Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“சாகச விளையாட்டுக்கள்” சாக துணியலாமா?

“சாகச விளையாட்டுக்கள்” சாக துணியலாமா?

பைபிளின் கருத்து

“சாகச விளையாட்டுக்கள்” சாக துணியலாமா?

“இன்று நிறைய பேர் விளையாட்டுக்களை வேடிக்கை பார்ப்பதைவிட, தாங்களே ஒரு கை பார்த்திட களத்தில் இறங்கிவிட்டார்கள். ஆனால் விளையாட்டுகள் என்ற பெயரில் விமானத்திலிருந்து பாராசூட்டில் குதிக்கிறார்கள், மலைகளிலிருந்து கயிறு கட்டி குதிக்கிறார்கள், காட்டருவிகளில் படகு சவாரி செய்கிறார்கள், சுறா மீன்களோடு நீந்துகிறார்கள்.”​⁠த வில்லோ கெலன் ரெஸிடென்ட் செய்தித்தாள்.

விளையாட்டைப் பொருத்தவரை மக்களின் மனப்போக்கு எப்படி மாறியிருக்கிறது என்பதை இச்செய்தித்தாள் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, விமானத்திலிருந்து குதித்து சாகசங்கள் செய்யும் விளையாட்டான ஸ்கைடைவிங், பனி மலை ஏறுதல், பாராசூட்டில் சாகசம் செய்தல் (paragliding), பேஸ் ஜம்பிங் (BASE jumping) a போன்ற விளையாட்டுக்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன. இவை இன்றைய உலகம் ஆபத்தில் அலாதி இன்பம் காண்பதை படம்பிடித்து காட்டுகின்றன. இன்று, பனிச்சறுக்கு பலகை விளையாட்டு எல்லை மீறி செங்குத்தான மலைகளிலிருந்து சறுக்கும் நிலைக்கு வந்துவிட்டது. சைக்கிளில் மலை ஏறும் விளையாட்டு எல்லை மீறி உயரமான சிகரங்களை தொடும் நிலையை எட்டியுள்ளது, காலில் சர்க்கரங்களை கட்டி விளையாடிய ஸ்கேட்டிங் விளையாட்டு எல்லை மீறி அதிக தூரம் தாண்டுவது என்ற எல்லையை தொட்டுள்ளது. “உயிரை துச்சமாக நினைக்கிற சாகச விளையாட்டுகள்” இன்று பிரபலமடைந்துள்ள. இவை “ஆபத்து, திறமை, பயம் போன்ற உணர்வுகளின் எல்லையை தொட்டுவிட்ட எண்ணத்தை விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி சனி, ஞாயிறுகளில் விளையாடுவோருக்கும் தருவதால் லட்சக்கணக்கானோர் ஆர்வம் காட்டுகிறார்கள்” என்கிறது டைம் பத்திரிகை.

ஒருபுறம் இவ்விளையாட்டுக்கள் பிரபலமடைகின்றன. மறுபுறம் ஆபத்தும் அதிகரித்துள்ளது. பாதுகாப்பான விளையாட்டுகள்கூட எல்லை மீறும்போது நிறைய பேருக்கு காயங்கள் ஏற்படுகின்றன. 1997-⁠ல் அமெரிக்காவில், அடிபட்டு, ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவுக்கு விரைந்தோரின் எண்ணிக்கை, ஸ்கேட்டிங் போர்ட்டில் 33 சதவிகிதத்திற்கு மேலும், பனிச்சருக்கு பலகை விளையாட்டில் 31 சதவிகிதமும், மலை ஏறுவதில் 20 சதவிகிதமும் அதிகரித்திருந்தது. இதுபோல் அடிபடுவது மற்ற விளையாட்டுக்களிலும் பயங்கரமாக அதிகரித்துள்ளது. ஆனால் சாகச விளையாட்டுக்களிலோ நிறையப்பேர் சாகவும் செய்கிறார்கள். இவ்விளையாட்டுக்களில் உள்ள ஆபத்துக்களை அறிந்தே விளையாடுகிறார்கள். ஆபத்தான பனிச்சருக்கு விளையாட்டில் ஈடுபடுகிற ஒரு பெண் இவ்வாறு கூறுகிறார்: “மரணம் என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது.” பனிச்சருக்கு பலகை வீரர் ஒருவர் சுருக்கமாக இவ்வாறு கூறினார்: “நீங்கள் அடிபடும் அளவுக்கு விளையாடினால்தான் முழுமூச்சோடு விளையாடினீர்கள் என்று அர்த்தம்.”

இவ்வளவு ஆபத்துக்கள் உள்ள விளையாட்டுக்களில் பங்கேற்பதை பற்றி ஒரு கிறிஸ்தவர் எவ்வாறு கருத வேண்டும்? சாகச விளையாட்டுக்களில் ஈடுபடலாமா, கூடாதா என்று தீர்மானிக்க பைபிள் எவ்வாறு உதவுகிறது? இக்கேள்விகளின் விடைகள், கடவுள் உயிரின் உன்னதத்தை எவ்வாறு போற்றுகிறார் என்பதை அறிந்துகொண்டால் தெரிந்துவிடும்.

கடவுள் பார்வையில் உயிர்

யெகோவா உயிர்களை உற்பத்தி செய்யும் ‘ஜீவ ஊற்றாக’ இருக்கிறார் என்று பைபிள் கூறுகிறது. (சங்கீதம் 36:9) அவர் மனிதர்களை படைத்ததோடு தம் பணி முடிந்தது என்று இருக்கவில்லை. அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ தேவையான எல்லா வசதிகளையும் பார்த்து பார்த்து செய்து கொடுத்தார். (சங்கீதம் 139:14; அப்போஸ்தலர் 14:16, 17; 17:24-28) ஆகவே, கடவுள் அன்புடன் தந்த உயிரை நாம் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இஸ்ரவேல் தேசத்தாருக்கு கடவுள் கொடுத்த சட்டங்களிலிருந்தும், நீதிநெறிகளிலிருந்தும் உயிரை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்ற உண்மை விளங்குகிறது.

கடவுள் மோசே மூலம் கொடுத்த சட்டத்தில் மற்றவர்களுடைய உயிரை பாதுகாக்க ஒருவர் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒருவர் இச்சட்டத்தை மீறியதால், யாராவது இறக்க நேர்ந்தால், அந்தப் பழிபாவம் சட்டத்தை மீறியவரையே சாரும். ஏனென்றால் அவர் சட்டத்தை காப்பாற்றியிருந்தால் அந்த உயிரையும் காப்பாற்றியிருக்க முடியும். உதாரணத்திற்கு, புதிய வீட்டை கட்டுகிற ஒருவர், அந்த வீட்டு மொட்டை மாடிக்கு கைப்பிடிச்சுவர் எழுப்ப வேண்டும் என்பது சட்டம். கைப்பிடிச்சுவர் கட்ட தவறியதால், மாடியிலிருந்து யாராவது தவறி விழுந்து, இறந்துபோனால் வீட்டு சொந்தக்காரரே பழிபாவத்தை ஏற்க வேண்டும். (உபாகமம் 22:8) திடீரென்று மாடு முட்டி ஒருவர் இறந்துவிடால் அதற்கு மாட்டின் சொந்தக்காரர் பொறுப்பல்ல. ஆனால் அடிக்கடி முட்டுகிற ஆபத்தான மாடு என்று சொந்தக்காரரை எச்சரித்த பிறகும், அவர் அந்த மாட்டை கட்டிவைக்க தவறியதால், அது யாரையாவது முட்டி கொன்றுவிட்டால், மாட்டின் சொந்தக்காரர் கொல்லப்படுவார். (யாத்திராகமம் 21:28, 29) யெகோவா உயிரை உயர்வாக மதிப்பதால், அவருடைய சட்டம், உயிரை பாதுகாப்பதை பற்றி வலியுறுத்தியது.

அச்சட்டத்தில் அடங்கியிருந்த நீதிநெறிகள் உயிரை பணையம் வைக்கிற செயல்களுக்கும் பொருந்தும் என்பதை கடவுளுடைய உத்தம ஊழியர்கள் அறிந்திருந்தார்கள். தாவீது, ‘பெத்லகேமின் ஒலிமுக வாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீரை’ குடிக்க ஆசைப்பட்ட போது என்ன நடந்தது என்ற பதிவு பைபிளில் உள்ளது. அச்சமயத்தில் பெத்லகேம் பெலிஸ்தரின் கட்டுப்பாட்டில் இருந்தது. தாவீதுக்கு தண்ணீர் வேண்டும் என்பதை கேட்ட மூன்று வீரர்கள், பெலிஸ்தரின் முகாமை கடந்துபோய், பெத்லகேம் கிணற்றிலிருந்து தண்ணீர்கொண்டு வந்து கொடுத்தார்கள். தாவீது அந்தத் தண்ணீரை குடித்தாரா? அதை அவர் தரையில் ஊற்றிவிட்டார். அவர் சொன்ன காரணம்: “நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; தங்கள் பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனுஷரின் ரத்தத்தைக் குடிப்பேனோ, . . . அதைக் குடிக்கமாட்டேன்.” (1 நாளாகமம் 11:17-19) தன் ஆசையைத் தீர்ப்பதற்காக மற்றவர்கள் உயிரை பணையமாக வைத்ததை தாவீதால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

இயேசுவும் இதைப்போல் நடந்துகொண்டார். அநேகமாக ஒரு தரிசனத்தில், பிசாசு அவரை தேவாலயத்து உப்பரிகையின்மேல் நிறுத்தி, அங்கிருந்து தாழக்குதிக்கும்படி கூறினான். அவர் குதிக்கும்போது தேவதூதர்கள் வந்து காப்பாற்றுவார்களா என்பதை பார்க்க வேண்டும் என்றான். அதற்கு இயேசு, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக” என்றார். (மத்தேயு 4:5-7) உயிரை துச்சமாக மதித்து, ஆபத்தில் இறங்குவது கடவுள் முன்நிலையில் தவறு என்பதை தாவீதும் இயேசுவும் அறிந்திருந்தார்கள்.

இந்த இருவருடைய உதாரணத்தையும் காணும்போது, ‘“ஆபத்தான விளையாட்டை” எவ்வாறு வரையறுப்பது? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். ஆபத்துக்கள் இல்லாத சாதாரண விளையாட்டுக்கள்கூட எல்லை மீறி சென்றுவிடுகின்றன. அப்போது, நாம் எந்தளவுக்கு அதில் ஈடுபடலாம் அல்லது நமது வரம்பை அறிவது எப்படி?’

ஆபத்து அவசியம்தானா?

விளையாட்டைப் பற்றி ஒளிவுமறைவின்றி அலசி ஆராய்ந்தால், ஆபத்து அவசியம்தானா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும். உதாரணத்திற்கு, நாம் கேட்க வேண்டிய கேள்விகள்: ‘இந்த விளையாட்டில் எந்தளவுக்கு விபத்துக்கள் ஏற்படுகின்றன? இவ்விளையாட்டில் நான் பயிற்சி பெற்றிருக்கிறேனா அல்லது காயம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு சாதனங்கள் என்னிடம் உள்ளனவா? ஒருவேளை நான் விழுந்துவிட்டால் அல்லது தவறாக குதித்துவிட்டால் அல்லது பாதுகாப்பு சாதனங்கள் இயங்காமல் போனால் என் கதி என்னாவது? இந்த விளையாட்டில் சிறு காயங்கள் மட்டும் ஏற்படுமா அல்லது முடமாக்கிவிடுமா அல்லது உயிரையே பறித்திடுமா?’

ஆகவே, ஓர் உண்மை கிறிஸ்தவர் விளையாட்டு என்ற போர்வையில் தேவையின்றி ஆபத்தில் இறங்கினால், கடவுளோடு அவருக்கு உள்ள நல்லுறவு கெடுவதோடு, அவர் சபையில் விசேஷ பொறுப்புகளை ஏற்கிற தகுதியையும் இழக்க நேரிடலாம். (1 தீமோத்தேயு 3:2, 8-10; 4:12; தீத்து 2:6-8) கிறிஸ்தவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுகிற சமயத்தில்கூட கடவுள் உயிரை புனிதமாக கருதுகிறார் என்பது நினைவிருக்கட்டும்.

[அடிக்குறிப்பு]

a கட்டிடத்தை, பாலத்தை, ஆன்டனா டவரை, மலை சிகரத்தை பேஸாக வைத்து கயிறு கட்டி குதித்தலே பேஸ் ஜம்பிங் ஆகும். கட்டிடங்களிலிருந்தும், பாலங்களிலிருந்தும், மலை சிகரங்களிலிருந்தும் குதிப்பது மிகவும் ஆபத்தானதால் இவற்றை அமெரிக்காவிலுள்ள நேஷனல் பார்க் சர்வீஸ் தடைசெய்துள்ளது.