Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பத்திரமான விமானப் பயணத்திற்கு

பத்திரமான விமானப் பயணத்திற்கு

பத்திரமான விமானப் பயணத்திற்கு

அந்த கேப்டன் கவனமாக விமானத்தை இயக்க ஆரம்பித்தார். தரை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கிளம்புவதற்கு அனுமதி கிடைத்த விபரத்தை ஃபர்ஸ்ட் ஆபீஸர் கேப்டனிடம் அறிவித்தார். நான் காக்பிட் என்றழைக்கப்படும் பைலட்டுகளின் அறையில் இருக்கிறேன்; நடப்பதை பார்க்கும் ஆவலில் இதயம் படபடக்க பைலட்டுகளுக்கு பின் இருக்கையில் பயத்துடன் அமர்ந்திருக்கிறேன். ஜெட் என்ஜின்களின் கர்ஜனை காக்பிட்டிற்குள்ளும் ஓரளவிற்கு கேட்கிறது. போயிங் 747 விமானம் ரன்வேயில் ஓடுகிறது. இப்போது பைலட் விமானத்தின் வேகத்தை கூட்டுகிறார். என் உடல் சீட்டோடு அழுத்தப்படுகிறது. எங்கள் விமானம் நியூ டோக்கியோ இன்டர்நேஷனல் விமான நிலையத்தின் 34-வது ரன்வேயை விட்டு வானில் மிதந்தது.

ஆகாயத்தில் ஆபத்து!

பறக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் ‘டமால்’ என்ற சத்தத்தோடு ஏரோப்பிளேன் பயங்கரமாக குலுங்கியது. அதற்குள் காக்பிட்டில் அவசர மணி ஒருபக்கம் ஓலமிட, சிவப்பு, ஆரஞ்சு விளக்குகள் மாறி மாறி சமிக்கை செய்து அபாயத்தை வார்த்தையின்றி விளக்கின. திடீரென்று வந்த சமிக்கைகளை கவனித்தவுடன் நிலைமை ‘கவலைக்கிடம்’ என்பதை புரிந்துகொண்ட ஃபர்ஸ்ட் ஆபீஸர் அந்த நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முனைந்தார்.

“என்ஜின் எண் மூன்று தீப்பற்றிக் கொண்டது!” என்று கேப்டன் அலறினார். காக்பிட்டில் ஓலமிட்ட அவசர மணியை அடக்குவதற்காக அருகில் இருந்த ஒரு பட்டனை அழுத்தினார். “என்ஜின் எண் மூன்றில் சுழற்சி இல்லை, ஆயில் பிரஷர் இல்லை, கட்டுப்படுத்தும் ஹைடிராலிக்கும் இயங்கவில்லை” என்று ஃபர்ஸ்ட் ஆபீஸர் அந்த கொடுமையான நிலைமையை விவரித்தார். “என்ஜின் எண் மூன்றின் வேகத்தைக் குறை, என்ஜின் மூன்றுக்கு செல்லும் எண்ணெய் சப்ளையை துண்டித்துவிடு, என்ஜின் எண் மூன்றை நிறுத்து.” என்று கட்டளைகள் பறக்க அதை மற்றொரு பைலட் செவ்வனே நிறைவேற்றினார். கட்டளைகள் சரிவர நிறைவேற்றப்பட்டனவா என்பதை இன்னொரு பைலட் உறுதி செய்தார். நன்றாக பயிற்சி செய்த நடனக் கலைஞர்களைப் போல் அவர்களுடைய அசைவுகள் ஒத்திசைந்திருந்தன. நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவர்கள் ஒன்றாக சேர்ந்து போராடினர். அந்த சூழ்நிலைமையிலும் அவர்கள் நிதானமாக செயல்பட்டதைப் பார்த்து நான் அசந்துவிட்டேன்.

அடுத்ததாக ஃபர்ஸ்ட் ஆபீஸர் தரைக் கட்டுபாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டு அவசரமாக விமானத்தை தரை இறக்குவதற்கு அனுமதி கேட்கிறார். விமானம் தரையிறங்கும்போது அவசர நிலையை சமாளிப்பதற்கு எல்லாவிதமான கருவிகளோடும் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார். பிறகு விமான சிப்பந்திகளிடம், அவசரமாக தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது, எனவே பயணிகளிடம் இதை அறிவித்து அவர்கள் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறுமாறு சொல்கிறார்.

அவசரமாக விமானத்தை தரையிறக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியலை ஒவ்வொன்றாக அவர்கள் சரிபார்த்தபோது நான் வியர்வை மழையில் குளித்துவிட்டேன். பயத்தால் என் இருக்கையை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்! விமானம் நல்லவிதமாக தரை இறங்க போன உயிர் திரும்பிவந்தது. இவ்வளவு பயந்து நடுங்கியது எவ்வளவு முட்டாள்தனம் என்று மனதில் திட்டிக்கொண்டேன். ஏனெனில் இதுவரை விவரித்த எதுவுமே உண்மையில் நடக்கவில்லை. நான் ஜப்பானுக்கும் போகவில்லை விமானத்திலும் பறக்கவில்லை. நான் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் கொலொரொடோ மாநிலத்தில் டென்வர் நகரில்தான் இருந்தேன். இங்கு ஒரு நவீன சிமுலேட்டருக்குள் (படம் மேலே காட்டப்பட்டிருக்கிறது) உட்கார்ந்திருந்தேன். இது யுனைட்டட் ஏர்லைன்ஸ் பிளைட் சென்டரில் உள்ளது. அந்த விமானிகள் இந்த சிமுலேட்டருக்குள் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். எனக்கு இது ஒரு உற்சாகமிக்க அனுபவம், ஏனெனில் சிமுலேட்டரில் இருப்பதைப்போல ஒரு கம்ப்யூட்டரின் திரையில் அமைத்துக்கொடுப்பதே என்னுடைய வேலை.

போலியும் உயிர் பாதுகாப்பிற்கே

உலகமெங்கும், ஒவ்வொரு நாளும் இது போன்ற நாடகங்கள் நூற்றுக்கணக்கில் சிமுலேட்டர்களுக்குள் அரங்கேறுகின்றன. ஏன்? விமானிகளுடைய பயிற்சிக்காகவும் பயணிகள் அதாவது உங்களுடைய பாதுகாப்பிற்காகவும்தான். கேள்வி என்னவென்றால் இப்படிப்பட்ட பயிற்சிகள் ஏன் சிமுலேட்டரில் செய்யப்படுகின்றன? ஏன் உண்மையான விமானத்தில் செய்யக்கூடாது? இதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. அவற்றை ஆராயும் முன் ‘விமான’ சிமுலேட்டர் தோன்றிய கதையை கவனிக்கலாம்.

முதல் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தின்போது தகுதிவாய்ந்த விமானிகள் அநேகர் தேவைப்பட்டனர்; எனவே இவர்களுக்கு உதவி செய்வதற்காக அடிப்படை அம்சங்களைக்கொண்ட சிமுலேட்டர்கள் உள்ள பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டன. 1960-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சிமுலேட்டர் உலகில் மகத்தான முன்னேற்றம் ஏற்பட்டது. முன்னேற்றம் என்று சொல்வதைவிட ‘பாய்ச்சல்’ என்றே சொல்லலாம், ஏனெனில் இந்த சமயத்தில்தான் சிமுலேட்டர்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டன. ஒரு விமானத்தில் இருக்கும் சாமான்களின் எடை, அதில் இருக்கும் எரிபொருளின் எடை இவற்றிற்கு இசைய ஒரு விமானம் எவ்வாறு பயணிக்கும் என்பது போன்ற துல்லியமான விவரங்களும் சிமுலேட்டரில் இடம் பெற ஆரம்பித்தன. இப்படிப்பட்ட விஷயங்கள் ஒரு விமானத்தின் பத்திரமான பயணத்திற்கு அத்தியாவசியமானவை. இதைப்போலவே விமானம் பயணிக்கும்போது அதன் எரிபொருள் எரிந்து அதன் எடை குறையும்; அப்போது விமானத்தின் பறக்கும் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட மாற்றங்களையும் சிமுலேட்டரில் கொண்டுவருவதற்கு எலக்ட்ரானிக் துறையிலும் கம்ப்யூட்டர் துறையிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் உதவி செய்தன.

உண்மையான விமானத்தில் அசைவுகள் எவ்வாறு இருக்குமோ அதைப்போலவே சிமுலேட்டருக்குள்ளும் இருக்குமாறு அமைப்பதே அவர்களுடைய பிரதான இலக்கு. இதற்காக நவீன சிமுலேட்டர்களின் அடிபாகத்தில் ஹைடிராலிக் அடித்தளங்களை கொடுத்திருக்கிறார்கள். இவை மேலும் கீழுமாக ஆறு டிகிரி அசைய முடியும். இவற்றை ஹைடிராலிக் பம்புகள் கட்டுப்படுத்துகின்றன, இவற்றால் ஏற்படும் அசைவுகளை விமானிகளால் உணர முடியும்; இந்த அசைவுகளால் விமானிகள் மீது கணநேரத்திற்கு ஏற்படும் சராசரி அழுத்தம் +1 முதல் –1 g வரை இருக்கும். a

விமானிகள் சிமுலேட்டரை இயக்கும்போது, ஒரு விமானத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுமோ அத்தனை மாற்றங்களையும் அவர்களால் சிமுலேட்டருக்குள்ளும் உடனேயே உணர முடியும். வேகம் குறைவது, கூடுவது, விமானத்தின் சுழற்சி, மேலும் கீழுமாக செல்வது, ரன்வேயில் இறங்குவது, பாதை கரடு முரடாக இருப்பது, வானிலை மாற்றங்கள் ஆகியவற்றை விமானியின் காதுகள் மட்டும் உணருவதில்லை; அவருடைய முழு உடலும் உணருகின்றது.

கம்ப்யூட்டரை உபயோகித்து காட்சிகளை உருவாக்கும் முறையில் அநேக முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எனவே, உலகில் உள்ள முக்கிய விமான நிலையங்களையும் அவற்றைச் சுற்றி உள்ள சூழ்நிலைகளையும் காட்சியாக உருவாக்கினர். இவை பார்ப்பதற்கு தத்ரூபமாக இருக்கும்; இவற்றை, ஓடும் திரைக்காட்சிகளாக சிமுலேட்டர் காக்பிட்டின் முன்பாக இருக்கும் திரைகளில் ஓடவிடுகின்றனர். இந்தக் காட்சிகள், 180 டிகிரி அகலமும் 40 டிகிரி உயரமும் கொண்ட திரையில் காட்டப்படுகின்றன. பனி, மழை, மின்னல், ஆலங்கட்டி மழை, மூடுபனி போன்ற சூழ்நிலைகளில் இருப்பதைப்போல் காட்சிகள் இருக்கும். எனவே, சிமுலேட்டரில் இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் இடம் பெறுவதால் விமானிகளால் எப்படிப்பட்ட சீதோஷண நிலையிலும் இரவானாலும், பகலானாலும், மாலைப் பொழுதாக இருந்தாலும் “பறந்து” பழக முடியும்.

சிமுலேட்டருக்குள் ஒரு நோட்டம்

நான் பார்த்த சிமுலேட்டர், ஜன்னல் இல்லாத ஒரு பெரிய வெள்ளை நிற பெட்டி போல காட்சியளித்தது; அது நகரும் வண்ணம் ஒரு பெரிய அசையும் பிளாட்ஃபாரத்தின் மீது அமைக்கப்பட்டிருந்தது. அந்த சிமுலேட்டரை சென்றெட்டுவதற்கு ஆறு மீட்டர் உலோகப் பாலத்தை கடந்து செல்ல வேண்டும். அது பார்ப்பதற்கு சந்திரனில் இறங்கும் விண்கலம்போல அல்லது ஒரு ராட்சத சிலந்தியைப்போல காட்சியளித்தது.

நீங்கள் சிமுலேட்டருக்குள் அடியெடுத்து வைத்த பிறகு, ஏதோ உண்மையான விமானத்தின் காக்பிட்டிற்குள் இருக்கும் உணர்வே ஏற்படுகிறது. அங்கே இருக்கும் அநேக இயந்திர மானிகள், சமிக்கை விளக்குகள், அளவு மானிகள், விளக்கு சுவிட்சுகள், விசைக்கருவிகள் போன்றவை ஒரு விமானத்திற்குள் எப்படியிருக்குமோ அவ்வாறே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. டெர்ரி பேன்செப்ட் என்பவர்தான் எங்களை சுற்றிக்காட்டினார்; அவர் இந்த சிமுலேட்டரில் பணிபுரியும் டெக்னிஷியன். இதில் இருக்கும் அநேக இயந்திர பாகங்கள் உண்மையான விமானத்தில் இருப்பவையே என்பதாக எங்களிடம் தெரிவித்தார்.

விமானங்களில் அநேக மாடல்கள் இருக்கின்றன, ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்றவாறு இந்த சிமுலேட்டர் கருவிகள் துல்லியமாக தயாரிக்கப்படுவதாக டெர்ரி விவரித்தார். சிமுலேட்டர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை விமானங்களை இயக்குபவர்கள் அறிந்து கொண்டனர். அதோடு இவை நல்ல விதமாக விமானத்தை இயக்குவதற்கு பயிற்சியளிக்கின்றன என்பதையும் புரிந்துகொண்டனர். எவ்வாறு விமானத்தை இயக்குவது என்பதை மட்டுமல்ல, ஆபத்து ஏற்படும்போது அவசர கால நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்பதையும் சிமுலேட்டரில் கற்றுத்தருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட தரம் வாய்ந்த சிமுலேட்டரில் விமானிகள் பயிற்சி எடுத்திருந்தால் அந்த நேரத்தை உண்மையான விமானத்தில் பறந்த நேரத்தோடு கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் விமானிகளுக்கு சிமுலேட்டரில் மட்டுமே பயிற்சி கொடுக்க முடியும்.

சிமுலேட்டரின் அவசியம் என்ன?

சிமுலேட்டர்கள் அநேக நடைமுறை உபயோகத்திற்கு பிரயோஜனமானவை. உண்மையான விமானத்திற்கு பதில் இதில் பயிற்சி எடுக்கும்போது எரிபொருளும் எண்ணெயும் சேமிக்கப்படுகிறது. இதில் பயிற்சி எடுப்பதால் விமான நிலையங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடிகிறது. இதனால் சப்தத்தால் வரும் தூய்மைக்கேடு, காற்றின் தூய்மைக்கேடு, பயிற்சிக்காகும் செலவு, விமானத்தை இயக்கும் செலவு ஆகியவை தவிர்க்கப்படுகின்றன. இந்த சிமுலேட்டரில் பறக்கும்போது தரையில் “மோதினாலும்” எந்தவித இழப்பும் இல்லை, யாருக்கும் காயமும் ஏற்படுவதில்லை.

“விமானத்தில் பயிற்சி எடுக்கும்போது ஏற்படும் அநேக விபத்துக்களை சிமுலேட்டரில் பயிற்சி எடுப்பதன் மூலம் தவிர்க்கலாம். அவசர நிலை ஏற்படும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கும் பயிற்சியளிக்கப்படுகிறது. ஒருவேளை என்ஜினில் தீப்பற்றிக்கொண்டால், தரையிறங்கும்போது சக்கரங்கள் வெளியே வரவில்லை என்றால், டயர் வெடித்துவிட்டால், முன்னால் நகருவதற்கான தள்ளுவிசை இயங்கவில்லை என்றால், புயலடிக்கும் சூழ்நிலை என்றால், பயங்கரமான காற்று என்றால், பனிமழை பொழிகிறது என்றால், எதுவும் தெளிவாக தெரியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பயிற்சியளிக்கப்படுகின்றன” என்று டெர்ரி குறிப்பிட்டார். இதோடு சேர்த்து விமானக் கருவிகளை எவ்வாறு இயக்குவது என்பதற்கும் மிக அருமையான பயிற்சியளிக்க முடியும்; இந்தப் பயிற்சியில் கருவிகள் சரியாக இயங்காதபோது அல்லது நின்றுவிடும்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் விமானத்திற்கோ அல்லது மனித உயிருக்கோ எந்தவித ஆபத்தும் ஏற்படுவதில்லை.

இதைப்பற்றி, அனுபவம் வாய்ந்த விமானி ஜே. டி. ஒயிட்லாட்ச் பின்வருமாறு சொல்கிறார்: “கிட்டத்தட்ட 60 லட்சம் நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் சிமுலேட்டரில் காட்ட முடியும். உண்மையான விமானத்தில், விமானிகளை அத்தனை வித்தியாசமான முறைகளில் பயிற்சி அளிப்பதற்கு வாய்ப்பே கிடையாது.”

அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் இப்படிப்பட்ட சிமுலேட்டர்களை ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) என்ற நிறுவனத்தை சேர்ந்த விமானிகளும் நிபுணர்களும் சோதனை செய்கின்றனர்; ஜாக்கிரதையாக சோதித்த பிறகு நல்ல நிலையில் இருக்கிறதா என்பதற்கு சான்றிதழ் வழங்குகின்றனர். ஒவ்வொரு நாளும் சிமுலேட்டரில் பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன் சிமுலேட்டர் டெக்னிஷியன்கள் அதை செப்பனிட்டு, சோதித்து, அதில் “பறந்து” பார்க்கின்றனர்; இந்த சிமுலேட்டர்கள் உண்மையான விமானத்தை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு வேலைகளும் செய்யப்படுகின்றன. உண்மையான விமானங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டால் அதே மாற்றங்கள் சிமுலேட்டரிலும் செய்யப்பட வேண்டும். சிமுலேட்டர் துல்லியமாக இருக்கிறதா என்பதை சோதிப்பதற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை FAA-ஐச் சேர்ந்த நிபுணர்கள் இந்த சிமுலேட்டரில் “பறந்து” பார்க்கின்றனர்.

நடந்த விபத்துகளிலிருந்து கற்ற பாடம்

விபத்தில் சிக்கிய விமானத்தின் இயக்கத்தைப் பதிவு செய்யும் கருவியில் இருந்தும், காக்பிட்டில் விமானிகள் பேசியதை பதிவு செய்த கருவிகளை வைத்தும் பொறியாளர்கள் விபத்திற்கு முன் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள முடியும். அந்தத் தகவலை வைத்து அதே போன்ற நிலைமையை வடிவமைத்து சிமுலேட்டரில் பதிவு செய்வார்கள். எனவே உண்மையான விமானத்தில் என்ன பிரச்சினை ஏற்பட்டது, எது இயங்காமல் போனது போன்ற விவரங்கள் இப்போது சிமுலேட்டரின் வசம். இப்படிப்பட்ட தகவல்களையும் அவற்றை சிமுலேட்டரில் இயக்கும்போது கிடைக்கும் முடிவுகளையும் வைத்து விபத்து நடந்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பதை பற்றிய தெளிவான முடிவிற்கு வரமுடியும். இதோடுகூட இப்படிப்பட்ட தகவல்கள் இப்போது சிமுலேட்டரில் இருப்பதால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்கால விமானிகளுக்கு பயிற்சியும் அளிக்க முடியும். இந்த தகவல்களை விமானத்தை தயாரிக்கும் நிறுவனங்களும், உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் உபயோகிக்கின்றன; எதிர்காலத்தில் நல்ல விமானங்களையும் அருமையான பாகங்களையும் தயாரிப்பதற்காக இவர்கள் இவற்றை உபயோகிக்கின்றனர்.

விமானி செய்த தவறால் ஒரு விபத்து ஏற்பட்டது என்பதாகவோ அல்லது கிட்டத்தட்ட விபத்து ஏற்பட்டிருக்கும் என்பதாகவோ தெரியவந்தால் எதிர்காலத்தில் அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கு பயிற்சி அளிக்க முடியும். அனுபவம் வாய்ந்த விமானி லூ கோசிக் இவ்வாறு சொல்கிறார்: “சிமுலேட்டரில் காட்டப்படும் சூழ்நிலைகள் கற்பனை அல்ல. இவை ஏதோ ஒரு இடத்தில் உண்மையில் நிகழ்ந்தவை.” விமானிகள் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நல்ல முறையில் பிரதிபலிப்பதற்காகவும், அவர்களுடைய பயிற்சிகளை மேம்படுத்துவதற்காகவும், இதனால் பொது மக்கள் ஆபத்தின்றி பயணிப்பதற்கும் விமான போக்குவரத்து நிபுணர்கள் அதிக முயற்சி செய்கின்றனர். இதற்காக உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளை நன்கு ஆராய்ந்து அவற்றை சிமுலேட்டரில் கொண்டுவந்து அதற்கு விமானிகள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதை ஆராய்ச்சி செய்கின்றனர்.

இப்போது நான்தான் விமானி. “போயிங் 747” ஏரோப்பிளேனை “சார்லஸ் டே கல்லி விமான நிலையத்தில்” தரையிறக்குவதற்காக முயற்சி செய்கிறேன்; டெர்ரிதான் என்னோடு பயணிக்கும் உதவி விமானி, அவர் என் செயல்களை கூர்ந்து கவனிக்கிறார். விமானம் தரையிறங்கப்போகிறது, ரன்வேயில் சக்கரங்களின் கிறீச்சிடும் ஒலியை எதிர்பார்த்தேன். அந்தோ! நடந்ததே வேறு கதை. நான் சரியாக இயக்காததால் சிமுலேட்டர் திரையில் ஒன்றையும் பார்க்க முடியவில்லை! நான் அந்த பெரிய விமானத்தை அருகில் இருந்த டவரில் மோதிவிட்டேன்!

நல்லவேளை! உண்மையான விமானத்தை இயக்கும் விமானிகள் எல்லாரும் நிபுணர்களே. அவர்கள் நல்ல வேளையாக சிமுலேட்டரில் பயிற்சி பெற்றிருக்கின்றனர். நன்றாக பயிற்சி பெற்ற விமானிகள்தான் உங்களையும் உங்களோடு பயணிப்பவர்களையும் பத்திரமாக எடுத்து செல்கின்றனர் என்பதை அடுத்த முறை விமானத்தில் பயணிக்கும்போது ஞாபகத்தில் வையுங்கள்.​—⁠அளிக்கப்பட்டது.

[அடிக்குறிப்பு]

a எந்த ஊர்தியில் சென்றாலும் அதில் பயணம் செய்பவர் மீது ஏற்படும் வேகத்தின் அழுத்தத்தை அளவிடுவதற்கு g என்ற சின்னம் பயன்படுத்தப்படுகிறது. பூமியின் புவியீர்ப்பு காரணமாக ஏற்படுத்தும் வேகத்தின் அழுத்தம் 1 g ஆகும். ஒரு விமானம் தலைகீழாக டைவ் அடிக்கும் நிலையில் இருந்து அதை சாதாரண நிலைக்கு ஒரு பைலட் கொண்டுவரும்போது தன் மீது அதிக அழுத்தம் ஏற்படுவதையும் தான் இருக்கைக்குள் தள்ளப்படுவதையும் அவர் உணருவார். இந்த அழுத்தம் புவியீர்ப்பு அழுத்தத்தைப் போல இரண்டு மடங்கு இருந்தால் அது 2 g என்பதாக நிர்மாணிக்கப்படுகிறது.

[பக்கம் 26-ன் படங்கள்]

சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து சிமுலேட்டரில் வானில் பறப்பது

இரவில் நியூயார்க் நகருக்கு மேல் சிமுலேட்டரில் பறப்பது

[பக்கம் 26-ன் படம்]

கொலோராடோ, டென்வரில் விமான சிமுலேட்டர்