Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆரோக்கியத்திற்கு அருமையான வழியா?

ஆரோக்கியத்திற்கு அருமையான வழியா?

ஆரோக்கியத்திற்கு அருமையான வழியா?

ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாத ஆளே இல்லை. உலகில் எத்தனை வைத்தியர்கள் இருக்கிறார்களோ அத்தனை வித வைத்திய முறைகளும் இருக்குமோ என்று நினைக்கத் தோன்றும். விஞ்ஞான அடிப்படையிலான ஆங்கில மருத்துவம் அல்லாத மற்ற மருத்துவங்கள் பொதுவாக மாற்று மருத்துவம் என்று அழைக்கப்படுகின்றன. இன்று, மாற்று மருத்துவம் அதிகரித்திருப்பதை வாசகரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது இம்மாத விழித்தெழு! ஆனால் எந்தவொரு மருத்துவத்தையும் விழித்தெழு! ஆதரிப்பதில்லை. இவ்விதழில் வெளிவந்துள்ள மருத்துவ சிகிச்சைகளை நாங்கள் சிபாரிசு செய்யவில்லை. அதேபோல் இக்கட்டுரை குறிப்பிடாத பல மருத்துவ முறைகளும் உள்ளன. இவற்றில் சில பிரபலமாக உள்ளன, சில சர்ச்சைக்குள்ளாகி உள்ளன. ஆரோக்கியத்தை பற்றி தெரிவிப்பது அனைவருக்கும் பலனளிக்கும் என்ற நல்லெண்ணத்தோடு இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறோம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, எந்த வைத்தியத்தை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆரோக்கிய வாழ்வே நம் அனைவரது விருப்பம். ஆனால் அநேக மக்கள் நோயால் அவதிப்படுவதைப் பார்த்தால் ஆரோக்கியம் நம்மை அண்டிவர அஞ்சுவதைப்போல் தெரிகிறது. முன்பெல்லாம் மக்கள் இவ்வளவு அதிகமாக நோயுறவில்லை என்று சிலர் நினைக்கிறார்கள்.

டாக்டர்கள் பலர் மருந்து கம்பெனிகள் பெருமளவில் விளம்பரம் செய்யும் மருந்துகளையே சிபாரிசு செய்கிறார்கள். அதனால் உலக சந்தையில் மருந்து வியாபாரம் சக்கைப்போடு போடுகிறது. வருஷத்திற்கு சில கோடி டாலர்களே புரண்ட மருந்து கம்பெனிகளில் இன்று பல கோடிக்கணக்கில் டாலர்கள் புரள்கின்றன! இதன் விளைவு?

ஆங்கில மருந்துகள் மக்களுக்கு நன்மைகள் பல செய்துள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால், சில ஆங்கில மருந்துகளால் நோய் தீராமல், இன்னும் மோசமாவதும் உண்டு. ஆகவேதான் இன்று, சிலர் ஆங்கில மருத்துவத்திற்கு பதில் மாற்று மருத்துவத்தை நாடுகிறார்கள்.

மக்கள் நாடுகிற மருத்துவம்

நவீன ஆங்கில மருத்துவம் கொடிகட்டி பறக்கிற இடங்களில்கூட இப்போது மாற்று மருத்துவத்தையே பலர் நாடுகிறார்கள். மாற்று மருத்துவத்திற்கு, ஈடுசெய்யும் மருத்துவம், நோய் நிவாரணி போன்ற பெயர்களும் உண்டு. “ஆங்கில மருத்துவத்தையும் பண்டைய மாற்று மருத்துவத்தையும் பிரித்திருந்த பெர்லின் சுவர் இன்று உடைந்து கொண்டிருக்கிறது” என்றது கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் (மே, 2000) என்ற பத்திரிகை.

ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் (JAMA) நவம்பர் 11, 1998 இதழ் இவ்வாறு கூறியது: “மருத்துவ கல்லூரிகளில் சாதாரணமாக கற்றுத்தராத அல்லது பொதுவாக அமெரிக்க மருத்துவமனைகளில் கிடைக்காத வைத்திய முறையே மாற்று மருத்துவம். இன்று மீடியாக்களாலும், மருத்துவ உலகத்தாலும், அரசாங்க ஏஜென்ஸிகளாலும், பொது மக்களாலும் மாற்று மருத்துவம் பிரபலமடைந்து வருகிறது.”

இன்று மாற்று மருத்துவத்திற்கு மவுசு கூடிவிட்டதை 1997-⁠ல் ஜர்னல் ஆஃப் மேனேஜ்டு கேர் ஃபார்மஸி இவ்வாறு கூறியது: “முன்பெல்லாம், மாற்று மருத்துவத்தை ஆங்கில மருத்துவம் சந்தேகக் கண்ணோடு பார்த்தது. ஆனால் இப்போதெல்லாம் அமெரிக்காவில் 27 [தற்போது 75-⁠க்கும் மேல்] மருத்துவ கல்லூரிகளில் மாற்று மருத்துவத்தைப் பற்றி சொல்லித் தருகிறார்கள். இந்த 27-⁠ல் ஹார்வர்டு, ஸ்டான்ஃபோர்டு, அரிஜோனா, ஏல் போன்ற பல்கலைக்கழகங்களும் அடங்கும்.”

நலம்பெற வேண்டும் என்ற ஆதங்கத்தில் நோயாளிகள் பலர் மாற்று மருத்துவத்தை நாடுவதாக JAMA கூறுகிறது. அதன் அறிக்கை: “1990-⁠ல் ஐந்து பேரில் ஒருவர் (19.9%) ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுக்கும்போதே, மாற்று மருத்துவ சிகிச்சையையும் எடுத்துக்கொண்டார். ஆனால் 1997-⁠ல் அந்த எண்ணிக்கை மூன்று பேரில் ஒருவர் (31.8%) என்று அதிகரித்துள்ளது. அமெரிக்கா நீங்கலாக, தொழில்மயமான உலக நாடுகளில் நடத்தப்பட்ட சுற்றாய்வில், அந்நாடுகளிலும் மாற்று மருத்துவம் பிரபலமாக உள்ள உண்மை தெரிய வந்தது.”

கடந்த 12 மாதங்களில் மாற்று மருத்துவம் எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை கனடாவில் 15 சதவிகிதம், பின்லாந்தில் 33 சதவிகிதம், ஆஸ்திரேலியாவில் 49 சதவிகிதம் என்று JAMA அறிவிக்கிறது. “மாற்று மருத்துவத்திற்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்” என்கிறது அது. மாற்று மருத்துவம் பெரும்பாலும் இன்ஷுரன்ஸில் சேர்க்கப்படுவதில்லை. இன்ஷுரன்ஸ் வசதியில்லாமலே இத்தனை பேர் இம்மருத்துவத்தை நாடுகிறார்கள் என்றால் ஆச்சரியம் தருகிற விஷயமே. ஆகவே, “எதிர்காலத்தில் மாற்று மருத்துவம் இன்ஷுரன்ஸில் சேர்க்கப்படால், அதை உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்கிறது JAMA.

சில நாடுகளில் ஆங்கில மருத்துவத்தோடு மாற்று மருத்துவத்தையும் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார்கள். முக்கிய மாற்று மருத்துவங்கள் “பல இடங்களில் பொது மருத்துவமாக ஆகிவிட்டன. இனி நன்மை தரும் மருத்துவம் தீங்கு விளைவிக்கும் மருத்துவம் என்ற பிரிவுகள் இருக்க முடியுமே தவிர, பழங்காலத்து [ஆங்கில] மருத்துவம், மாற்று மருத்துவம் என்ற பிரிவுகள் இருக்க முடியாது” என்று கூறினார் ராயல் லண்டன் ஹோமியோபதி மருத்துவமனையின் டாக்டர் பீட்டர் பிஷ்ஷர்.

ஆகவே, ஆங்கில மருத்துவத்தின் நன்மைகளையும், மாற்று மருத்துவத்தின் மகத்துவங்களையும் இன்றைய மருத்துவர்கள் மனமார ஏற்றுக்கொண்டுள்ளனர். நோயாளிகள் ஒரேவகையான மருத்துவத்தையே பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்திய காலம் மலையேறி விட்டது. இன்று அவர்களே நோயாளிகளுக்கு எந்தெந்த மருத்துவங்கள் நன்மை தருமோ அவற்றை எல்லாம் இணைத்து வைத்தியம் பார்த்துக்கொள்ளும்படி பரிந்துரை செய்கிறார்கள்.

ஈடுசெய்யும் மருத்துவம், நோய் நிவாரணி என்ற பல பெயர்களோடு திகழும் மாற்று மருத்துவத்தின் சில வகைகள் யாவை? அவை எப்போது, எங்கே தோன்றின? ஏன் நிறையப்பேர் அவற்றை நாடுகிறார்கள்?