Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிறந்த கல்வி எங்கே கிடைக்கும்?

சிறந்த கல்வி எங்கே கிடைக்கும்?

சிறந்த கல்வி எங்கே கிடைக்கும்?

“சிற்பி பளிங்குக் கல்லை அழகிய சிற்பமாக வடிப்பதுபோல, கல்வி மனிதனை வடிக்கும்.”​—⁠ ஜோசஃப் அடிசன், 1711.

நீங்கள் எப்போதாவது பள்ளிக்கு போனதுண்டா? என்ற கேள்விக்கு, ‘ஆம்’ என மலரும் நினைவுகளால் மலரும் புன்முறுவலுடன் அநேகர் பதிலளிக்கக்கூடும். ஆனால் எல்லோராலும் அவ்வாறு சொல்ல முடிவதில்லை. 21-⁠ம் நூற்றாண்டில் நாம் காலடி வைத்தும், கோடிக்கணக்கான பிள்ளைகள் சரியான பள்ளிப் படிப்பின்றி வறண்டு கிடக்கின்றனர். இந்நிலை நேற்று இன்று வந்ததல்ல, காலங்காலமாகவே இருந்து வருகிறது; அதனால்தான் கல்வியறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை இன்று சுமார் 100 கோடியை தொட்டிருக்கிறது.

சரியான கல்வி மனிதரின் அடிப்படை தேவை. கல்வி என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே உரிய, சராசரி மனிதரால் அடைய முடியாத ஒன்றாக இன்று யாரும் கருதுவதில்லை. மாறாக, அது சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லோருக்குமான உரிமை, அதை அவர்கள் நிச்சயம் பெற வேண்டும் என அநேகர் நினைக்கின்றனர். ஆனால் அதற்கு தேவையான வசதிகள் ஏதும் இல்லையென்றால் எவ்வாறு நல்ல கல்வியை பெற முடியும்? தேவையான புத்தகங்கள் இல்லையென்றால், தகுதிபெற்ற ஆசிரியர்கள் இல்லையென்றால், போதுமான பள்ளிகள் இல்லையென்றால் என்ன செய்ய முடியும்?

தனிப்பட்ட கவனம் செலுத்தி, பொது அறிவை வளர்த்து, திடமான ஆன்மீக விஷயங்களை சொல்லிக் கொடுத்து வாழ்க்கையை முன்னேற்றுவிக்கும் தரமான கல்வியை எங்கே கண்டடையலாம்? உயர்ந்த ஒழுக்க தராதரங்களை கற்பிக்கும், சிறந்த வாழ்க்கை வாழ உதவும், ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிய உறுதியான நம்பிக்கையை அளிக்கும் கல்வி ஏதும் இருக்கிறதா? அப்படிப்பட்ட கல்வி இருந்தால் அது எல்லோருக்கும் கிடைக்குமா?

சிறந்த கல்விக்கான ஆதாரம்

ஆம், அப்படிப்பட்ட கல்வி உண்மையில் இருக்கிறது; அதுவும் அந்த கல்வி எல்லோருக்கும் கிடைக்க சாத்தியமானது. ஒருவேளை இது அநேகருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம், ஆனால் உண்மை! இதை நாம் நம்புவதற்கு ஆதாரமும் இருக்கிறது. அந்த ஆதாரம் சக்திவாய்ந்த கல்வி புகட்டும் ஒரு “பாடப் புத்தகம்.” அந்த பாடப் புத்தகம் காலங்காலமாக சிறந்த புத்தகமாக கருதப்பட்டிருக்கிறது; இன்று அது முழுமையாகவோ பாகங்களாகவோ 2,200-⁠க்கும் மேற்பட்ட மொழிகளில் உலகம் முழுவதிலும் கிடைக்கிறது. இன்று இவ்வுலகிலுள்ள ஏறக்குறைய எல்லா எழுத படிக்க முடிந்த மொழிகளிலும் இது கிடைக்கிறது. அதனால் அந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்களை எல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறது. இது என்ன புத்தகம்?

இது பைபிளைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்! இதுவரை எழுதப்பட்டதிலேயே மிக முக்கியமான புத்தகம் என பெயறெடுத்திருக்கிறது இந்த பைபிள். “பைபிளை திருத்தமாக அறிந்திருக்கும் ஒருவரை கரைகண்ட கல்விமான் என்று குறிப்பிடுவது சாலப் பொருந்தும். வேறெந்த கல்வியும் கலாச்சாரமும் எவ்வளவு பிரபலமாக அல்லது உயர்வானதாக கருதப்பட்டாலும்சரி . . . இதற்கு ஈடாக முடியாது” என எழுதினார் 20-⁠ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த வில்லியம் லையான் ஃபெல்ப்ஸ் என்ற கல்விமான்.

அநேக புத்தகங்களின் தொகுப்பாகிய இந்த பைபிள், சுமார் 1,600 வருட காலப்பகுதியில் எழுதப்பட்டது. இந்தப் புத்தகத் தொகுப்புக்களை ஒரு லைப்ரரிக்கு ஒப்பிடலாம். பைபிளைப் பற்றி ஃபெல்ப்ஸ் கூடுதலாக சொல்வதை கவனியுங்கள்: “நம் கருத்துக்கள், ஞானம், தத்துவம், இலக்கியம், கலை, கொள்கைகள் என எதை எடுத்துக்கொண்டாலும், அவை எல்லாம் இன்றுள்ள மற்ற எல்லா புத்தகங்களையும்விட பைபிளிலிருந்தே அதிகம் வந்துள்ளன. . . . பைபிள் பாடம் இல்லாத கல்லூரிப் படிப்பைவிட, கல்லூரிப் படிப்பில்லாத பைபிள் பாடம் சிறந்தது என நான் நம்புகிறேன்.”

இன்று, யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ அமைப்பு, இந்த பைபிளை அடிப்படையாக கொண்டு உலகம் முழுவதிலும் குறிப்பிடத்தக்க கல்வி புகட்டும் வேலையை செய்து வருகிறது. இக்கல்வி, எழுதப் படிக்க உதவி செய்வதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. ஒருவரை மனதளவிலும் ஒழுக்க ரீதியிலும் நன்கு பயிற்றுவிக்கிறது. அது சிறந்த எதிர்கால நம்பிக்கையை அளிக்கிறது. இக்காலத்தைப் போல் இல்லாமல் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்பதற்கு நம்பத்தக்க ஆதாரங்களை அளிக்கிறது.

உயிர் காக்கும் இந்த கல்வி புகட்டும் வேலையைப் பற்றி அடுத்த கட்டுரையில் வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

(g00 12/22)