Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வலிக்கு சமாதிகட்டிய அனஸ்தீஸியா

வலிக்கு சமாதிகட்டிய அனஸ்தீஸியா

வலிக்கு சமாதிகட்டிய அனஸ்தீஸியா

அந்தக் காலத்தில், அதாவது 1840-களுக்கு முன்பு, நோயாளிகள் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் போனாலே அவ்வளவுதான், அவர்கள் பயத்திலேயே பாதி செத்துவிடுவர் என சொல்லலாம். எதற்காக அவ்வளவு பயப்பட்டனர்? ஏனென்றால், அப்போதெல்லாம் ஆப்ரேஷனின்போது வலி தெரியாமலிருக்க கொடுக்கப்படும் மயக்க மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. “அறுவை மருத்துவர், ஆப்ரேஷன் தியேட்டருக்குள் இரு விஸ்கி பாட்டில்களுடன் நுழைவார் என சொல்லப்படுகிறது. ஒரு பாட்டில் நோயாளிக்கு​—⁠நோயாளி வலியைப் பொறுத்துக்கொள்ள, மற்றொன்று மருத்துவருக்கு​—⁠நோயாளி அதையும் மீறி வேதனையால் கதறுகையில் அதை சகித்துக்கொள்ள” என டெனெஸ் ஃப்ராடென் என்பவர் “வேதனையை வென்றுவிட்டோம்” என்ற தன் ஆங்கில புத்தகத்தில் எழுதினார்.

நோயாளிக்கு “கிக்” ஏற்றுவது!

ஆப்ரேஷனின்போது ஏற்படும் வலியை குறைக்க, அறுவை மருத்துவர்களும், பல் மருத்துவர்களும், நோயாளிகளும் எதையும் செய்ய தயாராய் இருந்தனர். சீன, இந்திய மருத்துவர்கள் கஞ்சாவையும் ஹசீஷையும் பயன்படுத்தினர். மதுபானத்தைப் போலவே அபினி ஒருவகை போதை பொருளாதலால் அதுவும் உலகத்தின் பல பாகங்களில் பயன்படுத்தப்பட்டது. தியாஸ்காரிதெஸ் என்ற பண்டைய கிரேக்க மருத்துவர், மேன்ட்ரேக்ஸ் என்ற மூலிகையை ஒயினுடன் கலந்து தயாரித்த பானம் மரத்துப்போக செய்யும் தன்மையுடையது என்பதாக உரிமை பாராட்டினார். இவர்தான் முதன்முதலில் “அனஸ்தீஸியா” என்ற வார்த்தையையும் பயன்படுத்தியதாக தெரிகிறது. பிற்காலங்களில் சில மருத்துவர்கள், நோயாளிகளை ஹிப்னாட்டிஸம் என்ற ஒருவகை மயக்கத்தில் ஆழ்த்த முயற்சி செய்திருக்கின்றனர்.

ஆனாலும், வலி குறைந்த பாடில்லை. இதனால், அறுவை மருத்துவர்களும், பல் மருத்துவர்களும் அரக்கப்பரக்க ஆப்ரேஷன் செய்தனர். ஒரு மருத்துவர் எந்தளவுக்கு வேகமாக ஆப்ரேஷன் செய்கிறாரோ அந்தளவுக்கு அவர் திறமைசாலி என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். வேகமாக அறுவை சிகிச்சை செய்யும் திறமையுடையவராக இருந்தாலும் நோயாளிக்கு தாங்க முடியாத வலி எடுத்தது. அதனால், மக்கள் தங்களுக்கு எந்த வியாதி வந்தாலும் அவர்கள்மீது கத்தி வைக்கப்படுவதை விரும்பவில்லை. இதன் விளைவாக, அபாயகரமான கட்டி வந்தாலும், பற்களெல்லாம் சொத்தையானாலும் அறுவை சிகிச்சையையோ பல் பிடுங்குவதையோ தேர்ந்தெடுப்பதற்கு பதில் அவற்றை அப்படியே விட்டுவிடுவது நல்லது என நினைத்தனர்.

ஸ்வீட் விட்ரியோலும் சிரிப்பூட்டும் வாயுவும்

1275-⁠ல், ஸ்பானிய மருத்துவர் ரேமன்ட் லுல்லெஸ், இரசாயனங்களை ஆராய்கையில், எளிதில் ஆவியாகிவிடும், சீக்கிரம் தீப்பிடிக்கும் தன்மையுடைய ஒரு திரவத்தை தயாரித்தார். அதற்கு ஸ்வீட் விட்ரியோல் என பெயர் வைத்தார். 16-⁠ம் நூற்றாண்டில், பேரசெல்ஸஸ் என்று பொதுவாக அறியப்பட்ட ஸ்விட்ஸர்லாந்தை சேர்ந்த மருத்துவர், அந்தத் திரவத்தை கோழிகளில் பரிசோதித்துப் பார்த்தார். அதை முகர்ந்தவுடன் கோழிகள் தூங்கிவிட்டது மட்டுமன்றி, அவை வலியை உணராததையும் கவனித்தார். ஆனால், இவரும் லுல்லெஸைப் போலவே மனிதரில் இதைப் பரிசோதிக்கவில்லை. அந்தத் திரவத்திற்கு 1730-⁠ல் ஃப்ரோபேனியுஸ் என்ற ஜெர்மானிய மருந்து தயாரிப்பாளர் ஈதர் என பெயர் சூட்டினார். அது இன்றும் அந்த பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஈதர் என்ற அந்த கிரேக்கச் சொல்லுக்கு, “விண்ணுலகத்து” என அர்த்தம். ஆனால் 112 வருடங்களுக்குப் பிறகே, ஈதருக்கு இருக்கும் மரத்துப்போக செய்யும் சக்தி முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, புழக்கத்திற்கு வந்தது.

அதற்கு முன்பு, 1772-⁠ல் ஜோசஃப் ப்ரிஸ்ட்லி என்ற ஆங்கிலேய விஞ்ஞானி நைட்ரஸ் ஆக்ஸைட் என்ற வாயுவைக் கண்டுபிடித்தார். இந்த வாயுவை கொஞ்சம் சுவாசித்தாலே சாவுதான் என மக்கள் துவக்கத்தில் நினைத்தனர். இருப்பினும், 1799-⁠ல் பிரிட்டனை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரும் தயாரிப்பாளருமான ஹெம்ஃப்ரி டேவி தன்னிலேயே சோதித்துப் பார்க்க தீர்மானித்தார். அவருடைய முயற்சி வெற்றியடைந்ததுடன் அவரை பெரிதும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. அந்த நைட்ரஸ் ஆக்ஸைட் அவரை விழுந்து விழுந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதனால் அதற்கு சிரிப்பூட்டும் வாயு என்ற செல்லப் பெயரை வைத்தார். நைட்ரஸ் ஆக்ஸைடிற்கு மரத்துப்போக செய்யும் ஆற்றல் இருக்கலாம் என்று டேவி எழுதினார். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல அதை யாருமே சட்டைசெய்யவில்லை.

பார்ட்டிகளில் ஈதரும் சிரிப்பூட்டும் வாயுவும்

சிரிப்பூட்டும் வாயுவை சுவாசித்த பிறகு டேவி கோமாளியைப்போல நடந்துகொள்வது எங்கும் தெரிய வந்தது. அவர் கொஞ்ச காலத்திற்கு அந்த வாயுவை சுவாசிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். விரைவிலேயே, வேடிக்கைக்காக அந்த வாயுவைப் பயன்படுத்துவது எங்கும் பிரபலமானது. மேடை நிகழ்ச்சிகளை நடத்தும் நாடோடிகளும் இதை தங்கள் நிகழ்ச்சிநிரலில் சேர்த்துக்கொண்டனர். அவர்கள், நிகழ்ச்சிகளை காண வந்தவர்களில் யாரையாவது மேடைக்கு அழைப்பர்; நைட்ரஸ் ஆக்ஸைடை சுவாசிக்க செய்வர். அந்த வாயுவை அவர்கள் சுவாசித்தவுடன், தன்னிலை இழந்து கோமாளிகளைப் போல வேடிக்கையாக நடந்துகொள்வர். இதைப் பார்த்த கூட்டத்தார் வயிறு வலிக்கும் அளவிற்கு விழுந்து விழுந்து சிரிப்பர், எனவே இந்த வாயுவைப் பற்றி இருந்த பயம் முற்றிலும் நீங்கியது.

இந்த சமயத்தில்தான் சிறிய பார்ட்டிகளில் ஈதரும் பயன்படுத்தப்பட்டது. அப்படிப்பட்ட பார்ட்டிகளில் ஒருநாள், க்ரோஃபர்ட் டபிள்யூ. லாங் என்ற இளம் அமெரிக்க மருத்துவர், ஆச்சரியமான ஒரு விஷயத்தைக் கவனித்தார். ஈதரை சுவாசித்த தன் நண்பர்கள் தள்ளாடித் தள்ளாடி நடக்கையில் காயங்கள் ஏற்பட்டன; ஆனால் அவர்களுக்கு வலி எடுத்ததாகவே தெரியவில்லை. எனவே, இதை ஆப்ரேஷன்களில் பயன்படுத்தினால் என்ன என்ற யோசனை உடனடியாக அவருக்கு உதித்தது. அப்படிப்பட்ட “ஈதர் பார்ட்டிகளில்” கலந்துகொண்ட ஜேம்ஸ் வென்னபெல் என்ற மாணவனுக்கு இரண்டு கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை ஆப்ரேஷன் செய்து அகற்ற விரும்பினான். ஆனால் ஆப்ரேஷனின்போது ஏற்படும் வலிக்கு பயந்து அதை தள்ளிப்போட்டுக்கொண்டே போனான். அதனால், ஈதரை சுவாசித்த பிறகு அந்த ஆப்ரேஷனை செய்துகொள்ளும்படி லாங் அந்த மாணவனுக்கு யோசனை கூறினார். அதன்படி, 1842, மார்ச் 30-⁠ம் தேதி வென்னபெல்லின் ஆப்ரேஷன் வேதனையின்றி வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. ஆனாலும், 1849 வரையில் லாங் தன்னுடைய கண்டுபிடிப்பை பற்றி யாரிடமும் வாயே திறக்கவில்லை.

பல் மருத்துவர்களும் அனஸ்தீஸியாவை கண்டுபிடித்தனர்

டிசம்பர் 1844-⁠ல் ஹோரேஸ் வெல்ஸ் என்ற ஐ.மா. பல் மருத்துவர், ஒருமுறை மேடை நிகழ்ச்சி ஒன்றைப் பார்ப்பதற்கு சென்றிருந்தார். அந்த வேடிக்கை நிகழ்ச்சியில் கார்ட்னர் கோல்டன் என்பவர் நைட்ரஸ் ஆக்ஸைடை சுவாசிக்க பார்வையாளர்களை முன்வரும்படி அழைத்தார். வெல்ஸ் சென்றார், சுவாசித்தார், ஆனாலும் முற்றிலும் தன்னிலை இழந்துவிடவில்லை. அதை சுவாசித்த மற்றொருவர் ஒரு பெஞ்சில் பலமாக இடித்துக்கொண்டார், அவருடைய காலிலிருந்து இரத்தம் வழிந்தபோதிலும் அவரிடம் வலியின் அறிகுறியே இல்லாததை வெல்ஸ் கவனித்தார். உடனே அவருக்கு ஞானோதயம் பிறந்தது; அதனால் நைட்ரஸ் ஆக்ஸைடை தன் பல் மருத்துவத்தில் பயன்படுத்த அன்று இரவே முடிவு செய்தார். முதலில் அதைத் தன்னில் பரிசோதிக்க விரும்பினார். அதற்குத் தேவையான வாயுவை கோல்டனிடமிருந்து பெற்றார். அவருக்கு தொல்லை கொடுத்துவந்த ஞானப்பல்லை பிடுங்குவதற்கு ஜான் ரிக்ஸ் என்ற சக மருத்துவரை அழைத்தார். இந்த வாயுவை அவர் சுவாசித்ததால் வேதனையின்றி எளிதாக பல் பிடுங்கப்பட்டது.

தன்னுடைய கண்டுபிடிப்பை நண்பர்கள் முன்னிலையில் ஊருக்கு உணர்த்த வெல்ஸ் விரும்பினார். அதை நிரூபிப்பதற்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அப்போது தனக்கிருந்த பயத்தின் காரணமாக நோயாளிக்கு குறைவான வாயுவை அவர் அளித்துவிட்டார்; எனவே அந்த நோயாளி பல்லை பிடுங்கியபோது கத்திவிட்டார். உடனே பார்வையாளர்கள் வெல்ஸை கேலி செய்து ஏகவசனத்தில் திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் அந்த நோயாளியிடம் விஷயத்தை கேட்டிருந்தால் உண்மை விளங்கியிருக்கும்; வெல்ஸும் அவர்கள் வாயில் விழாமல் தப்பித்திருப்பார். ஏனென்றால் அந்த நோயாளி கத்தியது உண்மை என்றாலும் வலியினால் அல்ல. இதை அவரே பிறகு வெல்ஸிடம் ஒப்புக்கொண்டார்.

1846, செப்டம்பர் 30-⁠ம் தேதி, வில்லியம் மோர்டன் என்ற அமெரிக்க பல் மருத்துவர், ஈதரை ஏற்றுக்கொள்ள முன்வந்த நோயாளிக்கு வேதனையின்றி பல்லை பிடுங்கிவிட்டார். 1842-⁠ல் லாங் பயன்படுத்திய அதே திரவத்தையே இவரும் பயன்படுத்தினார். மோர்டன், கைதேர்ந்த மருந்து தயாரிப்பாளரான சார்ல்ஸ் தாமஸ் ஜாக்ஸனின் உதவியுடன் அந்த ஈதரை தயாரித்தார். லாங்கைப்போல் இல்லாமல், மோர்டன் ஈதரின் மரத்துப்போகும் தன்மையை நிரூபிக்க, பார்வையாளர் முன்னிலையில் அதை உபயோகித்து ஒரு நோயாளிக்கு ஆப்ரேஷன் செய்ய தீர்மானித்தார். 1846, அக்டோபர் 16-⁠ம் தேதி, மாஸசூஸெட்ஸிலுள்ள பாஸ்டனில், அவர் ஒரு நோயாளிக்கு இதை அளித்து மரத்துப்போக வைத்தார். பிறகு வாரென் என்ற மருத்துவர், அந்த நோயாளியின் தாடையில் வளர்ந்திருந்த கூடுதல் சதையை அகற்றும் ஆப்ரேஷனை அப்போது செய்து காட்டினார். அந்த வலியில்லாத ஆப்ரேஷன் மாபெரும் வெற்றி! இந்த செய்தி ஐக்கிய மாகாணங்களிலும் ஐரோப்பாவிலும் காட்டுத் தீ போல படுவேகமாக பரவியது.

கூடுதல் கண்டுபிடிப்புகள்

இந்த கண்டுபிடிப்புகள் ஏற்படுத்திய ஆர்வம் பலதரப்பட்ட வாயுக்களின் ஆராய்ச்சிக்கு வழிவகுத்தது. 1831-⁠ல் கண்டுபிடிக்கப்பட்ட குளோரோஃபார்ம், 1847 முதற்கொண்டு பயன்படுத்தப்பட்டது. சில இடங்களில் வேறு வாயுக்களைவிட இதற்கே மவுசு அதிகம் இருந்தது. பிரசவத்தின்போது கர்ப்பிணிகளுக்கும் குளோரோஃபார்ம் கொடுக்கப்பட்டது. ஏப்ரல் 1853-⁠ல் இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணிக்கும் அது அளிக்கப்பட்டது.

அனஸ்தீஸியா பிறந்த கதை சர்ச்சைக்குள்ளானதே வருத்தகரமான விஷயம். அனஸ்தீஸியா (அதிலுள்ள இரசாயன கூட்டுப் பொருட்கள் அல்ல) கண்டுபிடிப்புக்கு யாரைப் பாராட்டுவது என்பதே அந்தச் சர்ச்சை. லாங், வெல்ஸ், மோர்டன் அல்லது மோர்டனுக்கு உதவிய ஜாக்ஸன் ஆகியோர் அடங்கிய பட்டியலில் அதற்கான பாராட்டை யாருக்குத் தருவது? இதுவரை ஏகமனதாக யாரும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் நால்வருக்குமே முக்கிய பங்குண்டு, நால்வருக்குமே அந்த மதிப்பு போய்ச் சேர வேண்டும் என்று அனஸ்தீஸியாவுக்கு கிடைத்த வெற்றியின் அடிப்படையில் பலர் குறிப்பிடுகின்றனர்.

இந்த சமயத்தில், லோக்கல் அனஸ்தீஸியா சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்தன. இது ரீஜனல் அனஸ்தீஸியா என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகை அனஸ்தீஸியா எந்த உடல் பாகத்தில் கொடுக்கப்படுகிறதோ, அந்தப் பகுதி மட்டும் மரத்துவிடும், நோயாளியோ சுயநினைவோடே இருப்பார். இன்று பல் மருத்துவர்கள், பற்களுக்கும் ஈறுகளுக்கும் சிகிச்சை அளிக்கையில் இந்த லோக்கல் அனஸ்தீஸியாவையே சாதாரணமாக பயன்படுத்துகின்றனர். அறுவை மருத்துவர்களும் சிறிய ஆப்ரேஷனுக்கு அல்லது காயங்களுக்கு தையல்போடுவதற்கு லோக்கல் அனஸ்தீஸியாவை பயன்படுத்துகின்றனர். மயக்க மருந்து கொடுக்கும் நிபுணர்கள் பிரசவத்தின்போது சாதாரணமாக இதையே கொடுக்கின்றனர்.

காலத்தின் ஓட்டத்தில், இன்று, மருத்துவத்தின் தனிப்பெரும் பிரிவாக அனஸ்தீஸியா விளங்குகிறது. இக்காலத்து மயக்க மருந்து நிபுணர்கள், நோயாளிகளை ஆப்ரேஷனுக்கு தயார்படுத்துகின்றனர். தொழில் நுட்பமிக்க இயந்திரங்கள் உதவியுடன் அனஸ்தீஸியாவை சரியாக கொடுக்கின்றனர்; அத்தோடு, அநேக இரசாயன கூட்டுப் பொருட்களின் கலவையை ஆக்ஸிஜனில் சேர்த்து சக்திவாய்ந்த அனஸ்தீஸியாவாக பயன்படுத்துகின்றனர். அநேக நோயாளிகளுக்கு, மருத்துவர் தங்களுக்கு மயக்க வாயு கொடுப்பதே தெரிவதில்லை; ஏனென்றால், அது கொடுக்கப்படுவதற்கு முன்பே சிறிதளவு அனஸ்தீஸியாவை இரத்த நாளங்களில் ஏற்றிவிடுவதால் அவர்கள் மயக்கத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். ஆப்ரேஷனுக்குப் பின்பும் வலியை குறைப்பதில் இந்த மயக்க மருந்து நிபுணர்களின் பணி தொடருகிறது.

அதனால், உங்களுக்கு எப்போதாவது ஆப்ரேஷன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் நீங்கள் அந்தளவுக்கு பயந்து சாக வேண்டிய அவசியமில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் இது நடைபெறுவதாக சற்று கற்பனை செய்துபாருங்கள்: உங்களுக்கு ஆப்ரேஷன். மருத்துவர் தன் கைகளில் இரண்டு விஸ்கி பாட்டில்களுடன் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் நுழைகிறார்; உங்கள் மனம் பயத்தால் கதற ஆரம்பிக்கிறது. இதுவே அப்போதிருந்த நிலை. ஆனால், இப்போதோ உங்கள் முன் கொண்டுவந்து நிறுத்தப்படும் நவீன மயக்க மருந்து இயந்திரம் உங்களைப் பார்த்து புன்முறுவல் செய்கிறது, நிம்மதி பெருமூச்சு விடுகிறீர்கள்.

[பக்கம் 22-ன் பெட்டி]

அக்குபங்சர் கீழை நாடுகளின் வலி நிவாரணி

அக்குபங்சர் என்ற பண்டைய சீன சிகிச்சை முறை, வலி நிவாரணியாக இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை முறையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊசிகளை குத்துகின்றனர். அந்த ஊசிகள் சிகிச்சை தேவைப்படும் பகுதியிலிருந்து தள்ளியே இருக்கும். குத்தியவுடன், ஊசிகள் சுழற்றப்படலாம் அல்லது அவை குறைந்த மின்சக்தியுடன் இணைக்கப்படலாம். “ஆப்ரேஷன்களின்போது மரத்துப்போக செய்வதற்கு [இந்த அக்குபங்சர் முறையை] சீனாவில் வழக்கமாக பயன்படுத்துகின்றனர். முழுக்க முழுக்க சுயநினைவுடனிருக்கும் சீன நோயாளிகளை இந்த அக்குபங்சர் முறையிலேயே மரத்துப்போக செய்து, மிகவும் சிக்கலான (மற்றும் சாதாரணமாகவே அதிக வலி எடுக்கும்) ஆப்ரேஷன்களையும் செய்துவிடுகின்றனர். இதை மேற்கத்திய நாடுகளிலிருந்து வருபவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கின்றனர்” என்கிறது என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா.

மருத்துவத்துறையில் நன்கு பயிற்சிபெற்ற, திறமை வாய்ந்த நிபுணர்கள் மட்டுமே அக்குபங்சர் சிகிச்சையை அளிக்க வேண்டும். என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானாவின் பிரகாரம், “அக்குபங்சர் ஊசிகள் தவறுதலாக ஆழமாக உடலுக்குள் போய் இருதயத்தை அல்லது நுரையீரலை குத்தியிருக்கின்றன, கல்லீரலில் காயங்களை ஏற்படுத்தியிருக்கின்றன, சில சமயம் தொற்று நோய்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அத்துடன், ஸ்டெரிலைஸ் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்தும்போது இதுபோன்ற மற்ற பிரச்சினைகளும் தலைதூக்கலாம்.” ஆப்ரேஷன்களில் ஆபத்து இருப்பதுபோலவே, ஜெனரல் அனஸ்தீஸியாவிலும் ஆபத்து இருக்கிறது.

[பக்கம் 21-ன் படங்கள்]

அனஸ்தீஸியா மருத்துவம் இன்று தனிப்பெரும் பிரிவாக விளங்குகிறது

[படத்திற்கான நன்றி]

நன்றி: Departments of Anesthesia and Bloodless Medicine and Surgery, Bridgeport Hospital - CT

[பக்கம் 21-ன் படத்திற்கான நன்றி]

பக்கங்கள் 2 மற்றும் 19: Reproduced from Medicine and the Artist (Ars Medica) by permission of the Philadelphia Museum of Art/Carl Zigrosser/ Dover Publications, Inc.