Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காப்பர் பள்ளத்தாக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறது!

காப்பர் பள்ளத்தாக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறது!

காப்பர் பள்ளத்தாக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறது!

மெக்ஸிகோவிலிருந்து விழித்தெழு! நிருபர்

காப்பர் பள்ளத்தாக்கு. வடக்கு மெக்ஸிகோவிலுள்ள சியொரா மாடரே ஓக்ஸிடென்டல் மலைத்தொடரில் இந்த இயற்கை பேரதிசயம் அமைந்துள்ளது. இந்த காப்பர் பள்ளத்தாக்கு சுமார் 50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையது; இது கோஸ்டா ரிகாவின் பரப்பளவிற்கு சமம்.

காப்பர் பள்ளத்தாக்கு என்றதும் ஒரேயொரு பள்ளத்தாக்கு மட்டுமே இருப்பதாக நினைத்து ஏமாந்து போகாதீர்கள். இதில் சங்கிலி தொடர்போல் 20 பள்ளத்தாக்குகள் இணைந்திருக்கின்றன. ஒரேவொரு பள்ளத்தாக்குக்கு காப்பர் பள்ளத்தாக்கு என பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாக அவை எல்லாமே காப்பர் பள்ளத்தாக்கு என்றே அழைக்கப்படுகின்றன. இவற்றுள் குறைந்தது மூன்று பள்ளத்தாக்குகளாவது, ஐக்கிய மாகாணங்களிலுள்ள கிராண்ட் கேனியன் பள்ளத்தாக்கைவிட ஆழமானவை என்கிறார் ரிச்சர்ட் ஃபிஷ்சர் என்ற ஆய்வாளர். a

இந்த காப்பர் பள்ளத்தாக்கு பரந்துவிரிந்து கிடக்கும் மாபெரும் பள்ளத்தாக்கு. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இதன் அழகை பார்த்து பூரிப்படைவதற்கு வசதியாக அநேக பார்வையாளர் தளங்கள் உள்ளன. ஆனால் அநேகரால் எல்லாவற்றிற்கும் செல்ல முடியாது. காப்பர், சின்ஃபோரோஸா, யூரிகி பள்ளத்தாக்குகளை நோக்கிய வண்ணம் அமைந்திருக்கும் தளங்களிலிருந்து அவற்றை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். இங்கிருந்து, நம் கண்களை கொள்ளைகொள்ளும் அழகிய காட்சிகளை காணலாம். இருப்பினும், டேவேசடாரோ தளம்தான் மிகச் சிறந்த தளம் என்பது சிலருடைய கருத்து; காரணம், இங்குதான் காப்பர், யூரிகி, டாராரீக்வா பள்ளத்தாக்குகள் ஒன்றாக சங்கமிக்கின்றன.

வேறுபடும் சீதோஷணம்

காப்பர் பள்ளத்தாக்கின் உயரம் ஒரு சில இடங்களில் குறைவாகவும் திடீரென்று உயரமாகவும் மாறுவதால், அதன் சீதோஷண நிலையும் தாவர வளர்ச்சியும் மாறுபடுகின்றன. முதன்முதலில் மிகெல் க்லீசன் தன் குழுவினரோடு யூரிகி பள்ளத்தாக்கை ஆராய்கையில் இதை கவனித்தார். மெஹிகோ டெஸ்கோனோஸிடோ என்ற பத்திரிகையில் அவர் இவ்வாறு எழுதினார், “நாங்கள் கீழே இறங்க இறங்க உஷ்ணம் அதிகரித்தது. மேலே அடர்ந்து வளர்ந்திருந்த பைன் மரங்களில் மருந்துக்குக்கூட ஒன்றை கீழே பார்க்க முடியவில்லை; மாறாக, வெப்பமண்டல தாவரங்கள்தான் நிறைந்திருந்தன. வாழை, அவொகெடொ, ஆரஞ்சு போன்ற தாவரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. இவையெல்லாம் நிஜந்தானா என ஒரு நிமிடம் அதிசயித்தேன். சுருங்க சொன்னால், கொஞ்ச நேரத்திலேயே குளிர் பிரதேசக் காடுகளிலிருந்து அதற்கு அருகிலே அயலகத்தார் போல அமைந்திருக்கும் வெப்பமண்டல காடுகளுக்குச் சென்றது இதுதான் என் வாழ்க்கையில் முதல் முறை.”

பள்ளத்தாக்குகளின் மேட்டு நிலப்பகுதிகளில், 15 வகை பைன் மரங்களும் 25 வகை ஓக் மரங்களும் உள்ளன. காப்பர் பள்ளத்தாக்கில் பாப்லர், ஜுனிப்பர் மரங்களுக்கும் பஞ்சமில்லை. கோடைகாலத்தில் அந்த மலைப்பகுதி முழுவதிலும் கண்ணுக்கு ‘விருந்தளிக்கும்’ வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றில் சில வாய்க்கும் ‘விருந்தளிக்கின்றன.’ ஆம், அங்கு வாழ்பவர்கள் இவற்றை உணவாகவும், இயற்கை மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். இங்கு வசிப்போர் தாராவுமாரா என அழைக்கப்படுகின்றனர். இங்கே, கடல் மட்டத்திலிருந்து 1,800 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருக்கும் மலைப் பகுதிகளின் சீதோஷண நிலை திடீர் திடீரென மாறிவிடுகிறது. மிதமான வெப்பத்திலிருந்து அதிக குளிர் வரை வானிலை வருடத்தில் மாறி மாறி வருகிறது. குளிர்காலத்தில் மிதமான மழை பொழிவதோடு, சில சமயத்தில் பனியும் பெய்கிறது.

சுற்றுலாப் பயணிகள் இன்னும் சற்று கீழே இறங்குகையில், வித்தியாசப்பட்ட மரங்களையும், கள்ளிச்செடிகளையும் பார்க்கின்றனர். அதற்கும் கீழே நிலவும் மிதவெப்பமான சீதோஷணநிலை மிக அருமை. குளிர் காலத்தில் இங்கே சராசரி தட்பவெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ். ஆனால் வெயில் காலத்தில் இங்கு இருப்பது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் அப்போது கொளுத்தும் வெப்பம் 35 முதல் 45 டிகிரி செல்சியஸாக இருந்தாலும், மழை கொட்டோ கொட்டு என கொட்டும். அங்குள்ள ஆறுகளெல்லாம் பெருக்கெடுத்து ஓடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த அழகிய சூழலுக்கு சிகரம் வைத்தார்போல் விளங்குவது இரண்டு பிரமாண்டமான நீர்வீழ்ச்சிகள். உலகிலுள்ள உயரமான நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றான 453 மீட்டர் உயரம் கொண்ட பியேட்ரா போலேடா நீர்வீழ்ச்சியும், 246 மீட்டர் உயரமான பாசாசியேசிக் நீர்வீழ்ச்சியும்தான் அவை.

விலங்குகளின் சரணாலயம்

காப்பர் பள்ளத்தாக்கு பல்வேறு மிருகங்களுக்கு இருப்பிடமாக திகழ்கிறது. இதுவரை மெக்ஸிகோவில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் பாலூட்டிகளில் 30 சதவீதமானவை இந்த பகுதியில் குடியிருப்பதாய் சொல்லப்படுகிறது. கருங்கரடி, ப்யூமா, நீர் நாய், வெண்வால் மான்கள், மெக்ஸிகன் ஓநாய், காட்டுப் பன்றி, பாப்கேட், ராக்கூன், வளைக்கரடி, ஸ்ட்ரைப்ட் ஸ்கன்க், வெளவால், அணில், முயல் போன்ற சில விலங்குகள் அங்கிருக்கின்றன.

சுமார் 400 வகை பறவைகளுக்கு இந்த காப்பர் பள்ளத்தாக்கே வீடு. பொன் கழுகு, பெரெக்ரைன் வல்லூறு போன்ற பறவை இனங்களும் இதில் அடங்கும். வடக்கு அமெரிக்காவுக்கும் மத்திய அமெரிக்காவுக்கும் இடையே இந்தப் பள்ளத்தாக்கு அமைந்திருப்பதால், இடம்பெயர்ந்து செல்லும் பறவைகள் பனிகாலத்தை கழிப்பதற்கான முக்கிய பகுதியாக இது விளங்குகிறது. மற்ற பறவைகள் தங்கள் பயணத்தின் நடுவில் சற்று இளைப்பாற இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கின்றன.

உலகிலுள்ள எல்லா இயற்கை அதிசயங்களும் அவற்றைப் படைத்த யெகோவா தேவனுக்கு புகழ் சேர்க்கின்றன; அதில் இந்த காப்பர் பள்ளத்தாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தாவீது ராஜா ஒருமுறை சொன்னதுபோல, “மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்.”​—⁠1 நாளாகமம் 29:⁠11.

[அடிக்குறிப்பு]

a யூரிகி பள்ளத்தாக்கின் ஆழம் 1,879 மீட்டர்; சின்ஃபோரோஸா பள்ளத்தாக்கின் ஆழம் 1,830 மீட்டர்; பேடோபிலஸ் பள்ளத்தாக்கின் ஆழம் 1,800 மீட்டர். கிராண்ட் கேனியனின் ஆழம் சுமார் 1,615 மீட்டர்.

[பக்கம் 18-ன் பெட்டி/படம்]

ரயில் பயணத்திலிருந்து

சிஹுவாஹுவா-பசிபிக் ரயில்வே, ஐ.மா.-மெக்ஸிகோ எல்லையிலுள்ள ஒஜினாகாவில் துவங்கி பசிபிக் பெருங்கடலிலுள்ள டோபோலோபாம்போ துறைமுகம் வரையிலும் சுமார் 941 கிலோமீட்டருக்கு நீண்டிருக்கிறது. அதன் பாதையில்தான் காப்பர் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்தப் பிரதேசத்தின் இயற்கை அமைப்பில் அவ்வளவு பயங்கரமான மேடு பள்ளங்கள் இருப்பதால் இங்கு ரயில் பாதையை அமைத்ததே என்ஜினியர்களின் சாதனை என்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் பாதையில் பயணிக்கும் ரயில் சுமார் 37 பெரிய பாலங்களை கடக்க வேண்டும். அந்தப் பாலங்களிலேயே மிக நீளமானது ஃப்விர்டா நதியை கடக்கும் 500 மீட்டர் நீளமுள்ள பாலம்தான். சினெபாஸ் நதியில் கட்டப்பட்டுள்ள 90 மீட்டர் உயரமுள்ள பாலம்தான் அவற்றில் அதிக உயரமான பாலம்.

அந்த ரயில் 99 சுரங்கப் பாதைகளை கடந்து செல்கின்றது. 1,810 மீட்டர் நீளமுள்ள எல் டெஸ்கன்ஸோ சுரங்கப் பாதைதான் அவற்றிலேயே நீளமான சுரங்கப் பாதை. இந்த சொகுசுப் பயணத்தின்போது பயணிகள் காப்பர் பள்ளத்தாக்கின் ஒப்பற்ற அழகை கண்டு ரசிக்கலாம்.

[பக்கம் 15-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

அமெரிக்க ஐக்கிய மாகாணம்

மெக்ஸிகோ

சிஹுவாஹுவா

ஒஜினாகா

சிஹுவாஹுவா

காப்பர் பள்ளத்தாக்கு பகுதி

லா ஹுண்டா

க்ரீல்

டிவிசேடெரோ

டோபோலோபாம்போ

[பக்கம் 15-ன் படங்கள்]

பாசாசியேசிக் நீர்வீழ்ச்சி

[படத்திற்கான நன்றி]

© Tom Till

[பக்கம் 16-ன் படங்கள்]

டிவிசேடெரோ பார்வைத் தளம்

[படத்திற்கான நன்றி]

© Tom Till

[பக்கம் 17-ன் படங்கள்]

பள்ளத்தாக்கே தாராவுமாரா மக்களின் குடியிருப்பு

[படத்திற்கான நன்றி]

George Hunter/H. Armstrong Roberts

[பக்கம் 17-ன் படங்கள்]

ரீக் ஏரி

[படத்திற்கான நன்றி]

George Hunter/ H. Armstrong Roberts