Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விஞ்ஞானம் முடிவில்லா வாழ்வை அளிக்குமா?

விஞ்ஞானம் முடிவில்லா வாழ்வை அளிக்குமா?

பைபிளின் கருத்து

விஞ்ஞானம் முடிவில்லா வாழ்வை அளிக்குமா?

பல ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருந்தால் கேட்டவருக்கு பைத்தியம் என்றே மக்கள் நினைத்திருப்பர். ஆனால், இப்போதோ இப்படியும் நடப்பதற்கு சாத்தியம் இருப்பதாக சிலர் நம்ப ஆரம்பித்திருக்கின்றனர். பழ-ஈக்கள், புழுக்கள் போன்றவற்றின் வாழ்நாட்களை இப்போது விஞ்ஞானிகள் இரட்டிப்பாக்கி இருக்கின்றனர்; இதே தொழில்நுட்ப முறைகளை மனிதர்களுக்கும் உபயோகிக்கலாம் என்பதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

மனிதர்களுடைய செல்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரை இரட்டிப்பாகி அதன் பின் இரட்டிப்பாவது நின்றுவிடுவதால் அவை இறந்துவிடும் தன்மை உடையவை என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது. செல்களை கட்டுப்படுத்தும் இந்த இயக்கத்தை ஒருவித இயற்கை கடிகாரத்திற்கு ஒப்பிடுகின்றனர்; இந்த இயக்கத்தால்தான் மக்கள் வயதாகி மரணமடைகின்றனர். ஆனால் இப்போதோ, விஞ்ஞானிகள் இந்த இயற்கை கடிகாரத்தை சரிசெய்ய முயற்சி செய்கின்றனர்.

ஒவ்வொரு டிஎன்ஏ (DNA) இழையின் முடிவிலும் டிலோமியர் என்ற பகுதி காணப்படுகிறது; இந்த டிலோமியரில்தான் முதுமையின் மர்மமே புதைந்து கிடப்பதாக ஒரு பிரபல விஞ்ஞான கொள்கை குறிப்பிடுகிறது. ஷூ லேஸ்கள் பிரிந்து நைந்து விடாமல் இருக்க அவற்றின் முனையில் பிளாஸ்டிக் குப்பிகள் இருக்கின்றன. இந்த பிளாஸ்டிக் குப்பிகளை டிலோமியர்களுக்கு ஒப்பிடலாம். ஒரு வெடியின் திரி படிப்படியாக எரிந்து சிறியதாகிவிடுவதைப் போலவே ஒவ்வொரு முறை செல் இரட்டிப்பாகும்போதும் இந்த டிலோமியர்களின் நீளமும் படிப்படியாக குறைவதை விஞ்ஞானிகள் கவனித்திருக்கின்றனர். டிலோமியர் மிகமிக சிறியதாகும்போது அந்த செல் இரட்டிப்பாவதே நின்றுவிடுகிறது. இருந்தாலும் ஒருசில என்சைம்களை அளித்தால் டிலோமியர்களின் நீளம் குறைவதில்லை; அப்படியென்றால் அந்த என்சைம்களை தொடர்ந்து அளித்தால் அந்த செல் இரட்டிப்பாகிக்கொண்டே இருக்கலாம். அதாவது மரணமே இல்லாமல் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதாக அந்த கொள்கை சொல்கிறது. இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஒரு கம்பெனியின் அதிகாரி பின்வருமாறு சொல்கிறார்: “சாவாமை சாத்தியமே என்ற எண்ணம் சரித்திரத்திலேயே இப்போதுதான் முதன்முறையாக மலர்ந்திருக்கிறது.” ஆனால் எல்லா விஞ்ஞானிகளும் இதை ஒப்புக்கொள்வதில்லை.

மரணத்தின் ஆரம்பம்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பைபிளை நம்பியவர்கள் முடிவில்லா வாழ்க்கை சாத்தியமே என்பதாக நம்பி வாழ்ந்திருக்கின்றனர். எல்லா உயிரினங்களையும் படைத்த மாபெரும் விஞ்ஞானியான யெகோவா தேவனையே நம்பியிருக்கின்றனர், மனித விஞ்ஞானிகளை அல்ல.​—சங்கீதம் 104:24, 25.

மனிதன் மரிக்க வேண்டும் என்பது மனிதனைப் படைத்தவரது நோக்கமே அல்ல என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. முதல் மனித ஜோடியை சிருஷ்டிகர் தம்முடைய சாயலாக படைத்து பூங்காவனத்தைப் போன்ற நந்தவனத்தில் குடிவைத்தார். அவர்கள் பரிபூரணமாக இருந்தனர், அதாவது அவர்களது மனதிலோ உடலிலோ எந்தக் குறையும் இல்லை. அப்போது பூமியில் முடிவில்லா வாழ்க்கையை அனுபவிப்பதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அப்படியொரு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே அவர்களை படைத்தவரது நோக்கம். அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து குழந்தைகளை பெற்றெடுத்து, உலகம் முழுவதையும் அந்த நந்தவனத்தைப் போல மாற்றும்படி தேவன் அவர்களிடம் சொன்னார்.​—ஆதியாகமம் 1:27, 28; 2:8, 9, 15.

இப்படியொரு வாய்ப்பு இருந்தாலும், கடவுளுக்கு எதிராக கலகம் செய்தால் மரணமே முடிவு என்ற எச்சரிக்கையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. எச்சரித்த பிறகும் ஆதாம் கலகம் செய்தான் என்பதை நாம் ஆதியாகமம் 3-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். கீழ்ப்படியாமையையே வாழ்க்கைப் பாணியாக்கி அந்தப் பாதையில் அவன் தொடர்ந்து நடந்தான்; விளைவு, தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கு பாவத்தையும் மரணத்தையும் பரிசாக அளித்தான். இதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் விவரிப்பதை கவனிக்கலாம்: “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.” (ரோமர் 5:12) ஆகவே ஆதாம் பாவம் செய்ததால் அவனுடைய உடல் பரிபூரணத்தை இழந்தது. இதனால் அவன் வயோதிகனாகி மரணத்தை தழுவினான். இந்தக் குறையை ஆதாமிடமிருந்து அவனது சந்ததியார் பரிசாகப் பெற்றனர்.

அப்படியென்றால் ஆதாமின் கலகமும் அதன் விளைவாக கடவுள் கொடுத்த தண்டனையும்தான் மரணத்தின் மூலகாரணம். தண்டனையாக அளிக்கப்பட்ட கடவுளுடைய தீர்ப்பை மனிதர்களால் மாற்றி எழுத முடியாது. விஞ்ஞான முன்னேற்றத்தால் எத்தனையோ மருத்துவ சாதனைகள் பிறந்திருக்கலாம். ஆனாலும் மோசே 3,500 ஆண்டுகளுக்கு முன் எழுதியதை யாராலும் மாற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை: “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.”​—சங்கீதம் 90:10.

முடிவில்லாமல் வாழ யெகோவா என்ன செய்திருக்கிறார்?

இப்போதிருக்கும் மனிதரெல்லாம் மரணமடைகிறார்கள் என்பது உண்மைதான், இருந்தாலும் இந்த நிலை என்றென்றும் இப்படியே இருக்க வேண்டும் என்பது யெகோவாவின் நோக்கமல்ல. ஒரு மாற்றம் வரப்போகிறது என்பதே நம்பிக்கை அளிக்கும் செய்தி! ஆதாம் ஏவாளுக்கு கடவுள் மரண தண்டனை கொடுத்தது நியாயமானதே; இருந்தாலும் அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளில் அநேகர் கடவுளுடைய அன்பான கண்காணிப்பிற்கு கீழ்ப்படிவர் என்பதை கடவுள் அறிந்திருந்தார். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பூமியிலேயே முடிவில்லா வாழ்க்கையை வழங்க ஏற்பாடுகளை செய்தார். இதைக் குறித்து சங்கீதக்காரன் இவ்விதம் எழுதினார்: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) இது எவ்விதம் நடந்தேறப்போகிறது?

டிஎன்ஏக்களின் மர்மங்களை மனிதர்கள் கண்டுபிடிப்பதன் விளைவாக இந்த மாற்றம் வரப்போவதில்லை. இதற்கு மாறாக, யாரெல்லாம் யெகோவா தேவனை விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் முடிவில்லா வாழ்க்கையை ஒரு வெகுமதியாக அவரே அளிக்கப் போகிறார். அதற்குமுன் ஆதாம் ஏவாளின் சந்ததியாரை மீட்க வேண்டும் என்பதற்காக அவர் இயேசுவை கிரய பலியாக அளித்தார். இதன் மூலம் அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கான வழியைத் திறந்து வைத்தார். இதைப் பற்றி இயேசுவே சொன்ன வார்த்தைகளை கவனியுங்கள்: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”​—யோவான் 3:16.

கடவுளுக்குக் கீழ்ப்படிவதில் இயேசு ஆதாமுக்கு நேர் எதிர். இருந்தாலும் அவர் ஆதாமைப் போலவே ஒரு பரிபூரண மனிதர். எனவே ஆதாம் செய்த பாவத்திற்காக, இயேசு தம்முடைய பரிபூரண மானிட வாழ்க்கையை பலியாக கொடுக்க முடிந்தது. இதன் மூலம் நீதியின் தராசு இரண்டு பக்கமும் சமமானது. அன்பின் அடிப்படையில் அவர் செய்த தியாகத்தால் ஆதாமின் சந்ததியை மரண சிறையிலிருந்து விடுதலையாக்க முடிந்தது. எனவே, யாரெல்லாம் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கிறார்களோ அவர்களெல்லாம் கடவுளுடைய வெகுமதியான முடிவில்லா வாழ்க்கையை பெற்றுக்கொள்வர்.​—ரோமர் 5:18, 19; 1 தீமோத்தேயு 2:5, 6.

மனித அபூரணத்தை நீக்குவதற்காக, மனிதர்களே முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்று தாங்களே முடிவில்லா வாழ்க்கையை விஞ்ஞானத்தின் மூலம் அடைய முடியும் என்றால் இந்தத் தியாக பலிக்கு எந்த தேவையும் இல்லை. இதன் காரணமாகத்தான் பைபிள் கொடுக்கும் இந்த அறிவுரை ஞானமானது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.”​—சங்கீதம் 146:3-6.

விஞ்ஞான ஆராய்ச்சியின் விளைவாக முடிவில்லா வாழ்க்கை விளையப் போவதில்லை. எதையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று கடவுள் முடிவு செய்திருக்கிறாரோ அதையெல்லாம் சாதிப்பதற்கு அவரால் முடியும், நிச்சயமாக சாதித்துக் காட்டுவார். “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை.” (லூக்கா 1:37, பொ.மொ.) எனவே முடிவில்லா வாழ்க்கையை யெகோவா தேவனே அளிப்பார்.

(g00 12/08)

[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]

© Charles Orrico/SuperStock, Inc.