Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்பற்ற மணவாழ்வில் மாட்டிக்கொள்ளுதல்

அன்பற்ற மணவாழ்வில் மாட்டிக்கொள்ளுதல்

அன்பற்ற மணவாழ்வில் மாட்டிக்கொள்ளுதல்

“மணவிலக்கு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் ஒரு சமுதாயத்தில், மகிழ்ச்சியற்ற அநேக திருமணங்கள் மணவிலக்கில் முடிவடையும் வாய்ப்பு இருப்பதோடு, அநேக திருமணங்கள் மகிழ்ச்சியற்றதாக ஆகிவிடும் வாய்ப்பும் இருக்கிறது.”​—⁠அமெரிக்காவிலுள்ள குடும்ப ஆய்வுக் கழகம்.

வாழ்க்கையில் பேரின்பமும் பெருந்துயரமும் ஒரே ஊற்றிலிருந்து சுரப்பதாக சொல்லப்படுகிறது. அந்த ஊற்றுதான் ஒருவருடைய மண வாழ்க்கை. சொல்லப்போனால், வாழ்க்கையில் இந்தளவு பரவசத்தையோ அல்லது இந்தளவு வேதனையையோ வேறொன்றும் தருவதில்லை. பக்கத்திலுள்ள பெட்டி காண்பிக்கிறபடி, அநேக தம்பதிகள் மிகுந்த வேதனையைத்தான் அனுபவித்திருக்கிறார்கள்.

ஆனால் பூதாகரமான பிரச்சினையில் சிறு பகுதியையே மணவிலக்கு புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஒருபுறத்தில் திருமணம் மூழ்கிவிடுகையில், மறுபுறத்திலோ எண்ணற்ற மற்ற திருமணங்கள் தேங்கிய தண்ணீரில் ஆடாமல் அசையாமல் கிடக்கின்றன. “எங்க குடும்பம் மகிழ்ச்சியான குடும்பமாகத்தான் இருந்தது, ஆனால் கடந்த 12 வருஷத்துல பட்டபாடு இருக்கே . . . ” என பெருமூச்சு விடுகிறார் மணமாகி 30 வருடங்களுக்கும் அதிகமான ஒரு பெண். “என் கணவர் என்னுடைய உணர்ச்சிகளை கொஞ்சம்கூட மதிக்கிறதே கிடையாது. சொல்லப்போனால், என் உள்ளத்துல இருக்கிற விரோதியே அவர்தான்.” அதே போல, மணமாகி 25 வருடங்களான ஒரு கணவரும் புலம்பினார்: “என்மீது அன்பில்லைன்னு என்னுடைய மனைவி சொல்லிட்டா. சும்மா ‘ரூம்மேட்’ மாதிரி இருந்துகிட்டு, ‘ஃப்ரீ டைம்ல’ அவுங்கவுங்க வழியில போய்கிட்டா நிலைமையை சகிச்சிக்கலாம்னு சொல்றா.”

ஆனால், இப்படிப்பட்ட மோசமான சூழலில் சிலர் தங்களுடைய திருமண பந்தத்தையே முறித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும், அநேகருக்கு மணவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏன்? சமுதாயத்தார் பார்வையில் களங்கம், பணப் பிரச்சினை, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள், மத நம்பிக்கைகள் போன்ற காரணங்கள், அன்பற்ற சூழ்நிலையிலும்கூட, ஒரு தம்பதியை சேர்ந்திருக்கச் செய்யலாம் என டாக்டர் கேரன் கெய்ஸர் சொல்கிறார். “சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்வது சாத்தியமில்லாமல், உணர்ச்சிப்பூர்வமாக விவாகரத்து செய்யப்பட்ட ஒரு துணைவரோடு ஏதோ வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.”

தங்களுடைய உறவு உணர்வற்று போனதால், திருப்தியற்ற வாழ்க்கையே கதி என எந்த முயற்சியும் எடுக்காமல் தம்பதியினர் சும்மா இருந்துவிட வேண்டுமா? மணவிலக்குக்கு ஒரே மாற்றீடு அன்பற்ற மண வாழ்வுதானா? தொல்லைகள் மிகுந்த மண வாழ்வை மணம் வீச செய்ய முடியும் என்பதை அனுபவங்கள் காட்டுகின்றன​—⁠முறிவு என்ற வேதனையிலிருந்து மட்டுமல்ல, அன்பில்லாமை என்ற பரிதாபமான நிலையிலிருந்தும் வெளிவர முடியும்.

(g01 1/8)

[பக்கம் 3-ன் பெட்டி]

உலகில் விவாகரத்து வீதம்

ஆஸ்திரேலியா: 1960-களின் ஆரம்பம் முதற்கொண்டு விவாகரத்து எண்ணிக்கை சுமார் நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது.

பிரிட்டன்: 10 திருமணங்களில் 4, விவாகரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா, ஜப்பான்: சுமார் மூன்றில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிவடைகிறது.

ஐக்கிய மாகாணங்கள்: 1970 முதல், திருமணம் செய்துகொள்பவர்களில் பாதி பேரால் மட்டுமே ஒன்றுசேர்ந்து வாழ முடிகிறது.

ஜிம்பாப்வே: ஒவ்வொரு 5 திருமணத்தில் சுமார் 2 விவாகரத்தில் முடிவடைகிறது.