Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் சோகத்தை வெளியே சொல்லலாமா?

என் சோகத்தை வெளியே சொல்லலாமா?

இளைஞர் கேட்கின்றனர் . . .

என் சோகத்தை வெளியே சொல்லலாமா?

“எனக்கு மனசு கஷ்டமாக இருந்தால் முதலில் யாரிடத்திலும் சொல்ல மாட்டேன். ஏதோ என் கஷ்டங்களை யாரிடமாவது சொல்லப் போக, கஷ்டத்திற்கு காரணமே நான்தான் என்று அவர் நினைத்துவிட்டால் என்ன செய்ய! ஆனால், யாரிடமாவது மனம்விட்டு பேசினால்தான் நிம்மதியாக இருக்கும்.”​—⁠13 வயது அலெஜான்ரோ.

“என் கவலையை என் நண்பர்களிடம் சொல்லவே மாட்டேன். அவர்கள் எங்கே எனக்கு உதவப்போகிறார்கள்! என்னை கேலி செய்யத்தான் அவர்களுக்கு தெரியும்.”​—⁠13 வயது ஆர்டோரோ.

வாழ்க்கையென்றால் சோகமும் இருக்கத்தான் செய்யும். a ஆனால் இளைஞர்களுக்கு வாழ்க்கை அனுபவம் குறைவு. அதனால் பிரச்சினைகளை கண்டு அரண்டுவிடுகிறார்கள். இன்றைய பெற்றோரும், நண்பர்களும், ஆசிரியர்களும் இளைஞர்களிடத்தில் அளவுக்கு மீறி எதிர்பார்க்கிறார்கள். இதுவும்கூட அவர்களை கவலையில் ஆழ்த்துகிறது. அதோடு டீனேஜ் பருவத்தில் ஏற்படுகிற உடல் மாற்றங்கள் வேறு இவர்களுக்கு ஒருவித பயத்தையும், கலக்கத்தையும் கொடுக்கின்றன. சிலநேரங்களில் இளைஞர்களிடத்தில் சிறு சிறு குறைகள் இருக்கும். அந்தக் குறைகளால் தோல்வியைத் தழுவ நேரிட்டாலும் சோகக்கடலில் மூழ்கிவிடுகிறார்கள்.

மனக்கவலையை யாரிடத்திலாவது சொல்வது நல்லது. “என் பிரச்சினைகளை யாரிடத்திலாவது சொல்லவில்லை என்றால் என் தலையே வெடித்து சிதறிவிடும்போல் இருக்கும்” என்றாள் 17 வயது பியாட்ரீஸ். இளைஞர்கள் தங்கள் கவலைகளை மனதில் பூட்டி வைப்பதால் மேலும் மேலும் சோகத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள். தனிமையில் வாடுகிற இளைஞர்களே தற்கொலை செய்ய முயல்கிறார்கள் என்கிறார் மாட்ரிட்டில் மன நல மருத்துவ பேராசிரியராக இருக்கும் மாரியா டெ கெஸுஸ் மார்டாமிங்கொ. அந்த இளைஞர்கள் தங்கள் மனக்குறைகளை சொல்லி அழ ஒருவர்கூட இல்லை என்பதால் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு சென்றதாக கூறினார்கள்.

நீங்கள் எப்படி? உங்கள் கவலையை கேட்பதற்கு யாராவது இருக்கிறார்களா? இல்லையென்றால் யாரிடத்தில் சொல்லலாம்?

பெற்றோரிடம் பேசுங்கள்

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அலெஜான்ரோவுக்கு கவலை இருந்தால் இவ்வாறு செய்வதாக கூறினான்: “என் குறைகளை எப்போதும் அம்மாவிடமே சொல்வேன். பிறந்தது முதல் எனக்கு பக்க துணையாக இருந்து, நம்பிக்கை அளிப்பது அம்மாதான். அப்பாவிடத்திலும் என் குறைகளை கூறுவேன். ஏனென்றால் அவருடைய சின்ன வயசில், என்னைப்போலவே பிரச்சினைகளை எதிர்ப்பட்டவர். என் கவலைகளை மனசுக்குள்ளேயே பூட்டி வைத்தால் என்னால் தாங்க முடியாது.” 11 வயது ருடால்ஃப் கூறுகிறான்: “முன்பெல்லாம் டீச்சர் என்னை அவமானப்படுத்தி, திட்டும்போதும் கூனிக் குறுகிப்போவேன். பாத்ரூமுக்கு ஓடிப்போய் அழுவேன். பிறகு அம்மாவிடம் வந்து சொல்ல ஆரம்பித்தேன். அவர்கள் என் பிரச்சினையை தீர்க்க உதவி செய்தார்கள். அம்மாவிடம் மட்டும் சொல்லாதிருந்தால் நான் வேதனையில் வெந்துபோயிருப்பேன்.”

உங்கள் பெற்றோரிடத்தில் மனம்விட்டு பேசுவதைப் பற்றி யோசித்தது உண்டா? ஒருவேளை, அவர்களால் உங்கள் பிரச்சினைகளை புரிந்துகொள்ள முடியாது என்று நினைத்திருப்பீர்கள். உண்மையில் அவர்களால் புரிந்துகொள்ள முடியாதா? இன்றைய இளைஞர்களுக்கு உள்ள நெருக்கடிகளை ஒருவேளை பெற்றோர்கள் முழுமையாக புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் உலகத்தைப் பற்றி உங்களைவிட அவர்களுக்குத்தான் நன்றாக தெரியும் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? அலெஜான்ரோ கூறுகிறான்: “சில நேரங்களில் என் பெற்றோர்களால் என் வேதனையை புரிந்துகொண்டு, அனுதாபப்பட முடிவதில்லை. ஆனாலும்கூட என் பிரச்சினைகளை அவர்களிடம் கூறுவேன்.” தங்கள் பிரச்சினைகளை பெற்றோர் புரிந்துகொள்வதில்லை என்று இளைஞர்கள் நினைக்கலாம். ஆனால் இளைஞர்களது பிரச்சினைகளை பெற்றோர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பது இளைஞர்களுக்கே இன்ப அதிர்ச்சி அளிக்கிறது! ஏனென்றால் பெற்றோர்களுக்கு வயதும் அனுபவமும் அதிகம். அதோடு அவர்கள் பைபிள் நெறிகளை பின்பற்றுகிற பெற்றோர்களாக இருந்தால் இன்னும் சிறப்பாக அறிவுரை அளிக்க முடிகிறது.

“அப்பா அம்மாவிடத்தில் என் மனக்குறைகளை கூறும்போது, அவர்கள் எனக்கு ஊக்கம் தந்து, அவற்றை தீர்ப்பதற்கான வழியையும் சொல்லி தருகிறார்கள்” என்கிறார் பியாட்ரீஸ். ஆகவேதான் இளைஞர்களுக்கு பைபிள் இந்த நல்ல அறிவுரையைத் தருகிறது: “பிள்ளாய்! உன் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடி; தாயின் அறிவுரையைப் புறக்கணிக்காதே. பெற்ற தந்தைக்குச் செவிகொடு; உன் தாய் முதுமை அடையும்போது அவளை இழிவாக எண்ணாதே.”​—நீதிமொழிகள் 6:20; 23:⁠22, பொ.மொ.

பெற்றோரிடத்தில் இளைஞர்களுக்கு சுமுக உறவு இருந்தால்தான் மனம்விட்டு பேச முடியும். உயர்நிலைப் பள்ளி மாணவர்களை வைத்து நடத்தப்பட்ட சுற்றாய்வில், சுய கௌரவமும், பெற்றோரிடத்தில் நல்ல உறவும் இல்லாத இளைஞர்கள்தான் தற்கொலைக்கு முயன்றனர் என்ற உண்மை தெரிய வந்தது என்று கூறினார் டாக்டர் கெட்டலினா கொன்ஜாலெஸ் பார்டிஸா. ஆனால் “பெற்றோரிடத்தில் நல்ல உறவு வைத்திருக்கும்” பிள்ளைகளுக்கு தற்கொலை என்ற எண்ணமே வருவதில்லை.

ஆகவே, பெற்றோரிடத்தில் சுமுக உறவு வைத்திருப்பது நல்லது. தினந்தோறும் அவர்களிடத்தில் பேசுங்கள். உங்களுக்கு உள்ள கஷ்டங்களை மறைக்காமல் அவர்களிடம் சொல்லுங்கள். சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு மனம்விட்டு பேசினால் உங்களுக்கு பெரிய பிரச்சினை வந்தாலும் அவர்களையே தயங்காமல் அணுகுவீர்கள்.

நண்பனிடம் பேசுங்கள்

சோகத்தை உங்கள் நண்பனிடத்தில் சொல்வது எளிதல்லவா? நம்பிக்கைக்கு பாத்திரமான நண்பர்கள் இருப்பது நல்லது. “உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு” என்கிறது நீதிமொழிகள் 18:24 (பொ.மொ.). நண்பர்கள் உங்களுடைய சோகத்தை கேட்டு, அனுதாபப்பட்டு, ஆறுதலும் தருவார்கள் என்பது உண்மையே. ஆனால் எல்லா நேரத்திலும் அவர்களால் சிறந்த அறிவுரையை தர முடியாது. ஏனென்றால், உங்கள் வயதை ஒத்தவர்களுக்கு உங்களுக்கு உள்ள வாழ்க்கை அனுபவமே இருக்கும். ரெகொபெயாமை பற்றி உங்களுக்கு தெரியுமா? அவன், பைபிள் காலங்களில் அரசாண்ட ஓர் அரசன். அவன், அனுபவம் மிக்க பெரியவர்கள் கூறிய நல்லாலோசனையைத் தள்ளிவிட்டு, தன் வயது நண்பர்களின் அறிவுரைப்படி நடத்தான். விளைவு! அழிவு! அவன் ராஜ்யத்தின் பெரும் பகுதியை இழந்ததோடு, கடவுளுடைய அங்கீகாரத்தையும் இழந்தான்.​—1 இராஜாக்கள் 12:8-19.

சிலசமயம், நண்பர்களை நம்பி நம்மை பற்றிய ரகசியங்களை சொல்லி விடுவோம். ஆனால் அவர்கள் நம் நம்பிக்கையில் மண்போட்டுவிட்டால் மனமுடைந்துபோவோம். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஆர்டோரோ தான் கண்கூடாக கண்டதை கூறுகிறான்: “மனசு கஷ்டமாக இருந்தால் நண்பர்களிடம் போய் எல்லாவற்றையும் சொல்கிற நிறைய பையன்களை எனக்குத் தெரியும். ஆனால் அந்த நண்பர்களோ இவர்களுடைய விஷயங்களை அம்பலப்படுத்தி, கேலி செய்கிறார்கள்.” தோழிகளை நம்பி, அவமானப்பட்ட 13 வயது காப்ரியல்லா கூறுவதை கேளுங்கள்: “என் தோழி ஒருத்தியிடம் என்னைப் பற்றிய விஷயங்களை கூறியிருந்தேன். ஒருநாள் அவள் தன்னுடைய தோழியிடம் என்னைப் பற்றி சொல்வதை பார்த்துவிட்டேன். அதுமுதல் எதையும் நான் அவளிடம் சொல்வதில்லை. அதற்காக என் வயது நண்பர்களிடம் பேசுவதை சுத்தமாக நிறுத்தவில்லை. இப்போதும் என்னைப் பற்றி சொல்வேன். ஆனால் மற்றவர்களுக்கு தெரிந்தாலும் என்னை பாதிக்காத விஷயங்களை மட்டும் சொல்வேன்.” ஆகவே உள்ளத்தில் உள்ள வேதனைகளை சொல்லி அழ, நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் ‘இரகசியத்தை வெளிப்படுத்தாதவராக’ இருப்பது முக்கியம். (நீதிமொழிகள் 25:9) உங்கள் இரகசியம் காக்கும் நண்பர் உங்களைவிட வயதில் மூத்தவராகவும் இருக்கலாம்.

உங்களுடைய வேதனைகளை கேட்க வீட்டில் யாரும் இல்லையென்றால் கவலைப்படாதீர்கள். உண்மையான தோழனையோ தோழியையோ நாடுங்கள். ஆனால் அந்தத் தோழனோ, தோழியோ வாழ்க்கை அனுபவம் மிக்கவராகவும், பைபிள் நெறிகளை அறிந்தவராகவும் இருப்பது முக்கியம். இத்தகைய நண்பர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் உங்களுக்கு கண்டிப்பாக கிடைப்பார்கள். 16 வயது லில்லியானா கூறுகிறாள்: “என்னுடைய வேதனைகளை கிறிஸ்தவ சகோதரிகள் சிலரிடம் கூறுவேன். அப்போது மனபாரம் குறைந்ததுபோல் இருக்கும். அவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்களாக இருப்பதால் நல்ல அறிவுரையைக் கொடுப்பார்கள். அவர்கள் எனக்கு தோழிகளாக ஆகிவிட்டார்கள்.”

ஒருவேளை நீங்கள் ஆன்மீக விஷயங்களில் குறைவுபடுவதால் மனமுடைந்திருக்கிறீர்களா? உதாரணத்திற்கு, சரிவர ஜெபம் செய்ய முடியவில்லை அல்லது பைபிள் வாசிக்க முடியவில்லை என்ற வேதனை உங்களை வாட்டலாம். பைபிள் புத்தகம் யாக்கோபு 5:14, 15 தருகிற அறிவுரை: “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்.” ஆன்மீக விஷயத்தில் மனம் தளர்ந்துபோனவர்களுக்கு அல்லது வியாதிப்பட்டிருப்பவர்களுக்கு உதவிசெய்ய யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் மூப்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை அணுக தயங்காதீர்கள். இத்தகைய மூப்பர்கள் ‘காற்றுக்கு ஒதுங்கிடமாகவும், புயலுக்கு புகலிடமாகவும்’ இருக்கிறார்கள் என்று பைபிள் கூறுகிறது.​—⁠எசாயா 32:⁠2, பொ.மொ.

‘உங்கள் விண்ணப்பங்களை தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’

‘சகலவிதமான ஆறுதலின் தேவன்’ தரும் சிறந்த உதவியைப் போல் எந்த மனிதனாலும் தர முடியாது. (2 கொரிந்தியர் 1:3) நீங்கள் மனமுடைந்து, சோகத்தில் வாடும்போது பிலிப்பியர் 4:6, 7-⁠ல் உள்ள அறிவுரையை பின்பற்றுங்கள்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்.” உங்கள் குறைகளை கேட்க யெகோவா தேவன் எப்போதும் தயாராக இருக்கிறார். (சங்கீதம் 46:1; 77:1) சிலநேரங்களில் ஜெபம் மாத்திரம் உங்களுக்கு வடிகாலாக அமையும்.

உங்களுக்கு சோகமோ, மனவேதனையோ வரும்போதெல்லாம், உங்களைப் போலவே நிறைய இளைஞர்கள் சோகத்தில் இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். கவலை என்பது காற்றாய் மறைந்திடாது. அது மெல்லத்தான் கரையும். அதற்காக கவலையை உள்ளத்தில் பூட்டி, தனிமையில் வாடாதீர்கள். உங்கள் வேதனையை யாரிடமாவது சொல்லிவிடுங்கள். நீதிமொழிகள் 12:25 இவ்வாறு கூறுகிறது: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.” ஊக்கம் தருகிற ‘நல்வார்த்தையை’ யாரிடத்தில் கேட்பீர்கள்? அனுபவமும், அறிவும், தேவ ஞானமும் உடைய நபரிடத்தில் உங்கள் சோகத்தை சொல்லுங்கள். அவர் உங்களுக்கு ஆறுதலையும் உதவியையும் தருவார்.

[அடிக்குறிப்பு]

a உங்களுக்குத் தீராத கவலை இருந்தால், அது மன அல்லது உடல் சம்பந்தமான பெரும் கோளாறு இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். உடனே மருத்துவம் பார்ப்பது நல்லது. இப்பத்திரிகையின் துணை பத்திரிகையான காவற்கோபுரத்தில், 1990, மார்ச் மாத ஆங்கில இதழில் வெளிவந்த “மனக்கவலையை எப்படி விரட்டுவது” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]

“அப்பா அம்மாவிடத்தில் என் மனக்குறைகளை கூறும்போது, அவர்கள் எனக்கு ஊக்கம் தந்து, பிரச்சினைகளை தீர்க்க வழியையும் காட்டுகிறார்கள்”

[பக்கம் 15-ன் படம்]

நண்பர்களைவிட கடவுள் பக்தியுள்ள உங்கள் பெற்றோரே நல்லாலோசனை தர தகுதியானவர்கள்