்கிஷத்தை பெற்றுக்கொள்ள முடிகிறது.

[பக்கம் 15-ன் பெட்டி/படம்]

பிரெயில்—சங்கேத மொழியை புரிந்துகொள்வது

பிரெயில் முறையில், ஒரு கையை அல்லது இரண்டு கைகளை பயன்படுத்தி இடமிருந்து வலமாக படிக்கின்றனர். மொத்தம் 63 செவ்வகக்கட்டங்கள். ஒவ்வொரு பிரெயில் செவ்வகத்திலும் உள்ள புள்ளிகளை மாற்றி மாற்றி எழுத்துக்களையும், குறியீடுகளையும், நிறுத்த குறிகளையும், சொற்களையும் அமைக்க முடியும். சில செவ்வகங்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் முழு வார்த்தைகளைக்கூட குறிப்பிடுகின்றன, இவ்வாறு அநேக மொழிகள் சுருக்கமான பிரெயில் முறையை பயன்படுத்துகின்றன. இதிலும் சூரர்கள் இருக்கின்றனர். இவர்களால் ஒரு நிமிடத்திற்கு 200 வார்த்தைகளைக்கூட படித்துவிட முடியும்!

[படங்கள்]

முதல் பத்து எழுத்துக்களை குறிப்பிடுவதற்கு, மேலாக உள்ள இரண்டு வரிசைகளில் மட்டுமே புள்ளிகள் பயன்படுத்தப்படுகின்றன

அடுத்த பத்து எழுத்துகளுக்கு கீழே இடது புறம் ஒரு புள்ளி சேர்க்கப்படுகிறது

கடைசி ஐந்து எழுத்துக்களுக்கு, முதல் ஐந்து எழுத்துக்களுடன் கீழே இரண்டு புள்ளிகள் சேர்க்கப்படுகின்றன; “w” என்பது விதிவிலக்கு, இது பின்னர்தான் பிரென்ச் மொழியில் சேர்க்கப்பட்டது

[பக்கம் 14-ன் படத்திற்கான நன்றி]

▲Portrait: © Maison Natale de Louis Braille - Coupvray, France/Photo Jean-Claude Yon