Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம்பிக்கை என்னை தாங்கி ஆதரிக்கிறது

நம்பிக்கை என்னை தாங்கி ஆதரிக்கிறது

நம்பிக்கை என்னை தாங்கி ஆதரிக்கிறது

டாட்டியானா விலேஸ்கா சொன்னது

என் அம்மா நாங்கள் குடியிருந்த வீட்டிலேயே அடித்து கொல்லப்பட்டார். எங்களுடைய சந்தோஷமான குடும்பம் சின்னாபின்னமானது. நான்கு மாதங்களுக்குப்பின் அப்பாவும் தற்கொலை செய்துகொண்டார். நானும் சாகவே விரும்பினேன். இருந்தாலும், இந்தக் கதையைச் சொல்வதற்கு நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன்? சொல்கிறேன் கேளுங்கள்.

டோனெட்ஸ்க், இது கிழக்கு உக்ரேனில் உள்ள ஒரு நகரம். இது உருக்கு ஆலைகளுக்கும், நிலக்கரி சுரங்கங்களுக்கும் பேர்போனது. பத்து இலட்சத்திற்கும் அதிகமான ஜனங்கள் இங்கே வசிக்கிறார்கள். இங்குள்ள ஜனங்கள் ரஷ்ய மொழி பேசுகிறார்கள். அவர்கள் கடின உழைப்பாளிகள், மற்றவர்களுடன் அன்பாக பழகுபவர்கள். சிலர் ஜோதிடத்தில் அல்லது மாயமந்திர பழக்கங்களில் நம்பிக்கை வைக்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஜாதகம் பார்க்கிறார்கள். மற்றவர்கள் மந்திரவாதிகளை தேடிச் செல்கிறார்கள். இந்த மந்திரவாதிகளை ரஷ்ய மொழியில் கால்டுன்கள் என அழைக்கிறார்கள். இவர்களில் சிலர் நோய்நொடியிலிருந்து விடுதலை பெறும் நம்பிக்கையில் அல்லது சும்மா ஜாலிக்காக இறந்தவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள்.

அப்பா ஒரு ஷு-மேக்கர். அவர் நாத்திகர் என்று சொல்லிக்கொண்டாலும் யாரோ ஒருவர் நம்மை இந்த பூமியில் வைத்திருக்கிறார் என நம்பினார். “நாமெல்லாம் இந்த பூமிக்கு சும்மா விருந்தாளிங்க மாதிரிதான்” என்று அவர் சொல்வதுண்டு. ஒரு ஈஸ்டர் பண்டிகை தவறாமல் அம்மா சர்ச்சுக்கு போவார்கள். “கடவுள்னு ஒருத்தர் உயிரோடு இருக்கிறார்ன்னா நாம் கண்டிப்பா சர்ச்சுக்கு போகணும்” என அம்மா சொல்வார்கள். நான் 1963-⁠ல் மே மாதம் பிறந்தேன். என்னுடைய அக்காவின் பெயர் லுபாஃப். தம்பியின் பெயர் அலெக்ஸாண்டர். இதுவே எங்கள் மகிழ்ச்சியான குடும்பம்.

“வெள்ளை மாயவித்தை நல்லது”

பியாட்டர் a என்பவர் எனக்கு தூரத்து சொந்தம். அவர் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில், ஒரு விபத்தில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு விட்டது. ஒரு ஸ்பெஷல் கிளினிக்கில் சிகிச்சை பெற்றால்தான் குணமாகும். ஆனால், தன்னுடைய உடம்பை கவனிப்பதற்காக கால்டுனிடத்தில் ஆலோசனை கேட்கச் சென்றார். அந்த மந்திரவாதி, பியாட்டரை ஆவி உலகத்துடன் தொடர்புகொள்ள வைத்தார். இதெல்லாம் மூடப்பழக்கங்கள் என்று அவருடைய மனைவியும் என்னுடைய அம்மா, அப்பாவும் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்கவில்லை. தனக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக் கொண்டிருந்தார். “நான் ஈடுபடறது கருப்பு மாயவித்தை அல்ல, வெள்ளை மாயவித்தை. கருப்பு மாயவித்தைதான் கெட்டது. வெள்ளை மாயவித்தை நல்லது,” என அடித்துக் கூறினார்.

தனக்கு மந்திர சக்தி இருப்பதால் எதிர்காலத்தைப் பற்றி சொல்ல முடியும், மக்களை தீங்கிலிருந்து பாதுகாக்கவும் முடியும் என பியாட்டர் மார்தட்டிச் சொன்னார். இருந்தாலும், பியாட்டரின் மனைவி அவரைவிட்டு பிரிந்துபோய் விட்டார்கள். அதனால், பியாட்டர் எங்கள் வீட்டில் தங்குவார். சிலசமயம் வாரக்கணக்கில் தங்குவதுண்டு. அவரால் குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே பயங்கர சண்டை ஆரம்பித்தது. கடைசியில், அவர்கள் இருவரும் பிரிந்து மணவிலக்கு செய்துகொண்டனர். அம்மாவும் பிள்ளைகளாகிய நாங்களும் மற்றொரு வீட்டிற்கு மாறிச் சென்றோம். அம்மாவின் சொந்தக்காரராகிய பியாட்டரும் எங்களோடு வந்தார்.

லுபாஃபுக்கு கலியாணமாகி, அவள் தன் கணவனோடு ஆப்பிரிக்காவிலுள்ள உகாந்தாவிற்கு சென்றுவிட்டாள். அக்டோபர் 1984-⁠ல் அலெக்ஸாண்டர் விடுமுறையில் சென்றுவிட்டான், நானும் ஒரு வாரத்திற்கு கார்லாவ்கா என்ற டவுணுக்கு போய்விட்டேன். நான் வீட்டிலிருந்து புறப்பட்டு போகும்போது வழக்கம்போல அம்மாவிடம் ‘குட்பை’ சொல்லிவிட்டு போனேன். இன்னும் கொஞ்சம் பேசியிருக்கக் கூடாதா அல்லது போகாமலேயே இருந்திருக்கக் கூடாதா என்றெல்லாம் இப்போது எத்தனையோ நெருடல்கள்! காரணம், அதற்குப்பின் அம்மாவை நான் உயிரோடு பார்க்கவேவில்லை.

“உங்க அம்மா இறந்துட்டாங்க”

நான் கோர்லோவ்காவிலிருந்து திரும்பி வந்தபோது வீடு பூட்டி கிடந்தது. யாரும் வீட்டிற்குள் நுழையக்கூடாது என்ற போலீஸின் நோட்டீஸும் வாசலில் தொங்கிக்கொண்டிருந்தது. பயத்தால் கையும் காலும் நடுங்கியது. என்ன விஷயம் என்பதை அறிய பக்கத்து வீட்டிற்குப் போனேன். பக்கத்து வீட்டு ஆல்காவிற்கு என்னைப் பார்த்ததும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்களுடைய கணவர் விலாடிமிர் என்னிடம், “டான்யா, ஏதோ விபரீதம் நடந்திருச்சு. உங்க அம்மா இறந்துட்டாங்க. பியாட்டர் உன் அம்மாவை கொன்றுபோட்டு, பிறகு எங்க வீட்டுக்கு வந்து கொலை செய்ததைப் பற்றி போலீஸுக்கு ஃபோன் பண்ணினான்” என்று பரிதாபத்துடன் சொன்னார்.

இந்த பயங்கர சம்பவத்தை போலீஸாரும் என்னிடம் தெரிவித்துவிட்டு, வீட்டுச் சாவியை கொடுத்தார். பியாட்டர்மீது எனக்கு கோபம் பொங்கியெழுந்தது. எனக்கு வந்த ஆத்திரத்தில் கையில் கிடைத்த அவனுடைய பொருட்கள் எல்லாவற்றையும்​—⁠மாயவித்தை புத்தகங்களையும்​—⁠ஒரு போர்வையில் தூக்கி போட்டு, அதை பக்கத்தில் உள்ள திறந்தவெளியில் கொளுத்திப் போட்டேன்.

அலெக்ஸாண்டர் இந்தச் செய்தியை கேள்விப்பட்டபோது, அவனுக்கும் பியாட்டர் மேல் கடும் கோபம் வந்தது. அதற்குப்பின் அலெக்ஸாண்டர் ராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டதால், அவன் அங்கு போய்விட்டான். அப்பா என்னுடன் வீட்டுக்கு வந்துவிட்டார். உகாந்தாவிலிருந்து அக்காவும் வந்து கொஞ்சம் நாட்களுக்கு எங்களுடன் தங்கினாள். சில சமயங்களில் கெட்ட ஆவிகள்தான் எங்களை ரொம்ப அலைக்கழித்ததாக உணர முடிந்தது. அதோடு, அப்பாவுக்கு பயங்கரமான கனவு வரும். அம்மா சாவுக்கு தான்தான் காரணம் என அப்பா நினைத்தார். “நான் மட்டும் அவளோடு இருந்திருந்தா அவள் இன்னும் உயிரோடு இருந்திருப்பாளே” என அவர் சொல்வார். கொஞ்ச நாளில், அப்பா தீவிரமான மனச்சோர்வுக்கு ஆளாகிவிட்டார். அம்மா இறந்து நான்கு மாதங்களுக்குள்ளாக அப்பாவும் தற்கொலை செய்துகொண்டார்.

அப்பாவுடைய சவ அடக்கத்திற்குப்பின் அலெக்ஸாண்டர் மிலிட்டரிக்கும் லுபாஃப் உகாந்தாவிற்கும் திரும்பி போய்விட்டார்கள். அதற்குப்பின் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்திற்கு அடியெடுத்து வைக்க விரும்பி, வீட்டிலிருந்து அரைமணி நேர தூரத்தில் இருக்கும் மகேயஃப்கா இன்ஸ்டிட்யூட் ஆஃப் கன்ஸ்ட்ரக்‍ஷன் இன்ஜினியரிங்-⁠ல் சேர்ந்து படித்தேன். சில வேண்டாத நினைவுகளை எல்லாம் அடியோடு மறந்துவிடுவதற்காக வீட்டை அழகுபடுத்தி புதுப்பித்தேன். ஆனால், இன்னும் ஏதோ பேய்த் தொல்லை இருப்பதுபோல் உணர்ந்தேன்.

“கடவுளே, நீர் உண்மைலேயே இருக்கிறீரென்றால்”

அலெக்ஸாண்டர் தன்னுடைய மிலிட்டரி சேவையை முடித்து வீட்டுக்குத் திரும்பினான். எங்கள் இருவருக்கும் இடையே ஒத்துப்போகாமல் பிரச்சினை ஆரம்பித்தது. அவன் கலியாணம் செய்துகொண்டதால், நான் சில மாதங்களுக்கு ரோஸ்டோவ் என்ற இடத்திற்கு அதாவது, வீட்டிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அஸாவ் கடற்கரையில் இருக்கும் ரஷ்ய நகரத்திற்குச் சென்றேன். கடைசியாக, பியாட்டருக்குச் சொந்தமான ஒரு துரும்பு ஜாமான்கூட விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் எடுத்தெறிய தீர்மானித்தேன்.

நானும் அதிக மனச்சோர்வடைந்து தற்கொலை செய்ய தீர்மானித்தேன். ஆனால், “கடவுள்னு ஒருத்தர் உயிரோடு இருக்கிறார்ன்னா” என அம்மா சொல்லும் வார்த்தைகள் என் காதில் ஒலித்துக்கொண்டிருந்தன. ஒருநாள் இரவு நான் முதன்முறையாக ஜெபம் செய்தேன். “கடவுளே, நீர் உண்மைலேயே இருக்கிறீரென்றால், தயவுசெய்து வாழ்க்கையின் நோக்கத்தைக் காட்டியருளும்” என கெஞ்சினேன். சில நாட்களுக்குப்பின், உகாந்தாவுக்கு வரச்சொல்லி லுபாஃப் கடிதம் போட்டிருந்தாள். ஆகவே தற்கொலை திட்டத்தை ஒத்திப்போட்டேன்.

உகாந்தாவில் எதிர்பாரா திருப்பங்கள்

உக்ரேன், உகாந்தா போல ஒன்றுக்கொன்று மிகவும் வித்தியாசமாக இருக்கும் இடங்களை உலகத்தில் காண்பது அரிது. மார்ச் 1989-⁠ல் நான் விமானத்தில் என்டெப்பில் வந்து இறங்கினேன். விமானத்திலிருந்து இறங்கியதும், நான் கால் எடுத்து வைத்தது “அடுப்புக்குள்தான்.” வாழ்க்கையில் இந்த மாதிரி சுட்டுப்பொசுக்கும் வெயிலை அனுபவித்ததில்லை. சோவியத் யூனியனுக்கு வெளியே இதுதான் என்னுடைய முதல் பிரயாணம், அதனால்தான் இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கு அவர்கள் பேசுவது ஆங்கில மொழி. அது எனக்கு முன்பின் தெரியாத மொழி.

நான் டாக்ஸியில் ஏறி முக்கால் மணிநேர தொலைவில் இருக்கும் கம்பாலாவிற்குச் சென்றேன். நான் பழகின இடத்திற்கும் இதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம். நான் வேறொரு கிரகத்தில் இருப்பதுபோல் தோன்றியது. ஆனால் கலகலவென இருந்த அந்த டாக்ஸி டிரைவர் ரொம்ப தங்கமான மனுஷன். ஒருவழியாக, லுபாஃபும் அவளுடைய கணவன் ஜோஸப்பும் இருக்கும் வீட்டில் என்னை கொண்டுபோய் சேர்த்தார். வீட்டிற்குள் வந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

லுபாஃப் யெகோவாவின் சாட்சிகளிடம் பைபிள் படித்துக் கொண்டிருந்தாள். நான் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் லுபாஃப் அவர்களைப் பற்றி என்னிடம் சொல்ல ரொம்ப ஆவலாக இருந்தாள். ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல் வரை அவள் கற்றக்கொண்ட எல்லாவற்றையும் வீட்டில் எங்குபோனாலும் என் பின்னாலே சுற்றிசுற்றி வந்து சொல்லிக்கொண்டே இருந்தாள். உண்மையில் எனக்கு கோபம்தான் வந்தது.

லுபாஃபுக்கு படிப்பு நடத்திக்கொண்டிருந்த அந்த சாட்சிகள் ஒருநாள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவருடைய பெயர் மாரியானா. அவர்கள் எடுத்த எடுப்பில் என்னிடம் போதிக்க ஆரம்பிக்கவில்லை. ஏனெனில் அந்த சமயத்தில் எனக்கு அந்தளவுக்கு ஆங்கிலம் புரியாது. ஆனால் அவர்களுடைய அன்பான சிநேகப்பான்மையான பார்வையே அவர்கள் கள்ளம் கபடமில்லாத நல்ல பெண் என எனக்கு பட்டது. பரதீஸ் என்றால் எப்படி இருக்கும் என்ற படத்தை, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்ற சிறு புத்தகத்திலிருந்து அவர்கள் எனக்கு காட்டினார்கள். “இதிலுள்ள இந்த பெண்ணைப் பாருங்க, அதுதான் நீங்க, பக்கத்தில் நிற்கும் மற்றொரு பெண் நான். பரதீஸிஸ் மற்ற எல்லாருடன் நாமும் இருக்கிறோம். இது ஒரு சந்தோஷமான விஷயம் இல்லையா?”

கம்பாலாவிலுள்ள மற்ற சாட்சிகளும் ஒருத்தர் மாற்றி ஒருத்தராக வீட்டிற்கு வருவது போல் தெரிந்தது. அவர்கள் அன்பாக பழகுவதைப் பார்த்தால் என் மனதை எப்படியாவது கவர முயற்சி செய்கிற மாதிரி தோன்றியது. சில வாரங்கள் கழித்து நான் முதன்முறையாக கூட்டத்தில் கலந்து கொண்டேன். அன்றைக்கு கர்த்தருடைய நினைவு ஆசரிப்பு. (லூக்கா 22:19) அங்கு சொன்ன விஷயங்கள் ஒன்றும் எனக்கு தலைகால் புரியவில்லை என்றாலும், அவர்கள் எல்லாரும் அன்பாக பழகின விதம்தான் என்னை மறுபடியுமாக கவர்ந்தது.

‘ஒரு பக்கம் விடாம படிங்க’

மாரியானா ஒரு ரஷ்ய பைபிளை எனக்குக் கொடுத்தார்கள். அதுதான் முதன்முதலில் எனக்குக் கிடைத்த பைபிள். “இந்த பைபிள ஒரு பக்கம் விடாம படிங்க. உங்களுக்கு புரியலேன்னாகூட சும்மா வாசிங்க” என அவர்கள் கெஞ்சிக் கேட்டார்கள்.

மாரியானா கொடுத்த பரிசு என்னை அதிகமாக கவர்ந்ததால் அவர்கள் சொன்னபடி செய்ய தீர்மானித்தேன். ‘பைபிள வச்சிட்டு அத தொட்டுக்கூட பார்க்காம இருந்தா என்ன அர்த்தம்’ என நினைத்தேன்.

நான் உக்ரேனுக்குத் திரும்பிச் செல்லும்போது பைபிளையும் எடுத்துச் சென்றேன். சில மாதங்களுக்கு ரஷ்யாவிலுள்ள மாஸ்கோவில் வேலை செய்தேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பைபிள் வாசித்தேன். ஒன்பது மாதங்கள் கழித்து நான் உகாந்தாவிற்குத் திரும்பிச் சென்றேன். அதற்குள்ளாக நான் பைபிளில் பாதி வாசித்து முடித்து விட்டேன். கம்பாலாவுக்குப் போனபின், எதிர்காலத்திற்கான மகத்தான நம்பிக்கையைப் பற்றி பைபிளிலிருந்து மாரியானா எனக்கு எடுத்துக் காட்டினார்கள். அதுதான் அழகிய பரதீஸ்! உயிர்த்தெழுதல்! அம்மாவையும் அப்பாவையும் மறுபடியும் பார்க்கும் நம்பிக்கை! டோனெட்ஸ்கில் இருக்கும்போது செய்த ஜெபத்திற்கு பதில்தான் நான் இப்போது கற்றுக்கொள்வதெல்லாம் என உணர்ந்தேன்.​—அப்போஸ்தலர் 24:15; வெளிப்படுத்துதல் 21:3-5.

பொல்லாத ஆவிகளைப் பற்றி படிக்கும்போது, உன்னிப்பாக கவனித்தேன். நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த சந்தேகத்திற்கு பைபிள் விடையளித்தது. மாயவித்தையில் நல்லது கெட்டது என்று ஒன்றும் கிடையாது. எல்லாமே ஆபத்தானவைதான். எங்கள் வீட்டில் நடந்ததைவிட இதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? பியாட்டருடைய பொருட்களையெல்லாம் கொளுத்தியபோது, என்னை அறியாமலேயே நான் சரியானதை செய்திருக்கிறேன். பூர்வ கிறிஸ்தவர்களும்கூட யெகோவாவை வணங்க ஆரம்பித்தபோது, மாயவித்தை சம்பந்தமான எல்லாவற்றையும் சுட்டெரித்தார்கள்.​—உபாகமம் 18:9-12; அப்போஸ்தலர் 19:19.

பைபிளை மேலும் மேலுமாக புரிந்துகொண்டு வந்தபோது இதுதான் சத்தியம் என்பது உறுதியாகிவிட்டது. என்னுடைய புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். 1990 டிசம்பரில் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றேன். லுபாஃப் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே முழுக்காட்டுதல் பெற்றாள். அவளுடைய கணவன் ஜோஸப் 1993-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றார்.

மீண்டும் டோனெட்ஸ்கில்

1991-⁠ல் நான் மறுபடியும் டோனெட்ஸ்க்குத் திரும்பினேன். அதே வருஷத்தில்தான் உக்ரேனில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் பகிரங்கமாக ஒன்றுகூடுவதற்கும் பிரசங்கிப்பதற்கும் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. ரோட்டில் போகிறவர்கள் யாராவது பேசுவதற்கு நேரத்தை அனுமதித்தால் அவர்களிடமெல்லாம் பேச ஆரம்பித்தோம். நாத்திகர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கும் நாட்டில்கூட பலரும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அறிய ஆர்வமாக இருந்தார்கள் என்பதை நாங்கள் அறிந்தோம்.

1990-களின் ஆரம்பத்தில் போதுமான அளவுக்கு பைபிள் பிரசுரங்கள் இல்லை. ஆகவே, டோனெட்ஸ்க் தெருக்களில் ‘லைப்ரரி’ வைத்து பிரசுரங்களைக் கொடுத்தோம். அதோடு நகரத்தின் முக்கிய ஜங்ஷனில் ‘ஸ்டேன்ட்’ அமைத்து அதில் எங்களுடைய புத்தகங்களையும், சிறுபுத்தகங்களையும் காட்சிக்கு வைத்தோம். சிநேகபான்மையானவர்களும் அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களும் அங்கு வந்து எங்களிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். தேவைப்பட்டோருக்கு புத்தகத்தை கடனாக கொடுத்தோம். அவர்களுக்கு பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது.

1992-⁠ல் நான் ஒரு பயனியர் ஆனேன். அதாவது, யெகோவாவின் சாட்சிகளுடைய முழு நேர ஊழியரானேன். செப்டம்பர் 1993-⁠ல் ஜெர்மனி, செல்டர்ஸில் உள்ள உவாட்ச் டவர் சங்க கிளை அலுவலகத்தில் மொழிப்பெயர்ப்பாளர் குழுவில் சேர்ந்து சேவை செய்வதற்கு அழைக்கப்பட்டேன். உக்ரேனில் உள்ள லவோவில் புதிய கிளை அலுவலகத்தின் பணி முடிவதற்காக காத்துக்கொண்டிருந்த சமயத்தில், செப்டம்பர் 1998-⁠ல் நாங்கள் போலந்துக்கு மாற்றப்பட்டோம்.

உக்ரேனிலுள்ள யெகோவாவின் ஜனங்களுடைய வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்தது. 1991-⁠ல் டோனெட்ஸ்கில் 110 சாட்சிகளைக் கொண்ட ஒரேவொரு சபை இருந்த இடத்தில் இப்போது 24 சபைகளில் 3,000-⁠க்கும் அதிகமானோர் இருக்கிறார்கள்! 1997-⁠ல் டோனெட்ஸ்க்குச் சென்றபோது இனிமையான அநேக விஷயங்களை அனுபவித்து மகிழ்ந்தேன். அதோடு வேதனை தரும் ஒரு சோகமான சம்பவமும் என் மனதை வாட்டி வதைத்தது.

“பியாட்டர் உன்னைத் தேடி அலைகிறார்”

டோனெட்ஸ்கில் தங்கியிருந்தபோது, எங்கள் குடும்பத்துக்குப் பழக்கமான ஜூலியா என்ற சாட்சி, “பியாட்டர் உன்னைத் தேடி அலைகிறார், உன்னோட பேசணுமாம்” என்ற அதிர்ச்சியூட்டும் செய்தியைச் சொன்னார்கள்.

அன்று இரவு நான் அழுது யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். எதற்காக பியாட்டர் என்னை தேடினார்? அவர் செய்த குற்றத்திற்காக பல வருடங்கள் லாக்கப்பில் இருந்தார் என்பது எனக்குத் தெரியும். அவர் செய்ததை நினைத்து அவரை வெறுத்தேன். யெகோவா வாக்களித்திருக்கும் புதிய பூமியைப் பற்றி தெரிந்துகொள்வதற்கே அவர் லாயக்கற்றவர் என நினைத்தேன். சில நாட்களுக்கு இந்த விஷயத்தைக் குறித்து ஜெபம் செய்தேன். நித்திய ஜீவனைப் பெற தகுதியானவர்கள் யார் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல என்பதை உணர்ந்தேன். இயேசு கிறிஸ்துவுடன் கழுமரத்தில் அறையப்பட்ட குற்றவாளிக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை​—⁠அந்தக் குற்றவாளியும் அவருடன் பரதீஸில் இருப்பார் என்ற வாக்குறுதியை​—⁠நினைத்துப் பார்த்தேன்.​—லூக்கா 23:42, 43.

இவற்றை எல்லாம் மனதில் வைத்து, பியாட்டரை பார்த்து அவரிடம் மேசியானிய ராஜ்யத்தைப் பற்றியும் கடவுள் கொண்டுவரப்போகும் புதிய உலகைப் பற்றியும் சாட்சி கொடுக்க தீர்மானித்தேன். இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களுடன் ஜூலியா தந்த விலாசத்தில் அவருடைய வீட்டிற்குப் போனோம். அம்மாவுடைய மரணத்திற்குப்பின் இப்போதுதான் பியாட்டரை நான் நேருக்குநேர் பார்க்கிறேன்.

அது ஓர் இறுக்கமான சூழ்நிலை. நான் இப்பொழுது ஒரு யெகோவாவின் சாட்சி என்றும் இந்த உலகத்தில் நாம் ஏன் இவ்வளவு கஷ்டங்களை சிலசமயங்களில் தனிப்பட்டவர்களாகக்கூட அனுபவிக்க வேண்டியுள்ளது என்பதை அறிந்துகொள்ள பைபிள் எனக்கு உதவியது என்றும் பியாட்டருக்கு விளக்கினேன். எங்களுடைய அம்மாவையும் அதற்குப்பின் அப்பாவையும் இழந்தது எங்கள் மனதை எவ்வளவு வாட்டிவதைத்தது என்றும் அவரிடம் சொன்னேன்.

உன்னுடைய அம்மாவைக் கொல்லும்படி ஒரு குரல் என்னிடம் சொன்னது என பியாட்டர் கூறினார். அன்று உண்மையில் என்ன நடந்தது என்பதையும் அவர் விவரமாக சொன்னார். அந்த பயங்கர கதையைக் கேட்கக் கேட்க அவர்மீது இருந்த வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக இரக்கம் கலந்ததாக மாறியது; ஏனென்றால், அவரைப் பார்க்க வேட்டையாடப்பட்ட மிருகத்தைப் போன்று பரிதாபமாக தோன்றியது. பியாட்டர் பேசி முடித்தவுடன், பைபிளில் உள்ள அதிசயமான வாக்குறுதிகளை அவரிடம் எடுத்துக் காட்ட முயன்றேன். நான் இயேசுவை நம்புகிறேன் என அவர் சொன்னார். ஆகவே நான் அவரிடம் கேட்டேன்:

“உங்ககிட்ட பைபிள் இருக்கா?”

“இப்போ இல்ல. ஆனா நான் ஆர்டர் செய்திருக்கேன்” என பதிலளித்தார்.

“பைபிள் சொல்றபடி, உண்மையான கடவுளுடைய பெயர் யெகோவா என்பத நீங்க ஏற்கனவே தெரிஞ்சிருக்கலாம்.”​—சங்கீதம் 83:17.

அந்தப் பெயரைக் கேட்டதும் பியாட்டர் நிலைகுலைந்து போனார். “அந்தப் பெயர ஏங்கிட்ட சொல்லாதே, அந்தப் பெயரை கேட்கவே எனக்கு பிடிக்கவில்லை” என்றார். கடவுளுடைய அதிசயமான வாக்குறுதிகளைப் பற்றி அவரிடம் சொல்ல நாங்கள் எடுத்த முயற்சிகளெல்லாம் அத்துடன் தோல்வியடைந்தது.

ஆனால் ஒன்று மட்டும் என் மனதில் தெளிவாக இருந்தது: நான் மட்டும் யெகோவாவைப் பற்றி அறியவில்லை என்றால் நானும் அம்மாவைப் போல கொலை செய்யப்பட்டிருக்கலாம்; அப்பாவைப் போல தற்கொலை செய்திருக்கலாம், அல்லது பியாட்டரைப்போல் கொடுமையான காரியங்களில் ஈடுபடும்படி தூண்டப்பட்டிருக்கலாம். உண்மை கடவுளாகிய யெகோவாவை அறிந்ததற்காக நான் எவ்வளவு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்!

கடந்த காலத்தை அல்ல, வருங்காலத்தை நோக்கி

இந்த வேதனையான அனுபவங்கள் என் உணர்ச்சிகளில் அழியாத காயங்களை ஏற்படுத்தி விட்டன. இப்போதும்கூட சிலசமயங்களில் அந்த நினைவுகள் எனக்கு வேதனையையும் வருத்தத்தையும் தருகின்றன. யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் அறிந்தபோது என் மனவேதனை குறைய காயங்களும் ஆறத் தொடங்கின. கடந்த காலத்தையல்ல, ஆனால் வருங்காலத்தின்மீது என் கவனத்தை ஊன்ற வைப்பதற்கு பைபிள் சத்தியம் கற்பித்தது. யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு முன்பாக எப்பேர்ப்பட்ட ஓர் எதிர்காலத்தை வைத்திருக்கிறார்!

அந்த எதிர்காலத்தில், இறந்தவர்களும் பூமிக்குரிய பரதீஸுக்கு உயிர்த்தெழுந்து வருவார்கள். என்னுடைய அப்பா அம்மா உயிரோடு வரும்போது அவர்களை வரவேற்பது ஆ, எப்பேர்ப்பட்ட ஆனந்தமான அனுபவமாக இருக்கும்! “நாமெல்லாம் இந்த பூமிக்கு சும்மா விருந்தாளிங்க மாதிரிதான்” என அப்பா சொன்னது சரியே. உண்மையிலேயே கடவுள் இருக்கிறார் என்ற அம்மாவுடைய நம்பிக்கையும் சரியே. கடவுள் கொண்டுவரும் புதிய உலகில் அம்மாவும் அப்பாவும் உயிர்த்தெழுப்பப்பட்டு வரும்போது அவர்களுக்கு பைபிள் சத்தியங்களை கற்றுக்கொடுப்பதே என்னுடைய மிகப் பெரிய ஆவல்.

(g00 12/22)

[அடிக்குறிப்பு]

a பெயர் மாற்றப்பட்டுள்ளது.

[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]

அம்மாவுடைய மரணத்திற்குப்பின் இப்போதுதான் அந்தக் கொலையாளியை நேருக்கு நேர் பார்க்கிறேன்

[பக்கம் 23-ன் படம்]

என்னை அரவணைத்தவாறு இருப்பது, உகாந்தாவில் எனக்கு பைபிள் படிப்பு எடுத்த மிஷனரிகளாகிய மாரியானாவும் ஹைன்ட்ஸ் வெட்ஹால்ட்ஸும்

[பக்கம் 23-ன் படம்]

கம்பாலாவில் என் முழுக்காட்டுதல்

[பக்கம் 24-ன் படம்]

போலந்திலுள்ள வார்ஸாவில் உக்ரேனியன் மொழிபெயர்ப்பாளராக சேவை செய்தல்