எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
இளைஞர் கேட்கின்றனர் எனக்கு 12 வயது, தங்கள் வெளியீடுகளை விரும்பி படிக்கும் வாசகி. உங்கள் பிரசுரங்களை படிப்பதற்கு முன்பு எனது நண்பர்களிடம் சகஜமாக பழக முடியாமல் தவித்தேன், ஏனென்றால் அவர்கள் அனைவருமே என்னைவிட வயதில் பெரியவர்கள். ஆனால் “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள் . . . ” கட்டுரைகளை வாசித்தபின் எனக்கு இப்போது அவர்களோடு சகஜமாக பழக முடிகிறது. உங்களுடைய பத்திரிகைகளுக்கு நன்றி. அவை மிகவும் பிரயோஜனமாக இருக்கின்றன.
என். ஐ., ரஷ்யா
மொழி பயில “புது மொழி பயில ஆசையா?” (ஜனவரி 8, 2000) என்ற கட்டுரையின் வாயிலாக நல்ல ஆலோசனை வழங்கியதற்கு நன்றி. நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஸ்பானிய மொழி கற்றுக்கொள்ள தொடங்கினேன். இந்த மொழியை கற்றுக்கொண்டது அதிக பிரயோஜனமாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில், வெளி நாடுகளிலிருந்து வந்திருந்த அநேக சகோதரர்களுக்கு என்னால் உதவ முடிந்தது.
கே. எல். ஆர்., பிரேஸில்
கடந்த மூன்று வருடங்களாக நான் பிரெஞ்சு மொழி பயின்று வருகிறேன். இந்தக் கட்டுரையை வெளியிட்டதற்கு மிக்க நன்றி. அது எனக்கு அதிக ஊக்கமளித்தது! என்னுடைய படிப்பை தொடருவதற்கு புது தெம்பளித்ததும் அதுவே. என்றாவது ஒருநாள் அந்தப் புதிய மொழி என்னுடைய கிறிஸ்தவ ஊழியத்திற்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவே என் ஜெபம்.
எல். சி. ஐக்கிய மாகாணங்கள்
நாங்கள் வசிக்கும் பகுதியான பவரியாவில் அநேக வெளிநாட்டவர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் ஜெர்மன் மொழி பேசுகின்றனர், இருந்தாலும் அவர்களுடைய சொந்த மொழியில் பேசும்போதே பைபிள் நற்செய்திக்கு நன்கு செவிகொடுக்கின்றனர். அநேகர் ரஷ்யாவிலிருந்து வருவதால், அவர்களுடைய மொழியை பயில தீர்மானித்தேன். அது ஒரு சவால் என்று தாங்கள் கூறியிருப்பதும் உண்மையே. ஆனால், எழுத்துக்களை அறிந்து வார்த்தைகளை வாசிக்கும் முதல்படியை வெற்றிகரமாக தாண்டிவிட்டதால், இப்போது அவை எகிப்திய சித்திர எழுத்துக்களை (hieroglyph) போலில்லை.
பி. கே., ஜெர்மனி
புது மொழி பயில தாங்கள் வழங்கிய ஆலோசனைகளில் ஒன்று, வாகனங்களை ஓட்டிச் செல்கையில் ஆடியோ கேஸட்டுகளை போட்டு கேட்பது. வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் இது நல்ல ஆலோசனையாக எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் அது விபத்திற்கு வழிநடத்தலாம்.
கே. எஸ்., ஜப்பான்
இதைக் குறித்து அநேக வாகன பாதுகாப்பு நல அமைப்புகளின் கருத்துக்களை நாங்கள் கேட்டோம். வாகனங்களை ஓட்டுகையில் மியூசிக் கேஸட்டுகளை கேட்பதால் அல்லது வண்டியில் அமர்ந்திருப்பவர்களுடன் பேசிக்கொண்டு வருவதால் உண்டாகும் ஆபத்துக்களைவிட, போதனா கேஸட்டுகளை கேட்பதால் ஆபத்து ஏற்படும் என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை. இருந்தாலும் வாகனங்களை கவனமாக ஓட்டுவதைப் பற்றிய தங்களுடைய நினைப்பூட்டுதலை நாங்கள் போற்றுகிறோம்.—ED.
இரத்தமில்லா சிகிச்சை “இரத்தமில்லா சிகிச்சை—அமோக வரவேற்பு” (ஜனவரி 8, 2000) என்ற தொடர் கட்டுரைக்கு நன்றி. இது யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக மக்கள் கொண்டிருக்கும் தப்பெண்ணங்கள் சிலவற்றை முறியடிக்க உதவியது. நான் அநேக பத்திரிகைகளை வாங்கி என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் நண்பர்களிடம் கொடுத்தேன். மதிய இடைவேளையில் என்னுடன் வேலை செய்யும் ஒருவர் அதை ஆர்வத்தோடு எடுத்து வாசிப்பதைப் பார்த்தேன். பின்பு அவர் சொன்னார்: “இவ்வளவு நல்ல கட்டுரைகள் அதிலிருக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை!”
ஐ. எஸ்., செக் குடியரசு
இன்டர்நெட் அபாயம் “இளைஞர் கேட்கின்றனர். . . . இன்டர்நெட் அபாயத்தை நான் எவ்வாறு தவிர்ப்பது?” (ஜனவரி 22, 2000) என்ற கட்டுரை, இன்டர்நெட்டின் அநேக பயன்களையும் பயங்கரமான ஆபத்துக்களையும் மிக நன்றாக விளக்கியது. நான் தினமும் ஆபீஸ் வேலைக்காக இன்டர்நெட்டை பயன்படுத்துவதால், இதன் ஆபத்தை உணருகிறேன். அந்தக் கொடிய வலையில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது அவசியம்.
ஜே. எல்., ஐக்கிய மாகாணங்கள்