Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நட்சத்திர ராசி உங்கள் வழிகாட்டியா?

நட்சத்திர ராசி உங்கள் வழிகாட்டியா?

பைபிளின் கருத்து

நட்சத்திர ராசி உங்கள் வழிகாட்டியா?

“எதிர்காலத்தை அறிந்துகொள்ள இன்று சிறியோர் முதல் பெரியோர் வரை எண்ணற்றோர் நட்சத்திரங்களை நாடுகின்றனர்.”​—⁠இரண்டாம் போப் ஜான் பால்.

சோதிடம் எனும் வசியம் இன்று மக்களை கட்டிப்போட்டிருக்கிறது; 4 அமெரிக்கர்களில் ஒருவர் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு சோதிடத்தை நாடுகிறார் என்கிறது ஒரு சுற்றாய்வு. இவ்வாறு அமெரிக்காவில் மட்டும்தான் சோதிடம் கொடிகட்டி பறக்கிறது என நினைத்துவிடாதீர்கள். கிட்டத்தட்ட உலகம் முழுவதும், பண விஷயங்களில், பயண ஏற்பாடுகளில், வேலை மாற்றங்களில், திருமண தேதிகளை நிர்ணயிப்பதில், போர் திட்டங்களில் என தீர்மானம் எடுப்பதற்கு நட்சத்திர ராசியையே அநேகர் நம்பியிருக்கின்றனர். தன் திருமணத்திற்கு தேடிய வரன்களில், தனக்கு ஒத்துவராதவரை ஒதுக்கிவிட்டு பொருத்தமான வருங்கால துணையை கண்டுபிடிக்க ராசிபலன் தங்களுக்கு உதவுவதாக பெருமையுடன் சொல்லிக் கொள்கிறவர்களும் உண்டு. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோரின் கவனத்தை தன்னிடம் வசியப்படுத்தி வைத்திருக்கிறது சோதிடம். ஆனால் இந்த நட்சத்திர ராசிபலனின் பூர்வீகம் என்ன?

வரலாற்றுப் பின்னணி

நாமறிந்த பண்டைய நாகரிகங்களில் பல்வேறு விதமான நட்சத்திர ராசிகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன. பைபிளும், ‘ராசி மண்டலத்தின் நட்சத்திரக் கூட்டங்களைப்’ பற்றி குறிப்பிடுகிறது. (2 இராஜாக்கள் 23:5, NW) பண்டைய காலங்களில் இந்துக்கள், சீனர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள் என பல இனத்தவர்கள் நட்சத்திர ராசி பார்த்து செயல்பட்டனர். எனினும், ராசிபலன் பூர்வ பாபிலோனில் முதலாவதாக உபயோகித்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தை அறியும் ஆவலில் பாபிலோனியர்கள் இந்த சோதிட சாஸ்திரத்தை படிப்படியாக உருவாக்கினர். கிரகங்களின் சுற்றுப்பாதை கவனிக்கப்பட்டு, விவரமான பட்டியல்களும் அட்டவணைகளும் தயாரிக்கப்பட்டன. இவற்றின் அடிப்படையிலேயே மனித விவகாரங்களும் உலக சம்பவங்களும் முன்கணிக்கப்பட்டன. பல சந்தர்ப்பங்களில், அரசியல் அல்லது இராணுவம் சம்பந்தப்பட்ட தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டங்களில் சோதிட வல்லுனர்களை கலந்தாலோசித்தே முடிவெடுத்தனர். எனவே, அற்புத ஞானமும் அபூர்வ சக்தியும் தங்களுக்கு இருப்பதாக சொல்லி கொண்ட பூஜாரிகள் பெரும் செல்வாக்கு செலுத்தினர். இன்னும் சொல்லப்போனால், பாபிலோனிலிருந்த எல்லா முக்கிய கோவில்களிலும் வான் கணிப்பு கூடங்கள் இருந்தன.

இன்றைய நவீன யுகத்திலும் ராசிபலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அநேகர் இருக்கின்றனர். ஜாதகங்களில் நம்பிக்கை இல்லை என சொல்லிக் கொள்பவர்களும்கூட பொழுதுபோக்கிற்காக அல்லது என்னதான் சொல்கிறது பார்ப்போமே என்ற ஆவலில் அவ்வப்போது ராசிபலன் பார்க்கின்றனர். சோதிடர்களுடைய கணிப்புகளில் சில நிஜமாவது என்னவோ உண்மைதான். இருந்தாலும், நாள் நட்சத்திரங்களை பார்ப்பது நமக்கு நன்மை செய்யுமா? சோதிடத்தை கடவுளின் பூர்வகால ஊழியர்கள் எப்படி கருதினர்?

மறைந்திருக்கும் ஆபத்துகள்

சோதிட விஷயங்களில் உண்மையுள்ள யூதர்கள் பாபிலோனியர்களைப் பின்பற்றவில்லை; அதற்கு நியாயமான காரணம் இருந்தது. “குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், சகுனங்களை நம்புகிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், ஏவிவிடுகிறவனும், மாயவித்தைக்காரனும், இறந்தவர்களிடம் குறிகேட்கிறவனும் உங்களிடையே இருக்கலாகாது. ஏனெனில், இவற்றையெல்லாம் செய்கிறவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்” என கடவுள் தெளிவாகவே அவர்களை எச்சரித்திருந்தார். a​—⁠உபாகமம் 18:10-12, NW.

கடவுளின் ஊழியர்கள் சோதிடத்தை அறவே வெறுத்தனர். உதாரணமாக, உண்மையுள்ள யோசியா ராஜா, ‘பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் [“ராசி மண்டலத்தின் நட்சத்திரக் கூட்டங்களுக்கும்,” NW] . . . தூபங்காட்டினவர்களை அகற்றிவிட்டான்.’ யோசியாவின் செயல் “கர்த்தரின் பார்வைக்குச் செம்மையான”தாய் இருந்தது; எனவே கடவுள் அவரை ஆசீர்வதித்தார். (2 இராஜாக்கள் 22:2; 23:5) ‘என்னதான் சொன்னாலும், சோதிடர்களின் சில கணிப்புகள் பலிப்பது உண்மையா இல்லையா?’ என சிலர் விதண்டாவாதம் செய்யலாம்.

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், குறிசொல்லுதலில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணைப் பற்றி வாசிக்கிறோம். அவள் ‘குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கினாள்.’ இந்தப் பெண்ணிடமிருந்த சக்தியைப் பயன்படுத்தி அவளுடைய எஜமான்கள் அதிக பணம் சம்பாதித்தனர். இதிலிருந்து, அவள் குறிசொன்னவற்றில் சில நிஜமாகவே நிகழ்ந்ததாக தெரிகிறது. ஆனால், எதிர்கால சம்பவங்களை சொல்ல உண்மையில் இந்தப் பெண்ணுக்கு சக்தி அளித்தது யார்? “குறிசொல்ல ஏவுகிற ஆவி” அவளுக்கு உதவியதாக பைபிள் சொல்கிறது.​—⁠அப்போஸ்தலர் 16:⁠16.

“உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் [பிசாசாகிய சாத்தானுக்குள்] கிடக்கிறதென்”கிறது பைபிள். (1 யோவான் 5:19) குறிசொல்லும் விஷயங்களில் சில நிஜமென நிரூபிப்பதற்காக காரியங்களை திட்டமிட்டு வழிநடத்துவதன் மூலம் சாத்தானும் அவனுடைய பேய்களும் கோடிக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றனர்.

சோதிடம் ‘பிசாசின் தந்திரங்களில்’ ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. மக்களைக் கட்டுப்படுத்தி தன் இஷ்டப்படி அவர்களை ஆட்டிப்படைக்க இந்தத் தந்திரத்தை அவன் பயன்படுத்துகிறான். எனவே, சோதிடம் உட்பட, சாத்தானின் தந்திரமான கண்ணிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் ‘எதிர்த்துநிற்கும்படி’ கிறிஸ்தவர்களுக்கு பைபிள் புத்திமதி அளிப்பதில் ஆச்சரியமில்லை. (எபேசியர் 6:11) அப்படியென்றால் எதிர்காலத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வழியே இல்லையா?

பைபிள்​—⁠நம்பகமான வழிகாட்டி

தீர்மானங்களை எடுப்பதற்கு பைபிள் நம்பகமான வழிகாட்டியாக லட்சக்கணக்கானோருக்கு இருந்திருக்கிறது. சங்கீதக்காரனாகிய தாவீது சொன்ன விதமாக, “கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.” (சங்கீதம் 19:7; 119:105) எனவே, ஒவ்வொரு விஷயத்திலும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என பைபிள் ஒருவரை கட்டுப்படுத்துவதாக நாம் தவறாக நினைத்துவிடக்கூடாது. ஆனால், கடவுளுடைய வார்த்தையிலுள்ள நியமங்கள் நம் பகுத்துணர்வை பயிற்றுவிக்கின்றன. அப்படிப்பட்ட பயிற்சி, சரி எது தவறு எது என்பதை வித்தியாசப்படுத்திப் பார்க்க நமக்கு உதவுகிறது; அதோடு ஞானமான தீர்மானங்களை எடுக்கவும் வழிகாட்டுகிறது.​—⁠எபிரெயர் 5:⁠14.

எனவே, உண்மை கிறிஸ்தவர்கள் விளையாட்டுக்காகவோ ஆவலின் காரணமாகவோகூட ஜாதகங்கள் பார்ப்பதில்லை. மாறாக, பேய்களின் தந்திரமான செல்வாக்கிலிருந்து காத்துக்கொள்ளும்படி பைபிள் கொடுக்கும் எச்சரிக்கைக்கு அவர்கள் செவிசாய்த்து ஞானமாய் நடக்கின்றனர். நீங்கள் எப்படி? எது உங்களை வழிநடத்துகிறது​—⁠நட்சத்திர ராசியா, பைபிளா? பைபிளென்றால், கடவுளுடைய ஆசீர்வாதத்தை நித்தியத்திற்கும் அனுபவித்து மகிழ்வீர்கள்.​—⁠சங்கீதம் 37:29, 38.

[அடிக்குறிப்பு]

a மாயமந்திர சக்திகளின் உதவியால் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வதை, முக்கியமாய் எதிர்கால சம்பவங்களை அறிந்துகொள்வதை குறிசொல்லுதல் உட்படுத்துகிறது.

[பக்கம் 26-ன் படம்]

கீழை ராசி மண்டலம்

[பக்கம் 26-ன் படம்]

மேலை ராசி மண்டலம்