Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

கோடிகளை விழுங்கிய கம்ப்யூட்டர் கோளாறு

பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் 1999-⁠ம் வருடத்திலிருந்து 2000-⁠ம் வருடத்திற்கு காலடி வைப்பதற்குள் ஒரு பெரிய ‘சோதனையை’ சந்திக்க வேண்டியிருந்தது. அதை வெற்றிகரமாக தாண்டியதால், கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். வருடத்தின் முதல் இரண்டு எண்களை கணக்கில் எடுக்காத வண்ணம் உருவாக்கப்பட்ட அநேக கம்ப்யூட்டர் புரோகிராம்களால் 1900-⁠த்திற்கும் 2000-⁠த்திற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிய முடியாது. அதனால் 1999-⁠ம் வருடத்தின் இறுதியில் கம்ப்யூட்டர்கள் இயங்காமல் நின்றுவிடும் அல்லது கோளாறுகளை ஏற்படுத்தும் என்றும் சில கம்ப்யூட்டர் வல்லுநர்கள் சொன்னார்கள். (விழித்தெழு! பிப்ரவரி 8, 1999, பக்கங்கள் 21-3-ஐ பார்க்கவும்.) அதற்கான கடைசி நாள் நெருங்குவதற்கு முன்பாகவே அந்த கோளாறை சரிசெய்துவிட வேண்டும் என அநேக புரோகிராமர்கள் கடினமாக உழைத்தனர். இதற்கு எவ்வளவு பணம் செலவானது தெரியுமா? லா மான்ட் என்ற பிரெஞ்சு செய்தித்தாளின் பிரகாரம், “உலகம் முழுவதிலும் 30,000 முதல் 60,000 கோடி டாலர் வரை” செலவு செய்திருப்பதாக ஒரு நிதி நிறுவனம் கணக்கிடுகிறது. ஐக்கிய மாகாணங்கள் சுமார் 10,000 கோடி டாலரையும், பிரான்ஸ் 2,000 கோடி டாலரையும் இதற்காக செலவு செய்திருக்கின்றன. வளைகுடா போரில் நேச நாடுகளுடைய படைகளுக்கான மொத்த செலவே “4,600 முதல் 6,000 கோடி டாலர்”தான். கம்ப்யூட்டர்களுக்கு செய்த செலவை அதனுடன் ஒப்பிட்டால் அது ஒன்றுமே இல்லை. இருப்பினும், “இதே சரித்திரம் மீண்டும் எழுதப்படும் என்பதை நாம் மறக்கக்கூடாது, . . . இதே போன்ற எண் சம்பந்தப்பட்ட புதிய கம்ப்யூட்டர் கோளாறுகள் மீண்டும் வந்து நம்மை பாடாய் படுத்தும். இருந்தாலும் 2000 வருட கம்ப்யூட்டர் கோளாறின் உச்சத்தை எட்ட முடியாது என்று சொல்லலாம்” என்கிறது த உவால் ஸ்டிரீட் ஜர்னல்.

(g00 12/08)

கோபக்காரர்களே ஜாக்கிரதை!

“எப்போதாவது கோபப்படுகிறவர்களைவிட அதிகம் கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட மூன்று மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளன” என குளோப் அண்ட் மெயில் என்ற செய்தித்தாளில் வெளிவந்த ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இருதய நோய் ஆபத்து சம்பந்தப்பட்ட ஒரு ஆய்வில் சுமார் 13,000 பேர் கலந்துகொண்டனர். இது சுமார் ஆறு வருடங்களுக்கு நீடித்தது. இந்த ஆய்வின் துவக்கத்தில், கலந்துகொண்ட யாருக்குமே இருதய நோய் இல்லை. ஒவ்வொருவரிடமும் சில குறிப்பிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன, அதற்கு அவர்கள் அளித்த பதிலை வைத்து அவர்கள் எவ்வளவு கோபப்படுகிறார்கள் என்பது கணக்கிடப்பட்டது. இந்த அடிப்படையில் அவர்கள் ஒவ்வொருவரையும் மிகுந்த கோபக்காரர், சுமாராக கோபப்படுபவர், கொஞ்சமாக கோபப்படுபவர் என மூன்று வகையாக பிரித்தனர். ஆறு வருட காலப்பகுதியில், 256 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சுமாராக கோபப்படும் ஆட்களுக்கு மற்றவர்களைவிட இதய நோய் வருவதற்கு 35 சதவீத அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கை காட்டுகிறது. அப்படியானால், அதிகம் கோபப்படுபவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. அந்த ஆய்வின் முக்கிய ஆசிரியரும் நார்த் கரோலினா யூனிவர்ஸிட்டியைச் சேர்ந்தவருமான டாக்டர் ஜேனிஸ் வில்லியம்ஸ் “நடுத்தர வயதிலுள்ள, நார்மல் இரத்த அழுத்தமுடையவர்களுக்குக்கூட கோபம் மாரடைப்பை ஏற்படுத்தலாம்” என்கிறார். அதனால், கோபப்படுபவர்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த அல்லது அழுத்தத்தை குறைக்க உதவும் சில பயிற்சிகளை செய்ய வேண்டும் என ஆய்வாளர்கள் ஆலோசனை கொடுக்கின்றனர்.

(g00 12/08)

பாஸ்வர்ட் பிரச்சினைகள்

ஒருவர் கம்ப்யூட்டரை உபயோகிப்பதற்கு முன்பு அவரை அடையாளப்படுத்தும் எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும், அந்த இரகசிய எழுத்துக்களை பாஸ்வர்ட் என்கின்றனர். ஆனால் பலர் பாஸ்வர்டுகளை மறந்துவிடுவதால் ஐ.மா.-வில் மட்டும் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான டாலர் நஷ்டம் ஏற்படுவதாக கணக்கிடப்படுகிறது. இதனால் தயாரிப்பு பாதிக்கப்படுகிறது, பிரச்சினையை சரிசெய்ய கம்ப்யூட்டர் நிபுணர்களுக்காக செலவழிக்க வேண்டியிருக்கிறது. த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிடுகிறது: “இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம், மக்கள் தங்கள் சமூக பாதுகாப்பு எண்ணையும் ஓரிரு தொலைபேசி எண்களையும் நினைவில் வைத்திருந்தால் போதும்.” ஆனால் இப்போதோ பாஸ்வர்டுகளை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பது அநேகருடைய வாழ்க்கையின் முக்கியமான பாகமாகிவிட்டது. கம்ப்யூட்டர் ஃபைல்களை பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி அல்லது ஈ-மெயிலை பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி பாஸ்வர்ட் மறந்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. பலர் அநேக பாஸ்வர்டுகளை, சங்கேத குறியீடுகளை அல்லது அடையாள எண்களை வைத்திருக்கின்றனர். கம்ப்யூட்டர் நெட்வொர்க்கை கவனித்துக்கொள்ளும் ஒரு மேற்பார்வையாளர் 129 பாஸ்வர்டுகளை வைத்து அவை அனைத்தையும் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. பாஸ்வர்ட் குழப்பங்களை தவிர்ப்பதற்கு சில கம்பெனிகள் இப்போது கைரேகையை பயன்படுத்துவது அல்லது உயர்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாளம் காண்பது போன்ற முறைகளை கொண்டுவர ஆரம்பித்திருக்கின்றன.

(g00 12/08)

தண்ணீர் இலவசம்!

இந்தியாவின் ஒரு பகுதி வறட்சியால் வாடிக்கிடந்தபோது வாடிக்கையாளர்களை எவ்வாறு கவர்வது என்பதை அங்கிருந்த விற்பனையாளர்கள் நன்கு அறிந்திருந்தனர். தங்கள் கடையில் கிடைக்கும் முக்கியமான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கினால் தண்ணீர் இலவசம் என அவர்கள் அறிவித்ததாக த டைம்ஸ் ஆஃப் இண்டியா வெளியிட்டது. ஒரு விற்பனையாளர் தன் கடையில் ஓவனையோ, ஃபிரிட்ஜையோ, வாஷிங் மெஷினையோ, டிவியையோ வாங்கினால் கோடை காலத்தில் இரண்டு மாதங்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் என்ற கணக்கில் 500 லிட்டர் தண்ணீரை இலவசமாக கொடுப்பதாக அறிவித்தார். மற்றொரு கடைக்காரர், தன்னிடம் ஃபிரிட்ஜோ டிவியோ வாங்கினால், ‘மீதமுள்ள கோடைகாலம் முழுவதற்கும் இலவச தண்ணீர்’ தருவதாக வாக்கு கொடுத்தார். இதுதான் இதுவரை இங்கு ஏற்பட்டதிலேயே மிகக் கொடுமையான தண்ணீர் தட்டுப்பாடு. தங்கம், வெள்ளி, இலவச சுற்றுலா போன்ற எதையும்விட மக்களை அதிகம் கவரும் ஒன்றாக இந்த இலவச தண்ணீர் இருந்திருக்கிறது என்பதை வடமேற்கு குஜராத் மாநிலம் கண்டுள்ளது. இதனால் தங்கள் வியாபாரம் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக ராஜ்கோட் நகர வியாபாரிகள் சொல்கின்றனர்.

(g00 12/08)

ஐரோப்பாவில் கொடுமையும் கொடூரமும்

“வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்படும்போது மரணம், சிறையில் சித்திரவதை, திட்டமிடப்பட்ட போலீஸ் துன்புறுத்துதல், இன மற்றும் மத அடக்குமுறை போன்றவற்றால்” ஐரோப்பாவில் மனித உரிமைகள் அவமதிக்கப்படுகின்றன என சமீபத்தில் வெளிவந்த செய்தியை அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு அறிக்கை செய்தது. “ஐரோப்பாவில் பெரும்பாலானோர் அடிப்படை மனித உரிமைகளுடன் வாழ்ந்துவந்தாலும், புகலிடம் நாடிவரும் அகதிகள், இன மற்றும் மத சிறுபான்மையினர் போன்ற சிலருக்கு அந்த உரிமைகள் கிடைப்பதில்லை. மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் இலக்கணமாக ஐரோப்பா கருதப்படுகிறது. ஆனால் அங்கிருக்கும் சிலர், அந்த திரைக்குப் பின்னால் உள்ள ஐரோப்பாவின் நிஜ உருவத்தைப் பார்க்கின்றனர். இன்று அநேக இடங்களில் போலீஸ் கொடுமைப்படுத்தியதாக அடிக்கடி வரும் புகார்கள் இது உண்மையென நிரூபிக்கின்றன. பிரிட்டனிலிருந்து அஜர்பைஜான் வரை தனிப்பட்ட நபர்கள் கொடூரமாகவும், மனிதாபிமானமற்ற விதத்திலும், கீழ்த்தரமாகவும் போலீஸாரால் . . . கொடுமைப்படுத்தப் பட்டிருக்கின்றனர்” என்கிறது அந்த அறிக்கை. இதற்கு காரணமானவர்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதே இல்லை என்பதற்கு அந்த அமைப்பு பின்வரும் எடுத்துக்காட்டையும் அளிக்கிறது: போலீஸ் பாதுகாப்பில் இருந்த ஒரு அகதியின் விஷயத்தில், “ஜூலை [1999]-⁠ல் சித்திரவதை மற்றும் நியாயமற்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட சர்வதேச சட்டங்களை பிரான்ஸ் மீறியதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வருடமே முடிந்து விட்டது, ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அந்த போலீஸார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; அவர்கள் இன்னும் அதே பதவியில்தான் இருக்கின்றனர்.”

(g00 12/22)

மத வழிபாடு வாழ்நாளை நீட்டிக்குமா?

“மதத்தில் ஆர்வமாக ஈடுபடுவது, உடல் ஆரோக்கியத்திற்கும் தீர்க்காயுசுக்கும் வழிவகுக்கிறது என 1977 முதல் வெளியிடப்பட்ட 42 ஆய்வுகளின் முடிவு தெரிவிக்கிறது. மதத்தில் ஆர்வமாக ஈடுபடுவது நன்மையளிக்கிறது, குறிப்பாக ஒருவர் பொது இடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து வழிபட்டால் அவரது வாழ்நாள் அதிகரிக்கிறது என புள்ளிவிவரங்கள் காட்டுவதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்” என்கிறது சயின்ஸ் நியூஸ் என்ற பத்திரிகை. ஆபத்தான பழக்க வழக்கங்களை தவிர்த்தல், நிலையான மணவாழ்க்கை, தன்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைக் குறித்து அதிகம் கவலைப்படாதிருத்தல், மற்றவர்களுடன் அதிகம் பழகுதல், நம்பிக்கையான உணர்வுகளையும் எண்ணங்களையும் கொண்டிருத்தல் போன்ற அநேக காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றன. “மதக் கூட்டங்களில் அடிக்கடி கலந்துகொள்வது, . . . சீக்கிரம் இறந்துவிடும் வாய்ப்புகளை குறைக்கிறது, முக்கியமாக பெண்களின் விஷயத்தில் இது உண்மை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் . . . நல்ல சிநேகத்தை அனுபவிப்பதாகவும், அதிக மன உளைச்சலின்றி வாழ்வதாகவும், உடலை நல்லவிதமாக கவனித்துக்கொள்வதாகவும்” மற்றொரு அறிக்கை சொல்கிறது.

(g00 12/22)

மீண்டும் ஆமைகளின் வருகை!

1980-களின் மத்திபத்திலிருந்து இந்தியாவின் கிழக்கு கரையோரத்திற்கு முட்டையிட வரும் ஆலிவ் ரிட்லீ ஆமைகளின் எண்ணிக்கை எப்போதும் இருந்திராத அளவிற்கு இந்த வருடம் உச்சநிலையை எட்டியது. இதைக் கண்ட இயற்கை பாதுகாவலர்கள் அதிக சந்தோஷமடைந்தனர். டெளண் டு எர்த் என்ற இயற்கை சம்பந்தப்பட்ட பத்திரிகைப்படி, இது ஆச்சரியத்திற்குரிய விஷயம். ஏனென்றால், 1999-⁠ல் ஒரிஸ்ஸா மாநிலத்தின் கடற்கரை பகுதிகள் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தும் இவை வந்திருக்கின்றன. இந்த ஆமை இனம் இப்போது அழியும் ஆபத்திலுள்ளது. இந்த கடற்கரை பகுதிதான், இவை முட்டையிடுவதற்காக வரும் உலகிலேயே முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். மார்ச் 13-⁠ம் தேதியிலிருந்து 20-⁠ம் தேதிக்குள்ளாக 12,30,000-⁠க்கும் அதிக ஆமைகள் கடலிலிருந்து ஏறி வந்தன. அவற்றில் 28,000 ஆமைகள் கரைக்கு அருகில் மீன்பிடி வலைகளில் மாட்டி இறந்தபோதிலும், 7,11,000 ஆமைகள் முட்டைகளை இட்டன. இந்த ஆமைகளுக்கு அநேக ஆபத்துகள் வருகின்றன​—⁠பன்றிகளும் நாய்களும் முட்டைகளை தின்றுவிடுகின்றன, ஆமை திருடர்கள் ஆமைக்கறி பிரியர்களுக்கு இவற்றை விற்றுவிடுகின்றனர், “ஆமைகளை தவிர்க்கும் சாதனம்” இல்லாத மீன்பிடி வலைகளில் இவை மாட்டி இறக்கின்றன.

(g00 12/22)

ஏமாற்றமடைந்த படகோட்டி

“கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு படகோட்டி தனியே பசிபிக் பெருங்கடலை கடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். திமிங்கலங்களை காப்பதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்த அவர் இரண்டு திமிங்கலங்களால் இந்த நீர்பயணத்தையே கைவிட்டுவிட்டார்” என அறிக்கை செய்கிறது த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள். மைக்கேல் ரெப்பி என்ற அந்த படகோட்டி சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து ஜப்பானிலுள்ள யோகஹாமாவை நோக்கி பயணப்பட்டார். “திமிங்கலங்கள் மனிதர்களால் பிடிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுப்பதற்காக” 18 மீட்டர் நீளமுள்ள தர்ஸ்டேஸ் சைல்ட் என்ற படகில், விரைவாக சென்று சாதனை படைக்க விரும்பினார். ஆனால் அவர் பயணத்தை துவங்கிய அதே நாளில், இரண்டு திமிங்கலங்கள் படகை “பலமாக இடித்தன,” அதனால் படகின் கட்டுப்பாட்டை இழந்தார். “சுக்கானின் அடிப்பகுதி உடைந்துவிட்டதை அவர் கவனித்தார், அந்த திமிங்கலங்களுள் ஒன்று அதை உடைத்திருக்கலாம்” என்கிறது டைம்ஸ் பத்திரிகை. இதேபோன்று, “கடல் வாழ் உயிரினங்கள் படும் கஷ்டங்களை உலகிற்கு தெரிவிக்க” 1997-⁠ல் அவர் எடுத்த முந்தைய முயற்சியும் தோல்வியடைந்தது. அப்போது, டோக்கியோவிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அவர் படகு கவிழ்ந்துவிட்டது.

(g00 12/22)

மலேரியாவை கொல்ல DDT உயிர் பெறுகிறது

“ஐரோப்பாவிலும் ஐ.மா.-விலும் கடந்த சுமார் 30 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லியான DDT இப்போது ‘உயிர்’ பெறுகிறது. இதற்கு உலகின் மற்ற இடங்களில் இதுவரை தடைவிதிக்கப்படவில்லை, ஒருவேளை இனியும் தடைவிதிக்கப்படாது. ஏனென்றால், இன்று மிகப் பெரிய கொலையாளியாக அநேகரை கொன்றுவரும் மலேரியாவிற்கு காரணமான கொசுக்களை அழிப்பதில் இது சக்திவாய்ந்தது. இந்த DDT-யால் மிருக ஜீவன்களை அதிகம் இழக்க நேரிடுகிறது. என்றாலும் ஒவ்வொரு வருடமும் 27 லட்ச மக்களை கொன்று 50 கோடி மக்களுக்கு தீராத வியாதியை ஏற்படுத்தும் மலேரியாவை எதிர்த்து போராடுவதற்கு இதுவே சக்திபடைத்த விஷ ஆயுதம் என்கின்றனர் உடல் ஆரோக்கிய வல்லுநர்கள்” என அறிவிக்கிறது BBC வைல்ட்லைஃப் பத்திரிகை. உலக சுகாதார நிறுவனம், DDT-ஐ விவசாயத்தில் உபயோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை ஆதரித்தாலும், மலேரியாவை கட்டுப்படுத்தும் பாதுகாப்பான சக்திவாய்ந்த மாற்று முறை வேறு கண்டுபிடிக்கப்படும்வரை DDT-ஐ பயன்படுத்தும்படி சொல்கிறது.

(g00 12/22)