உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
டென்ஷனாகும் மாணவர்கள்
இந்தியாவிலுள்ள அநேக மாணவர்களுக்கு பள்ளியில் இறுதியாண்டு தேர்வு நெருங்கிவிட்டாலே டென்ஷன்தான் என மும்பையில் வெளியாகும் ஏஷியன் ஏஜ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. தேர்வில் நல்ல மார்க்கு வாங்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் பரீட்சைக்கு முந்தின நாள் விழுந்து விழுந்து படிப்பது சிலரை பாடாய் படுத்துகிறது; இதனால் பரீட்சை சமயத்தில் மனநோய் மருத்துவர்களிடம் அழைத்து செல்லப்படும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியிருக்கிறது. தங்கள் பிள்ளைகள் ஃபஸ்ட் மார்க்கு வாங்க வேண்டும் என்ற ஆவலில் சில பெற்றோர்கள் அவர்களை விளையாடக்கூட விடுவதில்லை. பொழுதுபோக்கு பக்கமே திரும்பக்கூடாது என கட்டுப்பாடும் வைக்கின்றனர். மாணவர்களுக்கு ஏறக்குறைய சிறைவாசம்தான்! அநேக பெற்றோர்கள், “படி, படி, என ஓயாமல் சொல்லி பிள்ளைகளை நச்சரிக்கின்றனர். போதாக்குறைக்கு சக மாணவர்களுடன் போட்டா போட்டி வேறு. ஒரு மாறுதலுக்காக தங்கள் பிள்ளையை சற்று நேரம் விளையாட விடுவது அவனது மனதிற்கு புதுத்தெம்பூட்டும். இது அவன் நன்றாக படிக்க உதவும் என்பதை பெற்றோர் கொஞ்சமும் புரிந்துகொள்வதில்லையே” என வருந்துகிறார் மனநோய் மருத்துவர் வி. கே. மேன்ரா. இந்தப் பரீட்சை டென்ஷன், “மெல்ல மெல்ல 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களையும் தொற்றிக்கொண்டிருக்கிறது” என்கிறார் டாக்டர் ஹரீஷ் ஷெட்டி.
பட்டணம் போகும் பன்றிகள்
காட்டுப் பன்றிகள் சாதாரணமாகவே கூச்ச சுபாவமுடையவை; ஆனால் ஏராளமான உணவும் வேட்டைக்காரர்களிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் நகரங்களுக்கு செல்ல இவை தயங்குவதே இல்லை என்கிறது ஜெர்மனியில் வெளியாகும் டை வோசி வார இதழ். இவ்வாறு பெர்லின் நகரத்துக்கு இடம் மாறிச்சென்ற தாய் பன்றிகள் குட்டிகளை ஈன்றெடுத்து அவற்றின் எண்ணிக்கையை பெருக்கியிருக்கின்றன. இவை உணவுதேடி காட்டுப் பகுதிகளிலும் பொது பூங்காக்களிலும் மட்டும் சுற்றித்திரிந்தால் பரவாயில்லை; ஆனால் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களை அழித்துவிடுகின்றன, அங்குள்ள பூச்செடிகளை வேரோடு கபளீகரமும் செய்துவிடுகின்றன. 350 கிலோகிராம் வரை எடையுள்ள இந்தக் காட்டுப் பன்றிகள், சில சமயங்களில் வழிப்போக்கர்களை ‘முறைத்திருக்கின்றன’; இவற்றிடமிருந்து தப்பிக்க அவர்கள் டெலிபோன் பூத்துகளில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர், மரங்களில் ஏறியிருக்கின்றனர். இந்த விலங்குகளால் ஏகப்பட்ட சாலை விபத்துக்கள் வேறு. வேலையிலிருந்து வீடு திரும்பும் அநேக நகரவாசிகளை வரவேற்பவர்கள், சிலிர்த்துக்கொண்டு நிற்கும் இந்த அத்துமீறிய ‘விருந்தாளிகளே.’ “என் வீட்டிற்கு முன் ஸ்ட்ரைக் செய்வதுபோல 20 காட்டுப் பன்றிகள் நின்றுகொண்டிருந்தால் என்னால் எப்படி வீட்டுக்குள் போக முடியும்?” என அங்கலாய்க்கிறார் ஒருவர்.
உங்கள் பெயர் விளங்க ஒரு வழி
“உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவருக்கு பரிசு கொடுக்க விரும்புகிறீர்கள். அதுவும் அந்த பரிசு ஒப்பற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். ஆனால் அவரிடம் இல்லாத பொருள் எதுவுமே இல்லை. இப்போது என்ன செய்யலாம்? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுவே: அலங்கார மலர்ச் செடிகள், கொசு, கடல் நத்தை போன்றவற்றில் இதுவரை அறியப்படாத ஏதாவது ஒரு இனத்தைத் தேர்ந்தெடுங்கள்; உங்கள் நேசத்திற்குரியவரின் பெயரை அதற்கு சூட்ட சொல்லி, உயிரியல் பெருக்க ஆய்வு மையத்திற்கு நன்கொடை அனுப்பி வையுங்கள். அறிவியல் புத்தகங்களில் அழியா இடம்பெறும்படி அப்பெயர் பதிவுசெய்யப்படும்” என்கிறது சைன்ஸ் பத்திரிகை. அல்லது உங்கள் பெயரையேகூட அதற்கு சூட்டலாம். இந்த ஏற்பாட்டை பையோபேட் என்ற நிறுவனம் செய்துள்ளது. காரணம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள இனங்களில், பத்தில் ஒரு பாகம் அல்லது அதற்கும் குறைவானவையே அறிவியல் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கின்றன என சமீப ஆய்வு தெரிவிக்கிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான இனங்கள், பெயரின்றி அருங்காட்சியகத்தில் முடங்கிக் கிடக்கின்றன; அவை, பெயர் சூட்டப்பட்டு, அறிவியல் புத்தகங்களில் இடம் பெறும் நாளை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கின்றன. இவ்வாறு பெயரிடப்படாத இனங்களைப் பற்றிய தகவல்களும், விளக்கப் படங்களும் வெப் சைட்டில் இருக்கின்றன. இவை வெளியீட்டுக்குத் தயாரான நிலையில் உள்ளன. அதிலிருந்து ஏதாவது ஒரு இனத்தை ஒருவர் தெரிந்தெடுத்து, 2,800 டாலரோ அதற்கும் அதிகமாகவோ நன்கொடை செலுத்தி அவர் விரும்பும் லத்தீன் பெயரை சூட்டலாம். புதிய இனங்களை, அறிவியல் ரீதியில் வகைப்படுத்தி பெயரிடுவதற்கும் அவற்றை பாதுகாப்பதற்கும் பணம் திரட்டுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
டீன் ஏஜ் திருமணம்
இந்தியாவில், இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர்களில் சுமார் 36 சதவீதத்தினர் 13-லிருந்து 16 வயதிற்குட்பட்டவர்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது சமீபத்திய தேசிய குடும்ப நல சுற்றாய்வு. மேலும், 17 முதல் 19 வயதிலுள்ள 64 சதவீத பெண்கள் ஏற்கெனவே ஒரு குழந்தைக்கு தாயாக அல்லது கர்ப்பமாக இருப்பதாய் அந்தச் சுற்றாய்வு வெளிப்படுத்துவதாக மும்பையில் வெளியாகும் ஏஷியன் ஏஜ் செய்தித்தாள் அறிவிக்கிறது. 20 முதல் 24 வயதிலுள்ள தாய்மார்களைவிட 15-லிருந்து 19 வயதிற்குட்பட்ட இளம் தாய்மார்களே பிரசவத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் இறப்பதற்கு இரண்டு மடங்கு சாத்தியமிருப்பதாக அந்த அறிக்கை சொல்கிறது. மேலும், கடந்த சில வருடங்களில் 15-24 வயதிலுள்ள இளைஞர்களுக்கு வரும் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்கள் இருமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்கள், ஒன்று பாலியல் விஷயங்களில் விழிப்புணர்வு இல்லாமை; மற்றொன்று, சகாக்களும் செய்தி நிறுவனங்களும் அளிக்கும் தவறான தகவல்கள். இவையே இப்பிரச்சினைகள் பூதாகாரமாக உருவெடுக்க செய்திருக்கின்றன என ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பரிகாரமே பலிவாங்கினால்?
“முப்பது வருடங்களுக்கு முன்பு, எகிப்தியர்களில் ஐந்து பேரில் மூவர், நீர்-நத்தைகளை அண்டி வாழும் ஒட்டுண்ணிகள் ஏற்படுத்தும் பில்ஹர்சியா எனும் பலவீனப்படுத்தும் நோயால் அவதிப்பட்டனர்” என தி எக்கானமிஸ்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது. பில்ஹர்சியாவைத் தடுக்கும் திட்டத்தில் நவீன மருந்துகளை உபயோகித்தது அநேக உயிர்களைக் காத்தது. எனினும், ஆரம்ப காலத்தில் இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட முறைகள், “லட்சக்கணக்கானோருக்கு ஹெப்படைட்டஸ்-சி எனும் கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்தியது; இப்படி, ஒருகாலத்தில் எகிப்தில் மாபெரும் கொலையாளியாய் விளங்கிய பில்ஹர்சியாவின் இடத்தை இந்த பயங்கர வைரஸ் பிடித்தது.” காரணம்? பில்ஹர்சியா வராமல் தடுப்பதற்கு உபயோகிக்கப்பட்ட ஊசிகள், மாற்றப்படாமல் “மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தப்பட்டன, எப்போதாவது ஒருமுறைதான் கொதிநீரில் சரிவர கழுவப்பட்டன. . . . இரத்தத்தில் ஹெப்படைட்டஸ்-சி வைரஸ் (HCV) இருப்பது 1988 வரை விஞ்ஞானிகளுக்கே தெரியாது” என்கிறது அந்தப் பத்திரிகை. “உலகிலேயே ஹெப்படைட்டஸ்-சி
வைரஸால் அநேகர் மரிப்பது” எகிப்தில்தான் என்பதை தற்போதைய கணக்கெடுப்பு காட்டுகிறது. கிட்டத்தட்ட 6 பேரில் ஒருவர் என்ற கணக்கில் அதாவது சுமார் 110 லட்சம் எகிப்தியர்கள் இவ்வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்; இதில், 70 சதவீதத்தினரின் கல்லீரல் கடுமையாய் பாதிக்கப்பட்டிருக்கிறது, 5 சதவீதத்தினர் இறந்திருக்கின்றனர். “டாக்டர்களுக்கு தெரிந்தவரை இதுதான் வைரஸ் மூலம் கடத்தப்படும் பயங்கரமான கொள்ளை நோய். இந்தப் பெரும் துயரத்திலும் ஆறுதலளிக்கும் விஷயம், பரவலான தடுப்பு திட்டம் மட்டும் செயல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் பில்ஹர்சியா இன்னும் அநேகரது உயிரைக் குடித்திருக்கும்” என இந்த தடுப்பு திட்டத்தைப் பற்றிய கட்டுரை சொல்கிறது.பலியாகும் பாலர்
“சாவிலிருந்து காப்பாற்ற வழிகள் இருந்தும், ஐந்து வயதுக்குட்பட்ட 30,500 சிறுவர்களும் சிறுமிகளும் . . . தினமும் . . . இறக்கின்றனர்” என ஐநா குழந்தைகள் நல அமைப்பு, த ஸ்டேட் ஆஃப் த உவார்ல்ட்ஸ் சில்ரன் 2000 என்ற தன் அறிக்கையில் சொல்கிறது. “கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சிறார்களில், 20 லட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும், 60 லட்சம் பேர் ஆயுதம் தாங்கிய சண்டைகளில் காயமுற்றதாக அல்லது ஊனமுற்றதாகவும், இன்னும் லட்சக்கணக்கானோர் அடிப்படை மனித உரிமைகள் அளிக்கப்படாமல் படுமோசமாக நடத்தப்படுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது” என இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. 1.5 கோடிக்கும் அதிகமான சிறார்கள் அகதிகள்; பத்து லட்சத்திற்கும் அதிகமான சின்னஞ்சிறுசுகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டவர்கள் அல்லது அநாதைகள். மேலும், 5-14 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 25 கோடி பிள்ளைகள் இன்று குழந்தை தொழிலாளிகள்; இவர்களில் 20 சதவீதத்தினர் ஆபத்தான சூழலில் வேலை செய்கின்றனர் எனவும் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் ஆய்வைப் பற்றி அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மாதமும் உலகெங்குமுள்ள சுமார் 10 லட்சம் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக விபசார தொழிலில் தள்ளப்படுகின்றனர்; 2,50,000 பிள்ளைகள் எச்ஐவி நோயால் தாக்கப்படுகின்றனர். இன்னும், 13 கோடி பிள்ளைகள் பள்ளி பக்கமே தலை வைத்து படுத்ததில்லையாம். இதில் மூன்றில் இரண்டு பங்கு சிறுமிகள்.
ருசியான வனவிலங்கு
“மாறிவரும் வாழ்க்கை பாணியும் உணவு பழக்கமும்” சீனாவின் வனவிலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாய் அமைந்திருப்பதாக டௌவுன் டு எர்த் என்ற பத்திரிகை சொல்கிறது. குறிப்பிட்ட ஒருசில வனவிலங்குகளின் மாமிசம் உடலுக்கு உகந்தது என்ற பரவலான கருத்து அம்மாமிசத்தால் தயாரிக்கப்படும் அறுசுவை உணவிற்கு பெரும் கிராக்கியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்திருப்பது பாம்புகள்; அதிலும், விஷமற்ற பாம்புகளைவிட விஷமுள்ளவற்றிற்கு இரண்டு மடங்கு விலை. காட்டுப் பன்றிகள், புனுகுப் பூனைகள், தேரைகள், தவளைகள், மலைப்பாம்புகள், பேங்கோலின்ஸ் என அழைக்கப்படும் எறும்புண்ணும் விலங்கினம், திபெத்திய மறிமான், லேசில் கிடைக்காத பறவைகள் ஆகியவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன. ருசிகரமான இவ்வுணவு வகைகள் அனைத்து சீன ஹோட்டல்களிலும் கிடைக்கின்றன. இதனால் இவ்விலங்கினங்களில் பல அழிந்து வருகின்றன; எனவே, அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய இனங்களின் பட்டியலில் இவை இப்போது இடம்பெற்றுள்ளன. இருந்தாலும், தங்கள் உணவகத்தில் கிடைக்கும் மாமிசம், ஒரிஜினல் வனவிலங்கு மாமிசம்தான் எனவும் வீட்டில் வளர்க்கப்பட்டவையோ, செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யப்பட்டவையோ அல்ல எனவும் சில ஹோட்டல் முதலாளிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கும் வாசகங்களை தங்கள் ஹோட்டல்களில் ஒட்டியிருக்கின்றனர். தரமான உணவை ரசித்து ருசிக்கும் சாப்பாட்டுப் பிரியர்களிடமிருந்து இந்த வனவிலங்குகளைப் பாதுகாக்க, “வனவிலங்கு கறியா, வேண்டவே வேண்டாம்” என்ற ஸ்லோகனை உபயோகிக்கும் திட்டத்தை சீன அரசாங்கம் அமல்படுத்தியிருக்கிறது.
மாசுபடும் இந்தியா
இந்தியாவில் சின்னஞ்சிறு வயதிலேயே அநேக அரும்புகள் புகைபிடிக்க ஆரம்பித்துவிடுவதாக மும்பையிலுள்ள டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் அறிக்கை செய்கிறது. பெற்றோரின் கவனிப்பின்றி விடப்பட்ட தெருவோரப் பிள்ளைகள் சராசரியாக 8 வயதிலும், பெற்றோருடைய கவனிப்பிலுள்ள பள்ளி செல்லும் பிள்ளைகள் 11 வயதிலும் புகைப்பதில் இன்பம் காண ஆரம்பிக்கின்றனர். அத்துடன், பெற்றோரால் அருமையாக வளர்க்கப்பட்ட, புகையிலையை ஏறெடுத்தும் பார்க்காத ‘தங்கமான’ பிள்ளைகள், மாசுபடுத்தும் பொருட்களை முகர்கின்றனர்; இது நாளொன்றுக்கு இரண்டு பாக்கெட் சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம் என்பதாக மும்பையின் மற்றொரு ஆய்வு வெளிப்படுத்தியது! தி ஏஷியன் ஏஜ் செய்தித்தாளில் அறிவிக்கப்பட்டபடி, உலகிலேயே படுமோசமாக மாசுபட்டுவரும் முதல் ஐந்து நகரங்களில் மும்பையும் டெல்லியும் இடம் பெறுகின்றன. மும்பை நகர தெருக்களை சுமார் 9,00,000 வாகனங்கள் வலம் வருகின்றன, ஒவ்வொரு நாளும் அந்த நகரத்திற்கு 3,00,000 வாகனங்கள் வந்து போகின்றன. இதனால் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்ணய அளவைவிட 600 முதல் 800 சதவீதம் அதிகளவு இந்நகரத்தில் காற்று மாசுபட்டிருப்பதாக அறிக்கை காண்பிக்கிறது.
தத்தளிக்கும் பறவைகள்!
“வட அமெரிக்காவிலுள்ள உயரமான அலுவலக கட்டிடங்களும் வானளாவிய தகவல் தொடர்பு சாதனங்களும் பறவைகளின் மௌன கொலையாளிகள். வீட்டு ஜன்னல்களிலும் உயரமான இக்கட்டிடங்களிலும் அவை மோதிக் கொள்வதால், இந்தக் கண்டத்தில் மட்டுமே வருடத்திற்கு பத்து கோடி பறவைகள் இறப்பதாக நம்பப்படுகிறது” என்கிறது கனடாவின் டோரான்டோவிலிருந்து வெளியாகும் த க்ளோப் அண்ட் மெயில் செய்தித்தாள். இரவு நேரங்களில், அலுவலகங்களில் அணைக்கப்படாமல் விடப்படும் விளக்குகள், இடம் பெயரும் பறவைகளை குழப்பி அவற்றின் பயணத் திறமைக்கு சவால்விடுகின்றன. இது, பெருகி வரும் பிரச்சினை என வல்லுனர்கள் சொல்கின்றனர். “இந்த கண்டத்தில் இப்பிரச்சினை இல்லாத இடமே இல்லை” என்கிறார் பறவையியலர் டேவிட் வில்லார்ட். டோரான்டோவின் ஆபத்து ஏற்படுத்தும் விளக்குகள் ஒழிப்பு எனும் திட்டத்தை ஆதரிப்போர், இரவிலே விளக்குகளை மறக்காமல் அணைத்துவிட்டு செல்லும்படி அலுவலக வேலையாட்களை அறிவுறுத்துகின்றனர்.
இதுமட்டுமா? டிஸ்கோக்களுக்கும் மற்ற பொழுதுபோக்கு ஸ்தலங்களுக்கும் அழைப்பு விடுக்கும் ஒளிக்கற்றைகள் ஆகாயத்தில் பாய்ச்சப்படுகின்றன; இப்படி வானில் வலம்வரும் வெளிச்சம், இரவில் நடமாடும் பிராணிகளை திசைதிருப்பிவிடுவதாக ஜெர்மனியில் வெளியாகும் ஃப்ராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜிமைன் ஸைட்டங் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. திசையறிந்து செல்லும் பறவைகள், வௌவால்கள் ஆகியவற்றின் திறமைக்கு இந்த விளக்குகளின் வெளிச்சம் இடைஞ்சலாக உள்ளன. இதனால் குழம்பிப்போகும் பறவைகளின் இடப்பெயர்ச்சி போக்கில் இடையூறு ஏற்படுகிறது, திசை மாறிவிடுகிறது, அவற்றுக்கு கவலையால் “அழுகை” வருகிறது, இடம் பெயர்ந்து செல்லவே முடியாமல் போகிறது. சிலசமயங்களில் இப்படி பாதை மாறிய பறவைகள் பல மணிநேரம் வானில் வட்டமடித்துவிட்டு தரையிறங்குகின்றன; அவை பலவீனமாய் இருந்தாலோ செத்தேவிடுகின்றன. எனவே, ஆகாயத்தில் ஒளிக்கற்றைகளை பாய்ச்சுவதற்கு தடை விதிக்கும்படி ஃப்ராங்க்ஃபர்ட்டிலுள்ள பறவைகள் பாதுகாப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.