Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கொட்டாத தேனீக்களை தேடி வாரீர்!

கொட்டாத தேனீக்களை தேடி வாரீர்!

கொட்டாத தேனீக்களை தேடி வாரீர்!

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

தேனீக்கள் எப்போதுமே படு பிஸிதான். அவை வசந்த கால ஆரம்பத்தில், சூரியன் இதமாக ஒளிக்கதிர்களை வீசிக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு பூவிலிருந்து மறு பூவிற்கு மின்னல் வேகத்தில் பறந்து சென்று தேனை உறிஞ்சுவதை பார்த்திருக்கிறீர்களா? அவ்வாறு பறக்கும்போது அவை ரீங்கரிப்பதை ரசித்து அதில் சொக்கியிருக்கிறீர்களா? ஆம், இந்த பூச்சிகளின் அழகே அழகுதான். என்ன, அவற்றின் கொடுக்குதான் சுரீரென்கிறது!

ஆனால், தேனீக்களுக்கு கொடுக்கே இல்லை என்றால்! ஆம், நம்மைக் கொட்டாத தேனீக்களும் உலகில் இருக்கின்றன. இவை ஆஸ்திரேலிய கொடுக்கில்லா தேனீக்கள் என அழைக்கப்படுகின்றன. கிழக்கு ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் இவை காணப்படுகின்றன. கொடுக்கில்லாத இத்தேனீக்களின் நீளம் குறைந்தபட்சம் 4 மில்லிமீட்டர். அவற்றின் நிறம் அட்டை கருப்பு; ஆனால் முகத்திலும் உடலின் பக்கவாட்டிலும் இருக்கும் அடர்த்தியான வெள்ளை முடிகளோ அவற்றின் அழகிற்கு அழகு சேர்க்கின்றன. இத்தேனீக்களின் உடற்பகுதி பல பிரிவுகளாக இருக்கும். அப்பிரிவுகளின் மத்திப பகுதியில் பெரும்பாலான தேனீக்களுக்கு சிறுசிறு புள்ளிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இத்தேனீக்களில் குறைந்தபட்சம் பத்து இனங்கள், ஆஸ்திரேலியாவில் வடக்குத் தெற்காக க்வீன்ஸ்லாந்திலிருந்து நியூ சௌத் வேல்ஸ் வரையுள்ள கடலோரப் பகுதிகளில் ஜம்பமாக உலா வருகின்றன. அக்கண்டத்தின் வடக்கு வெப்பமண்டல பகுதிகளிலும் இவை காட்சியளிக்கின்றன.

இந்த தேனீக்கள் சேகரித்து வைத்திருக்கும் தேனை அவற்றின் கூட்டிலிருந்து எடுப்போருக்கு எவ்வளவு சுலபம் என சிந்தித்துப் பாருங்கள். இதைப் பற்றி தேனீ வளர்ப்பவர் ஒருவர் சொல்கிறார்: “[மற்ற தேனீக்களின்] விஷயத்தில், முகமூடி, கழுத்தை மூடும் ஸ்வெட்டர் எல்லாம் அணிந்துகொள்ள வேண்டியிருக்கும்; ஆனால் இவற்றின் [கொடுக்கில்லா தேனீ] விஷயத்தில், நான் எதையுமே அணிய வேண்டியதில்லை. தேன்கூட்டைத் திறந்து விட்டுவிட்டு ஐந்து நிமிடத்திற்கு அங்கேயே நின்றால்கூட, என்னை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், அவை பாட்டுக்கு அவற்றின் வேலையைச் செய்துகொண்டிருக்கும்.”

இவற்றின் கூடுகள் மற்ற தேனீக்களின் கூடுகளைவிட வித்தியாசமானவை. இவை பெரும்பாலும் ‘நெஸ்ட்ஸ்’ என அழைக்கப்படுகின்றன. பொதுவாக மற்ற தேனீக்கள் அறுகோண தேன்கூடுகளில் தேனையும் மகரந்தத்தையும் சேகரித்து வைக்கும். ஆனால் இந்த தேனீக்கள் சிறிய சிறிய, முட்டை வடிவ பானைகளை கொத்துக் கொத்தாக கட்டி, அவற்றில் தேனையும் மகரந்தத்தையும் சேகரிக்கின்றன. ஒரு பானை நிரம்பியவுடன் அது மூடப்படுகிறது, பிறகு அதைச் சுற்றி மற்ற பானைகள் அதேபோன்று கட்டப்படுகின்றன.

கூட்டிற்குள்

இப்போது இந்த கூட்டிற்குள்ளே கொஞ்சம் எட்டிப் பார்ப்போம். அடேயப்பா, இதில் சுமார் 15,000 தேனீக்கள் கூட்டுக் குடும்பம் நடத்துகின்றன. இவை கொட்டாது என்பது உண்மைதான், ஆனாலும் கவ்விப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இவற்றுக்கு தாடை இருக்கிறது, ஜாக்கிரதை!

வேறு பக்கம் திரும்பினால், என்ன ஆச்சரியம்! எல்லா தேனீக்களும் பிஸியாக வேலை செய்துகொண்டிருக்கின்றன. ஒரு குழுவாக சேர்ந்து ஒற்றுமையாக வேலை செய்கின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் தன் வேலை என்ன, அதை எப்படி செய்ய வேண்டும், எங்கு செய்ய வேண்டும் என நன்றாக தெரியும். அந்த வேலையில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கும் ஒரு தேனீயை கவனிப்போம். அது அந்த தேன் பானைகளுக்கு அழகாக வடிவம் கொடுத்து, பாலிஷ் செய்கிறது. அதுவும், கொடுக்கப்பட்டிருக்கும் ப்ளூப்ரின்ட்டின்படி அச்சுப்பிசகாமல் செய்ய வேண்டும் என்பது போல மிகவும் ஜாக்கிரதையாக செய்கிறது. அதே சமயத்தில், சற்று முன்பு தேனால் நிரப்பப்பட்ட பானைகளை நான்கு தேனீக்கள் மூடி சீல் வைக்கின்றன. இந்த பானைகளை ஒரு பெரிய முப்பரிமாண சட்டத்தில் சரியான அளவில் கட்டுகின்றன. கூடுகளில் சேகரித்து வைக்கப்படும் தேனின் சுமையை தாங்கும் அளவிற்கு சட்டமும்சரி பானைகளும்சரி சரியான அளவிலும் சரியான விதத்திலும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்படுகின்றன.

இப்போது நாம் கட்டிடத்தின் அடுத்த பகுதிக்கு செல்வோம். மற்ற தேனீக்களைவிட உருவத்தில் சற்று பெரிதாக உள்ள ஒரு தேனீயை கவனியுங்கள். அதுதான் மகிமை பொருந்திய மகாராணி. அவளுக்கு கொள்ளை அழகு! அவளுடைய பளபளக்கும் கருமை நிறமும் பொன்னிற வட்டங்களும் அவளின் அழகை கூட்டுகின்றன. அவளைச் சுற்றியுள்ள வேலைக்காரர்களோ பம்பரமாய் சுழல்கின்றனர். அவளுக்காக தயாரிக்கப்பட்டிருக்கும் 60 அறைகளில் இப்போது முட்டைகளை இட துவங்குகிறாள். அவள் பார்த்துப் பார்த்து மிக கவனமாக முட்டைகளை இடுகிறாள். இதைப் பார்க்கும்போது ஒரு அன்பான தாய் தன் குழந்தையை கவனமாக தொட்டிலில் படுக்க வைக்கும் காட்சி நம் நினைவுக்கு வருகிறது. அவ்வாறு முட்டைகளை இட்டவுடன் அவளுக்கு அருகிலுள்ள மற்ற வேலையாட்கள் உடனடியாக அந்த அறைகளை லாவகமாய் மூடுவதை கவனியுங்கள். சில நிமிடங்களுக்குள் வேலை முடிந்துவிடுகிறது.

முட்டை பொரிக்கையில்

முட்டை பொரிக்கையில், அதிலிருந்து வெளிவரும் சின்னஞ்சிறிய குஞ்சு (அல்லது லார்வா) அதற்கென தயாராக வைக்கப்பட்டிருக்கும் உணவை சாப்பிடுகிறது. அது கொஞ்சம் பெரிதான பிறகு, ஒருவகை மெழுகாலான அந்த அறையை உடைத்துக்கொண்டு வெளிவந்து பட்டுப்போன்ற நாரை தன்மேல் சுற்றிக்கொள்கிறது. இது குக்கூன் என்று அழைக்கப்படுகிறது. அந்த குஞ்சு (ப்யூப்பா என்ற கட்டத்தைத் தாண்டி) தேனீயாக வளருவதும் இந்த குக்கூனில்தான். அது வெளிவந்தபின், மற்ற தேனீக்கள் அதை மிகவும் பத்திரமாக கவனித்துக் கொள்கின்றன. சில நாட்களில் இது சுயமாகவே வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அது உடைத்துக்கொண்டு வெளிவந்த மெழுகாலான அறை என்ன ஆகிறது? அது சேகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. குக்கூனிலிருந்து வெளிவந்த தேனீக்கு அது இனி தேவைப்படாது. அதை அப்படியே விட்டுவிட்டால், இவை சும்மா இடத்தை அடைத்துக்கொள்ளும். ஆகவே மற்ற வேலைக்கார தேனீக்கள் இந்த குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்தி விடுகின்றன.

கொடுக்கில்லா தேனீக்களில் பலவகை தேனீக்கள், செர்யூமென் என்றழைக்கப்படும் ஒருவகை கட்டுமானப் பொருளை தயாரிக்கின்றன. எப்படியெனில், தேனீக்களின் உடலிலும் ஒருவித மெழுகு சுரக்கிறது; அதே சமயத்தில் இத்தேனீக்கள் நாடிச்செல்லும் மரம் செடி கொடிகளிலிருந்தும் ரெசின் எனப்படும் பசையும் மெழுகும் கிடைக்கின்றன. இவை யாவும் சேர்ந்து செர்யூமென் தயாராகிறது. இத்தேனீக்கள் வசிக்கும் மாளிகையின் தூண், விட்டம், குறுக்குத்தூண் போன்ற எல்லாவற்றையும் கட்டுவதற்கு இதுவே பயன்படுகிறது. சட்டத்தில் பானைகளை செய்யும்போது, தேனீக்கள் பானைகளுக்குள் சுற்றி சுற்றி வந்து செர்யூமெனால் மெழுகி, அதை அழுத்தி சட்டத்துடன் கெட்டியாக்குகின்றன. இவ்வாறு அந்தப் பானைகளை அழகாக வடிவமைக்கின்றன. பிறகு அந்த பானைகளில் தேனும் மகரந்தமும் நிரப்பப்பட்டு அவை மூடப்படுகின்றன. இத்தேனீக்கள், பருவ காலங்களில் தாவரங்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதையும் பருவ கால வானிலையால் வரும் அபாயங்களையும் இயல்பாகவே நன்கு அறிந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, அவை தொடர்ந்து உயிர்வாழ, உணவை சேகரிப்பதுடன் அதை பாதுகாக்க வேண்டியதையும் அறிந்திருப்பதுபோல் தெரிகிறது.

தேனீக்கள் கட்டுமானப் பொருட்களையும், தேனையும், மகரந்தத்தையும் சேகரிப்பதற்காக தங்களுடைய கூட்டை விட்டு பறந்து செல்கின்றன. அவை கூட்டைவிட்டு வெளியே சிறந்த பைலட்டுகளாக பறக்கவும் சரியான திசையில் பறக்கவும் தேர்ச்சி பெற்றுவிடுகின்றன. அத்துடன் இந்த தேனீக்கள் எதை சேகரிக்க வேண்டும் அதை எங்கிருந்து சேகரிக்க வேண்டும் என்றும் துல்லியமாக அறிந்திருக்கின்றன.

புதுமனை புகுதல்

தேனீக்கள் கூட்டம் பெருகப் பெருக, கூடு நிரம்பி வழிய ஆரம்பிக்கிறது. இப்போது என்ன செய்வது? “புது வீடு கட்ட வேண்டும்” என்ற செய்தி அங்குள்ள எல்லா தேனீக்களுக்கும் அனுப்பப்படுகிறது போலும். பிறகு, அடுத்த கூட்டை கட்டுவதற்கான இடம் தேடும் படலம் ஆரம்பிக்கிறது. சில சமயங்களில், உயரமான பகுதியில் இருக்கும் பொந்துகளை பரிசோதிப்பதற்காக ஒரு குழு அங்கு செல்கிறது. அடுத்து தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களை பரிசோதிப்பதற்கு “இன்ஜினியர்கள்” செல்கின்றனர். பொதுவாக 30 முதல் 50 வல்லுநர்கள் அந்த குழிவான பகுதியின் உட்புறத்தை அநேக மணிநேரம் செலவிட்டு ‘வியர்வை சிந்த’ சோதிக்கின்றனர். இதைப் பார்க்கும்போது, எந்த இடத்தில் எதை கட்ட வேண்டும் என்பதை இன்ஜினியர்கள் கோடுபோட்டோ குச்சிகளைக்கொண்டோ குறித்து வைத்து வேலை செய்வதுபோல தெரிகிறது. தெரிந்தெடுத்த அஸ்திவாரம் அபாரமாக இருக்கிறது என தீர்மானித்த பிறகு, அதை மேலிடத்திற்கு அறிக்கை செய்வதற்காக அவர்கள் வீடு திரும்புகின்றனர். அடுத்த கட்டமாக, பெரும்பாலும் 48 மணிநேரத்திற்குள்ளாகவே “கட்டிடக்கலைஞர்கள்” அந்த இடத்திற்கு விரைகின்றனர். அந்தக் குழுவில் ஆயிரத்திற்கும் அதிகமான தேனீக்கள் இருக்கும்; ஆனால் ராணி அதில் இருக்க மாட்டாள். வேலைக்கார தேனீக்கள் உடனடியாக களத்தில் இறங்குகின்றன. அதற்காக, அவற்றின் கூட்டிலிருந்து கட்டுமானப் பொருட்களையும் உணவையும் இந்த புதிய கூட்டிற்கு எடுத்து வருகின்றன.

இந்த புதுமனையில் புதிய ராணி அடியெடுத்து வைப்பதற்குள், இனப்பெருக்க கூடுகள் ரெடி ஆகவேண்டும். அதுவும் சரியாக சுமார் 80 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் இருக்கும் விதத்தில் கட்ட வேண்டும். முட்டைகளை சரியான வெப்பநிலையில் வைக்க வேண்டியதை இந்த புத்திசாலி தேனீக்கள் அறிந்திருப்பதைப் போல் தோன்றுகிறது. இதைச் செய்வதற்காக, இந்த தேனீக்கள் கூட்டை கம்பளி போட்டு போர்த்துவதுபோல, கூட்டைச் சுற்றி செர்யூமெனாலான சுவரை கட்டுகின்றன. இப்போது எல்லாம் தயாராகிவிட்டது. ஒன்பதாவது நாளன்று, தாய்க்கூட்டில் வளர்ந்துவந்த குட்டிராணி இந்த புதிய மாளிகைக்கு புதிய ராணியாக கூட்டிவரப்படுகிறாள். வந்ததும் வராததுமாய் அவளுக்கு இங்கு என்ன வேலை தெரியுமா? அவள்தான் இந்த மாளிகையின் மகாராணி ஆயிற்றே, முட்டைகள் இடுவதைத் தவிர வேறென்ன செய்ய வேண்டும்! சில நாட்களுக்குள் இந்த மாளிகை முழுவதும் உலா வரவிருப்பது அவளுடைய பிள்ளைகள்தான்.

காலப்போக்கில், தாய்க் கூட்டிலிருந்து புதிய கூட்டிற்கு வந்த தேனீக்கள் வயதாகி மரணத்தை சந்திக்கின்றன. அவற்றுக்கு பதிலாக இந்த புதிய வீட்டில் பிறந்த மழலை தேனீக்கள் தவழ ஆரம்பித்துவிடுகின்றன. பிறகு, இந்த கூட்டிலுள்ள தேனீக்களும் மற்றொரு புதிய வீட்டை கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஈடிணையற்ற சிருஷ்டிகரால் வடிவமைக்கப்பட்ட இந்த அதிசய சுழற்சிக்குத்தான் முடிவேது!

[பக்கம் -ன் படங்கள்13]

அறுகோண தேன்கூடுகளைக் கட்டுவதற்கு மாறாக, இந்த கொடுக்கில்லா தேனீக்கள் முட்டை வடிவ பானைகளை கொத்துக்கொத்தாய் கட்டுகின்றன

[பக்கம் -ன் படங்கள்14]

ஆஸ்திரேலியாவில் மட்டுமே குறைந்தபட்சம் பத்து இனங்கள் காணப்படுகின்றன