ஏன் அன்பு மலர் வாடிவிடுகிறது?
ஏன் அன்பு மலர் வாடிவிடுகிறது?
“அன்பில் நிலைத்திருப்பதைவிட காதல் வசப்படுவது மிக எளிது என தெரிகிறது.” —டாக்டர் கேரன் கெய்ஸர்.
அன்பற்ற மண வாழ்க்கை அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை. திருமணம் என்பது சிக்கலான மனித உறவு, பக்குவமின்றி அதற்குள் அநேகர் நுழைகின்றனர். “டிரைவர் லைசென்ஸ் வாங்கும்போது நாம் ஓரளவு திறமையை காட்ட வேண்டும், ஆனால் திருமண லைசென்ஸ் வாங்க ஒரு கையெழுத்துப் போட்டாலே போதும், கிடைத்துவிடுகிறது” என சொல்கிறார் டாக்டர் டீன் எஸ். ஈடல்.
ஆகவே, ஒருபுறத்தில் அநேக திருமணங்கள் செழித்தோங்கி உண்மையிலேயே மகிழ்ச்சியில் திளைக்கும்போது, மறுபுறத்தில் அநேக திருமணங்கள் மிகவும் கஷ்டத்தில் தத்தளிக்கின்றன. ஒருவேளை தம்பதியினரில் ஒருவர் அல்லது இருவருமே ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்திருக்கலாம். ஆனால் நீடித்த உறவுக்கு அவசியமான திறமையில்லாமல் இருக்கலாம். “முதன்முதலில் நெருங்கிவரும்போது ஒருவருக்கொருவர் அதிக நம்பிக்கை ஏற்படுகிறது” என டாக்டர் ஹேரி ரைஸ் விளக்குகிறார். “இந்த உலகத்தில் தங்களை போலவே இலட்சியங்களை கொண்ட ஒரேவொரு நபர் இவரே” என தங்களுடைய துணையை குறித்து நினைக்கிறார்கள். “ஆனால் அந்த உணர்ச்சி சிலசமயங்களில் மழுங்கி விடுகிறது, அப்படியாகும்போது அது திருமண வாழ்க்கையில் பெருந்துயரத்தை ஏற்படுத்துகிறது.”
அநேக திருமணங்கள் அப்படிப்பட்ட ஒரு கட்டத்திற்கு வந்துவிடுவதில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால் அப்படிப்பட்ட கட்டத்திற்கு வந்துவிட்ட திருமணங்களில், அன்பு மலர் வாடிப்போவதற்கு காரணமாயிருந்த அம்சங்கள் சிலவற்றை நாம் சற்று ஆராயலாம்.
ஏமாற்றம்—“இத நான் எதிர்பார்க்கல”
“நான் ஜிம்மை கலியாணம் செய்துகொண்டபோது, ஓர் இளவரசன் இளவரசி மாதிரி எங்களை கற்பனை செய்தேன். ஒருவருக்கொருவர் மென்மையான உணர்ச்சிகளும் அன்பும் கொண்ட ஒரு தேவலோக காதலாக கனவு கண்டேன்” என ரோஸி சொல்கிறாள். ஆனால் கொஞ்சகாலம் கழித்து, ரோஸியின் “இளவரசன்” கவர்ச்சியாக இல்லை, “கடைசியில், எனக்கு பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சியது” என அவள் சொல்கிறாள்.
சினிமாக்களும் புத்தகங்களும் பிரபல பாடல்களும் அன்பை பற்றி அழகான காவியம் படைக்கின்றன—ஆனால் அதில் யதார்த்தம் இல்லை. தங்களுடைய இலட்சியங்களும் ஆசை கனவுகளும் கனிந்துவரும் என காதல் வயப்படும் ஓர் ஆணும் பெண்ணும் நினைக்கிறார்கள். ஆனால் திருமணத்திற்கு சில வருடங்களுக்குப்பின், தாங்கள் ஊர்வலம் வந்தது உண்மையில் கற்பனை தேரில்தான் என முடிவு செய்கிறார்கள்! காதல் கதைகளில் வருவதுபோல நிஜவாழ்க்கை அமையாததால் நல்ல மண வாழ்க்கையும் படுதோல்வியாக தெரிகிறது.
திருமணத்தில் சில எதிர்பார்ப்புகள் முற்றிலும் சரியானதே. உதாரணமாக, அன்பையும் ஆதரவையும் கவனிப்பையும் எதிர்ப்பார்ப்பது நியாயமானது. ஆனால் இப்படிப்பட்ட ஆசைகளும் நிராசைகளாகலாம். “எனக்கு கலியாணம் ஆகாத மாதிரியே இருக்குது” என இந்தியாவை சேர்ந்த மீனா என்ற இளம் மணமகள் சொல்கிறாள். “நான் தனிமையில் வாடுகிறேன், புறக்கணிக்கப்பட்ட மாதிரி உணருகிறேன்.”
பொருத்தமின்மை —“எங்களுக்குள் எதுவுமே ஒத்துப்போகல”
“எல்லாத்திலும் நானும் என் வீட்டுக்காரரும் வடதுருவம் தென்துருவம் மாதிரிதான்” என ஒரு பெண்மணி சொல்கிறாள். “ஏன்தான் அவரை கட்டிக்கொண்டோமோ என மனசுக்குள் புலம்பாத நாளே கிடையாது. எங்களுக்கு துளிகூட ஒத்துப்போக மாட்டேங்குது.”
பொதுவாக, காதலிக்கும் காலத்தில் ஒருவருக்கொருவர் எல்லாவற்றிலும்
ஒத்துப்போன மாதிரி இப்பொழுது இல்லை என்பது தம்பதிகளுக்கு கொஞ்ச நாளிலேயே தெரியவந்துவிடுகிறது. “கல்யாணத்திற்கு முன்பு தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது ஒருவருக்கொருவர் தெரியாமல் இருந்தாலும், இப்பொழுது திருமணம் அவர்களுடைய லட்சணங்களை அப்பட்டமாக அம்பலப்படுத்திவிடுகிறது” என எழுதுகிறார் டாக்டர் நீனா எஸ். ஃபீல்ட்ஸ்.அதன் விளைவாக, கல்யாணத்திற்குப் பிறகு தம்பதிகள் சிலர், தங்களுக்கு கொஞ்சம்கூட ஒத்துப்போகவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாம். “குணத்திலும் விருப்பு வெறுப்பிலும் சில ஒற்றுமைகள் இருந்தாலும், பாணியிலும், பழக்கவழக்கங்களிலும், மனப்பான்மைகளிலும் பெருத்த வேறுபாடுகளுடன் பெரும்பாலான மக்கள் திருமணத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள்” என டாக்டர் ஏரன் டி. பெக் சொல்கிறார். அந்த வேறுபாடுகளை எப்படி சமாளிப்பது என்பது தம்பதிகள் பலருக்கு தெரியாது.
சண்டை—“எப்ப பார்த்தாலும் எங்களுக்குள் வாக்குவாதம்தான்”
“நாங்க சண்டை போட்டதையும் காட்டுகத்து கத்தியதையும் அதைவிட மோசமாக, நாள்கணக்காக எரிச்சலில் பேசிக்காம இருந்ததையும் பார்த்து நாங்களே ஆச்சரியப்பட்டோம்” என தன்னுடைய ஆரம்பகால மண வாழ்க்கையை பற்றி சின்டி சொல்கிறாள்.
மண வாழ்வில் மன வேறுபாடுகள் சகஜம்தான். ஆனால் அவற்றை எப்படி சமாளிப்பது? “ஒரு நல்ல மண வாழ்க்கையில், கணவனும் மனைவியும் குறை ஏதாவது இருந்தால் அதை தாராளமாக மனம்விட்டு பேசுவார்கள். ஆனால் பெரும்பாலும் அனல் பறக்கும் கோபத்தில் குறைகளை அள்ளி வீசி, துணைவருடைய சுயமரியாதையை தாக்குகின்றனர்” என டாக்டர் டேனியல் கோல்மன் எழுதுகிறார்.
இப்படி நடக்கும்போது, உரையாடல் ஒரு யுத்தக் களமாக மாறி, அங்கே கருத்துக்கள் காரசாரமாக பரிமாறப்படுகின்றன, வார்த்தைகள் பேச்சுத் தொடர்பு சாதனங்களாக செயல்படுவதற்குப் பதிலாக ஏவுகணைகளாக மாறிவிடுகின்றன. ஒரு நிபுணர் குழு இவ்வாறு சொல்கிறது: “கட்டுக்கடங்காத வாக்குவாதங்கள் நடக்கும்போது, திருமணத்தின் அடித்தளத்தையே அச்சுறுத்தும் விஷயங்களை துணைவர்கள் சொல்லிவிடுவதுதான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.”
உணர்ச்சியின்மை—“கை கழுவிவிட்டேன்”
“என்னுடைய மண வாழ்க்கையை சரிசெய்ய எடுக்கும் முயற்சியை இத்தோடு கை கழுவிவிட்டேன். எனக்கு தெரியும், இனிமேல் அது சரிப்பட்டு வராது. இப்ப என் கவலையெல்லாம் என்னுடைய பிள்ளைங்க மேலதான்” என ஐந்தாண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஒரு பெண்மணி சொல்கிறார்.
உண்மையிலேயே அன்புக்கு எதிர்ப்பதம் பகைமை அல்ல, ஆனால் உணர்ச்சியின்மையே என சொல்லப்படுகிறது. சொல்லப்போனால், பகைமையைப் போலவே உணர்ச்சியின்மையும் மண வாழ்க்கையை நாசமாக்கலாம்.
ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், துணைவர்கள் சிலர் அன்பற்ற மண வாழ்க்கையிலே ஊறிப்போய் விடுவதால், ஏதாவது மாற்றம் வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்ப்பதே கிடையாது. உதாரணமாக, 23 வருட மண வாழ்க்கை, “பிடிக்காத ஒரு வேலையில் இருந்தது மாதிரி” என ஒரு கணவர் சொன்னார். அவர் மேலும் கூறினார்: “அப்படிப்பட்ட சூழ்நிலைமையில் உங்களால் முடிந்ததை நீங்கள் செய்கிறீர்கள்.” அதைப் போலவே, ஏழு வருஷமாக தன்னுடைய கணவனோடு குடும்பம் நடத்திய வென்டி என்ற ஒரு மனைவி, திரும்பவும் அவரோடு சந்தோஷமாக வாழ முடியும் என்ற எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டாள். “நான் பல தடவ முயற்சி பண்ணி பாத்துட்டேன், ஆனா அவரால எனக்கு எப்பவும் ஏமாற்றம்தான். அதனால நான் அப்படியே மன உளைச்சலுக்கு ஆளாயிட்டேன். இனிமே அந்த மாதிரி நடக்க நான் விரும்பல. எனக்கு நம்பிக்கை வந்ததுன்னா, அடுத்ததா மனவேதனையும் கூடவே வருது. அதனால நான் எதையுமே எதிர்பார்க்காம இருந்துட்டா, சந்தோஷம் கிடைக்கலனாலும் மன உளைச்சலுக்காவது ஆளாகாம இருக்கலாமே” என அவள் சொல்கிறாள்.
ஏமாற்றம், பொருத்தமின்மை, சண்டை சச்சரவு, உணர்ச்சியின்மை ஆகியவையெல்லாம் அன்பற்ற மண வாழ்வுக்கு பங்களிக்கும் சில காரணிகளே. சந்தேகமில்லாமல், இன்னும் பல காரணிகள் இருக்கின்றன—அவற்றில் சில பக்கம் 5-ல் உள்ள பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளன. காரணம் எதுவாக இருந்தாலும், அன்பற்ற மண வாழ்வில் சிக்கி அவதிப்படும் துணைவர்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?
(g01 1/8)
[பக்கம் 5-ன் பெட்டி/படம்]
அன்பற்ற திருமணங்கள்—வேறுசில காரணிகள்
• பணம்: “ஒன்றுசேர்ந்து உழைப்பது, தங்களுடைய பணத்தை அடிப்படை தேவைகளுக்காக செலவழிப்பது, தங்களுடைய உழைப்பின் பலன்களை அனுபவிப்பது ஆகியவற்றில் ஒரு தம்பதி இணைந்து செயல்படுவதற்கு பட்ஜெட் போடுவது உதவியாக இருக்கும் என ஒருவர் நினைக்கலாம். ஆனால் தம்பதியினரை ஒன்று சேர்க்கும் இத்திட்டமே பெரும்பாலும் அவர்களை பிரிப்பதற்கு வழிவகுத்துவிடுகிறது.”—டாக்டர் ஏரன் டி. பெக்.
• பெற்றோராக இருப்பது: “முதல் குழந்தை பிறந்தபின் மண வாழ்க்கையில் அதிக திருப்தியில்லாமல் போய்விடுவதையும், சண்டை எட்டு மடங்கு அதிகமாவதையும் 67 சதவீத தம்பதிகளின் விஷயத்தில் நாங்கள் பார்த்திருக்கிறோம். பெற்றோர்கள் களைப்படைந்து விடுவதும் ஒன்றுசேர்ந்து செலவிடுவதற்கு அதிக நேரம் இல்லாததுமே இதற்கு ஓரளவு காரணம்.”—டாக்டர் ஜான் காட்மேன்.
• துரோகம் செய்தல்: “தவறான உறவு பெரும்பாலும் துரோகத்தை உட்படுத்துகிறது, இந்தத் துரோகம் நம்பிக்கைக்கு எதிரான செயல். வெற்றிகரமான, நீண்ட நாளைய மண வாழ்வுக்கு முக்கிய திறவுகோலாக இருப்பது இந்த நம்பிக்கை. ஆகவே, திருமண பந்தத்தை துரோகம் முறித்துவிடுவதில் ஏதாவது ஆச்சரியமிருக்கிறதா?”—டாக்டர் நீனா எஸ். ஃபீல்ட்ஸ்.
• பாலுறவு: “விவாகரத்திற்காக தம்பதியினர் மனுதாக்கல் செய்வதற்குள், பால் இன்பத்தை பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியூட்டும் அளவுக்கு சகஜமாக இருக்கிறது. சிலருடைய விஷயத்தில், பால் சம்பந்தமான உறவே இல்லாமல் இருந்திருக்கிறது, வேறுசிலருடைய விஷயத்திலோ பாலுறவு என்பது ஏதோ கடமைக்காக செய்யப்படுகிறது, தம்பதியில் ஒருவருடைய சரீர தேவைகளுக்கு வெறுமனே ஒரு வடிகாலாகவே இருந்திருக்கிறது.”—ஜூடித் எஸ். உவாலஸ்டீன், கிளீனிக்கல் சைக்காலஜிஸ்ட்.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
குழந்தைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்?
உங்களுடைய திருமண வாழ்க்கையின் தரம் பிள்ளைகளை பாதிக்குமா? சுமார் 20 வருடங்களாக தம்பதிகளிடம் ஆராய்ச்சி செய்த டாக்டர் ஜான் காட்மேன் சொல்கிறபடி, பாதிக்கும் என்பதே பதில். “மகிழ்ச்சியற்ற பெற்றோருடைய குழந்தைகளின் இதயத் துடிப்பு ஜாலியாக விளையாடும்போது அதிகமாக இருக்கிறது, தங்களை அவ்வளவு சுலபமாக ஆசுவாசப்படுத்த முடிவதில்லை என்பதை இரண்டு பத்து வருட ஆராய்ச்சியில் கண்டுபிடித்தோம்” என அவர் சொல்கிறார். “பிள்ளைகளுடைய IQ எப்படியிருந்தாலும், காலப்போக்கில், குடும்ப சண்டை பள்ளியில் குறைந்த மதிப்பெண் பெறுவதற்கு வழிநடத்துகிறது.” மாறாக, நன்கு ஒத்துப்போகும் தம்பதியினருடைய பிள்ளைகளோ “பள்ளியிலும் சமூக வாழ்விலும் மேம்பட்டு விளங்குகிறார்கள். ஏனென்றால் மற்றவர்களை எப்படி மரியாதையோடு நடத்துவது, உணர்ச்சி கொந்தளிப்பை எப்படி சமாளிப்பது என்பதை அவர்களுடைய பெற்றோர் காண்பித்திருக்கிறார்கள்.”