Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாற்று மருத்துவத்திற்கு நிறைய பேர் மாறுகிறார்கள்

மாற்று மருத்துவத்திற்கு நிறைய பேர் மாறுகிறார்கள்

மாற்று மருத்துவத்திற்கு நிறைய பேர் மாறுகிறார்கள்

மாற்று மருத்துவம் என்ற பெரிய ஆல மரத்திற்கு சிகிச்சை முறைகள், வகைகள் என்னும் நிறைய விழுதுகள் உண்டு. மாற்று மருத்துவங்கள் எல்லாமே பெரும்பாலும் இயற்கை வைத்தியங்கள் என்ற ஒரே குடையின் கீழ் வருகின்றன. இம்மருத்துவத்தில், மூலிகைகளை கொடுத்து அல்லது உடல் பாகங்களுக்கு அழுத்தமோ, தூண்டுதலோ கொடுத்து நோய்தீர்க்கப்படுகிறது. பல்வேறு மாற்று மருத்துவங்கள் பல நூற்றாண்டுகளாகவே வழக்கத்தில் உள்ளன. ஆனால் ஆங்கில மருத்துவம்தான் அவற்றை இவ்வளவு காலம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

உதாரணத்திற்கு, தீக்காயங்களுக்கு குளிர்ந்த நீர் ஊற்றுவதை அல்லது ஐஸ் வைப்பதை “பண்டைய மக்கள் அறிந்திருந்தார்கள். அதை மருத்துவர்களும், மக்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். இந்த வைத்திய முறையை ஏகமாக புகழ்கிற குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்ற போதிலும், பின்பற்றப்படவில்லை. நிறைய டாக்டர்கள் ‘இவ்வைத்திய முறையை உபயோகிப்பதில்லை’ என்கிறார்களே தவிர, ஏன் உபயோகிப்பதில்லை என்பதற்கு விளக்கம் தர முடியவில்லை” என்கிறது ஆகஸ்ட் 27, 1960, ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன்.

தீக்காயங்களுக்கு குளிர்ந்த நீரை ஊற்றலாம் அல்லது ஐஸ் வைக்கலாம் என்று சமீப வருடங்களில் விஞ்ஞான மருத்துவம் பரிந்துரை செய்கிறது. செப்டம்பர் 1963, த ஜர்னல் ஆஃப் ட்ராமா இவ்வாறு அறிவித்தது: “1959-லும், 1960-லும் ஆஃபாஜாசனும், ஸ்கல்மேனும் தந்த அறிக்கைகளுக்குப் பிறகு தீக்காயங்களுக்கு குளிர்ந்த நீரை ஊற்றலாம் என்ற பண்டைய மருத்துவத்திற்கு மவுசு அதிகரித்துள்ளது. கடந்த [1963] வருடம் இந்த மருத்துவ முறையை கையாண்டோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.”

தீக்காயங்களுக்கு குளிர்ந்த நீரையே மருந்தாக உபயோகிப்பது ஓரளவுக்கு பாதுகாப்பானதும்கூட. வெந்த புண்ணிற்கு இதமாக இருக்கும். தண்ணீரையே பலவிதங்களில் உபயோகித்து, நோய் தீர்க்கும் முறைக்கு ஹைட்ரோதெரபி என்று பெயர். இதுவும் மாற்று மருத்துவத்தின் ஒரு வகையே. இன்றைய நவீன மருத்துவத்திலும் பல்வேறு தண்ணீர் சிகிச்சைகள் தரப்படுகின்றன. a

மாற்று மருத்துவத்தில் மூலிக்கைகளே முக்கிய மருந்து. மூலிகை மருத்துவம் உலகின் பல பாகங்களில் தொன்றுதொட்டே இருந்துவருகிறது. இந்தியாவில் மூலிகை மருத்துவமே முக்கிய மருத்துவமாக இருந்திருக்கிறது. இன்று எல்லா இடங்களிலும் மூலிகை மகத்துவத்தை மருத்துவர்கள் பலர் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

முத்தான உதாரணம்

சுமார் 100 வருடங்களுக்கு முன், ரிச்சர்டு வில்ஸ்டார்ட்டர் என்பவர் சிறுவனாக இருந்தபோது அவருடைய தோழன் ஜெஃப் ஸ்வாப் மூலிகையால் குணமான அற்புதத்தை கண்டார். அதுவே அவர் பெரியவரானபோது, தாவர உயிர்-வேதியியல் பாடத்தை எடுக்கத் தூண்டியது. ஜெஃப்பினுடைய கால் சீழ்ப்பிடித்து மிகவும் மோசமானது. அவனுடைய உயிரை காப்பாற்ற வேண்டுமென்றால் காலை வெட்டி எடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் ஜெஃப்பின் பெற்றோர் ஆப்ரேஷனை அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அதற்குள், மூலிகை வைத்தியம் பார்ப்பதில் கெட்டிக்காரனாக திகழ்ந்த ஒரு மேய்ப்பனிடம் ஜெஃப்வை கொண்டு போனார்கள். அவன் சில மூலிகைகளை பறித்து, மைய அரைத்து, காயத்தில் தடவினான்.

விடியற்காலைக்குள் அவனுடைய காயம் ஓரளவுக்கு ஆறி இருந்தது. ஆகவே மறுபடியும் ஆப்ரேஷனை தள்ளிப்போட்டார்கள். மூலிகை மருத்துவம் தொடர்ந்தது. மூலிகையைப் போட போட புண் இருந்த இடம் தெரியாமல் போனது. வில்ஸ்டார்ட்டர் வேதியியலை படிக்க ஜெர்மனியில் உள்ள ம்யூனிச் பல்கலைக்கழகத்திற்கு போனார். அங்கே அவர் தாவரங்களின் செல்களையும், திசுக்களையும் குறிப்பாக குளோரோபில் எனப்படும் பச்சையத்தையும் ஆராய்ந்து, அரிய பல உண்மைகளை வெளியிட்டார். அதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஆகவேதான் இன்று சுமார் 25 சதவிகித மருந்துகள் ஓரளவுக்கு இயற்கை மூலிகைகளை சேர்த்தோ அல்லது முழுக்க முழுக்க மூலிகைகளிலிருந்தோ தயாரிக்கப்படுகின்றன.

நிதானம் தேவை

ஒருவருக்கு ஒரு வகை மருத்துவம் நன்றாக வேலைசெய்யும். அதே மருத்துவம் அடுத்தவருக்கும் நன்றாக வேலைசெய்யும் என்று நினைக்கக்கூடாது. ஆகவே, ஒரு மருந்து நன்றாக வேலை செய்வதும், வேலை செய்யாததும், ஒருவருடைய நோய், அதன் தீவிரம், நோயாளியின் பொதுவான உடல் ஆரோக்கியம் என பல விஷயங்களை சார்ந்துள்ளது. அந்தந்த நோய்க்கேற்ப குணமாவதற்கு எடுக்கும் காலமும் வேறுபடும்.

ஆங்கில மருத்துவத்தைவிட மாற்று மருத்துவத்தில் மெல்லத்தான் குணமாகும். மாற்று மருத்துவத்தில் குணமாகாத நோயாளி ஒருவருக்கு ஒருவேளை ஆங்கில மருத்துவத்தில் நோய் எளிதாக கண்டுபிடிக்கப்பட்டு, குணமாகியிருக்கும். மாற்று மருந்தே கதியென்று இருந்ததால் இப்போது அவருக்கு சக்திவாய்ந்த ஆங்கில மருந்து கொடுக்க வேண்டிய அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். இதுபோன்ற சமயங்களில் ஒரே மருத்துவம் போதும் என்று பிடிவாதம் பிடிப்பது நல்லதல்ல.

ஆரோக்கியத்திற்கு ஆங்கில மருத்துவத்தின் அணுகு முறைக்கும் மாற்று மருத்துவத்தின் அணுகு முறைக்கும் வித்தியாசம் உண்டு. நோய் வரும் முன் காப்பதே மாற்று மருத்துவத்தின் மகத்துவம். ஒருவருடைய ஆரோக்கியத்திற்கு அவருடைய வாழ்க்கை முறையும், சுற்றுச்சூழலும் இன்றியமையாதது என்பதை கருத்தில் கொண்டு வைத்தியம் பார்ப்பது மாற்று மருத்துவம். இதையே வேறுவிதமாக சொன்னால் மாற்று மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் வெறும் நோய்க்கோ, நோய் வந்த உறுப்புக்கோ மட்டுமின்றி, முழு மனிதனுக்கே வைத்தியம் பார்க்கிறார்கள்.

இயற்கையோடு ஒட்டிய வைத்தியமே மாற்று மருத்துவம். இந்த மென்மையான மருத்துவத்தில் ஆங்கில மருத்துவம் போல் பக்க விளைவுகள் அவ்வளவாக இல்லை. ஆகவே தான் மாற்று மருத்துவத்திற்கு மவுசு அதிகம். இன்று பாதுகாப்பான, அதே நேரத்தில் சிறப்பான மருத்துவத்தில் மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆகவே அடுத்த கட்டுரையில் சில மாற்று மருத்துவ முறைகளை குறிப்பிட்டுள்ளோம்.

[அடிக்குறிப்பு]

a ஜூன் 22, 1988, ஆங்கில விழித்தெழு! பக்கங்கள் 25-6-ஐக் காண்க.