Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறேன்?

நான் ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறேன்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

நான் ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறேன்?

ஜஸ்டின் ஆரோக்கியமாக இருந்தான், இருந்தாலும் தன் தோற்றத்தைக் குறித்து அவனுக்கு துளியும் திருப்தியில்லை; காரணம் அவன் ஒல்லியாக இருந்தான். “இன்னும் கொஞ்சம் சதை போட்டால் நல்லா இருக்கும், அதற்காக முயற்சி செய்கிறேன்” என்றான் அவன். அதற்காக அவன் ஒவ்வொரு நாளும் 4,000 கலோரி அளவுள்ள உணவை ஐந்து வேளை சாப்பிடுகிறான். அவனுடைய ஆசையெல்லாம் உடம்பை இன்னும் கொஞ்சம் சதை போட்டு கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்பதே. “நானும் என் ப்ரெண்டும் சில நாள் காலையிலே சீக்கிரமாக எழுந்து, பளு தூக்குவதற்காக ஜிம்முக்கு ஒன்றாக போகிறோம்” என்றும் சொல்கிறான்.

வனேஸாவுக்கும் ஒல்லியான தேகம். ஆனால் தன் எடையைக் குறித்ததில் அவளுக்குப் பரமதிருப்தி. “நான் சின்னவளாக இருக்கும்போது மற்ற பிள்ளைங்க என்னை பாத்து கொத்தவரங்கான்னு கூப்பிட்டு கேலி செய்வாங்க. ஆனா நான் அதைப் பத்தியெல்லாம் கவலைப்படல. இதுதான் என் உடல்வாகுன்னு திருப்தியோடு இருக்க கத்துக்கிட்டேன்” என வனேஸா கூறுகிறாள்.

‘இதுதான் உங்கள் உடல்வாகு என திருப்தியோடு இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.’ இந்தப் புத்திமதியைக் கேட்கையில் உங்களுக்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால் அதே புத்திமதியைப் பின்பற்றச் சொன்னால் உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். இளைஞராக நீங்கள் ‘மலரும் பருவத்தில்’ இருக்கலாம். (1 கொரிந்தியர் 7:36, NW) மளமளவென உடலில் மாற்றங்கள் நிகழும் காலமாகிய பூப்புப் பருவம் முக்கியமாக குழப்பம் நிறைந்த பருவம். இந்தப் பூப்புப் பருவத்தில் உங்கள் அங்கங்களின் வளர்ச்சி ஒன்றுக்கொன்று வேறுபடும்; உங்கள் கைகள், கால்கள், முக லட்சணங்கள் எல்லாமே சம்பந்தா சம்பந்தமில்லாமல் மாற்றமடைவதாக தோன்றும். a அவலட்சணமாக இருப்பதாக நினைக்க ஆரம்பிப்பீர்கள். எல்லா இளைஞர்களிலும் இந்த மாற்றம் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை என்பதும் உண்மை. எனவே உங்கள் சகதோழர்களில் சிலர் கட்டுக்கோப்பான தசைகளுடனோ அல்லது பெண்மைக்கே உரிய வடிவமைப்புடனோ இருக்கையில் அவர்களுடன் உங்களை ஒப்பிட்டால் நீங்கள் ஒடிசலாக இருப்பதாய் தோன்றலாம்.

குண்டாக இருப்பதாக நினைக்கும் இளைஞர்களைப் பற்றி ஓராயிரம் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன; ஆனால் படு ஒல்லியாக இருப்பதாக நினைக்கும் இளைஞர்களை யாரும் பொருட்படுத்துவதே இல்லை. சில இனத்தாரிடையேயும் ஒல்லியாக இருப்பதை அழகின் லட்சணம் என கருதாத சில நாடுகளிலேயும் இந்நிலை பொதுவாக நிலவுகிறது. இங்கு ஒல்லியான பெண்ணை “தொத்தல்” என கிண்டலாக அழைப்பது வேதனைக்குரிய விஷயம்.

இந்நிலையை இளம் காளையர்கள் எதிர்ப்படுகின்றனரா? “1980-களுக்கு முன்னான ஆண்டுகளில் பெண்கள் தங்கள் தோற்றத்தை எப்படி கருதினார்கள் என்பதைப் பற்றிய ஆய்வில், பெண்கள் கண்ணாடியில் தங்களைப் பார்க்கையில் கவனித்ததெல்லாம் குறைபாடுகளைத்தான்” என்கிறார் ஆய்வாளர் சூசன் போர்டோ. ஆண்கள் எதைப் பார்த்தார்கள்? “கண்ணாடியில் தங்களைப் பார்க்கையில் பரவாயில்லை அல்லது இன்னும் சொன்னால், எதிர்பார்ப்புக்கும் மிஞ்சி நன்றாகவே இருப்பதாக திருப்திப்பட்டனர்” என்றும் சொல்கிறார் போர்டோ. ஆனால் சமீப காலங்களில் அந்நிலை மாற ஆரம்பித்துவிட்டது. தங்கள் முகத்தின் குறைபாடுகளை மறைக்க அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களில் கால்வாசிக்கும் அதிகமானோர் ஆண்கள்தான் என்பது கவனிக்கப்பட்டிருக்கிறது; ஆண்மையின் ‘சர்வலட்சணங்களும்’ பொருந்திய சரீரத்தின்மீது தற்போது கட்டிளம் காளையருக்கு மோகம் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் காட்டப்படும் ஆண்கள் உள்ளாடைகளுக்கான விளம்பரங்களில் வரும் ஆண்களே. எனவே, இந்தத் தாக்கம் வாலிப பையன்களிடம் தலைதூக்குவது இயற்கையானதே. கட்டுடல் படைத்த தங்கள் அபிமான நட்சத்திரங்களைப் போல் தாங்கள் இல்லையே என்ற ஆதங்கம் அவர்களில் பொங்கி எழலாம்.

எனவே உங்களுக்கு ஒல்லியான தேகம் இருந்தால், ‘நான் ஏன் இப்படி இருக்கேன்?’ என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், அப்படியிருந்தாலும் உங்களிடம் எந்தக் குறையும் இல்லை என்பதுதான் நீங்கள் சந்தோஷப்பட வேண்டிய விஷயம்.

நீங்கள் ஒல்லியாக இருக்க காரணம்

அநேக இளைஞர்கள் ஒல்லியாக இருப்பது நார்மல்தான். ஏனென்றால் இது, வளரிளமைப் பருவத்தின் திடீர் வளர்ச்சியின்போது, உடலில் வேகமாக நிகழும் இரசாயன மாற்றங்களின் பக்க விளைவாக உள்ளது. நீங்கள் வளர வளர இந்த இரசாயன மாற்றம் மெல்ல மெல்ல நின்றுவிடும். போஷாக்கான உணவை சாப்பிடுகிற போதிலும் படு ஒல்லியாகவே இருக்கிறீர்களா? அப்படியானால், சர்க்கரை வியாதி போன்று உடம்பை உருக்கும் ஏதேனும் உடல்நல கோளாறு இருக்கிறதா என்பதை டாக்டரிடம் சோதித்தறிவது நல்லது.

சாப்பாட்டு பழக்கத்தால் ஏற்படும் நோய் (eating disorders) பற்றி ஆராயும் நிபுணர் ஸ்டீவன் லெவன்கிரோன் விழித்தெழு!-விடம் சொன்னதாவது: “பசியில்லா உளநோய் (anorexia) பிரச்சினையில் கஷ்டப்படுவதாக சொல்லி என்னிடம் ஒரு நோயாளியை அனுப்பி வைத்தது எனக்கு நினைவிருக்கிறது; அந்த பெண் எலும்பும் தோலுமாக இருந்தாள். அவளைப் பார்த்தால் பசியில்லா உளநோயால் கஷ்டப்படுவது போலத்தான் தோன்றியது. ஆனால், அவளுக்கு மனதில் வியாதியில்லை உடலில்தான் என்பதை நான் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டேன். க்ரான்ஸ் நோய் என்ற மோசமான குடல் நோயால் அவள் அவதிப்படுவதை அவளுடைய குடும்ப டாக்டர் கண்டுபிடிக்க தவறினார். அந்தக் கவனக்குறைவு அந்தப் பெண்ணின் உயிரையே குடித்திருக்கும்.” உங்களுக்கு சர்க்கரை வியாதியோ அல்லது உடலை துரும்பாக்கும் வேறு ஏதேனும் வியாதியோ இருந்தால் உங்கள் டாக்டரின் ஆலோசனையைக் கவனமாக பின்பற்றுவது மிகவும் நல்லது.

சிலசமயங்களில் உணர்ச்சிப்பூர்வமாக பாதிக்கப்படுவது உடல் மெலிதலுக்கு அறிகுறியாக இருக்கலாம் என்பது உண்மை. “இன்சூலின் ஏற்றிக்கொள்ளும் நிலையிலுள்ள சர்க்கரை வியாதியஸ்தர்கள், எக்கச்சக்கமாக சாப்பிடும் நோய் அல்லது பசியில்லா உளநோய் அல்லது பெரும்பசி நோயால் (bulimia)” அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என சில ஆராய்ச்சியாளர்கள் சொல்வதாக பசியில்லா உளநோய் பற்றிய பகுப்பாய்வு என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் டாக்டர் லெவன்கிரோன் குறிப்பிடுகிறார். எனவே சாப்பாட்டு பழக்கத்தால் ஏற்படும் நோய் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை சிறந்த டாக்டரிடம் பரிசோதித்து அறிய முடியும். b

பயன்தரும் ஆலோசனைகள்

நீங்கள் ஒல்லியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தபோதிலும் டாக்டரிடம் ஆலோசனை கேட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அடுத்து என்ன செய்வது? “சேறில்லாமல் நாணல் ஓங்கிவளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?” என யோபு 8:11-⁠ல் பைபிள் கேட்கிறது. சரியான சூழலும் போஷாக்கும் கிடைக்கையில் நாணல் செழிப்பாக வளரும்; அதைப்போலவே ஆரோக்கிய வளர்ச்சிக்கு உங்களுக்கு சமச்சீர் உணவு தேவை. நீங்கள் குண்டாக நினைத்தாலும்சரி ஒல்லியாக நினைத்தாலும்சரி இது மிக மிக முக்கியம்.

சீக்கிரத்தில் குண்டாவதற்கு ஆசைப்பட்டு, கொழுப்பு சத்துமிக்க உணவுகளை வாரி வாரி விழுங்க ஆரம்பித்துவிடாதீர்கள். கட்டுமஸ்தான தேகத்திற்காக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் பின்பற்றும் திட்ட உணவின் பேரில் ஆய்வு செய்யும் ஊட்டச்சத்து நிபுணர் சூசன் கிளைனர், நாளொன்றுக்கு சுமார் 6,000 கலோரிகள் உள்ள உணவை அவர்கள் சாப்பிடுவதை கவனித்தார்! ஆனால், கிளைனரின்படி “அந்த ஆய்வு வெளிப்படுத்திய கவலைக்குரிய விஷயம், அவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு 200 கிராமுக்கும் அதிக கொழுப்புமிக்க உணவை சாப்பிட்டனர். அது, 250 கிராம் மொத்த எடையுள்ள ஏறக்குறைய இரண்டு வெண்ணெய் கட்டிகளைச் சாப்பிட்டதற்கு சமம்! சீக்கிரத்தில் அநேகர் வியாதியில் விழ இது போதுமே. இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிகளவான கொழுப்பு சேர்ந்து இதய வியாதிக்கு அழைப்புவிடுக்கும்.”

ஐ.மா. விவசாய இலாகாவின்படி (USDA) சமச்சீர் உணவில், ரொட்டிகள், சீரியல்கள் (cereals), அரிசி, நூடுல்ஸ் வகை ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன. அடுத்து அவசியம் சாப்பிட வேண்டியவை காய்கறிகளும் பழங்களும். கறிவகைகளையும், பால்பண்ணைப் பொருட்களையும் மட்டாய் சாப்பிடும்படி USDA சிபாரிசு செய்கிறது.

என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை அறிய நீங்கள் சாப்பிடுகிறவற்றைக் குறித்து வைக்க விரும்பலாம். ஒரு வாரத்திற்கு டைரியை எடுத்துச் செல்லுங்கள்; நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எப்போது சாப்பிடுகிறீர்கள் என எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அதில் எழுதி வையுங்கள். அப்போது, நீங்கள் நினைத்துவந்த அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதில்லை என்ற உண்மையை அறிந்து உச்சிகுளிர்ந்து போய்விடுவீர்கள். அதுவும் நீங்கள் ஓடியாடி வேலை செய்யும் சுறுசுறுப்பான இளைஞர் என்றால் வெகு சுலபமாக நாளொன்றுக்கு 3,000 கலோரிகளையோ அதற்கு அதிகமாகவோ கரைத்துவிடுவீர்களே! அத்தோடு போதுமான பழங்களையும் காய்கறிகளையும் சமச்சீர் உணவையும் சாப்பிடாமல் பர்கர்ஸ், பிஸா போன்ற ஃபாஸ்ட்-ஃபுட் வகைகளையே அதிகம் சாப்பிட்டு வந்திருப்பதும் டைரியிலிருந்து தெரியவரும்.

அதிக செலவை உட்படுத்தும் அமினோ அமிலம், புரதத்திற்கு ஈடான சத்துப் பொருட்களை சேர்த்து சாப்பிட வேண்டுமா? அதற்கு அவசியமில்லை. சத்தான உணவை சாப்பிடுவதன் மூலம் தேவையான எல்லா ஊட்டச்சத்தையும் நீங்கள் பெறலாம் என்பது பல நிபுணர்களின் கணிப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக, பிரச்சினைகளைத் தீர்க்க, அனபாலிக் ஸ்டீராய்ட் போன்ற மருந்துகளை உபயோகிப்பதன் மூலம் குறுக்கு வழியில் செல்ல முயலாதீர்கள். ஸ்டீராய்டுகளைத் தவறான முறையில் உபயோகிப்பவர்கள் இளம் காளையர்கள் மட்டுமல்ல என்பது கவலை தரும் விஷயம். “[ஸ்டீராய்டுகளை] கன்னியர்கள் அதிகளவில் உபயோகிப்பது, பசியில்லா உளநோயிற்கு நேர்மாறான விளைவை ஏற்படுத்தும் என சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இது, 1980-களில் வாலிபப் பையன்கள் எந்தளவு உபயோகித்தார்களோ அந்தளவை எட்டியிருக்கிறது” என த நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. அமெரிக்காவில் 1,75,000 இளம் பெண்கள் அனபாலிக் ஸ்டீராய்டுகளை உபயோகிப்பதாக ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சி தரும் செய்தி. இந்த மருந்து பொருட்கள் ஏற்படுத்தும் ஏராளமான பக்க விளைவுகள் விபரீதமானவை. அந்தப் பட்டியலில் இடம் பெறுபவை: தேவையில்லாமல் முகத்தில் முடி வளருதல், ஒழுங்கற்ற மாதவிலக்குகள், பெண்களுக்கு மார்பக புற்றுநோய், ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய், பெண்களிலும் ஆண்களிலும் காணப்படும் அடைபட்ட இரத்தக்குழாய்களும் ஈரல் புற்றுநோயும். டாக்டரின் சிபாரிசின் பேரிலும் அவருடைய மேற்பார்வையின் பேரிலும் மட்டுமே இந்த ஸ்டீராய்டுகளை உபயோகிக்க வேண்டும்.

அடக்கமும் நியாயமும்

‘அடக்கத்துடன் தேவனோடு நடக்கும்படி’ பைபிள் நமக்குச் சொல்கிறது. (மீகா 6:8, NW) ஒருவர் தன்னுடைய வரையறைகளை அறிந்திருப்பதும் அடக்கத்தில் அடங்கும். உங்கள் தோற்றத்தைக் குறித்து நியாயமாக எடைபோட அடக்கம் உங்களுக்கு உதவும். பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவதில் தவறேதுமில்லை. ஆனால் எப்போதும் உங்கள் தோற்றத்தைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அதினால் யாருக்கு என்ன லாபம்? ஃபாஷன் இன்டஸ்ட்ரிகளுக்கும் டையட் இன்டஸ்ட்ரிகளுக்கும் வேண்டுமானால் ஒருவேளை லாபமாக இருக்கலாம். சராசரி ஆண்மகன் எவ்வளவு நன்றாக சாப்பிட்டாலும், எந்தளவுக்கு உடற்பயிற்சி செய்தாலும், பாரே புகழும் கட்டுமஸ்தான உடல்வாகை அவனிடம் எதிர்பார்க்க முடியாது என ஃபிட்நஸ் நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். நீங்கள் பெண்ணாக இருந்தால், எந்தளவுக்கு சாப்பிட்டாலும் கட்டழகு பெற முடியாது.

உடல் குறைபாடு என உங்கள் மனதை அரிக்கும் நினைப்பை போக்குவதற்கு உங்கள் உடைகளுக்கு சற்று கவனம் செலுத்தினாலே போதும் என்பதை அறிகையில் ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் உடலை ஒட்டிய இறுக்கமான ஆடைகளை அணிந்துகொள்ளாதீர்கள். அடர் நிற உடைகளை ஒல்லியானவர்கள் உடுத்தும்போது இன்னும் ஒடிசலாக காட்டும் என்பதால் சிலர் வெளிர் நிற உடைகளை உடுத்துகின்றனர்.

உங்கள் தோற்றம் எப்படி இருந்தாலும்சரி உங்கள் குணம் எப்படி என்பதுதான் அதிமுக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். காலப்போக்கில், முறுக்கான தசைகள் கொண்ட கட்டான உடலோ குறிப்பிட்ட வகை உடையோ அல்ல, இதழ்களில் தவழும் புன்முறுவலும், தயவுடன் நடந்துகொள்ளுதலும்தான் மற்றவர்களை உங்களிடம் காந்தம் போல் கவர்ந்திழுக்கும். கோலத்தைப் பார்த்து நண்பர்கள் உங்களை கேவலமாக நடத்துகிறார்கள் என்றால் உங்கள் குணத்தைப் பார்த்து மதிப்பவர்களிடம் பழகுங்கள்; அதையே பைபிள், ‘இருதயத்தில் மறைந்திருக்கிற குணம்’ என அழைக்கிறது. (1 பேதுரு 3:4, NW) எனவே, “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.​—⁠1 சாமுவேல் 16:⁠7.

[அடிக்குறிப்புகள்]

aஇளைஞர் கேட்கின்றனர் . . . ” பகுதியில் “என் வளர்ச்சி சாதாரணமானதா?” என்ற கட்டுரையை 1993, செப்டம்பர் 22 தேதியிட்ட ஆங்கில விழித்தெழு! இதழில் காண்க.

bஇளைஞர் கேட்கின்றனர் . . . ” பகுதியில் “குண்டாவதைப் பற்றியே ஏன் பயந்துசாகிறேன்?,” “குண்டாகிவிடும் பயத்தை நான் வெல்வது எப்படி?” ஆகிய கட்டுரைகளை முறையே 1999, ஏப்ரல் 22, மே 22 ஆகிய இதழ்களில் காணலாம்.

[பக்கம் 14-ன் படம்]

ஒல்லியாக இருப்பதாக சில இளைஞர்கள் குறைபட்டுக்கொள்கின்றனர்