Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

ஊனமான ஊழியர் “உடல் வாடினாலும் உள்ளம் வாடவில்லை” (பிப்ரவரி 22, 2000) என்ற கட்டுரையில் கென்ஸ்டன்ட்டீன் மெரோஸாஃப்பின் வாழ்க்கை சரிதையை வாசித்ததும், மடைவெள்ளம் போல் பெருகிய கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தது நெஞ்சம். நான் தனிமரமாய் நிற்கும் ஒரு தாய், இரண்டு பிள்ளைகளை வளர்க்கும் பாரம் என் தலையில். அது அவ்வளவு சுலபமாக இல்லை, அதோடு இதற்கு ஒரு விடிவே இல்லாதது போல தோன்றும். ஆனால், கென்ஸ்டன்ட்டீன் படும் கஷ்டத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது என்னுடையது ஒன்றுமல்ல என தோன்றுகிறது!

ஐ., ரஷ்யா

நான் முழுநேர ஊழியனாக இருக்கிறேன். விழித்திரையில் கோளாறு ஏற்பட்டதால் வாசிக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன். வாசிப்பதென்றால் எனக்கு உயிர், அதனால் அடிக்கடி ஏமாற்றமடைந்து சோர்ந்துவிடுவேன். ஆனால் கென்ஸ்டன்ட்டீன் பற்றி சிந்திக்கும்போது என்னுடைய பிரச்சினையைப் பற்றி புலம்பவே கூடாது என உணருகிறேன். மலைபோன்ற பிரச்சினைகள் அவருக்கு இருந்தும் அவற்றை சமாளித்து, முழுநேர ஊழியராக சேவை செய்கிறார். யெகோவா எப்பேர்ப்பட்ட பலத்தை தருகிறார்!

டபிள்யூ. டபிள்யூ., இந்தியா

எனக்கு 16 வயது. இடுப்புக்கு கீழே பக்கவாதம். கென்ஸ்டன்ட்டீனை போல தினமும் கஷ்டப்படுகிறேன். ஆனால், ஊனமுற்றிருந்தாலும் கடவுளை சேவிப்பதில் அவருக்கும் ஒரு பங்கு இருப்பதை அந்தக் கட்டுரை காண்பித்தது. என்னால் அவ்வளவு தெளிவாக கேட்க முடியாவிட்டாலும் அவ்வளவு நன்றாக பார்க்க முடியாவிட்டாலும், நான் தனியாக ஒரு ‘ஸ்டூலில்’ அமர்ந்து சுவரில் சாய்ந்தபடி ஊழியம் செய்கிறேன். கென்ஸ்டன்ட்டீனுடைய வைராக்கியத்தையும் பக்தியையும் மெச்சுகிறேன்.

டி. எஃப்., கோட் டீவ்வார்

நவீன அடிமைத்தனம் படிப்பவரின் நெஞ்சை நெகிழ வைக்கும் தொடர் கட்டுரை “நவீன அடிமைத்தனம்​—⁠அஸ்தமனம் அருகில்” (மார்ச் 8, 2000), அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “உடன் மானிடரை அடக்கி ஒடுக்கும் மனித நேயமற்ற இந்த கொடிய செயலை ஆதரிக்கும் எவரும் உண்மை கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது” என்று கூறியிருக்கிறது. கிறிஸ்தவர்கள் எந்தளவுக்கு இந்த விஷயத்திலிருந்து விலகியிருக்க முடியும்? மேற்கத்திய நாடுகளில், பொருட்கள் யாரால் தயாரிக்கப்பட்டது என்பதை ஊர்ஜிதப்படுத்துவது மிகவும் கடினம்.

கே. ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்

அந்தக் கட்டுரை நேரடியாக சுரண்டிப்பிழைக்கும் சுயநலம் பிடித்த முதலாளிகளையும் மற்றவர்களையும் பற்றி பேசுகிறது. ஒவ்வொரு பொருளும் எப்படி, யாரால் தயாரிக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து கிறிஸ்தவர்கள் வாங்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் ஒரு பொருள் அடிமைத் தொழிலாளியால் செய்யப்பட்டது என்று அறிந்திருக்கும் பட்சத்தில், அதை வாங்குவதும் வாங்காமல் இருப்பதும் கிறிஸ்தவர்களுடைய தனிப்பட்ட தீர்மானம். எல்லா விஷயங்களிலும் கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு முன்பாக நல்மனசாட்சியை காத்துக்கொள்வது அவசியம். (1 பேதுரு 3:16)​—⁠ED.

நான் 16 வயது பெண், உங்கள் கட்டுரை என்னை கலங்க வைத்துவிட்டது. நவீன அடிமைத்தன கஷ்டத்திலிருக்கும் சிறுமிகள் சிலரை எனக்கு தெரியும். அவர்களை பணயமாக வாங்கியிருக்கும் வீட்டார் தரும் வேலை பயங்கரம். அவர்களிடம் பாசம் காட்டுவதோ அவர்களுக்கு கல்வியோ எதுவுமே கிடையாது. யெகோவா தேவன் வெகு சீக்கிரத்தில் இந்தக் கொடுமைக்கு முடிவு கொண்டு வரப்போகிறார் என்பதை பைபிளில் படிக்கும்போது எனக்கு நிம்மதியளிக்கிறது.

எ. ஓ., புரூக்கினா ஃபாஸோ

தற்கொலை “தற்கொலை​—⁠யார் அதிக ஆபத்தில்?” (பிப்ரவரி 22, 2000) என்ற தொடர் கட்டுரை எனக்கே எழுதியது போல இருந்தது. எட்டு மாதங்களுக்கு முன் எனது தாயார் திடீரென காலமானார். அந்த சமயத்தில் தாயின் அருகே எனது தந்தை இல்லாததால் குற்றவுணர்வு அவரை வாட்டியது. தனக்கு உயிர் வாழ பிடிக்கவில்லை என்று அடிக்கடி என்னிடம் புலம்புவார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இந்தக் கட்டுரை என் தந்தைக்கும் எனக்கும் அதிக பிரயோஜனமாக இருந்தது.

ஆர். இஸட்., ஜெர்மனி

இரண்டு வருடங்களுக்கு முன் எனது தாத்தா தற்கொலை செய்து கொண்டார். தன் மனைவியை இழந்த துக்கம் தாளாமல் பித்துப்பிடித்தவராக இருந்தார். அவர் ஏன் அப்படி செய்தார் என்பதை புரிந்துகொள்ள உங்கள் கட்டுரை உதவியது.

எ. எம்., ஐக்கிய மாகாணங்கள்

48 வயதான என் சகோதரர் ஜனவரியில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய நினைவு ஆராதனைக்கு மறுநாள் என் தந்தை​—⁠அவர் ஒரு யெகோவாவின் சாட்சி அல்ல​—⁠இந்தக் கட்டுரை வெளிவந்த விழித்தெழு! இதழை எங்கள் வீட்டு தபால் பெட்டியில் கண்டார். அவருக்கு துக்கம் தொண்டையை அடைக்க, கண்ணீர் மல்க அதை எங்களிடம் காட்டினார். எங்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளித்தமைக்கு ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பி. ஜே., ஐக்கிய மாகாணங்கள்

எங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் கடந்த வருடத்தில் மட்டும் ஆறு பேர் தற்கொலை செய்துகொண்டனர். இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால் தற்கொலையை பற்றி விழிப்புணர்வோடு இருக்கும்படி அனைவரும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். பொதுவாக எங்களுடைய செய்தியை ஏற்காத இடங்களில் இந்த இதழை நாங்கள் அளித்தோம். நாங்கள் செய்தியை சொல்லி முடிக்கும் முன்பே சிலர் கையிலிருந்து பத்திரிகையை எடுத்துக்கொண்டனர்!

சி. சி., ஐக்கிய மாகாணங்கள்

நான் இளைஞனாக இருந்தபோது, என்னுடைய தந்தை இறந்தபின் இரண்டு தடவை தற்கொலை செய்துகொள்ள முயன்றேன். “தற்கொலை” என்ற வார்த்தையை கேட்டாலே சிலர் மானக்கேடாக நினைக்கிறார்கள். இதை விழித்தெழு! இதழின் அட்டை பக்கத்தில் போட்டிருந்ததற்கு நன்றி. நேரடியாகவும் யதார்த்தமாகவும் புரிந்துகொள்ளும் வகையிலும் இந்தக் கட்டுரை இருந்தது.

எம். ஜி., பிரான்ஸ்

நட்புத் தொல்லை “இளைஞர் கேட்கின்றனர் . . . என் தோழனே என்னை நோகடித்தது ஏன்?” (பிப்ரவரி 22, 2000) என்ற கட்டுரை எனக்கு பிரயோஜனமாக இருந்தது. ஆறரை வருடங்களாக சிறந்த சிநேகிதியாக விளங்கிய என்னுயிர் தோழி என்னை நோகடித்து விட்டாள். இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டிருந்த ஆலோசனைகளை வைத்து நாங்கள் இருவரும் பிரச்சினையை அமைதியாகவும் சமாதானத்துடனும் கலந்து பேசினோம். அதன் விளைவாக முன்பிருந்ததைவிட இப்போது அதிக நெருக்கமான சிநேகிதர்களாகி விட்டோம்.

எம். எல்., ஐக்கிய மாகாணங்கள்