Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நர்ஸ் சேவை ஏன் தேவை?

நர்ஸ் சேவை ஏன் தேவை?

நர்ஸ்—சேவை ஏன் தேவை?

“நர்ஸ் சேவையும் ஒரு கலையே, அதுவும் மிகக் கடினமான கலையே. கருணை இதற்கு தூண்டுகோலாய் இருக்கலாம். ஆனால் அறிவே இந்த சேவைக்கு ஆதாரம்.” ​—⁠மேரி அடலேட் நாட்டிங், 1925, முதல் நர்ஸிங் பேராசிரியர்.

நர்ஸிங் பிறந்த கதையை அறிய வேண்டுமா? சரித்திரத்தின் ஏடுகளை புரட்டுங்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அது நம்மை அழைத்து செல்கிறது; பைபிள் காலங்களிலும் இப்பணியில் ஈடுபட்டவர்கள் இருந்தனர். (1 இராஜாக்கள் 1:2-4, NW) இப்படி தன்னலம் கருதாமல் நோயுற்றோருக்கு சேவை செய்த பெண்களின் பட்டியலை சரித்திரத்தின் ஏடுகளில் பார்க்கலாம். உதாரணத்திற்கு, ஹங்கேரியின் அரசன் இரண்டாம் ஆண்ட்ரூவின் மகளான எலிசபெத்தை (1207-31) எடுத்துக்கொள்வோம். 1226-⁠ம் ஆண்டு பஞ்சம் தலைவிரித்தாடியபோது அவர் உணவு தானியங்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டார். அதன் பின் மருத்துவமனைகளை கட்டுவதற்கு வழிவகுத்தார், அங்கே தொழுநோயாளிகளுக்கு தொண்டாற்றினார். நோயுற்றோரை கவனிப்பதே தன் உயிர்மூச்சு என வாழ்ந்து காட்டினார்; தனது 24-வது வயதில் அகால மரணமடைந்தார்.

நர்ஸுகளின் சரித்திரத்தை அலசுகையில் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்த துணிச்சல் மிக்க ஆங்கிலேய நர்ஸ், கிரிமியன் யுத்தத்தில் (1853-56) காயமடைந்த வீரர்களுக்கு பெரும் தொண்டாற்றினார். கான்ஸ்டான்டிநோபிளுக்கு அருகே ஸ்குடாரி என்ற இடத்தில் இருந்த ராணுவ மருத்துவமனையில் 38 நர்ஸ்களோடு சேர்ந்து தன் பணியில் பெரும் புரட்சிகரமான மாற்றங்களை செய்தார். அவர் அங்கு பணியைத் துவங்குகையில் மரண எண்ணிக்கை சுமார் 60 சதவீதமாக இருந்தது; அவர் 1856-⁠ல் பணி முடிந்து அங்கிருந்து செல்லுகையில் இறப்பு எண்ணிக்கை 2 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.​—⁠பக்கம் 6-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.

ஜெர்மனியின் கைசர்வர்த்திலிருந்த இன்ஸ்டிட்யூட் ஆஃப் புராட்டஸ்டன்ட் டீகனசஸ் என்ற நிறுவனம் நர்ஸ்களின் வளர்ச்சியில் முக்கிய பாகம் வகித்தது. உதவிக்கரம் நீட்ட கிரிமியாவுக்கு விரையும் முன்பு இங்குதான் நைட்டிங்கேல் பயிற்சி பெற்றார். காலம் செல்லச் செல்ல சிறப்புமிக்க அநேக நர்ஸிங் பயிற்சி மையங்கள் பிறந்தன. உதாரணத்திற்கு, 1903-⁠ல் ஆக்னஸ் கார்ல் என்பவர் புரொஃபெஷனல் ஆர்கனைசேஷன் ஃபார் ஜெர்மன் நர்ஸஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.

இன்று உலகம் முழுவதிலும் உடல்நல பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்களில் நர்ஸ்களின் எண்ணிக்கைதான் அதிகம்; இவர்கள் இத்துறையின் நிபுணர்கள் என்றே கருதப்படுகின்றனர். தற்போது 141 நாடுகளில் 90,00,000-⁠க்கும் அதிகமான நர்ஸ்களும் மருத்துவச்சிகளும் சேவை செய்வதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது. இவர்களின் ஒப்பற்ற சேவையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை! இதைக் குறித்து தி அட்லான்டிக் மன்த்லி இவ்வாறு சொல்கிறது: “நம்பிக்கை, அரிய பராமரிப்பு, அனுபவம் என்ற இந்த மூன்றும் சேர்ந்த பட்டுப்போன்ற இழையே நர்ஸ்களின் பணியை சிறப்பிக்கிறது; இதுவே நோயாளிகள் உயிர் பிழைக்க பெரிதும் உதவுகிறது.” ஆகவே, நர்ஸ் மட்டும் இல்லையென்றால் நாம் என்ன செய்வோம்? என்று கேட்க தோன்றுகிறது.

நோயாளி குணமடைவதில் நர்ஸின் பங்கு

“நோயாளி தன் நோயிலிருந்தோ காயத்திலிருந்தோ குணமடைய அல்லது நோயாளி பிறர் உதவியின்றி கூடுமானவரை தன்னை கவனித்துக்கொள்ளும் அளவுக்கு சுகமடைய உதவுவதே நர்ஸின் பணி” என விவரிக்கிறது ஒரு என்ஸைக்ளோப்பீடியா.

நர்ஸுகளின் பணியை சாதாரணமாக எடை போட்டுவிடாதீர்கள். வெறுமனே நாடி பார்ப்பது, பிளட் பிரஷர் செக் செய்வது போன்ற சாதாரண வேலைகள்தான் அவர்களுடையது என்பதாக நாம் தப்புக்கணக்கு போட்டுவிட முடியாது. நோயாளி குணமடைவதில் நர்ஸும் முக்கிய பங்காற்றுகிறார். தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் மெடிசன் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “நோயாளியின் நோய் எப்படிப்பட்டது என்பதைவிட அந்த நோய் அவரை எந்தளவு பாதித்திருக்கிறது என்பதற்கே நர்ஸ் ஆழ்ந்த கவனம் செலுத்துகிறார். காயப்பட்ட உடலுக்கு மட்டுமின்றி புண்பட்ட உள்ளத்திற்கும் மருந்திடுகிறார்; முடிந்தால் நோயின் பாதிப்புகளை சமாளிக்கவும் தன்னால் முடிந்த அனைத்தையும் நர்ஸ் செய்கிறார். அவர் நோயாளியின் நிலைமையை புரிந்துகொண்டு மனம் கோணாமல் நடந்துகொள்கிறார்; இது அவர் சொல்வதை பொறுமையாக கேட்பதையும் உட்படுத்துகிறது. நோயாளியின் கவலைகளையும் பயத்தையும் மனதில் வைத்து அவருக்கு ஆதரவும் ஆறுதலும் அளிப்பது நர்ஸின் கடமை.” நோயாளியின் உயிர் ஊசலாடும்போதும் நர்ஸின் பணி தொடருகிறது என்பதை இந்த என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு விளக்குகிறது: “கூடுமானவரை வேதனையின்றி தன்மானத்தோடு மரணத்தை சந்திக்க நோயாளிக்கு” நர்ஸ் உதவுகிறார்.

நர்ஸ்கள் கடமைக்கு மட்டுமே வேலை செய்பவர்கள் அல்ல; பெரும்பாலானவர்களின் விஷயத்தில் இது உண்மை. உதாரணமாக, நியூ யார்க் நகரத்தில் மான்டிஃபோரி மெடிக்கல் சென்டரில் பணியாற்றிய எலன் டி. பெயர் என்ற நர்ஸ் தன் அனுபவத்தை எழுதியிருக்கிறார். அறுவை சிகிச்சை குழுவினரோடு காலையில் ரவுண்ட்ஸ் போகும்போது அரக்கப்பரக்க வேலை செய்ய அவர் விரும்புவதில்லை என அதில் குறிப்பிட்டிருக்கிறார். “நோயாளிகளோடு நேரத்தை செலவிட எனக்கு ஆசை. அவர்கள் நன்றாக சுவாசிப்பதற்கு உதவுவதும், நடப்பதற்கு கைத்தாங்கலாக அழைத்து செல்வதும், அவர்களுடைய காயங்களுக்கு தினம் மருந்திட்டு கட்டுவதும் எனக்குப் பிடிக்கும்; அப்போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லி, புரிந்துகொள்ள தவிக்கும் அநேக விஷயங்களை விளக்கி, தனிப்பட்ட முறையில் அவர்களிடம் நாலுவார்த்தை ஆறுதலாக பேச விரும்புகிறேன். நோயாளிகளோடு அன்யோன்யமாக பழகுவதும் நட்பை வளர்த்துக்கொள்வதும் பிடிக்கும்.”

நம்மில் யாராவது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தால் தன்னலம் கருதாத, இரக்க குணம் படைத்த நர்ஸ் நம்மை கவனித்துகொண்டது நம் நினைவுக்கு வரும். அப்படியென்றால் திறமையான நர்ஸாக திகழ என்ன தேவை?

[பக்கம் 3-ன் படம்]

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்

[படத்திற்கான நன்றி]

Courtesy National Library of Medicine