Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர் காக்கும் கல்வி

உயிர் காக்கும் கல்வி

உயிர் காக்கும் கல்வி

“வாழ்க்கைக்கு பைபிளே மிகச் சிறந்த வழிகாட்டி.” ​—⁠தாமஸ் டிப்லேடி, 1924.

பைபிள் சார்ந்த கல்வி ஒருவரின் வாழ்க்கையையே மாற்றுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. வாழ்க்கையில் வெறுமையையும் ஏமாற்றத்தையுமே அனுபவித்தவர்களுக்கு இது சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. நமிபியாவிலிருந்து வரும் இந்த அனுபவத்தை கவனியுங்கள். துணையின்றி தவிக்கும் ஒரு தாய், யெகோவாவின் சாட்சிகளின் தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்துக்கு இப்படி எழுதினார்:

“எனக்கு வயது 29; நான் இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன் தரும் விடைகள் என்ற புத்தகத்தை இரண்டே நாட்களில் படித்து முடித்துவிட்டேன். இப்போது தனிமையில் வாடிக் கொண்டிருக்கும் எனக்கு இந்த புத்தகம் மிகவும் ஆறுதலாக இருக்கிறது. என் பாய்ஃபிரண்டு ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார், இதனால் என் இரண்டு குழந்தைகளுடன் நான் தனிமரமானேன். நாங்கள் அதிக கஷ்டத்தில் இருக்கிறோம். சில சமயம், என் குழந்தைகளை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூட நினைத்திருக்கிறேன். ஆனால் எப்போது இந்த புத்தகம் எனக்கு கிடைத்ததோ அப்போதே அந்த நினைப்பை மனதிலிருந்து தூக்கியெறிந்துவிட்டேன். தயவுசெய்து எனக்கு இலவச பைபிள் படிப்பு நடத்த ஏற்பாடு செய்யுங்கள்.”

வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் சரியாக செயல்பட்டு வெற்றி பெற பைபிள் ஒரு சிறந்த வழிகாட்டி. குடும்பத்தாரோடும், வேலை செய்பவர்களோடும், அக்கம்பக்கத்தாரோடும் சுமுகமாக வாழ அது கற்றுத்தருகிறது. (சங்கீதம் 19:7; 2 தீமோத்தேயு 3:16) சரியானவற்றை பின்பற்றுவதற்கும் தவறான பாதையை தவிர்ப்பதற்கும் சிறந்த வழிநடத்துதலை அது அளிக்கிறது. எதார்த்தமான விதத்தில் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. அதில், அநேகருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை நீங்கள் காண்பீர்கள். சிலருடைய வாழ்க்கை சந்தோஷமாகவும் பலனளிப்பதாகவும் இருந்ததற்கான காரணம் என்ன, அதேசமயத்தில் மற்றவர்களுடைய வாழ்க்கை வேதனைமிக்கதாகவும் துயர்மிகுந்ததாகவும் இருந்ததற்கான காரணம் என்ன என்பதை நீங்கள் அதில் அறிந்துகொள்ளலாம். இதிலிருந்து, எது பிரயோஜனமானது எது பிரயோஜனமற்றது என்பது உங்களுக்கு தெளிவாக புரிந்துவிடும்.

வாழ்க்கை கல்வியின் இன்றைய நிலை

நமக்கு நடைமுறையான ஞானம் மிக முக்கியம் என்பதை பைபிள் வலியுறுத்துகிறது. “ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி” என அது அறிவுறுத்துகிறது. (நீதிமொழிகள் 4:7) அதேசமயத்தில் பெரும்பாலும் மனிதர்கள் ஞானமின்றி செயல்படுவதையும் பைபிள் சுட்டிக்காட்டுகிறது. அதனால்தான், “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிற . . . தேவனிடத்தில் கேட்கக்கடவன்” என ஆலோசனை கொடுக்கிறது.​—யாக்கோபு 1:⁠5.

நம் சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் எவ்வாறு ஞானத்தை சம்பூரணமாய் அல்லது தாராளமாய் கொடுக்கிறார்? அவர் தன்னுடைய வார்த்தையாகிய பைபிள் வாயிலாகவே கொடுக்கிறார். அதனால் அதை தொடர்ந்து வாசிக்கும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறார். “பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, . . . என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள் . . . அப்பொழுது, ஆண்டவரிடம் [“யெகோவாவிடம்,” NW] கொள்ளும் அச்சம் இன்னதென்பதை உணர்ந்து கொள்வாய்; கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய். ஏனெனில் ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே [“யெகோவாவே,” NW], அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே.” (நீதிமொழிகள் 2:1, 2, 5, 6, பொது மொழிபெயர்ப்பு) கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் அறிவுரைகளை பின்பற்றும்போது அது எவ்வளவு நடைமுறையானது என்பதை உணர்ந்துகொள்வோம். அது தெய்வீக ஞானத்தை பிரதிபலிக்கிறது என்பதையும் அறிந்துகொள்வோம்.

உதாரணமாக, ஏழ்மையை சமாளிக்கும் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பைபிள் நம்மை சுறுசுறுப்பாய் இருக்கும்படி உற்சாகப்படுத்துவதோடு நம்மிடமிருப்பவற்றை அநாவசியமாக வீணாக்குவதை கண்டிக்கிறது. ஆகவே, புகைபிடிப்பது, குடித்து வெறித்துப் போவது போன்ற வீண் செலவு வைக்கும் பழக்கங்கள் பைபிள் நியமங்களுக்கு முரணானவை.​—நீதிமொழிகள் 6:6-11; 10:26; 23:19-21; 2 கொரிந்தியர் 7:⁠1.

நண்பர்கள் நம் வாழ்க்கையில் எப்படிப்பட்ட செல்வாக்கை செலுத்தக்கூடும்? “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என்கிறது பைபிள். (நீதிமொழிகள் 13:20) உடன் சகாக்களின் அழுத்தம் எந்தளவுக்கு ஒருவரை பாதிக்கிறது என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? உதாரணமாக, சகாக்களின் அழுத்தத்தால் இளைஞர்களும், பெரியவர்களும் குடிபழக்கம், போதைமருந்து துஷ்பிரயோகம், ஒழுக்கயீனம் போன்றவற்றுக்கு இரையாகியிருக்கின்றனர். ஆம், இவ்வாறு தவறான பழக்கங்களுக்கு அடிமையானவர்களுடன் நாம் பழகினால் நாமும் அவர்களைப் போலவே ஆகிவிடுவோம். இதைத்தான் பைபிளும் எச்சரிக்கிறது: “தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.”​—1 கொரிந்தியர் 15:⁠33, பொ.மொ.

நாம் எல்லோருமே சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அது எவ்வாறு சாத்தியம்? சந்தோஷமாக வாழ உதவுவது பொருட்கள் அல்ல, ஆனால் சரியான மனப்பான்மையும் உறவுமே; முக்கியமாக கடவுளுடனான நல்ல உறவே சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என பைபிள் சொல்வதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? (1 தீமோத்தேயு 6:6-10) “ஆவியில் எளிமையுள்ளவர்கள்,” “சாந்த குணமுள்ளவர்கள்,” “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள்,” “இரக்கமுள்ளவர்கள்,” “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்,” “சமாதானம்பண்ணுகிறவர்கள்,” இப்படிப்பட்டவர்களே உண்மையில் சந்தோஷமுள்ளவர்கள் என இயேசு கிறிஸ்து புகழ்பெற்ற மலைப் பிரசங்கத்தில் சொன்னார்.​—மத்தேயு 5:1-9.

பைபிளிலுள்ள போதனைகளை நீங்கள் ஆழ்ந்து சிந்திக்கும்போது, உங்கள் வாழ்க்கையை சரிவர நடத்த அவை எவ்வாறெல்லாம் உதவுகின்றன என்பதை அறிந்துகொள்வீர்கள். பைபிள் மாத்திரமே இந்தளவுக்கு நமக்கு ஆலோசனைகளை அளிக்க முடியும். அதுவும் அதில் காணப்படும் அறிவுரைகள் அதிக பலனளிப்பவை. அவை நடைமுறைக்கு ஒத்துவராதவை அல்ல; அவை நமக்கு ஒருபோதும் தீமையை கொண்டுவரப்போவதில்லை. பைபிள் கொடுக்கும் ஆலோசனைகளை பின்பற்றுவோர் நிச்சயம் பலனடைவர்.

உயிர் காக்கும் கல்வி

பைபிள் இன்று நம்முடைய வாழ்க்கையை முன்னேற்றுவிப்பது மட்டுமல்லாமல், எதிர்கால வாழ்க்கைக்குரிய நம்பிக்கையையும் அளிக்கிறது. கடவுளை சேவிப்போர் வாழ்வதற்கு ஏற்ற விதமாக இப்பூமியை சுத்தம் செய்து அழகான வீடாக மாற்றும் அபாரமான வேலையை நம் மனக்கண்முன் கொண்டுவருகிறது. எதிர்காலத்தை சித்தரித்துக்காட்டும் பின்வரும் பதிவை வாசிப்பது மனதிற்கு எவ்வளவு இதமளிக்கிறது! “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”​—வெளிப்படுத்துதல் 21:3, 4; நீதிமொழிகள் 2:21, 22.

சற்று யோசித்துப் பாருங்கள்: நோய்வாய்ப்பட்ட பிள்ளைகள் இனிமேலும் இல்லை; பஞ்சம் பட்டினி இல்லை; உடலின் பலத்தையெல்லாம் உறிஞ்சி துவண்டுபோகச் செய்யும் வியாதிகள் இல்லை, வலியும் இல்லை! வேதனையால், ஏமாற்றத்தால், துக்கத்தால் வரும் கண்ணீர் இனி இல்லை. ஏனென்றால், இவற்றை ஏற்படுத்தும் காரணங்கள் எல்லாமே நீக்கப்பட்டிருக்கும். துன்மார்க்க ஜனங்கள் கடவுளுடைய தேவதூதர்களின் படையால் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பர் என்பதால், திருடரோ, கொலைகாரரோ, பொய்யரோ, நம்முடைய பாதுகாப்பிற்கு உலைவைக்கும் வேறு எவரோ அங்கு இருக்க மாட்டார்கள். ஜனங்கள் தங்கள் சொந்த வீடுகளில் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்க்கையை அனுபவிப்பர்.​—ஏசாயா 25:8, 9; 33:24; 65:17-25.

இதைப் பற்றி வாசிக்கும்போது நம் இதயம் சந்தோஷத்தால் துள்ளவில்லையா? இன்றும் எதிர்காலத்திலும் நல்ல பலன்களை பெறுவதற்காக எவ்வாறு பைபிள் நியமங்களை பின்பற்றலாம் என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், யெகோவாவின் சாட்சிகளை அணுகுங்கள். உலகெங்கும் “உயிர் காக்கும் கல்வி”யை புகட்டும் அவர்கள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்கூட அதிக சந்தோஷமாக அக்கல்வியை புகட்டுவர்.

(g00 12/22)