Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எனக்கு காதலிக்க வயசு பத்தாது என்று பெற்றோர் நினைத்தால்?

எனக்கு காதலிக்க வயசு பத்தாது என்று பெற்றோர் நினைத்தால்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

எனக்கு காதலிக்க வயசு பத்தாது என்று பெற்றோர் நினைத்தால்?

“அம்மா நீங்க இன்னும் அந்த காலத்திலேயே இருக்கீங்க. காலம் மாறிடுச்சு. இன்னிக்கு எல்லா பசங்களும் காதலிக்கிறாங்க! நான் ஒண்ணும் சின்ன குழந்தை இல்ல.”​—⁠16 வயது ஜேனி. a

காதலிக்கும் அளவிற்கு உங்களுக்கு இன்னும் வயசு வரவில்லை என்று யாராவது சொன்னால் நிச்சயம் கோபம்தான் வரும். “பைபிள் சொல்றா மாதிரி என் அப்பா அம்மாவ கனம் பண்ணணும்னுதான் நானும் விரும்புறேன். ஆனா, இந்த விஷயத்துல அவங்க சொல்றது சரின்னு எனக்கு படல. இதப்பத்தி அவங்ககிட்ட எப்படி பேசறதுன்னும் எனக்கு தெரியல” என புலம்புகிறான் ஒரு இளைஞன். இந்த இளைஞனைப் போலவே நீங்களும், காதல் என்ற இந்த விஷயத்தில் உங்கள் பெற்றோர் நியாயமற்றவர்களாகவும் கரிசனையற்றவர்களாகவும் நடந்துகொள்கிறார்கள் என்று நினைக்கக்கூடும். நீங்களும் ஒரு ஆணையோ பெண்ணையோ சந்தித்திருக்கலாம், அவரை உங்களுக்கு பிடித்துப்போகிறது, அந்த நபரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பலாம். அல்லது காதல் விவகாரங்களில் ஈடுபட்டால்தான் நண்பர்கள் உங்களை ஏற்றுக்கொள்வார்கள் என ஒருவேளை நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். “நீங்க யாரையும் காதலிக்கலன்னா, கூடப்படிக்கிற பசங்க ஏதோ வினோதமான பிறவியா பாக்குறாங்க” என்கிறாள் இளம் மிஷேல்.

“பெற்றோர் வேறெந்த விஷயத்தையும்விட இதில்தான் அதிக நியாயமற்ற விதத்தில் நடந்துகொள்கிறார்கள், அவர்கள் புரிந்துகொள்வதே இல்லை” என்று பிள்ளைகள் நினைப்பதாக ஒரு குடும்ப ஆலோசகர் சொன்னார். உங்கள் பெற்றோரும் இவ்வாறு நியாயமற்ற விதத்தில் நடந்துகொள்வதாக உங்களுக்கு தோன்றலாம்; ஆனால் உண்மை அதுதானா? உங்களை வளர்த்து, பயிற்றுவித்து, பாதுகாத்து, வழிநடத்தும் வேலையை கடவுள் உங்கள் பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறார். (உபாகமம் 6:6, 7) அதனால், நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையின் காரணமாக அவர்கள் அவ்வாறு நடந்துகொள்ளலாம் அல்லவா? “ஆபத்து மலைபோல் வளர ஆரம்பிப்பதை என்னால் காண முடிகிறது, நினைக்கும்போதே மனதெல்லாம் படபடக்கிறது” என்கிறார் ஒரு அக்கறையுள்ள தாய். சிறுவயது பிள்ளைகள் காதலிப்பதைக் குறித்து ஏன் பெற்றோர் இந்தளவுக்கு பயப்படுகின்றனர்?

பிழைப்பை கெடுக்கும் நினைப்புகள்

“ஒருத்தர விரும்புறதே தப்புங்குற மாதிரி என் அப்பா அம்மா பேசறாங்க” என குறைகூறுகிறாள் 14 வயது பெத். இருந்தாலும், உங்கள் பெற்றோர் கிறிஸ்தவர்களாக இருந்தால் ஒரு விஷயத்தை நன்கு அறிந்திருப்பார்கள். அதாவது, ஒருவரை ஒருவர் கவரும் விதத்திலேயே கடவுள் ஆணையும் பெண்ணையும் படைத்தார் என்பது அவர்களுக்கு தெரியும். (ஆதியாகமம் 2:18-23) மனிதர் ‘பூமியை நிரப்ப வேண்டும்’ என்ற படைப்பாளரின் நோக்கத்திற்கு இசைவாக ஏற்படும் இப்படிப்பட்ட ஈர்ப்பு இயற்கையானதே என்றும் அவர்கள் அறிந்திருக்கின்றனர்.​—ஆதியாகமம் 1:⁠28.

அத்துடன், நீங்கள் ‘இளமையின் மலரும் பருவத்தில்’ இருக்கும்போது உங்கள் பாலின ஆசைகள் எவ்வளவு பலமாக இருக்கும் என்பதை உங்கள் பெற்றோரால் புரிந்துகொள்ள முடியும். (1 கொரிந்தியர் 7:36, NW) அப்படிப்பட்ட ஆசைகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் உங்களுக்கு துளியும் அனுபவம் இல்லை என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நேரடியாகவோ, ஃபோன் மூலமாகவோ, லெட்டர் அல்லது ஈ-மெயில் மூலமாகவோ எப்படி தொடர்பு கொண்டாலும்சரி, எதிர்பாலார் ஒருவருடன் நீங்கள் அதிக நேரம் செலவிட்டால் அந்த ஈர்ப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. ‘அதில் என்ன தப்பு இருக்கிறது?’ என நீங்கள் ஒருவேளை கேட்கலாம். அந்த ஆசைகளை திருப்தி செய்துகொள்வதற்கு நியாயமான வழி ஏதாவது உங்களுக்கு இருக்கிறதா? அப்படிப்பட்ட ஆசைகள் நியாயப்படி திருமணத்திற்கு வழிநடத்த வேண்டும். அதற்கு நீங்கள் தயாரா? நிச்சயம் இல்லை.

சிறு வயதிலேயே காதல் விவகாரங்களில் ஈடுபடுவது அநேக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. “தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக் கொள்ளக்கூடுமோ?” என சூடான கேள்வியை கேட்டு எச்சரிக்கிறது பைபிள். (நீதிமொழிகள் 6:27) பெரும்பாலும், இப்படிப்பட்ட சிறுவயது காதல், திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்வதில் முடிவடைகிறது; இது திருமணமாகாமலேயே கருவுற்றல், பாலுறவால் கடத்தப்படும் வியாதிகளால் தாக்கப்படுதல் போன்ற பயங்கர விளைவுகளுக்கு வழிநடத்துகிறது. (1 தெசலோனிக்கேயர் 4:4-6) உதாரணத்திற்கு டேமி என்ற பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். காதல் விவகாரங்களில் பெற்றோர் மிகவும் கண்டிப்பாக இருப்பதாகவும் தன்னை புரிந்துகொள்வதில்லை என்பதாகவும் நினைத்தாள். அதனால் அவள் படித்த பள்ளியில் ஒரு மாணவனை இரகசியமாக காதலிக்க ஆரம்பித்தாள். விளைவு, விரைவிலேயே டேமி கருவுற்றாள். அவள் வாழ்க்கையில் பெரும் இடி விழுந்தது. “எல்லோரும் வாய் கிழிய பேசுமளவுக்கு இந்தக் காதல் உண்மையில் பிரமாதமானது அல்ல” என இப்போது ஒப்புக்கொள்கிறாள் டேமி.

‘இவ்வாறு தவறான உறவு கொண்டால்தானே பிரச்சினை?’ என நீங்கள் ஒருவேளை கேட்கலாம். ஆனாலும், சிறுவயதிலேயே காதல் உணர்வுகளை தட்டி எழுப்பும் வாய்ப்புகள் அநேகம் உள்ளன. (உன்னதப்பாட்டு 2:7) முறைப்படி பல வருடங்கள் கழித்தே நிறைவேறப்போகும் ஆசைகளை ஏன் இப்போதே எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டு எரியச் செய்ய வேண்டும்? அவ்வாறு செய்தால் அதன் விளைவு ஏமாற்றமும் சஞ்சலமுமே.

நீங்கள் யோசிக்க வேண்டிய மற்ற குறிப்புகளும் இருக்கின்றன: உங்கள் திருமணத் துணையிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்க வேண்டும் என்பதை அறியும் அளவிற்கு உங்களுக்கு வாழ்க்கையில் அனுபவம் இருக்கிறதா? (நீதிமொழிகள் 1:4) ஒரு நல்ல கணவன் அல்லது மனைவிக்கு தேவையான தகுதிகளும் திறமைகளும் உங்களிடம் இருக்கின்றனவா? அதுவும் அந்த தகுதிகள் நேசிக்கப்பட்டு மதிக்கப்படும் அளவிற்கானவையா? நிரந்தரமான திருமண பந்தத்திற்கு தேவையான பொறுமையும் உறுதியும் உங்களிடம் இருக்கின்றனவா? ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலான இளம் காதலர்களின் உறவு கொஞ்ச காலத்திற்கே நீடிக்கிறது; சொற்பமானவையே நீண்ட காலத்திற்கு நீடிக்கும் திருமணத்திற்கு வழிநடத்தியிருக்கிறது.

இதைத்தான் 18 வயது மோனிக்காவும் சொல்கிறாள்: “என் பள்ளித் தோழிகளெல்லாம் தங்கள் பாய்ஃபிரண்டுகளைப் பற்றி என்னிடம் கதை கதையாக சொல்வார்கள். அவ்வாறு சொன்னவர்களில் சிலர் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொண்டனர், மற்றவர்கள் திருமணம் செய்துகொள்ள தயாராயில்லாததால் காதல் தோல்வியால் நொந்து போயினர்.” ப்ரான்டன் என்ற மற்றொரு இளைஞன் சொல்வதை கவனியுங்கள்: “ஒருவரை காதலிக்கத் துவங்கியபின், திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு நீங்கள் இன்னும் தகுதிபெறவில்லை என்பதாக உணர்ந்தால் அது மிகவும் வேதனையூட்டும். ஏனென்றால் நீங்கள் ஏற்கெனவே அவரிடம் வாக்கு கொடுத்துவிட்டீர்கள். இப்படியிருக்க அந்த நபருடைய மனதை புண்படுத்தாமல் நீங்கள் எவ்வாறு இதிலிருந்து வெளிவர முடியும்?”

அப்படிப்பட்ட வேதனையிலிருந்தும் ஏமாற்றத்திலிருந்தும் உங்களை காக்க வேண்டும் என்பதே உங்கள் பெற்றோரின் விருப்பம். அதனால்தான், நீங்கள் திருமணம் செய்துகொள்ள வாக்கு கொடுக்கும் வயது வரை காதல் விவகாரங்களில் ஈடுபடக் கூடாது என தொடர்ந்து சொல்கின்றனர். பிரசங்கி 11:10-⁠ல் சொல்லப்படும் அறிவுரையை நீங்கள் பின்பற்றவே அவர்கள் உங்களுக்கு உதவுகின்றனர்: “உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு.”

‘இதயக் கதவுகளை விசாலமாக திறவுங்கள்’

அதற்காக நீங்கள் எதிர்பாலருடன் பழகவேகூடாது என்று சொல்லவில்லை. ஆனால் ஏன் ஒருவரிடம் மட்டும் உங்கள் நட்பை குறுக்கிக்கொள்கிறீர்கள்? மற்றவர்களுடன் பழகும் விஷயத்தில், “இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்” என பைபிள் இன்னொரு சந்தர்ப்பத்தில் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 6:12, 13, பொ.மொ.) இது இன்றுள்ள இளைஞர்களுக்கு ஓர் அருமையான ஆலோசனை. இதை பின்பற்றுவதற்கான ஓர் அருமையான வழி, இருபாலாரும் ஒன்றுகூடியிருக்கும் இடங்களில் எல்லோரோடும் பழகுவது. “ஒரு குரூப்பாக இருக்கும்போது கிடைக்கிற சந்தோஷமே தனி. நமக்கு நிறைய நண்பர்கள் இருப்பது ரொம்ப நல்லது” என்கிறார் டேமி. இதைப் பற்றி மோனிக்கா சொல்வதை கவனியுங்கள்: “இந்த குரூப் ஐடியா உண்மையிலேயே எக்ஸலண்ட் ஐடியா. ஏன்னா, அங்க நீங்க வித்தியாசப்பட்ட குணங்கள உடைய ஆட்கள சந்திக்கிறீங்க. உங்களுக்கு தெரியாத அநேக நல்ல ஆட்கள் இருக்காங்க அப்டீங்கறத அப்பதான் உணருவீங்க.”

நீங்கள் மற்ற இளம் பிள்ளைகளுடன் ஒன்றாக கூடி நல்ல கூட்டுறவை அனுபவிப்பதற்காக உங்கள் பெற்றோரும் ஏற்பாடுகளை செய்யலாம். இதைக் குறித்து இரண்டு பிள்ளைகளுக்கு தாயான அன் விளக்குவதை கவனியுங்கள்: “பிள்ளைங்க எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியுற இடத்துலதான் இருக்க விரும்புவாங்க. அதனாலதான் எங்க வீட்ட எப்போதும் சந்தோஷமான இடமா வெச்சிக்கிறோம். பிள்ளைங்களோட ஃபிரென்ட்ஸ அடிக்கடி எங்க வீட்டுக்கு கூப்பிட்டு, சாப்பிடுறதுக்கு ஏதாவது கொடுத்து, அவங்க விளையாடி சந்தோஷமா இருக்கிறதுக்கும் ஏற்பாடு செய்யறோம். அதனால சந்தோஷமா இருக்குறதுக்காக வீட்ட விட்டு வேற எங்கயாவது போகனும்னு அவங்க நினைக்கிறதில்ல.”

நீங்கள் குரூப்பில் இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அங்கேயும் ஒருவரிடம் மட்டும் அதிக கவனம் செலுத்துவதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூட மற்ற அநேகர் இருக்கும்போது ஒருவருடன் பழகினால் அது காதல் என்று அர்த்தமில்லை என ஒருவேளை சில இளைஞர்கள் வாதிடலாம். அப்படி நீங்களாகவே நினைத்து ஏமாறாதீர்கள்! (சங்கீதம் 36:2) நீங்கள் நண்பர்களுடன் ஒன்றுகூடும் எல்லா சமயங்களிலும் ஒரு குறிப்பிட்ட எதிர்பாலாருடன் அதிகம் பழகுகிறீர்கள் என்றால் அது காதலிப்பதற்கு சமம். b எதிர்பாலாருடன் பழகும் விஷயத்தில் ஞானமாக செயல்படுங்கள்.​—1 தீமோத்தேயு 5:⁠2.

காத்திருத்தலின் நன்மை

நீங்கள் காதல் விவகாரங்களில் ஈடுபடும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என பெற்றோர் சொல்வதை கேட்பது உண்மையில் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால் உங்களை சங்கடப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் இவ்வாறு சொல்வதில்லை. உங்களுக்கு உதவ வேண்டும் உங்களை காக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் எல்லாவற்றையும் செய்கின்றனர். ஆகவே, உங்கள் இதயத்தை நம்பி அவர்களுடைய அறிவுரைகளை அசட்டை செய்துவிடுவதற்கு மாறாக, அவர்களுக்கிருக்கும் அனுபவத்திற்கு ஏன் மதிப்பு கொடுக்கக்கூடாது? உதாரணத்திற்கு, எதிர்பாலருடன் பழகும் விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால், ஏன் அடுத்தமுறை உங்கள் பெற்றோரிடம் அதைக் குறித்து ஆலோசனை கேட்கக்கூடாது? “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்” என நீதிமொழிகள் 28:26 சொல்வதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். கோன்னி என்ற இளம் பெண் சொல்வதை கொஞ்சம் செவிகொடுத்து கேளுங்கள்: “ஒரு பையன் என்னை விரும்புறான்னு எனக்கு தெரிஞ்சா, முதல்ல என் அம்மாகிட்ட வந்து அதப்பத்தி பேசுவேன். காதலிக்கும்படி தூண்டுற அழுத்தத்தை என்னால அப்பதான் எதிர்த்து போராட முடியுது. முன்னாடி அவங்களோட ஃபிரெண்ட்ஸுக்கும் குடும்பத்தில இருந்தவங்களுக்கும் நடந்த சம்பவங்கள பத்தி அம்மா என்கிட்ட சொல்வாங்க. அது எனக்கு ரொம்பவே உதவியா இருக்கும்.”

காதலிக்கும் விஷயத்தில் பொறுமையாக இருப்பதால் உங்கள் மனரீதியான முதிர்ச்சி பாதிக்கப்படுவதில்லை அல்லது உங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை ஏற்படப்போவதில்லை. சந்தோஷமாகவும் இருக்க முடியும். ஏனென்றால், காதல், திருமணம் போன்ற பெரியவர்களுக்குரிய கடமைகளை நீங்கள் சுமக்க வேண்டியிருக்காது. அதனால் நீங்கள் சுதந்திரமாக உங்கள் “இளமையிலே சந்தோஷப்படு”வதற்கு அநேக வாய்ப்புகள் உள்ளன. (பிரசங்கி 11:9) பொறுமையாக காத்திருப்பதால் உங்கள் குணநலன்களை, முதிர்ச்சியை, எல்லாவற்றிற்கும் மேலாக ஆவிக்குரிய தன்மையை வளர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. (புலம்பல் 3:26, 27) ஒரு கிறிஸ்தவ பெண் சொல்வதுபோல: “இன்னொருவரிடம் நீங்கள் வாக்கு கொடுப்பதற்கு முன்பு முதலாவது யெகோவா தேவனிடம் நீங்கள் வாக்கு கொடுப்பது அவசியம்.”

நீங்கள் வளர வளர, உங்கள் முதிர்ச்சி வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியவரும்போது, உங்கள் பெற்றோர் உங்களை பெரியவர்களாக கருதுவார்கள். (1 தீமோத்தேயு 4:15) உண்மையாகவே நீங்கள் காதலிக்கவும் திருமணம் செய்யவும் தேவையான தகுதிகளை அடைந்தபின் அவர்களுடைய ஆசீர்வாதத்துடன் அவ்வாறு செய்ய முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.

(g01 1/22)

[அடிக்குறிப்புகள்]

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b இதைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட, இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன் தரும் விடைகள் புத்தகத்தில், பக்கங்கள் 232-3-ஐக் காண்க.

[பக்கம் 21-ன் படங்கள்]

எதிர்பாலர் ஒருவரிடம் அதிக கவனம் செலுத்தி அவருடன் தனியாக நேரத்தை செலவிடுவது . . .

. . . பெரும்பாலும் காதல் உணர்வுகளை தூண்டிவிடும்

[பக்கம் 22-ன் படம்]

ஒருவரிடமாக உங்கள் நட்பை குறுக்கிக்கொள்வதற்கு மாறாக எல்லோருடனும் பழக உங்கள் இதயக் கதவுகளை விசாலமாக திறந்திடுங்கள்