Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆவிகளோடு தொடர்பு கொள்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம்?

ஆவிகளோடு தொடர்பு கொள்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம்?

ஆவிகளோடு தொடர்பு கொள்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம்?

“மனிதன் சாகும்போது அவனுடைய சரீரத்திலிருந்து பிரியும் ஆவி மரிப்பதில்லை. அது, உயிரோடு இருப்பவர்களோடு தொடர்பு கொள்ள முடியும். பொதுவாய், மத்தியஸ்தம் செய்யும் ஒருவர் மூலம் ஆவிகளோடு பேச முடியும்.” இதுவே ஆவிக்கொள்கை.

இறந்தவர்களோடு பேசுவது எப்படி என்பதைப் பற்றி விளக்கும் ஒரு ஆங்கில புத்தகம், ஐக்கிய மாகாணங்களில் 1998-⁠ல் மிகவும் பிரபலமாகியது. இந்த புத்தகம் அமோகமாக விற்பனையானது. எனவே, நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிடும் அதிக விற்பனையான புத்தகங்கள் பட்டியலில், இந்த புத்தகம் வெகு சீக்கிரத்தில் முதல் இடத்தை பிடித்தது.

மாஸ்கோவில் சில ஆண்டுகளுக்கு முன், மந்திரவாதிகளுக்கும் ஆவிகளோடு தொடர்பு கொள்ளுவதற்காக ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களுக்கும் கிராக்கி மிக அதிகமாகியது. அரசியல்வாதிகளும் வியாபார முதலைகளும் அவர்களைத் தேடி ஓடினர். அதற்காக பணத்தை வாரி வாரி இறைத்தனர்.

பிரேஸிலில், ஆவிகளோடு தொடர்பு கொள்வதைப் பற்றி காட்டும் டிவி நாடகங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

ஆப்பிரிக்கா அல்லது ஆசியாவில் வாழும் பலருக்கு, ஆவிகளோடு தொடர்பு கொள்வது, மார்க்கெட்டில் பண்டமாற்று முறையில் பொருட்களை வாங்குவது போல் சர்வசாதாரணமான விஷயம்.

ஆவிகளோடு தொடர்பு கொள்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம்

அன்பானவர்கள் இறந்தபின் ஆறுதலுக்காக பலர் ஆவிகளோடு தொடர்பு கொள்ள விரும்புகின்றனர். இதற்கான காரணங்களில் ஒன்று, செத்தவர்களிடமிருந்து வருவது போல் தோன்றும் சில முக்கியமான தகவல்களை ஆவியுலக மத்தியஸ்தர்கள் மூலமாக அவர்கள் ஒருவேளை பெறலாம். அதன் காரணமாக, அன்பானவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் எனவும், இறந்தவர்களோடு தொடர்பு கொள்வது தங்களுக்கு ஆறுதலைத் தருவதாகவும் துக்கித்துக்கொண்டிருப்பவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

மேலும், தீரா வியாதியில் அவதிப்பட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு சுகத்தையும், வறுமையின் பிடியிலிருந்து விடுதலையையும், காதலில் வெற்றியையும், கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும், நல்ல வேலை கிடைக்கவும் ஆவிகள் உதவும் என நம்பி, ஆவிகளோடு தொடர்பு கொள்கின்றனர். இன்னும் சிலர், அதில் அப்படி என்னதான் இருக்கிறது என தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற ஆர்வத்தில் ஆவிகளோடு தொடர்பு கொள்கின்றனர்.

லட்சக்கணக்கானோர் ஆவிகளோடு தொடர்பு கொள்வதற்கான மற்றொரு முக்கிய காரணத்தை பிரேஸிலில் இன்று நிலவும் நிலைமை தெளிவாக காட்டுகிறது. ஆவிகளோடு தொடர்பு கொள்வது “கிறிஸ்தவத்தின் துணை மதமாக” ஏற்றுக்கொள்ளப்படலாம் என அவர்கள் கற்பிக்கப்பட்டிருப்பதே அந்த காரணம் என்று இந்தத் துறையில் நிபுணராக விளங்கும் ஒருவர் சொல்கிறார்.

உலகிலேயே ரோமன் கத்தோலிக்கர்கள் பிரேஸிலில்தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், “லட்சக்கணக்கான கத்தோலிக்கர்கள், சர்ச்சில் மெழுகுவர்த்தியை ஏற்றுவதோடு, ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் மையங்களுக்கு சென்று, அங்கும் மெழுகுவர்த்தியை ஏற்றுகிறார்கள். இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே அவர்கள் கருத்து” என சால் பிடர்மன் சொல்கிறார். பிரேஸிலில் ஆவியுலக மையங்களுக்குச் செல்பவர்களில் 80 சதவீதத்தினர் சர்ச்சில் பூசைக்கு செல்லும் முழுக்காட்டப்பட்ட கத்தோலிக்கர்கள் என பிரேஸிலின் வாராந்திர செய்திப்பத்திரிகை வேஜா அறிவிக்கிறது. அதுமட்டுமா! குருமார்களில் சிலரும் இவ்விதமான ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் கூட்டங்களுக்கு செல்கின்றனர். எனவே, ஆவிகளோடு பேசி ஆறுதலையும் ஆலோசனைகளையும் பெறுவதை கடவுள் அங்கீகரிக்கிறார் என அநேகர் நினைக்கின்றனர். ஆனால் இது உண்மையா?

[பக்கம் -ன் பெட்டி/படம்3]

ஆவிகளோடு தொடர்பு கொள்ள பல முறைகள்

ஆவிகளோடு பல முறைகளில் தொடர்பு கொள்ளப்படுகிறது. ஆவியுலக மத்தியஸ்தர் மூலமாக பேசுதல், செத்தவர்களிடத்தில் குறி கேட்டல் அல்லது சகுனம் பார்த்தல் ஆகியவையும் இதில் அடங்கும். ஆவிகளோடு தொடர்பு கொள்வதில் மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு முறை, குறிசொல்லுதல். அதாவது, எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது தெரியாத ஒரு விஷயத்தையோ தெரிந்துகொள்ள முயலுவது. ஜோதிடம், மை போட்டு பார்த்தல் அல்லது மாயக்கல் வைத்து பார்த்தல், கனவுகளுக்கு அர்த்தம் சொல்லுதல், கை ரேகை, கிளி ஜோசியம் போன்றவை குறிசொல்லுதலில் பரவலாக இருக்கும் சில முறைகள்.