Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லோஸ்டோன் தண்ணீரும் பாறையும் வெப்பமும் கைகோர்க்கும் இடம்

எல்லோஸ்டோன் தண்ணீரும் பாறையும் வெப்பமும் கைகோர்க்கும் இடம்

எல்லோஸ்டோன்—தண்ணீரும் பாறையும் வெப்பமும் கைகோர்க்கும் இடம்

உலகின் முதல் தேசிய பூங்கா, வானளாவ தண்ணீரை பீச்சும் உலகப் புகழ்பெற்ற கொதிநீர் ஊற்றுகள், வட அமெரிக்காவிலேயே பிரமாண்டமான மலை ஏரி​—⁠இந்த அனைத்தின் கதம்பம்தான் எல்லோஸ்டோன்.

அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலிருந்து விழித்தெழு! நிருபர்

நானும் என் மனைவியும் அமெரிக்காவின் வியோமிங் மாகாணத்தில் இருக்கும் எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவின் வடக்கு வாசலில் நிற்கிறோம். இந்தப் பூங்காவை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற கட்டுக்கடங்கா ஆவலில் காரில் வந்து சேர்ந்தோம். “கொதிநீர் ஊற்று” (geyser), “வெந்நீர் ஊற்று” (Hot Spring), ஓல்ட் ஃபெயித்ஃபுல் போன்ற வார்த்தைகள் எங்கள் சிறுவயது முதல் ஆவலைத் தூண்டியவை. கற்பனையில் நாங்கள் தீட்டிய காட்சியளவுக்கு உண்மையில் இருக்குமா அல்லது ஏமாற்றம்தான் மிஞ்சுமா?

கற்களால் கட்டப்பட்ட ஒரு பெரிய வளைவுதான் அந்தப் பூங்காவின் பிரதான வாசல். “மக்களின் பிரயோஜனத்திற்கும் சந்தோஷத்திற்கும்” என அதில் பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகள் எங்களை வரவேற்றன. இதுதான் உலகின் முதல் தேசிய பூங்கா; 1872-ஆம் வருடம் திறக்கப்பட்டது.

மொன்டானா மாகாணத்தின் எல்லையருகே உள்ள மாமொத் ஹாட் ஸ்பிரிங்ஸ் (Mammoth Hot Springs) என்று அழைக்கப்படும் வெந்நீர் ஊற்றுகளிலிருந்து எங்கள் சுற்றுலாவை தொடங்கினோம். பூமியின் ஆழத்தில் இருக்கும் உஷ்ணம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு இந்த இடம் சாட்சி பகருகிறது. இங்கிருக்கும் குளங்களிலும் நீர்நிலைகளிலும் தண்ணீர் தளதளவென்று கொதிக்கிறது. நிலத்திலிருக்கும் வெடிப்புகளிலிருந்து நீராவி கொதித்தெழும்பி பவனி செல்லும் காட்சி நெஞ்சை விட்டு நீங்காது. டிராவர்டைன் என்ற இளஞ் சிவப்பு தாது அந்நிலத்தில் படிக்கட்டுகள் போல படிந்திருக்கும் காட்சியைப் பார்த்தால் மெழுகு உருகி உருகி நிலத்தில் அமர்ந்திருப்பதைப் போன்ற அழகு!

எல்லோஸ்டோனுக்கு அடியில் அடுப்பா எரிகிறது?

நிலத்தடி உஷ்ணத்தால் கிட்டத்தட்ட 10,000 அதிசயங்கள் இங்கே நிகழ்கின்றன. இந்த உயரமான ராக்கீ பீடபூமியின் குறுக்கே காண்டினென்டல் டிவைட் a என்ற மலைத்தொடர்கள் அமைந்திருக்கின்றன. எனவே தண்ணீர் மேற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் பாய்வதோடு நிலத்திற்கு அடியிலும் பயணிக்கிறது. இவ்வாறு நிலத்தின் ஆழத்தை நோக்கி பயணிக்கும் தண்ணீரை வைத்தே எல்லோஸ்டோன் எல்லா ஜாலங்களையும் செய்கிறது என்பதை தெரிந்துகொண்டோம். முன்னொரு காலத்தில் இந்தப் பீடபூமியில் பயங்கரமான எரிமலை சீற்றங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எரிமலை வெடித்து சிதறியபோது 75 கிலோமீட்டர் நீளத்திலும் 45 கிலோமீட்டர் அகலத்திலும் இந்த இடத்தில் ஒரு குழிவு (எரிமலைவாய்) உருவானது. எல்லோஸ்டோனின் ஆழத்தில் இன்றுவரை இருக்கும் மாக்மா அல்லது கற்குழம்புதான் நிலத்தடி உஷ்ணத்திற்கும் இங்கு நிகழும் வான வேடிக்கைகளுக்கும் காரணம்.

ஒரு வெந்நீர் ஊற்று எவ்வாறு கொப்பளிக்கிறது என்பதை இந்தப் பூங்காவில் வைத்திருக்கும் வாசகங்கள் விளக்குகின்றன. நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் நீர், நுண்துளை பாறைகளின் வழியாக மெல்ல மெல்ல ஆழத்தை நோக்கி பயணிக்கிறது. அங்கே சுட்டு பொசுக்கும் பாறையை அடைகிறது; பாறைக்குக் கீழே கற்குழம்பு இருப்பதாலேயே அது இந்தளவு நெருப்பாய் சுடுகிறது. தண்ணீர் பாறையைத் தொட்டவுடன் அந்த உஷ்ணத்தால் மேற்பரப்பிற்கு மின்னல் வேகத்தில் ‘பறந்து’ வருகிறது. அடைப்புகள் இல்லாத வடிகால் கிடைக்கும்போது அது வெந்நீர் ஊற்றாக தளதளவென்று கொப்பளிக்கிறது. ஆனால், வடிகாலில் தடைகள் இருந்தால் அப்போது அழுத்தம் அதிகரித்து கொதிநீர் ஊற்றாக வெடிக்கிறது. வேறு சில இடங்களில் நிலத்திலிருக்கும் வெடிப்புகளிலிருந்து தண்ணீர் ஆவியாக வெளியேறுகிறது. இந்த வெடிப்புகளுக்கு ஃபூமரோல் என்று பெயர். மட் பாட்ஸ் என்ற இன்னொரு இயற்கை அற்புதமும் உண்டு. அமில வாயுக்களும் தண்ணீரும் சேர்ந்து மேற்பரப்பு மண்ணை களியாக்கி, பிறகு சேற்றாக்கி அந்த சேற்றை தளதளவென்று கொதிக்க வைக்கும் இடத்தையே மட் பாட்ஸ் என்று அழைக்கின்றனர். மலைக்க வைக்கும் காட்சிகள் அன்றோ!

ஓல்ட் ஃபெயித்ஃபுல்

மாமொத் ஹாட் ஸ்பிரிங்ஸ் அருகே திரும்பிய பக்கமெல்லாம் நிலத்தடி உஷ்ணத்தின் சீற்றங்கள். ஆகவே அருகில்தான் மிகப் பிரபலமான ஓல்ட் ஃபெயித்ஃபுல் கொதிநீர் ஊற்று இருக்க வேண்டும் என்று நாங்கள் ஊகித்தோம். இதை நிச்சயப்படுத்திக்கொள்ள எங்களிடமிருந்த வரைபடத்தை பார்த்தோம். ஆனால், அது தெற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதை அறிந்தபோது புல்லரித்துப் போனோம்! நாங்கள் நினைத்ததைவிட எல்லோஸ்டோனுடைய பரப்பளவு அதிகம், கிட்டத்தட்ட 9,00,000 ஹெக்டேர்.

அடுத்ததாக ஓல்ட் ஃபெயித்ஃபுல்லை பார்ப்பதற்காக எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். நாங்கள் பயணித்த ரோடு தேசியப் பூங்காவின் மேற்கே அமைந்திருக்கும் ஐந்து கொதிநீர் பேசின்களைத் தாண்டி மலைப்பாம்பைப் போல வளைந்து வளைந்து சென்றது. இப்போதோ கந்தகத்தின் வாசனையும் நீராவி பீச்சியடிக்கும் காட்சியும் எங்களுக்கு சர்வசாதாரணமாகிவிட்டன.

ஓல்ட் ஃபெயித்ஃபுல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்; அது எப்போது கொதிநீரை பீச்சியடிக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். இங்கு வந்த கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தக் கேள்வியைத்தான் முதலில் கேட்பர். சரியாக 57 நிமிடங்களுக்கு ஒருமுறை டாண் என்று மணி அடித்த மாதிரி அது சீறும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் அது மதியம் 12:47-⁠க்கு வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு இன்னும் ஒரு மணிநேரத்திற்கு மேல் இருந்தது; அறிவிப்பில் சொல்லப்பட்ட நேரமும் ஒரு குத்துமதிப்பான நேரம்தான் என்றவுடன் எங்களுக்கு சற்றே குழப்பம்! குழப்பத்தை தீர்த்துக்கொள்ள தேசியப் பூங்காவின் வனத்துறை அதிகாரி ரிக்கை அணுகினோம்.

ஓல்ட் ஃபெயித்ஃபுல் துல்லியமாக “குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் என்பதெல்லாம் கற்பனை கதையே. ஒருமுறை வெடிப்பதற்கும் அடுத்த முறை வெடிப்பதற்கும் இடையே இருக்கும் நேரம் எப்போதும் ஒரே சீராக இருந்ததில்லை. ஆண்டுகள் உருண்டோடியபோது அந்த நேரம் அதிகரித்திருக்கிறது. அதற்குக் காரணம் நிலநடுக்கங்களும் போக்கிரிகள் அந்த ஊற்று வாயில் பொருட்களை வீசி எறிந்ததும்தான். இப்போதோ அந்த நேரம் சராசரியாக 80 நிமிடங்கள். எங்களுடைய ஊழியர்களால் அடுத்த வெடிப்பு எப்போது இருக்கும் என்பதை மட்டுமே முன்னறிவிக்க முடியும்” என்றார்.

இப்போது மதியம் 12:30. எங்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை, அந்தக் கொதிநீர் ஊற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அது அடுத்த முறை ‘வித்தை’ காட்டும்போது எங்கள் கண்களால் படம் பிடிப்பதற்கு ஒரே ஆவல். நாங்கள் மட்டுமல்ல, எங்களைப் போல் நூற்றுக்கணக்கானோர் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தனர். இன்னும் சிலர் அவ்விடம் நோக்கி ஆவலோடு வந்துகொண்டிருந்தனர். இப்போதோ ஓல்ட் ஃபெயித்ஃபுல் என்ற ‘ஹீரோவின்’ சாகசத்தைப் பார்ப்பதற்காக பத்து நிமிடங்கள் காத்திருந்தோம். காத்திருந்தது வீண்போகவில்லை, யானை வருமுன் மணியோசை கேட்பதுபோல அந்த ‘ஹீரோவின்’ ‘கணைப்பு’ சத்தம் கேட்டது. நாங்கள் உஷாரானோம், பிறகு லேசாக விட்டுவிட்டு வெடித்தது; அடுத்ததாக சீற்றத்தின் உச்சத்திற்கே சென்று நீரை பீச்சியடித்து, தான் யார் என்பதை நிரூபித்துக் காட்டியது. காத்திருந்தோர் அனைவரும் கைத்தட்டினர். அது வெடித்தபோது நாங்கள் பார்த்த காட்சியை எந்த புகைப்படத்தாலும் வர்ணிக்க முடியாது. அந்த வெடிப்பு கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் நீடித்தது, நீர் பீச்சி அடித்த தூரமும் மிக அதிகம். நீரும் தூவானமும் கிட்டத்தட்ட 37 மீட்டரிலிருந்து 46 மீட்டர்வரை உயர்ந்து சுற்றிலும் சிதறிய காட்சியை என்னவென்று விளக்குவது! அந்தச் சாரல், சூரிய ஒளி பட்டு வித்தியாசமான கோலங்களில் சிதறி விழுந்து மறைந்தது.

அந்த சாகசக் காட்சியை கண்டு களித்த பிறகு அருகிலிருந்த ஓட்டலுக்கு திரும்பினோம். நாங்கள் ஓட்டலுக்கு சென்ற பிறகும் இந்த ‘ஹீரோ’ எங்களை விடுவதாக இல்லை. அது ஜாலம் காட்டும் நேரம் நெருங்கும்போது ஓட்டலில் தங்கியிருந்த அனைவரும் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே விட்டுவிட்டு ஓல்ட் ஃபெயித்ஃபுல்லை காண்பதற்காக ஆவலோடு ஓடுவோம். அன்று எத்தனையோ முறை அது குமுறி குமுறி வெடித்தது. ஒவ்வொருமுறை வெடிப்பதற்கும் அது எடுத்துக்கொண்ட நேரம், பீச்சி அடித்த தண்ணீரின் உயரம், அதனால் விளைந்த கண்கொள்ளா காட்சி போன்றவை வித்தியாசமாக இருந்தன. அன்று, அஸ்தமிக்கும் சூரிய ஒளியின் பின்னணியில் அந்த நடனமாடும் நீர் ஊற்றை பார்த்ததை வாழ்க்கையில் மறக்க முடியாது. ஓல்ட் ஃபெயித்ஃபுல் என்ற அதன் ஆங்கிலப் பெயருக்கு ஏற்ப அது முற்றிலும் நம்பிக்கைக்கு பாத்திரமானதே.

“உலகில் ஏறத்தாழ 500 கொதிநீர் ஊற்றுகள் மட்டுமே இருக்கின்றன, அவற்றில் கிட்டத்தட்ட 300 எல்லோஸ்டோன் பூங்காவில் இருக்கின்றன. இங்கு இருப்பவற்றில் கிட்டத்தட்ட 160 கொதிநீர் ஊற்றுகள் அப்பர் கீசர் பேசின் என்ற இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள சிறிய பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்றன. மற்ற கொதிநீர் ஊற்றுகள் திடீரென்று செயல்படும் அல்லது செயலற்றுவிடும். ஆனால் ஓல்ட் ஃபெயித்ஃபுல் ஏமாற்றியதேயில்லை” என்று தேசியப் பூங்காவின் வனத்துறை அதிகாரி ரிக் குறிப்பிட்டார். ஓல்ட் ஃபெயித்ஃபுல்லுக்கு அருகில்தான் கிராண்ட் என்ற கொதிநீர் ஊற்று இருக்கிறது. வெடிக்கும்போது இதிலிருந்து கிட்டத்தட்ட 60 மீட்டர் உயரத்திற்கு நீர் பீச்சியடிக்கும். ஸ்டீம்போட் என்ற கொதிநீர் ஊற்றோ 120 மீட்டர் உயரத்திற்கு நீரை பீச்சியடிக்கும், அதாவது ஓல்ட் ஃபெயித்ஃபுல்லைவிட இது மூன்று மடங்கு அதிக உயரம். ஆனால் இந்தக் கண்கொள்ளா காட்சியை நாம் நினைத்தபோது பார்க்க முடியாது, ஏனெனில் இந்த கொதிநீர் ஊற்று பல ஆண்டுகள்கூட அமைதியாக இருந்துவிடும்! நோரிஸிலுள்ள எக்கினஸ் என்ற கொதிநீர் ஊற்றை பார்த்து ரசிப்பவர்கள் சில சமயம் கதகதப்பான நீரால் அபிஷேகம் பெற்று திரும்புகின்றனர்.

பைசனோடு போட்டா போட்டி

அடுத்தநாள் காலை சுற்றுலா பயணிகளின் கையேட்டை மறுபடியும் படித்தேன். அதில் பின்வரும் குறிப்பை கவனித்தேன்: “இங்கே எளிதில் பிளந்துவிடும் நிலப்பகுதிகள் இருக்கின்றன, இவற்றிற்கு அடியில் தண்ணீர் கொந்தளிக்கிறது. இங்கிருக்கும் குளங்களில் இருக்கும் தண்ணீர் கொதிக்கும் உஷ்ணத்திலோ அதைவிட அதிக சூடாகவோதான் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும், இஷ்டம்போல் சுற்றித்திரிய விரும்பியவர்களில் அநேகர் சுடுநீரில் சூடுபட்டனர், சிலர் கொதிக்கும் நீரில் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.” இன்னொரு இடத்தில் பின்வரும் குறிப்பை கவனித்தேன்: “இங்கு பைசன் என்றழைக்கப்படும் காட்டெருமைகள் உலவுகின்றன. ஒரு பைசன் 900 கிலோகிராம் எடை இருக்கும், அதன் வேகம் மணிக்கு 50 கிலோமீட்டர். உங்களைவிட மூன்று மடங்கு வேகத்தில் ஓடும். எச்சரிக்கை: பல சுற்றுலா பயணிகள் பைசனின் கொம்புகளுக்கு பலியாகியிருக்கின்றனர்.” பைசனுடைய கண்களில் ஏடாகூடமாகப் பட்டு அதோடு போட்டா போட்டி போட வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்!

எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் போக்குவரத்து விதிகள் வித்தியாசமானவை, இங்கே மிருகங்களுக்குத்தான் முன்னுரிமை. ஏதாவது ஒரு மிருகம் கண்ணில் பட்டால் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடுகிறது. போய்கொண்டிருக்கும் கார்கள் அப்படியே நின்றுவிடுகின்றன, எதிர்பார்க்காத இடத்தில் எல்லாம் டிராஃபிக் ஜேம். நாங்கள் சென்ற ரோட்டிலும் டிராஃபிக் ஜேம், சுற்றுலாப் பயணிகள் அப்போதுதான் தங்கள் காருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். எல்லாரும் எதை ஆவலோடு பார்க்கின்றனர் என்று அங்கிருந்த ஒரு பெண்ணிடம் கேட்டேன், அதற்கு அவர் “ஒரு பெரிய மூஸ்ஸைத்தான் பார்த்தோம் [ஒருவித மான்]. கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க, அது போயிடுச்சு” என்றார்.

அதன் பிறகு எல்க் என்ற மான்கள் எங்கள் கண்களில் சிக்கின. இவை குளிர்காலத்தை சமாளிப்பதற்கு மலைகளுக்கு சென்றிருந்தன. இப்போதோ பூங்காவின் கீழ்ப்பகுதிகளுக்கு குட்டிகளோடு ஆடி அசைந்து வந்துகொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தில் இருந்த பெண்மான்கள் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் குட்டி போட்டிருக்க வேண்டும். அம்மா மான்கள் அங்கிருந்த ஓடையை கடந்துவிட்டன, குட்டிகளோ வரமாட்டேன் என்று சண்டித்தனம் செய்தன. சிறுகுட்டிகள்தானே, ஓடையில் கால் வைப்பதற்கு அச்சமோ அச்சம். இப்போதோ அம்மா மான்கள் குட்டிகளைப் பார்த்து வா, வந்துவிடு என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டன. கடைசியில் போனால் போகிறது என்பதுபோல் குட்டிகள் ஓடையில் இறங்கி அம்மா மான்களிடம் வந்து சேர்ந்தன!

“நான் தூசு, கையாலாகாதவன்”

அடுத்ததாக எல்லோஸ்டோனில் இருந்த கிராண்ட் கேனியன் என்ற பள்ளத்தாக்கிற்கு பயணித்தோம். போகும் வழியில் சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கென பார்வையாளர் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன, கிட்டத்தட்ட 360 மீட்டர் உயரத்திலிருந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கீழே பார்த்தோம். சிலசமயம் பயத்தில் வேண்டாவெறுப்போடு பார்த்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இடங்களில், தான் மேற்கொண்ட ஆய்வுப் பயணத்தைப் பற்றி 1870-ஆம் ஆண்டில் நத்தானியேல் லேங்க்ஃபோர்ட் எழுதினார். அதில், இரண்டு பிரமாண்டமான நீர்வீழ்ச்சிகளையும், 32 கிலோமீட்டர் நீளமுள்ள பள்ளத்தாக்கையும், அதன் உயரமான மஞ்சளும் சிவப்பும் கலந்த பாறை சுவர்களையும் பார்த்து பிரமித்து “நான் தூசு, கையாலாகாதவன்” என்று நினைத்ததாக எழுதியிருந்தார். அவரைப் போலவே நாங்களும் தூசு போல உணர்ந்தோம். எல்லோஸ்டோன் ஆற்றுக்கு இந்தப் பெயர் பிறந்ததற்கு இந்தப் பாறை சுவர்தான் காரணம்.

அடுத்தநாள் நாங்கள் கிழக்கு திசையில் பயணப்பட்டோம். மறுபடியும் அந்தப் பூங்காவின் நிலத்தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது. நிலப்பகுதி உயரமாகிக்கொண்டே வந்ததையும் எங்கும் காடுகள் நிறைந்திருந்ததையும் கவனித்தோம். அந்த சாலை இரண்டு முறை காண்டினென்டல் டிவைட் மலைப்பகுதியை கடந்தது. போகும் பாதையில் நாங்கள் பைசனையும் பெரிய மிருகங்களையும் பார்த்தோம். பைசன் கம்பீரமாக போஸ் கொடுத்தது. எல்லோஸ்டோனுக்கு ஜனங்கள் வந்து குமிவதற்கு கரடிகள் ஒரு முக்கிய காரணம். ஆனால் எங்களால் கரடிகளை பார்க்க முடியவில்லை. அவற்றிற்கு என்னவாயிற்று?

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பூங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளோடு கரடிகள் ‘கொஞ்சி விளையாடின’; அதனால் சில பயணிகள் காயத்தோடு திரும்பினர், சிலர் தங்கள் உயிரை தானம் செய்தனர். மனிதர்கள் தூக்கி எறியும் உணவுப் பண்டங்களையும் தின்று அவை ‘ருசி’ கண்டுவிட்டன. இப்படியொரு சூழ்நிலை மனிதர்களுக்கு மட்டுமல்ல கரடிகளுக்கும் நன்மையளிக்கவில்லை. எனவே 1970-ஆம் வருடங்களின் ஆரம்பத்தில் தேசியப் பூங்காவின் பணித்துறை, குப்பை கொட்டும் இடங்களுக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டது. இதனால் கரடிகளுக்கு ‘ருசியான’ உணவு கிடைக்கவில்லை. ஆகவே அவை உணவு தேடி காட்டிற்கு சென்றுவிட்டன. பூங்கா பணித்துறை செய்த வேலைக்கு கை மேல் பலன். இப்போது கரடிகள் இயற்கை உணவை உண்பதால் ஆரோக்கியமாக இருக்கின்றன. பூங்காவில் ஃபிஷிங் பிரிட்ஜ் என்ற இடம் இருக்கிறது, அங்கு சாப்பிடுவதற்காக, மீன்பிடிப்பதற்காக, தூங்குவதற்காக சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக செல்வர். அதே காரணங்களுக்காக அதே இடத்திற்கு கரடிகளும் வருவதால் இப்படிப்பட்ட இடங்களில் அவை மனிதர்களை ‘சந்திப்பதுண்டு.’

கடைசியாக, நாங்கள் ஃபிஷிங் பிரிட்ஜ்ஜிற்கு செல்வது என்று முடிவு செய்தோம். அங்கேதான் எதிர்பார்க்காத அதிசயம் எங்களுக்காக காத்திருந்தது. அங்கு எல்லோஸ்டோன் லேக் என்ற வட அமெரிக்காவிலேயே பிரமாண்டமான மலை ஏரியை பார்த்தோம். அதன் பின்னணியில் பனி மூடிய டெட்டன்ஸ் மலைகள். அந்தக் காட்சியைப் பார்த்ததும் எங்களுக்கு இத்தாலியின் வடபகுதியில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த ஏரியையும் மலையையும் பார்த்தபோது அழகான ஆல்ப்ஸ் மலையின் கம்பீரம் கண்முன்னே வந்தது. ஒரே குறை, கரடிகளை ‘சந்திக்க’ கொடுத்து வைக்காததுதான்.

எல்லோஸ்டோனுக்கு பிரியாவிடை கொடுக்கும் தருணம் வந்துவிட்டது. பார்க்க துடித்த காட்சிகளை ஆசைதீர கண்டு களித்தோம், மனதுக்கு திருப்தியும் ஏற்பட்டது. எங்கள் கற்பனை தீட்டிய காட்சியை மிஞ்சிவிட்டது இயற்கை தீட்டிய உண்மைக் காட்சி.

(g00 12/08)

[அடிக்குறிப்பு]

a காண்டினென்டல் டிவைட் என்பது வட அமெரிக்காவில் தொடங்கி தென் அமெரிக்கா வரை செல்லும் உயர்ந்த மலைத்தொடர் பகுதி. இதன் இரு பக்கங்களிலும் ஆறுகள் எதிர் திசையில் பாய்ந்தோடுகின்றன. அவற்றில் சில பசிபிக் பெருங்கடலை நோக்கியும் சில அட்லான்டிக் பெருங்கடலை நோக்கியும் எதிர் எதிர் திசைகளில் செல்கின்றன. வேறு சில ஆறுகள் மெக்ஸிகோ வளைகுடாவை நோக்கியும் மற்றவை ஆர்க்டிக் பெருங்கடலை நோக்கியும் செல்கின்றன.

[பக்கம் 17-ன் பெட்டி/படம்]

1988-⁠ல் ஏற்பட்ட தீ விபத்து

1988-ஆம் வருடம் ஜூலை மாத பிற்பகுதியிலும் ஆகஸ்ட் மாத ஆரம்பத்திலும் எல்லோஸ்டோன் பூங்காவில் தீ பற்றிக்கொண்டது. ஆரம்பத்தில் அது சிறியதாகத்தான் இருந்தது, ஆனால் தீ பரவியதால் அந்தப் பூங்காவில் எட்டு இடங்களில் பயங்கரமான தீ ஜுவாலைகள் கொழுந்துவிட்டு எரிந்தன. அவற்றை மனிதனால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு முதல் காரணம் வறட்சி. எல்லோஸ்டோனின் சரித்திரத்திலேயே 1988-⁠ன் கோடைகாலத்தில்தான் மிக மோசமான வறட்சி ஏற்பட்டது. சுழன்று வீசிய காற்று இதற்கு இரண்டாவது காரணம் என்று சொல்லலாம். மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று, தீ ஜுவாலைகளை ஒரு நாளைக்கு 20 கிலோமீட்டர் வரை பரப்பிவிட்டது. அதுமட்டுமல்ல, நெருப்பு பரவுவதற்கு முன்பாக, இந்தக் காற்று கங்குகளை வெகு தொலைவிற்கு வீசி எறிந்தது; இப்படி ஒரு பிரச்சினையை தீ அணைப்பவர்கள் சந்தித்ததே இல்லை. இந்த கங்குகள் விழுந்த இடங்களில் புதிதாக தீ பிடித்துக் கொண்டது.

இந்தக் காட்டுத் தீ பயங்கரமாக பரவிய சமயத்தில் அதை அணைப்பதற்காக 120 மில்லியன் டாலர் செலவு செய்தனர்; கிட்டத்தட்ட 10,000 பொது மக்களும், ராணுவ தீ அணைப்பு வீரர்களும் தீயோடு போராடினர். 100-⁠க்கும் மேற்பட்ட தீ அணைப்பு ஊர்திகளும் களத்தில் இறங்கின. ஹெலிகாப்டர்களும், கார்கோ விமானங்களும் கிட்டத்தட்ட 50,00,000 லிட்டர் தீ அணைக்கும் திரவங்களையும் 4,00,00,000 லிட்டர் தண்ணீரையும் வானிலிருந்து ஊற்றின. ஊஹூம், இந்த ஜம்பம் எல்லாம் காட்டுத் தீயிடம் பலிக்கவில்லை, பூங்காவை தீ ஜுவாலைகள் தொடர்ந்து கபளீகரம் செய்தன. இந்தத் தீ இங்கு வசிக்கும் ஜனங்களை நெருங்கியது, ஆனால் ஐயோ பாவம் பார்த்து பொசுக்கி விடாமல் விட்டுவிட்டது போலும். வானம் கருப்புப் போர்வையை போர்த்திக்கொண்ட காட்சியைத்தான் ஒவ்வொரு நாளும் பார்க்க முடிந்தது. கோடைகாலத்தின் முடிவில் இந்தப் பூங்காவைப் பார்த்தால் அது பூங்காவாக இல்லை, யுத்த களத்தைப் போல் காட்சியளித்தது. இதற்குள் 6,00,000 ஹெக்டேர் எரிந்து சாம்பலாகி விட்டது. செப்டம்பர் மாதத்தின் மத்தியில் ஏற்பட்ட குளிர் காற்று, இலையுதிர்கால புயல், லேசான பனி ஆகியவை கைகோர்த்து களத்தில் இறங்கி இந்தக் காட்டுத் தீக்கு முடிவைக் கொண்டுவந்தன.

இங்கு வசிக்கும் மிருகங்களை காட்டு தீ அந்தளவிற்கு பாதிக்கவில்லை என்பதே ஆறுதலான ஒரு விஷயம். அதற்கு பிறகு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது. புகை அந்த இடத்திலிருந்து மறைந்த பிறகு இலையுதிர்காலத்திற்கே இருக்கும் ஒரு தனி பொலிவையும் மரங்களின் தடுப்பு இன்றி அதிக இடங்களை கண்டு களிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து வசந்த காலம் வந்தது, அது காட்டுப் புஷ்பங்களையும் தன்னோடு அழைத்து வந்து எங்கும் தூவி கண்களுக்கு விருந்தளித்தது. இப்படிப்பட்ட புஷ்பங்களை இதற்கு முன் யாரும் இந்த இடத்தில் பார்த்ததே இல்லை. காட்டுத் தீயால் கருகிப்போன இடங்களில் பின்னர் மரங்கள் வளர்ந்து அந்த இடங்களை பசுமையால் போர்த்தின.

[பக்கம் 15-ன் படங்கள்]

ஓல்ட் ஃபெயித்ஃபுல்

லோயர் ஃபால்ஸ்

[படத்திற்கான நன்றி]

NPS போட்டோ

[பக்கம் 1617-ன் படம்]

ஃபயர்ஹோல் ஆறு

[பக்கம் 17-ன் படம்]

மார்னிங் கிளோரி பூல்

[படத்திற்கான நன்றி]

NPS போட்டோ