Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆவிகளோடு ஏன் தொடர்பு கொள்ளக்கூடாது

ஆவிகளோடு ஏன் தொடர்பு கொள்ளக்கூடாது

ஆவிகளோடு ஏன் தொடர்பு கொள்ளக்கூடாது

ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் சில முறைகள் மூலம் நல்ல ஆவிகளோடு பேசலாம் என ஒருவேளை உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், ஆவிகளோடு தொடர்பு கொள்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதோ, அது உங்களுக்கு ஆச்சரியத்தை தரும். உதாரணமாக, ‘அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்பட வேண்டாம்’ என பைபிள் எச்சரிக்கிறது.​—லேவியராகமம் 19:31; 20:6, 27.

ஆவிகளோடு தொடர்பு வைத்துக்கொள்ளும் எவருமே ‘யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்’ என பைபிள் விவரிக்கிறது. (உபாகமம் 18:11, 12) ஏன்? ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் முக்கியமான ஓர் அம்சத்தைப் பற்றி, அதாவது செத்தவர்களோடு பேசுவதாக சொல்லப்படுவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்தால், இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும்.

செத்தவர்கள் உயிருடனிருக்கிறார்களா?

இன்று அநேகர் நம்புவதற்கு முற்றிலும் முரணாக, செத்தவர்களோடு பேச முடியாது என கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் கற்பிக்கிறது. ஏன்? செத்தவர்களோடு யாராவது பேச வேண்டும் என்றால், செத்தவர் உயிருடன் இருக்க வேண்டும். அவரோடு சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்று சாகாமல் உயிருடன் இருக்க வேண்டும். உடல் செத்தாலும் ஆத்துமா உயிருடன் இருக்கிறது என சிலர் நம்புகின்றனர். இது உண்மையா?

மனிதன் படைக்கப்பட்ட விவரத்தை பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: ‘தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமா ஆனான்.’ (ஆதியாகமம் 2:7) ஆத்துமா என்பது ஒரு ஆளையே குறிக்கிறது என்பதையும் உடல் செத்தபின் அழியாமல் உயிருடனிருக்கும் ஆத்துமா என ஒன்று அவனுக்கு கொடுக்கப்படவில்லை என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறதல்லவா? பைபிள் தெளிவாக சொல்கிறது: “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” (எசேக்கியேல் 18:4) “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . நீ போகிற பாதாளத்திலே [அதாவது, மனிதகுலத்தின் பொதுவான கல்லறையிலே] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”​—பிரசங்கி 9:5, 10.

உடல் செத்தாலும் ஆத்துமா என ஒன்று உயிருடன் இருக்கிறது என்பதையோ, உயிரோடிருப்பவர்கள் இந்த ஆவிகளோடு பேச முடியும் என்பதையோ பைபிள் கற்பிப்பதில்லை. ஆத்துமா அழிகிறது என்ற முடிவுக்கு வந்துள்ள இரு பைபிள் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை சற்று கவனிப்போம். “[மனித ஆத்துமா அழியாது என்ற] இந்தக் கொள்கை இறையியல் ஆராய்ச்சியை மிக மிக நீண்ட காலமாக பாதித்து வந்திருக்கிறது; ஆனால் இது பைபிள் சார்ந்த கொள்கையல்ல. ஆத்துமா அழியாது என்பதை பைபிள் போதிக்கவில்லை” என கனடாவை சேர்ந்த இறையியல் வல்லுநர் க்ளார்க் ஹெச். பின்னாக் குறிப்பிடுகிறார். இவரைப் போலவே, “ஆத்துமா அழியாதது​—⁠அதாவது அழிக்க முடியாதது என்பது கிரேக்க கொள்கையே; பைபிள் சார்ந்ததல்ல” என பிரிட்டிஷ் நிபுணர் ஜான் ஆர். டபிள்யூ. ஸ்டாட் சொல்கிறார்.

என்றபோதிலும், செத்தவர்களிடமிருந்து வருவதுபோல தோன்றும் செய்திகளையும் அவர்களுடைய குரலையும் அநேகர் கேட்கின்றனர். அப்படியானால், உண்மையில் பேசுவது யார்?

யாரோடு பேசுகிறார்கள்?

கண்களுக்குப் புலப்படாத ஆவியின் சிருஷ்டி ஒன்று, முதல் மனுஷி ஏவாளிடம் பேசியது. குரலை மாற்றிப்பேசும் கலையை பயின்ற வென்ட்ரிலாக்கிஸ்ட் என்ற கலைஞன் வாய் பேசாத பொம்மை பேசுவது போல செய்து காட்டுவான். அதைப்போல, அந்த ஆவி சிருஷ்டி ஒரு சர்ப்பத்தை பயன்படுத்தி பேசி, கடவுளுக்கு எதிராக கலகம் செய்யும்படி அவளைத் தூண்டியது. (ஆதியாகமம் 3:1-5) இந்த ஆவி சிருஷ்டியை அல்லது தூதனை, “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பு” என பைபிள் அழைக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:9) அவன், அதாவது சாத்தான், மற்ற தூதர்களையும் கடவுளுக்கு எதிராக கலகம் செய்யும்படி தூண்டினான். (யூதா 6) இந்த கெட்ட தூதர்கள் பேய்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை கடவுளின் எதிரிகள்.

மனிதர்களைவிட அதிகம் சக்தி உடைய இந்தப் பேய்கள், அவர்களைக் கட்டுப்படுத்த முடியும் என பைபிள் விவரிக்கிறது. (லூக்கா 8:26-34) எனவேதான், கடவுளுடைய சட்டம் சொல்கிறது: “மந்திரவாதியும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்.” (உபாகமம் 18:10-12) இந்தச் சட்டத்தை அசட்டை செய்வதால் வரும் ஆபத்துக்கள் என்ன?

பூர்வ இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கிறது. தன் எதிரிகளுக்குப் பயந்து, சவுல் ராஜா ஆவிகளோடு தொடர்பு கொண்டார். தீர்க்கதரிசி சாமுவேலோடு பேச வேண்டும் என மத்தியஸ்தம் செய்த பெண்ணிடம் சவுல் கேட்டார். வயதான ஒருவருடைய தோற்றத்தை அந்தப் பெண் விவரிக்க, அது இறந்துபோன சாமுவேலின் தோற்றம்தான் என சவுல் நினைத்துக்கொள்கிறார். என்ன செய்தியை சவுல் பெறுகிறார்? இஸ்ரவேல் எதிரிகள் கைவசம் போகும், சவுலும் அவருடைய மகன்களும் “சாமுவேல்” உடன் இருப்பார்கள். அதாவது இறந்து விடுவார்கள். (1 சாமுவேல் 28:4-19) சவுல் ஆவிகளோடு தொடர்பு கொண்டதைக் குறித்து கடவுள் என்ன சொன்னார்? வசனம் சொல்கிறது: “சவுல் . . . கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், . . . அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.” (1 நாளாகமம் 10:13) எவ்வளவு பெரிய இழப்பு!

அதுபோலவே, இன்றும் ஆவிகளோடு தொடர்பு வைத்துக்கொள்பவர்கள் மிக பயங்கரமான ஆபத்துக்குள் இருக்கிறார்கள். ‘சூனியக்காரர் . . . இரண்டாம் [அல்லது, நித்திய] மரணத்தில்’ பங்கடைவர் என பைபிள் எச்சரிக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:8; 22:15) ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் எல்லா வழிமுறைகளையும் தவிர்ப்பதே ஞானமான, ஜீவனைக் காக்கும் செயல்.

கெட்ட ஆவிகளை எதிர்ப்பது எப்படி

ஏற்கெனவே ஆவிகளோடு தொடர்பு வைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால், அப்போது என்ன செய்வது? அப்படி என்றால், கெட்ட ஆவிகள் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தாருக்கோ எந்தவித கெடுதியும் செய்யாதபடி காக்க, நீங்கள் உடனடியாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவை என்ன? இதை விளக்க, இந்த உதாரணத்தை கவனியுங்கள்: நோய்களைப் பரப்பும் எலிகளிடமிருந்து ஒருவர் தன் வீட்டையும் குடும்பத்தாரையும் எப்படி காப்பார்? முதலாவது, ஏற்கெனவே வீட்டில் இருக்கும் எலிகளை எலிப்பொறியிலோ அல்லது வேறு ஏதாவது முறையிலோ பிடித்து கொன்றுவிடுவார். அதுமட்டுமல்ல, எலிகளை கவரும் எந்த ஒரு பொருளும் வீட்டில் இல்லாதபடி பார்த்துக்கொள்வார். அடுத்தபடியாக, வீட்டில் ஏதாவது பொந்து அல்லது ஓட்டை இருக்கிறதென்றால், அவற்றை அடைப்பார். அப்படியும் எலிகளை ஒழிக்க முடியவில்லை என்றால், எலித்தொல்லையிலிருந்து விடுபட, உள்ளூர் அதிகாரிகளின் உதவியை நாடுவார்.

கெட்ட ஆவிகளை எதிர்க்கவும் அவற்றின் பிடியிலிருந்து விடுதலைப் பெறவும் இதேமாதிரியான நடவடிக்கை உங்களுக்கு உதவும். எபேசுவில் இருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் உதாரணத்தை சற்று சிந்தியுங்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாக ஆவதற்குமுன் ஆவிகளோடு தொடர்பு வைத்திருந்தனர். இந்தப் பழக்கத்திலிருந்து மீள வேண்டும் என உறுதியாய் இருந்தனர். எனவே, எலித்தொல்லைப் போன்ற கெட்ட ஆவிகளின் தாக்குதலில் இருந்து விடுபட்டு, தங்களைக் காத்துக்கொள்ள மூன்று நடவடிக்கைகளை எடுத்தனர். அவை என்ன?

முதல் நடவடிக்கை

பைபிள் விவரிக்கிறது: ‘மாயவித்தைக்காரராய் இருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்.” (அப்போஸ்தலர் 19:19) மாயவித்தை சம்பந்தமான தங்கள் புத்தகங்களை எரிப்பதன்மூலம், கிறிஸ்தவர்களாக மாறிய அவர்கள் ஒரு நல்ல உதாரணத்தை வைத்தனர். இன்று கெட்ட ஆவிகளை எதிர்க்க விரும்பும் அனைவருக்கும் அது சிறந்த உதாரணம். ஆவிகளோடு தொடர்புடைய எல்லா பொருட்களையும் அகற்றிவிடுங்கள். புத்தகங்கள், பத்திரிகைகள், படக்கதைப் புத்தகங்கள், வீடியோக்கள், படங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள், இசைத்தட்டுக்கள், தாயத்துக்கள், அல்லது ஆவிகளிடமிருந்து “பாதுகாக்கும்” என அணிந்துகொள்ளப்படும் வேறே எந்த பொருட்களாக இருந்தாலும்சரி அனைத்தையும் இது உட்படுத்தும்.​—உபாகமம் 7:25, 26; 1 கொரிந்தியர் 10:⁠21.

தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருடைய உதாரணத்தை கவனியுங்கள். இவர் பல வருடங்களாக ஆவிகளோடு தொடர்பு வைத்திருந்தார். ஆனால், இந்த பைபிள் ஆலோசனையை இருதயத்தில் ஏற்றார். அடுத்தபடியாக என்ன செய்தார்? அவரே சொல்கிறார்: “ஒரு நாள், ஆவிகளோடு சம்பந்தப்பட்ட பொருட்கள் என்னவெல்லாம் என்னிடமிருந்ததோ, அவை எல்லாவற்றையும் எடுத்து, என் வீட்டின் முன்னால் போட்டு, கோடாரியால் சுக்குநூறாக்கினேன்.” பிறகு, ஒன்றுமே மீதி இல்லாதபடிக்கு எல்லாவற்றையும் நெருப்பால் சுட்டெரித்தார். அதன் பிறகு அவர் ஆவிக்குரிய விதத்தில் விரைவாக முன்னேறினார். சீக்கிரத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் ஒன்றில் வைராக்கியமான ஊழியரானார்.

இருப்பினும், இந்த முதல் நடவடிக்கையோடு எல்லாம் முடிந்துவிடுவதில்லை. ஏன்? எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் மாயவித்தை சம்பந்தமாக வைத்திருந்த எல்லா புத்தகங்களையும் எரித்து பல வருடங்களுக்குப் பிறகும், அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” (எபேசியர் 6:12) பேய்கள் அத்தோடு அவர்களை விட்டுவிடவில்லை. மறுபடியும் மறுபடியும் அவர்களைத் தங்கள் பிடியில் சிக்க வைக்க முயன்றுகொண்டிருந்தன. அப்படியானால், அந்தக் கிறிஸ்தவர்கள் வேறே என்ன செய்தார்கள்?

இரண்டாம் நடவடிக்கை

“நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 6:11) அந்த ஆலோசனை இன்றும் பொருத்தமானது. எலித்தொல்லையிலிருந்து விடுபட முயலும் அந்த நபரைப்போல, ஒரு கிறிஸ்தவனும் சுவர் போன்ற தன் பாதுகாப்பு சாதனங்களை பலப்படுத்த வேண்டும். அப்போதுதான், கெட்ட ஆவிகள் அவரை அண்டாது. இந்த இரண்டாவது நடவடிக்கை என்ன?

“பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்” என பவுல் வலியுறுத்துகிறார். (எபேசியர் 6:16) இந்த கேடகம் மிக மிக அவசியம். உங்கள் விசுவாசம் எவ்வளவு உறுதியாய் இருக்கிறதோ, அவ்வளவு பலமாக நீங்கள் கெட்ட ஆவிகளை எதிர்க்க முடியும்.​—மத்தேயு 17:⁠20.

உங்கள் பாதுகாப்பு சாதனங்களை நீங்கள் எப்படி பலப்படுத்த முடியும்? பைபிளை தொடர்ந்து படிப்பதன் மூலமே. பைபிள் படிப்பு எந்த வகையில் விசுவாசத்தோடு சம்பந்தப்பட்டு இருக்கிறது? ஒரு சுவரின் உறுதி எப்படி அதன் அஸ்திபாரத்தின்மேல் சார்ந்திருக்கிறதோ, அப்படித்தான் ஒருவருடைய விசுவாசத்தின் உறுதியும் அதன் அஸ்திபாரத்தின்மேல் வெகுவாக சார்ந்திருக்கிறது. விசுவாசத்தின் அஸ்திபாரம் என்ன?

கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய திருத்தமான அறிவு. அப்போஸ்தலனாகிய பவுல் விவரிக்கிறார்: “விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” (ரோமர் 10:17) இதற்காக யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ தயார். ஓர் இலவச பைபிள் படிப்பிற்காக நீங்கள் அவர்களை கேட்கலாம். உங்களுக்கு வசதியான நேரத்திலும் இடத்திலும் அது நடத்தப்படும். இந்த படிப்பு உங்கள் விசுவாசத்தை பலப்படுத்தும். (ரோமர் 1:11, 12; கொலோசெயர் 2:6, 7) விளைவு? கெட்ட ஆவிகளை எதிர்க்க வல்ல பலமான கேடகமாக, அரணாக விரைவில் உங்கள் விசுவாசம் வளர்ந்திடும்.​—சங்கீதம் 91:4; 1 யோவான் 5:⁠5.

எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் எடுத்த மூன்றாவது நடவடிக்கை என்ன?

மூன்றாம் நடவடிக்கை

பூர்வ எபேசுவில், புதிதாக விசுவாசிகளானவர்கள் கெட்ட ஆவிகளுக்கு எதிர்த்து நிற்க சில நடவடிக்கைகளை எடுத்தனர். என்றாலும், பேய்த்தன போதகங்கள் நிறைந்த நகரத்தில்தான் தொடர்ந்து அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு இன்னும் அதிகமான பாதுகாப்பு தேவைப்பட்டது. எனவே, உடன் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியபோது, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எழுதினார். “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்.”​—எபேசியர் 6:⁠18.

கெட்ட ஆவிகளுக்கு எதிராக காத்துக்கொள்ள எடுக்க வேண்டிய ஓர் உறுதியான நடவடிக்கை, யெகோவாவின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து ஊக்கமாக ஜெபிப்பதே. அப்போதும்சரி இப்போதும்சரி இது மிக அவசியம். உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து வரும் ஊக்கமான வேண்டுதல்களுக்கு யெகோவா நிச்சயம் பதில் அளிப்பார். உங்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிப்பதன்மூலம் இதை செய்வார். அவருடைய தூதர்களுடைய ஆதரவையும் உங்களுக்கு கொடுப்பார். (சங்கீதம் 34:7; 91:2, 3, 11, 14; 145:19) எனவே, “தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்” என தொடர்ந்து ஜெபிப்பது மிக முக்கியம்.​—மத்தேயு 6:13, பொ.மொ; 1 யோவான் 5:18, 19.

பிரேஸிலில் இருந்து வரும் அனுபவம் இது. அன்டோன்யூ என்பவர் ஆவியுலக மத்தியஸ்தர். ஒரு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார். கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை கற்றார். எனவே, ஜெபத்தின் முக்கியத்துவத்தைப் போற்ற கற்றுக்கொண்டார். ஆவிகளிடமிருந்து தன்னை விடுவிக்க உதவும்படி யெகோவாவிடம் மன்றாடினார். தன் கடந்த காலத்தை யோசித்துப் பார்த்து அவர் சொல்லும் வார்த்தைகள் இது: “கடந்த காலங்களில், கெட்ட ஆவிகளுக்கு அடிமைகளாக இருந்த எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும், யெகோவாவிடம் ஜெபிப்பது பலத்த துருகமாக நிரூபித்திருக்கிறது.”​—நீதிமொழிகள் 18:⁠10.

வெற்றி உங்களுக்கே

யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்ட பின், அவரில் முழுமையான நம்பிக்கை வைப்பதும், அவருடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படிவதும், அவருடைய கட்டளைகளின்படி நடப்பதும் மிக மிக முக்கியம். இதைச் செய்தீர்களானால், உதவிக்காக கடவுளுடைய பெயரைச் சொல்லி கூப்பிடும்போது, நிச்சயம் உங்களை பாதுகாப்பார். அன்டோன்யூ அப்படிப்பட்ட பாதுகாப்பை பெற்றார். இன்று சாவா போலோவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் மூப்பராக சேவை செய்கிறார். பேய்களிடமிருந்து தனக்கு விடுதலை கொடுத்த சத்தியத்தை தெரிந்துகொண்டதற்காக அவர் மிகவும் நன்றியுடையவராய் இருக்கிறார்.​—யோவான் 8:⁠32.

முன்பு ஆவிகளோடு தொடர்பு வைத்திருந்த அன்டோன்யூவும் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களும் இப்போது யெகோவா தேவனை சேவித்து வருகின்றனர். அவர்களைப்போலவே, நீங்களும் ஆவிகளின் பிடியிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முடியும். எனவே, ஆவிகளோடு தொடர்புடைய எல்லா பொருட்களையும் ஒழித்து விடுங்கள்; பைபிள் படிப்பு மூலம் உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துங்கள்; யெகோவாவின் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள். இந்த எல்லா நடவடிக்கைகளையும் தவறாமல் எடுங்கள். ஏனென்றால், உங்கள் உயிர் ஆபத்தில் இருக்கிறது!

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

பைபிளின்படி, உயிரோடு இருக்கிறவர்கள் செத்தவர்களோடு பேச முடியாது

[பக்கம் 6-ன் படம்]

1. ஆவிகளோடு தொடர்புடைய எல்லா பொருட்களையும் ஒழித்து விடுங்கள்

[பக்கம் 7-ன் படம்]

2. பைபிளை தொடர்ந்து படியுங்கள்

[பக்கம் 8-ன் படம்]

3. அடிக்கடி ஊக்கமாய் ஜெபியுங்கள்