Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

புத்துயிரூட்டும் கோழித்தூக்கம்

மதிய வேளையில் தூக்கம் சொக்கும் சமயத்தில் சிலருக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால் இது உண்மையில் தூக்கத்தை கலைத்துவிடுவதில்லை என்கிறது த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை. “காபி குடித்தபின் மந்த நிலையே ஏற்படுகிறது. . . . இவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்னும் ‘தூக்க வங்கிக் கணக்கில்’ ஏற்படும் குறைவை, எந்த செயற்கை முறையாலும் ஈடுகட்ட முடியாது” என்கிறார் கோர்நெல் பல்கலைக்கழகத்தின் தூக்க மருத்துவர் டாக்டர் ஜேம்ஸ் மாஸ். காபி அருந்துவதற்கு நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக குட்டித் தூக்கம் போடும்படி மாஸ் பரிந்துரை செய்கிறார். அவ்வாறு செய்வது, “வேலையில் முழு கவனம் செலுத்தவும், முக்கியமான முடிவுகளை சரியாக எடுக்கவும் பெரிதும் உதவுகிறது” என்றும் அவர் சொல்கிறார். மதிய வேளையில் போடும் இந்த கோழித்தூக்கம் 30 நிமிடத்திற்கு குறைவாக இருந்தாலும், ஒருவரை மீண்டும் புத்துணர்வூட்டக்கூடும். அவர் தூங்கிய பிறகு எழுந்திருப்பது கஷ்டமாக இருக்காது, இரவு தூக்கத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது என்கிறது டைம்ஸ். “குட்டித் தூக்கம் போடுவதை மோசமாக நினைக்கக்கூடாது, தினமும் செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்றாக இதை கருதவேண்டும்” என்கிறார் மாஸ்.

சினிமா Vs சர்ச்

“காலங்காலமாக சென்றுவரும் சர்ச்சுகளைவிட, டர்மினேட்டர் 2, டைட்டானிக், ஸ்டார் வார்ஸ் போன்ற ஆங்கில படங்கள், மதத்தோடு சம்பந்தப்பட்ட ஆழமான உணர்வுகளை அளித்திருப்பதாக பருவ வயது பிள்ளைகள் கருதுகின்றனர்” என அறிவிக்கிறது தி இன்டிப்பென்டன்ட் என்ற லண்டன் செய்தித்தாள். கொலராடோ பல்கலைக்கழகத்தின் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர் லின் க்ளார்க் ஒரு ஆய்வு நடத்தினார்; அதில் எந்த ஆங்கில படம் தங்களுடைய மத நம்பிக்கைகளுடன் அதிகம் ஒத்திருந்தது என 200 இள வயதினரை கேட்டார். அநேகர் டர்மினேட்டர் 2 என பதிலளித்தனர். அந்த படம் நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராட்டத்தை சித்தரித்துக் காட்டுகிறது; அந்த படத்தின் ஹீரோ, இரட்சகனாக ஆகப்போகும் ஒரு சிறுவனை காப்பாற்றுவதற்காக காலத்தில் பின்நோக்கி பயணிப்பதாக காட்டப்படுகிறது. ஸ்காட்லாந்திலுள்ள எடின்பர்க்கில் நடந்த மாநாடு ஒன்றில் பேசும்போது டாக்டர் க்ளார்க் இவ்வாறு சொன்னார்: “வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்கு பதிலை கண்டுபிடிக்க இன்றைய இளம் பிள்ளைகள் டார்த் வேடர் என்ற ஹீரோவையும், X ஃபைல்ஸ் போன்ற டிவி நிகழ்ச்சிகளையும் நோக்கி இருக்கின்றனர். இவ்வுலகம் முழுவதையும் அறியப்படாத ஒரு சக்தி கட்டுப்படுத்துவதை X ஃபைல்ஸ் நிகழ்ச்சி ஆராய்வதால் அநேகருடைய ஆர்வத்தை இது கவர்ந்துள்ளது. உண்மையில் விஞ்ஞானத்தால் விளக்க முடியாத அநேக விஷயங்கள் இருக்கின்றன என்கிறது இந்த நிகழ்ச்சி. இது மதம் சம்பந்தப்பட்ட பிரச்சினை, இருந்தாலும் இதற்கு மதத்தால் திருப்திகரமான பதிலை அளிக்க முடியவில்லை.”

ஆட்டிலிருந்தா பருத்தி வருகிறது?

இளைய விவசாயிகளின் யூரோப்பியன் கவுன்சில் நடத்திய ஒரு சமீபத்திய சுற்றாய்வின்படி, “50 சதவீத யூ.யூ. [யூரோப்பியன் யூனியன்] பிள்ளைகளுக்கு சர்க்கரை எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியாது, முக்கால்வாசி பிள்ளைகளுக்கு பருத்தி எங்கிருந்து வருகிறது என தெரியாது, கால்வாசிப்பேர் அது செம்மறி ஆடுகளின்மேல் வளர்கிறது என நம்புகின்றனர்.” கூடுதலாக, பிரிட்டன் மற்றும் நெதர்லாந்திலுள்ள ஒன்பதிலிருந்து பத்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளில் 25 சதவீதத்தினர் ஆரஞ்சு, ஆலிவ் போன்ற பழங்கள் அவர்களுடைய நாட்டிலேயே வளருவதாக நினைக்கின்றனர். எல்லா விவசாயப் பொருட்களையும் சூப்பர் மார்க்கெட்களிலிருந்தே வாங்குவதால், பிள்ளைகளுக்கும் விவசாயப் பண்ணைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் போகிறது; இதனால், விவசாயத்தைப் பற்றி பள்ளியில்தான் கற்றுத் தெரிந்துகொள்கின்றனர். அநேக ஐரோப்பிய பிள்ளைகள் விவசாயிகளாக ஆகாததற்கு இதுவும் காரணமாகலாம். “சராசரியாக, 10 சதவீத யூ.யூ. பிள்ளைகள் மட்டுமே எதிர்காலத்தில் தாங்கள் விவசாயிகளாக ஆக ‘ஒருவேளை’ விரும்புவர் என்கிறது கவுன்சில்.”

யானை “ஓவியர்கள்”

இந்தியாவிலுள்ள ஒட்டபாலம் என்ற இடத்தில் யானைக்குட்டிகளை ஒவியர்களாக்குகின்றனர். யானைகள் அவற்றின் தும்பிக்கையால் பிரஷை பிடித்து சித்திரங்களைத் தீட்ட கற்றுக் கொடுக்கின்றனர். யானைகள் வரையும் ஓவியங்களை விற்று அதிலிருந்து கிடைக்கும் வருமானம் யானைகளின் பாதுகாப்பிற்கே பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஆசிய யானை ஓவியம் மற்றும் பாதுகாப்பு திட்டத்தை இயற்கைப் பிரியர்கள் நிறுவியுள்ளதாக தி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அறிவிக்கிறது. கணேசன் என்ற ஆறு வயது ஆண் யானைக்கு, “ஓவியம்” வரைவதென்றால் ஒரே குஷி. அவன் ஓவியம் வரையும் மூடில் இருந்தால், காதை உடனே அசைத்து, தன் பயிற்சியாளரிடமிருந்து பிரஷை வாங்கிக்கொள்கிறான். கணேசன் ஓவியம் வரையும்போது யாரும் எதுவும் அவனை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. அங்கு பறவையோ அணிலோகூட இருக்கக்கூடாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பல வர்ணங்களில் கோடுகளை போட்டு வரைந்த பிறகு, சற்று நிறுத்தி, தன் ஓவியம் எவ்வாறு இருக்கிறது என ஒரு லுக் விடுகிறான். அந்தக் காட்சியை பார்க்கும்போது, இன்னும் எவ்வாறு அழகுபடுத்தலாம் என அவன் யோசிப்பதைப்போல் தோன்றுகிறது. இருப்பினும், யானைகளை நல்ல “ஓவியர்களாக” ஆக்க எடுக்கப்படும் முயற்சிகளை, எல்லா இளம் யானைகளும் விரும்புவதில்லை, ஏற்றுக்கொள்வதில்லை. சில யானைகளுக்கு விருப்பமில்லாததால் பெயின்ட் பிரஷை உடைத்துவிடுகின்றன.

இன்னொரு டாக்டரை கேட்க வேண்டுமா?

“நாம் ஒரு மருத்துவரை சந்திக்கிறோம், அவர் சொன்ன மருத்துவ சிகிச்சையை ஏற்றுக்கொள்வது சரிதானா என்பதை தெரிந்துகொள்ள இன்னொரு மருத்துவரின் கருத்தை அறிந்துகொள்ள நம்மில் பெரும்பாலானோர் தயங்குகிறோம். ஆனால் இப்படிப்பட்ட தயக்கம் நோயாளியின் உயிரையே குடித்துவிடலாம்” என்கிறது மெக்ஸிகோ நகரத்து செய்தித்தாளான த நியூஸ். தாங்கள் இன்னொரு மருத்துவரிடம் தங்கள் நோயைப் பற்றி கருத்து கேட்டால், தான் சந்தித்த முதல் மருத்துவர் கோபித்துக்கொள்வார் அல்லது அவரை அவமதித்ததாக நினைத்துக்கொள்வார் என அநேக நோயாளிகள் பயப்படுகின்றனர். ஆனால், “நோயாளிகள் இன்னொருவரிடம் கருத்து கேட்பதைக் குறித்து பொதுவாக மருத்துவர்கள் எதுவும் தவறாக நினைத்துக்கொள்வதில்லை. ஆனால் உங்கள் மருத்துவர் அவ்வாறு கோபித்துக்கொள்பவராக இருந்தால், எதிர்காலத்தில் உங்களுக்குத்தான் பிரச்சினை” என்கிறது அந்த செய்தித்தாள். நோயாளிகள், இன்னொரு மருத்துவரிடம் கருத்து கேட்பது சிறந்த மருத்துவத்தை தெரிந்தெடுப்பதற்கான சரியான வழி என மருத்துவர்களும் இன்ஷுரன்ஸ் கம்பெனிக்காரர்களும் இக்காலத்தில் கருதுகிறார்கள். க்ளினிக்கல் புற்றுநோய்த் துறையின் ஜார்ஜியா சொஸைட்டியின் தலைவராக பணியாற்றுபவர் டாக்டர் மைக்கேல் ஆன்ட்ரூஸ். இவர் தான் சொன்ன மருத்துவத்தைக் குறித்து மற்றொரு டாக்டரிடமும் கருத்து கேட்கும்படி தன் நோயாளிகளிடம் சொல்கிறார். அவ்வாறு கருத்து கேட்கும் நோயாளிகள் அவர் சொன்ன மருத்துவத்தை ஏற்றுக்கொள்ள நம்பிக்கையுடன் திரும்பி வருவதாக சொல்கிறார். “ஆபத்திலிருப்பது தாங்களே என்பதை நோயாளிகள் நினைவில் கொள்ள வேண்டும்” என்கிறார் பொதுநல அமைப்பின் இயக்குநர் ஒருவர்.