Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சீன மருந்துக்கடைக்கு ஒரு விஸிட்

சீன மருந்துக்கடைக்கு ஒரு விஸிட்

சீன மருந்துக்கடைக்கு ஒரு விஸிட்

கொஞ்ச நாட்களாகவே க்வாக் கிட்டுக்கு உடல் நிலை சரியில்லை. ஆகவே அவர் ஒரு மருத்துவரைப் போய் பார்க்க நினைக்கிறார். அவர் சீனராக இருப்பதால், பாரம்பரிய சீன வைத்தியரிடம் செல்ல விரும்புகிறார். அப்படிப்பட்ட ஒரு மருத்துவரை இவருடைய குடும்ப நண்பருக்குத் தெரியும். அவருடைய மூலிகை கடை க்வாக் கிட்டின் வீட்டிற்கு பக்கத்தில்தான் இருக்கிறது. அவர் தரும் மூலிகை கஷாயத்தை சாப்பிட்டால் போதும், எல்லாம் சரியாகிவிடும் என்று அந்த நண்பர் சொல்கிறார்.

தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதிகளில் இருப்பதைப்போலவே சீனாவிலும் ஒரு மருத்துவரிடம் செல்வது, மேற்கத்திய நாடுகளில் ஒரு மருத்துவரிடம் செல்வதிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில், ஒரு மருத்துவரிடம் செல்ல வேண்டுமானால், அவரை சந்திக்க முதலில் அப்பாய்ன்ட்மென்ட் பெற்றுக்கொள்ள வேண்டும்; பின்னர் மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும்; அவர் பரிசோதனை செய்து, மருந்துச்சீட்டை தருவார். பின்னர் நோயாளி அதை மருந்துக்கடைக்குக் கொண்டுபோய் மருந்துகளை பெற வேண்டும். ஆனால் சீன மருத்துவரை பார்க்கப் போவது சுலபம். ஒரு மூலிகை கடைக்குப் போக வேண்டும். மூலிகைகளில் மெத்த அறிவுள்ள ஒருவர் பெரும்பாலும் அங்கேயே இருக்கிறார். அவரே சீன வைத்தியத்தில் கைதேர்ந்தவராகவும் இருக்கிறார். அவர் உங்களைப் பரிசோதித்து, கோளாறைக் கண்டுபிடித்து, மூலிகை மருந்துகளை அளந்தெடுத்து தந்து, அதை எப்படி சாப்பிட வேண்டும் என்றும் சொல்லிவிடுகிறார்​—⁠இவை அனைத்தும் இந்த கொஞ்ச நேர சந்திப்பில் முடிந்துவிடுகிறது! a

மூலிகைகள் மருந்துகளாகவா?

மாத்திரைகளும் கேப்ஸ்யூல்களும் ஊசிகளுமே மேலை நாட்டினருக்குப் பழக்கப்பட்டவை என்றாலும் மருத்துவ துறையில் இவை புதிய வரவுகளே. ஆயிரக்கணக்கான வருடங்களாக, மக்கள் இயற்கை வைத்தியத்தையே நம்பியிருந்தனர். உதாரணமாக, பைபிள் காலங்களிலிருந்த எபிரெய வைத்தியர்கள், எண்ணெய், பிசின் தைலம், திராட்சரசம் ஆகியவற்றை நிவாரணிகளாக பயன்படுத்தினார்கள். (ஏசாயா 1:6; எரேமியா 46:11; லூக்கா 10:34) கட்டிகளுக்கு சிகிச்சையாக உலர்ந்த அத்திப்பழங்களால் பற்றுப்போட்டதாக தெரிகிறது.​—2 இராஜாக்கள் 20:7.

சொல்லப்போனால், ஒருகாலத்தில் எல்லா நாடுகளிலுமே நோய்களையும் உடல்கோளாறுகளையும் குணப்படுத்த மூலிகைகளையும் இன்னும் பல பொருட்களையும் வெவ்வேறு விதங்களில் தயாரித்து பயன்படுத்தினார்கள். தற்போது சமையலில் சேர்க்கும் சுவையூட்டும் வாசனை பொருட்கள்கூட முதலில் அவற்றின் மருத்துவ குணங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டன. அதற்காக இந்த சிகிச்சை முறைகள் எப்போதுமே பயன் தந்தன என்று சொல்ல முடியாது. மாறாக, அவற்றில் மூடநம்பிக்கைகளும் அறியாமையுமே பெரும்பாலும் கலந்திருந்தன. என்றாலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இப்படிப்பட்ட முறைகளே ஆயிரக்கணக்கான வருடங்களாக புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இன்று மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் மருந்துகள்கூட தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்டவையே.

சீன மருத்துவக் கோட்பாடும் சிகிச்சையும்

மூலிகை மருந்தை பயன்படுத்தி சிகிச்சை செய்வது சீன சரித்திரத்தின் முக்கிய அம்சம். மஞ்சள் இன பேரரசனாகிய ஹுவாங் டி என்பவர், அறுவை சிகிச்சையல்லாத மருத்துவத்தின் குறிப்புகளடங்கிய தொகுப்பாகிய நே ஜிங்கை எழுதியதாக பண்டைய நாடோடிக் கதைகள் சொல்கின்றன. சீனாவிலுள்ள மருத்துவர்கள் இன்னும் இதை ஆதாரமாக வைத்துத்தான் சிகிச்சை அளிக்கின்றனர். b இந்த ஆதார தொகுப்பு எப்போது எழுதப்பட்டது என்பது இன்னும் சர்ச்சைக்குரியதுதான். மேற்கத்திய மருத்துவ புத்தகம் ஒன்றில் சிந்திக்கப்படும் அநேக குறிப்புகள் இதில் உண்டு. நோய் கண்டறிதல், அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, நோய் தடுப்பு ஆகியவற்றைப் பற்றி மட்டுமல்லாமல் உடலமைப்பைப் பற்றியும் உடலின் செயல்பாடுகளைப் பற்றியும் அது கலந்தாலோசிக்கிறது.

இன்-யாங் என்ற கோட்பாடு, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள அநேக கலைகளில் ஊடுருவி இருப்பதுபோலவே சீன மருத்துவத்திலும் ஊடுருவி இருக்கிறது. இதில், இன் குளிரைக் குறிக்கிறது. யாங் சூட்டைக் குறிக்கிறது. ஒன்றுக்கொன்று எதிரான இன்னும் பல தன்மைகளையும் அவை குறிக்கின்றன. c மேலுமாக, அக்குபங்சருடன் சம்பந்தப்பட்ட மெரிடியன் புள்ளிகளும், அதாவது உடலின் உயிர்சக்தி ஓடும் பாதைகள் என சொல்லப்படுபவற்றில் உள்ள புள்ளிகளும் நோயைக் கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. நோயாளியுடைய இன்-யாங் சமநிலையின் பாதிப்பை ஈடுசெய்ய, குளிர்ச்சிதருவதாக அல்லது சூடுபடுத்துவதாக கருதப்படும் மூலிகைகளும் உணவுகளும் தேவைக்கேற்றபடி கொடுக்கப்படும்.

உதாரணமாக, ஒருவருக்கு காய்ச்சல் என்றால் அவர் சூடான நோயாளியாக கருதப்படுவார். எனவே குளிர்ச்சி தருவதாக எண்ணப்படும் மூலிகைகள் அவருக்குக் கொடுக்கப்படும். இப்போதெல்லாம் இன்-யாங் என்று சொல்லி சிகிச்சை அளிக்காவிட்டாலும் அதன் நியமங்களின் அடிப்படையிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் சீன வைத்தியர் நோயை எப்படி கண்டறிகிறார்? மூலிகை மருந்துக்கடை எப்படி இருக்கும்? இவற்றை தெரிந்துகொள்ள, க்வாக் கிட்டின் நண்பர் சொன்ன கடைக்கு நாமும் அவருடன் செல்வோமா?

அரிய மூலிகை மருந்துக்கடைக்கு

ஆச்சரியம்தான்! இன்று வைத்தியரைப் பார்க்க க்வாக் கிட் காத்திருக்க வேண்டும். ஃப்ளூ அல்லது ஜலதோஷம் பரவியுள்ள ஸீஸன்போல் தெரிகிறது. ஏற்கெனவே இரண்டு நோயாளிகள் இருக்கிறார்கள். காத்திருக்கும் நேரத்தில் கடையைச் சுற்றிப் பார்க்கலாமே.

உள்ளே நுழைந்ததும், முதலில் நாம் பார்ப்பது உலர்ந்த பொருட்கள்​—⁠காளான்கள், சிப்பிகள், செவி சிப்பிகள் (அபலோன்கள்), அத்திப்பழங்கள், கொட்டைப்பருப்புகள், சாப்பிடக்கூடிய இன்னும் பல பொருட்கள்​—⁠மூடியில்லாத திறந்த டப்பாக்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆம், இங்கு உணவு பொருட்களும் கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் சில மருந்தாகவும் கொடுக்கப்படும்.

அடுத்ததாக, இந்த ஒடுக்கமான கடையின் இரு பக்கங்களிலும் கண்ணாடி கவுண்டர்கள் தெரிகின்றன. விலையுயர்ந்த, அரிய, விசேஷமான மூலிகைகளும், கனிமங்களும், உலர்ந்த மிருக உறுப்புகளும் இந்த கவுண்டர்களில் இருக்கின்றன. அருகில் சென்று கவனித்தால், மான் கொம்புகள், முத்துக்கள், உலர்ந்த பல்லிகள், கடல் குதிரைகள், இன்னும் பல அயல் நாட்டு பொருட்களையும் பார்க்கலாம். சமீப ஆண்டுகள் வரையாக, காண்டாமிருக கொம்பு, கரடி பித்தப்பை, இன்னும் பல மிருக பாகங்கள் அந்த கவுண்டர்களில் காணப்பட்டன. ஆனால் இப்போது இந்தப் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

கடையின் வேறொரு மூலையில், மூலிகை கலவை பொட்டலங்கள். இவை, ஜலதோஷம், வயிற்றுக்கோளாறு போன்ற சாதாரண பிரச்சினைகளுக்கானவை. சீனாவிலேயே தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்து பாட்டில்களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பிரச்சினை என்னவென்று கடைக்காரரிடம் சொன்னால் போதும். பாட்டில் மருந்தை தருவார் அல்லது மூலிகை கலவை பொட்டலத்தை தருவார். வீட்டிற்கு போய் அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிடுவார்.

கடைக்காரருக்கு பின்னால் இருக்கும் சுவரிலுள்ள ஷெல்ப்களில் பெரிய பெரிய கண்ணாடி ஜாடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பல்வகையான காய்ந்த வேர்கள், இலைகள், சிறு குச்சிகள் அவற்றில் இருக்கின்றன. மூலிகை மருந்துகளை பழக்கமாக பயன்படுத்துவோர் இவற்றை வாங்கி வைத்து வீட்டில் சொந்தமாக வைத்தியம் செய்துகொள்ளலாம். சமைப்பதற்கும்கூட இவற்றை இங்கிருந்து வாங்கலாம். கடையின் மறுபக்கத்தில், கூரை உயரமுள்ள ஒரு காபினட் வைக்கப்பட்டிருக்கிறது. அடிக்கடி பயன்படுத்தப்பட்டதால் நாள்பட்ட தோற்றம். பைட்ஸிக்வே என்று அது அழைக்கப்படுகிறது. “நூறு பிள்ளைகளை உடைய காபினட்” என்பது அதன் பொருள். ஏனென்றால் இந்த வகையான மூலிகை காபினட்டில் நூற்றுக்கதிகமான டிராயர்கள் அடுக்கடுக்காக இருக்கின்றன. இருந்தாலும் மூலிகைகளை எளிதில் எடுத்துக் கொடுப்பதற்கு வசதியானவை இவை. ஏனெனில் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படும் மூலிகைகள் கைக்கு எட்டும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் இவற்றில் எந்த லேபலும் இல்லை. அப்படியிருந்தும், ஒவ்வொரு மூலிகையும் எந்த இடத்தில் இருக்கிறது என்று அனுபவமுள்ள கடைக்காரர்களுக்கு அத்துப்படி.

கடைக்கு வந்திருக்கும் பெண்ணுக்காக கடைக்காரர் எவ்வளவு சாமர்த்தியமாக மூலிகைகளை அளக்கிறார் என்று பாருங்கள். நுண்மையும் துல்லியமுமான ஆசிய தராசை அவர் பயன்படுத்துகிறார். அதில் அளவுகள் குறிக்கப்பட்ட ஒரு அளவுகோல் இருக்கிறது. இங்கும் அங்கும் நகர்த்தக்கூடிய எடைக்கல் அதன் ஒரு முனையில். தொங்கும் ஒரு தட்டு அதன் இன்னொரு முனையில். சில மூலிகைகளை அளவுக்கதிகமாக சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து என்பது அவருக்குத் தெரியும். அதனால் அவர் அளவுகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். இருந்தாலும் எல்லாமே அளந்து கொடுக்கப்படுவதில்லை. வெவ்வேறு டிராயர்களிலிருந்து வித்தியாசப்பட்ட மூலிகைகளை எடுக்கிறார்; ஒவ்வொன்றிலும் சுமார் அரை கைப்பிடியளவு எடுத்து பேப்பரில் குவித்து வைக்கிறார். சில்வண்டு உரித்துப்போட்ட தோல்களும் அதில் இருக்கின்றன! மூலிகைகளை எப்படி திரவ மருந்தாக்கி குடிப்பது என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிக்கொண்டே அவற்றை பொட்டலமாக கட்டுகிறார்.

மூலிகை மருந்துகள் பல வகைகளில் தயாரிக்கப்பட்டு உட்கொள்ளப்படுகின்றன. அவற்றில் சில பொடிகளாக இருக்கின்றன. நோயாளி அதை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். சில மருந்துகள் பசை போல் இருக்கின்றன. அவற்றை தேனில் கலந்தோ ஏதாவது ஆல்கஹாலில் கலந்தோ சாப்பிட வேண்டும். இந்த பெண்ணுக்கோ கஷாயம் போட்டு குடிக்குமாறு சொல்லப்படுகிறது. இது மிகவும் பழக்கப்பட்ட தயாரிப்பு முறை. சுமார் ஒரு மணிநேரத்துக்கு மூலிகைகளை ஒரு மண்பானையில் கொதிக்க வைக்க வேண்டும். இப்படிக் கிடைக்கும் கஷாயத்தை, சில மணிநேர இடைவேளைகளில் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். மீண்டும் தேவைப்பட்டால், அவள் திரும்பவும் கடைக்குவந்து இன்னொரு பொட்டலத்தை வாங்க வேண்டும், அவ்வளவுதான்.

ஒருவழியாக க்வாக் கிட், மருத்துவரைப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது. மருத்துவர் அவருடைய ரத்த அழுத்தத்தையோ இருதய துடிப்பையோ பரிசோதிக்கவில்லை. ஆனால் க்வாக் கிட்டுக்கு என்னென்ன அறிகுறிகள் இருக்கிறதென்று கேட்கிறார். நன்றாக தூங்குகிறாரா? உணவு செரிக்கிறதா? பசி எடுக்கிறதா? வெளிக்கு போவதில் பிரச்சினை இருக்கிறதா? காய்ச்சல் இருக்கிறதா? தோலின் நிறமும் தன்மையும் எப்படி இருக்கிறது? அவருடைய கண்ணையும் நாக்கின் பல பாகங்களின் நிறத்தையும் வைத்தியர் கூர்ந்து பார்க்கிறார். இரு கைகளின் மணிக்கட்டுகளிலும் வெவ்வேறு இடங்களில் பல்வேறு அழுத்தம் கொடுத்து க்வாக் கிட்டின் நாடியை பரிசோதிக்கிறார். உடலின் பல்வேறு உறுப்புகளின் நிலையை தெளிவாக காட்டும் பரிசோதிப்பு முறையாக இது நம்பப்படுகிறது. விநோதமான துர்நாற்றத்தைக்கூட முகர்ந்துவிடுகிறார் வைத்தியர்! முடிவு என்ன? எதிர்பார்த்தபடியே க்வாக் கிட்டுக்கும் ஃப்ளூதான். அவருக்கு தேவை பெட்ரெஸ்ட்தான். மருந்துகளை கொதிக்க வைத்து குடிப்பதோடு வேறு பானங்களை தாராளமாக குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். மருந்தாக தரப்பட்ட மூலிகை கஷாயம் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் அவருக்கு சுகத்தைத் தரும். க்வாக் கிட், எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர் சொல்கிறார்; ஆனால் அதோடு நிறுத்திவிடவில்லை. மருந்தைக் குடித்ததும் வாய் கசப்பை போக்க பக்குவப்படுத்தப்பட்ட இனிய ப்ளம் ஒன்றை சாப்பிடும்படியும் கரிசனையோடு சொல்கிறார்.

மூலிகை பொட்டலத்துடன் க்வாக் கிட் வீடு திரும்புகிறார். மருத்துவருக்கும் மருந்துக்கும் சேர்த்து 20 டாலருக்கும் குறைவாகவே செலவானது. மிகவும் குறைந்த செலவுதான். மூலிகைகள் அற்புத குணமளிக்காது என்றாலும் சில நாட்களுக்குள் க்வாக் கிட் சுகம் பெறுவார். ஆனால் கொஞ்சம் அதிகமாக மருந்து சாப்பிட்டால் சீக்கிரம் குணம் கிடைக்கும் என்று சிலர் நினைப்பதுண்டு. அந்தத் தவறை இவர் செய்துவிடக் கூடாது. ஒருசில மூலிகைகளை அளவுக்கதிகமாக உட்கொள்வதால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படுவது அடிக்கடி கேள்விப்படுகிற விஷயம்.

சீன மருத்துவத்தின் மூலிகைகளுக்கும் வைத்தியர்களுக்கும் சில நாடுகளில் எவ்வித வரைமுறையோ வரம்புகளோ விதிக்கப்படுவதில்லை. இது, மூலிகை மருத்துவத்திலும் போலி மருத்துவர்கள் தழைப்பதற்கு வழிவகுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆபத்து விளைவிக்கும் பல மூலிகை நிவாரணிகளின் விற்பனை பெருகுவதற்கும் காரணமாகியிருக்கிறது. இதனாலேயே, ஆசிய நோயாளிகள் தங்கள் உறவினர்களிடமும் நெருங்கிய நண்பர்களிடமும் ஆலோசனை கேட்டு அவர்கள் சொல்லும் சீன மருத்துவரிடம் செல்கிறார்கள்.

மூலிகை மருந்துகளானாலும் சரி மேற்கத்திய மருந்துகளானாலும் சரி, எந்த சிகிச்சையுமே எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியாது. இருந்தாலும், ஆசிய உலகில் சீன மருந்துக்கடைக்கும் அதன் வைத்தியருக்கும் எப்போதும் ஒரு தனி இடம் இருக்கும்.

[அடிக்குறிப்புகள்]

a உடல்நல பிரச்சினைகளுக்கு விழித்தெழு! எந்தவொரு சிகிச்சை முறையையும் பரிந்துரை செய்வதில்லை. கிறிஸ்தவர்கள் எந்த சிகிச்சையை பெற்றுக்கொண்டாலும் அது பைபிள் நியமங்களுக்கு முரணாக இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

b பழங்கதைகளில் சொல்லப்படும் இந்த மஞ்சள் இன பேரரசன், ஜோ அரசகுலம் தோன்றுமுன் பொ.ச.மு. 2697 முதல் 2595 வரை ஆட்சி புரிந்ததாக சொல்லப்படுகிறது. என்றாலும், சுமார் பொ.ச.மு. 1100 முதல் 250 வரை ஆட்சி புரிந்த ஜோ அரசகுலத்தின் முடிவுவரை நே ஜிங் எழுத்துவடிவம் பெறவில்லை என்று பல அறிஞர்கள் நம்புகின்றனர்.

c சீன வார்த்தையாகிய “இன்” சொல்லர்த்தமாக “நிழல்” என்று அர்த்தப்படுகிறது. அது இருட்டையும், குளிரையும், பெண்மையையும் குறிக்கிறது. அதற்கு எதிர்ப்பதமான “யாங்” என்பது பிரகாசமான, சூடான, ஆணியல்புடைய பொருட்களைக் குறிக்கிறது.

[பக்கம் -ன் படங்கள்23]

உலர்ந்த கடல் குதிரைகள் உள்ளிட்ட பலநாட்டு பொருட்களும் மூலிகைக் கடையில் காணப்படும்

[பக்கம் -ன் படங்கள்24]

காய்ந்த வேர்கள், இலைகள், சிறு குச்சிகள் கவனமாக அளக்கப்படுகின்றன