Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரகசிய கொலைகாரன் கார்பன் மோனாக்ஸைடு

இரகசிய கொலைகாரன் கார்பன் மோனாக்ஸைடு

இரகசிய கொலைகாரன்—கார்பன் மோனாக்ஸைடு

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்

வீட்டில் பயன்படுத்தும் எரிபொருள் சாதனங்களிலிருந்து வெளிவரும் ஒருவகை விஷ வாயுவான கார்பன் மோனாக்ஸைடால் பிரிட்டனில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சுமார் 50 பேர் இறக்கின்றனர். “வீடுகளிலும் அலுவலகங்களிலும் பெரும்பாலும் விஷத்தன்மையூட்டும் பொருட்களில் ஆஸ்பெஸ்டாஸுக்கு அடுத்திருப்பது கார்பன் மோனாக்ஸைடு என்ற வாயுவே” என அறிக்கை செய்கிறது லண்டன் ஆபத்து மைய நிறுவனம். கார்பன் மோனாக்ஸைடு என்றால் என்ன?

எரிபொருள் சரியாக எரியாதபோது வெளிவரும் ஒருவகை வாயுதான் இந்த கார்பன் மோனாக்ஸைடு. உதாரணமாக, வாகன என்ஜின்களிலிருந்தும், கரி அல்லது நிலத்தடி எரிபொருள் அல்லது முக்கியமாக கியாஸ் போன்றவற்றை எரிக்கும் வீட்டு சாதனங்களிலிருந்தும் இது வெளிவருகிறது. இது நிறமற்றது, வாசனையற்றது, சுவையற்றது. ஆனால் இது எப்படி ஒருவரை கொலை செய்ய முடியும்?

பொதுவாக சிவப்பணுக்கள் நம் உடல் திசுக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கின்றன. ஆனால் விஷத்தன்மையுள்ள கார்பன் மோனாக்ஸைடு இருக்கும்போதோ, இந்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனுக்கு பதிலாக இந்த கார்பன் மோனாக்ஸைடையே அதிகம் உறிஞ்சிக்கொள்கின்றன. இதனால், உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனின் அளவு குறையும்போது இந்த கார்பன் மோனாக்ஸைடின் நச்சுத்தன்மை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இவ்வாறு ஒருவரை கொலை செய்ய ஆரம்பிக்கிறது! சிறிதளவு கார்பன் மோனாக்ஸைடு வெளிவந்தாலும் அதை தொடர்ந்து சுவாசித்தோமேயானால் காலப்போக்கில் நிரந்தரமாக மூளை பாதிக்கப்படும். தலைவலி, தூக்க கலக்கம், சோர்வு, தலைசுற்றல், குமட்டல், மயக்கம் போன்றவை இதற்கான அறிகுறி; நிலைமை மோசமானால், தளர்ந்த நாடித் துடிப்பு, கோமா, சுவாசக் கோளாறு போன்றவை ஏற்படும். கார்பன் மோனாக்ஸைடால் ஒருவர் திடீரென பாதிக்கப்பட்டாரேயானால், அவருக்கு உடனடியாக ஆக்ஸிஜனும் செயற்கை முறையில் சுவாசிப்பதற்கான உதவியும் அவசியம். ஆக்ஸிஜன் குறைபாடு மூளையை பாதிப்பதற்குள்ளாக இந்த உதவி அளிக்க வேண்டும். இல்லையென்றால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் உயிரையே இழக்கலாம்.

கார்பன் மோனாக்ஸைடால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்? வீட்டிலுள்ள எல்லா சாதனங்களும் சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா, சரியான நிலையில் உள்ளனவா என்பதை அவ்வப்போது நிபுணர்களை வைத்து சோதியுங்கள். கியாஸ் ஸ்டவ் போன்றவற்றிலிருந்து வரும் நெருப்புத்தழல் நீல நிறத்திலில்லாமல் மஞ்சள் நிறத்திலிருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது, எரிபொருள் சரியாக எரியவில்லை, ஒருவேளை கார்பன் மோனாக்ஸைடு வெளிவரலாம் என்பதை சுட்டிக்காட்டலாம். கார்பன் மோனாக்ஸைடை கண்டுணர்ந்து ஒலி எழுப்பும் கருவிகள் இப்போது விதவிதமாக கிடைக்கின்றன. உங்கள் வீட்டிலுள்ள சாதனங்களால் எந்த ஆபத்தும் வராது என்று தவறாக நினைத்து கவனக் குறைவுடன் இருந்துவிடாதீர்கள், அவையும் கார்பன் மோனாக்ஸைடை கக்கலாம்.

(g00 12/08)

[பக்கம் 31-ன் படம்]

சரியாக எரியாத நெருப்பு

[பக்கம் 31-ன் படம்]

சரியாக எரியும் நெருப்பு

[பக்கம் 31-ன் படம்]

கார்பன் மோனாக்ஸைடை கண்டுணர்ந்து ஒலி எழுப்பும் கருவிகள் இப்போது விதவிதமாக கிடைக்கின்றன