Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கானகத்தில் குழந்தை வளர்ப்பு

கானகத்தில் குழந்தை வளர்ப்பு

கானகத்தில் குழந்தை வளர்ப்பு

கென்யாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

பச்சை கம்பளம் பாவிய ஆப்பிரிக்க சமவெளி! அங்கே ஒரு புதிய ஜீவன் பிறந்தது. வந்ததும் வராததுமாய் ‘தொப்’பென தரையில் விழுந்தது அந்த ஜீவன்! உடனே அதை ஈன்றெடுத்த தாய் கீழே குனிந்து, ஈரத்திலும் சூரிய ஒளியிலும் பளபளக்கும் தன் செல்வத்தை அதன் தடுமாறும் பிஞ்சு கால்களில் நிற்க வைக்கிறாள். அப்போதுதானே பிறந்த அந்த பச்சிளம் குழந்தையை பார்க்கவும், தொடவும், நுகரவும் மற்ற அம்மாக்களும் சகோதரிகளும் அதன் அருகே ஓடி வருகின்றனர். இந்த குழந்தையின் உயரம் எவ்வளவு தெரியுமா? பிறக்கும்போதே 90 சென்டிமீட்டர்; அதன் எடையோ “வெறும்” 120 கிலோதான்!!! அங்கு கூடிவந்த எல்லோரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் இந்த ‘குழந்தை,’ ஒரு யானைக் குட்டி.

அங்கிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அமெரிக்காவிலும் புதிய ஜீவன்கள் பிறந்திருக்கின்றன. அவற்றின் வீடான கூடு ஒரு மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கையால் தைக்கும்போது விரலில் மாட்டிக்கொள்ளும் திம்பிள் (thimble) சைஸ்தான் அந்த கூடு இருக்கிறது. ஆனால் அந்தச் சிறிய ‘வீட்டில்’ ஒரு தேன்சிட்டு குடும்பமே (bee hummingbird) குடியிருக்கிறது. தும்பி சைஸில் இருக்கும் அப்பா அம்மா தேன்சிட்டுகள் இரண்டு குஞ்சுகளை அருமையாக பராமரித்து வளர்க்கின்றன. பல வண்ணங்களில் ஜொலிக்கும் இந்தப் பறவைகள் மின்னல் வேகத்தில் பறக்கின்றன. தைரியமுள்ள இப்பறவைகளின் சிறிய குஞ்சுகள் பக்கம் எது சென்றாலும்​—⁠பெரிய மிருகமானாலும் சரி, மனிதரானாலும்சரி அங்கிருந்து துரத்திவிட கடுமையாக முயற்சிக்கின்றன.

பொதுவாக, விலங்கின குட்டிகள் என்றாலே நம் எல்லோருக்கும் கொள்ளை ஆசை. நாய்க் குட்டிகளைக் கண்டு மகிழாத குழந்தை ஏதும் உண்டா? பூனைக்குட்டி செய்யும் அட்டகாசங்கள், அம்மாவின் முடியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் குரங்குக் குட்டியின் அழகு, பாதுகாப்பான கூட்டுக்குள்ளிருந்து தன் பெரிய முட்டை கண்ணை திறந்து முழிக்கும் ஆந்தைக் குஞ்சு போன்றவற்றை கண்டு ரசிக்காதவர் எவருமே இல்லை!

விலங்கினக் குட்டிகள் மனித குழந்தைகளைப் போல் நிராதரவானவை அல்ல. சில குட்டிகளால் பிறந்தவுடனேயே ஓடியாட முடியும். சில குட்டிகள் பிறந்த உடன் அப்படியே ஆதரவின்றி விடப்படுகின்றன; தங்களைத் தாங்களே அவை காப்பாற்றிக்கொண்டு உயிர் வாழ வேண்டும். ஆனாலும், பெரும்பாலான மிருகங்களின் குட்டிகள் மற்றும் பூச்சிகளின் குஞ்சுகள் பராமரிப்பு, பாதுகாப்பு, உணவு, பயிற்சி, கவனிப்பு போன்றவற்றிற்கு தங்கள் பெற்றோரையே சார்ந்திருக்கின்றன. இதனால் அந்த பெற்றோருக்கும் அவற்றின் குழந்தைகளுக்கும் இடையில் நெருக்கமான உறவு மலர்கிறது.

அதிசய பாதுகாவலர்கள்

பூச்சிகள், மீன்கள், ஊரும் பிராணிகள், நில நீர்வாழ் உயிரினங்கள் போன்றவற்றில் பெரும்பாலானவை தங்கள் குட்டிகளைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதே இல்லை. ஆனால், இவற்றில் நைல் முதலையைப் போன்ற விதிவிலக்கான விலங்குகளும் உண்டு. குளிர்-இரத்தமுள்ள நிலநீர் உயிரினமான இந்த முதலை தன் குட்டிகளை அருமையாக காக்கிறது. சற்று வெதுவெதுப்பான மணலில் முட்டைகளை இட்ட பிறகு, அவற்றை பாதுகாப்பதற்காக ஆண் முதலையும் பெண் முதலையும் அவற்றின் பக்கத்திலேயே இருக்கின்றன. முதலை குஞ்சுகள் பொரிக்கும் சமயத்தில் அவை முட்டை ஓட்டுக்குள்ளிருந்து கூச்சல் போடுகின்றன; அம்மா முதலை மணலை நீக்குவதற்கு இதுதான் சிக்னல். மணலை நீக்கியபின் அந்த தாய், தன் பலமான தாடைகளால் குஞ்சுகளின் மேல் ஒட்டியிருக்கும் மணலைக் கழுவ அவற்றை தண்ணீருக்கு கொண்டு செல்கிறது. அப்பா முதலையும் இவ்வாறு குட்டிகளை தண்ணீரிடம் கொண்டு சென்று கழுவிவிடுவதாக சொல்லப்படுகிறது. கொஞ்ச நாட்களுக்கு வாத்து குஞ்சுகளைப் போலவே இவையும் அம்மாவுடன் எல்லா இடங்களுக்கும் நீந்திச் செல்கின்றன. இவ்வாறு இவற்றை பாதுகாப்பதற்கு அந்த தாயிடம் இருக்கும் சக்தியால் இவை பலனடைகின்றன.

ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால், நல்ல பெற்றோர் தங்கள் குழந்தையை பத்திரமாக பாதுகாப்பதைப்போல சில மீன்களும் செய்கின்றன. நன்நீரில் வாழும் திலேப்பியா என்ற ஒருவகை மீன் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள், முட்டைகளை இட்ட பிறகு அவற்றை பாதுகாப்பதற்காக அவற்றின் வாய்க்குள் வைத்துக்கொள்கின்றன. மீன் குஞ்சுகள் பொரித்த பிறகு, தாய்க்கு அருகிலேயே சுதந்திரமாக உலாவுகின்றன. ஆனால், ஆபத்திற்குரிய அறிகுறிகள் தோன்றும்போது தாய் மீன் தன் வாயை திறக்கிறது; குஞ்சுகள் அதற்குள் சென்று பத்திரமாக ஒளிந்துகொள்கின்றன. ஆபத்து கடந்தபிறகு அல்லது நிலைமை சரியான பிறகு குஞ்சுகள் வழக்கம்போல தாயின் வாயிலிருந்து வெளி வருகின்றன.

குஞ்சுகளை பாதுகாக்க வேண்டும் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரிய ஜீவன்களுக்கு மட்டுமல்ல சின்னஞ்சிறிய ஜீவன்களுக்கும் இருக்கிறது. கூட்டுக் குடும்பம்போல ஒன்றாக வாழும் எறும்புகள், தேனீக்கள், கறையான்கள் போன்றவை தங்கள் முட்டைகள் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக கூடுகளை கட்டுகின்றன. அதுமட்டுமல்லாமல், குஞ்சுகளுக்கு தேவையான உணவையும் கூட்டில் சேகரித்து வைக்கின்றன. தேனீ இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். எந்நேரமும் சுறுசுறுப்புடன் வேலைசெய்யும் இந்த தேனீக்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், கூட்டிலிருக்கும் குஞ்சுகளை பராமரிப்பதற்காக ஒற்றுமையாக வேலை செய்கின்றன. குஞ்சுகளுக்காக கூடுகளை கட்டுவது, ரிப்பேர் செய்வது, சுத்தம் செய்வது போன்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்ந்து செய்கின்றன. கூடுகளில் சரியான வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும்கூட கட்டுப்படுத்துகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றையெல்லாம் யாரும் அந்த தேனீக்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை; அவற்றின் தன்னியல்பான ஞானத்தால் இவ்வாறு செய்கின்றன.

பறவைகளின் பராமரிப்பு

பெரும்பாலான பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு நல்ல பெற்றோராக இருக்கின்றன. அவற்றின் குஞ்சுகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, கூட்டை கட்டுவதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பதிலும், அதை கட்டுவதிலும், குடும்பத்தை பாதுகாப்பதிலும் அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிடுகின்றன. இப்படிப்பட்ட பறவைகளுள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹார்ன்பில்லும் ஒன்று. ஒரு ஆண் ஹார்ன்பில் தன் மனைவி முட்டைகளை அடைகாத்த 120 நாட்களின்போது, தன் குடும்பத்தை காப்பாற்ற கடுமையாக உழைத்திருக்கிறது. அது தன் மனைவிக்கு உணவு அளிப்பதற்காக 1,600 தடவைக்கும் அதிகமாக கூட்டிற்கு வந்தபோது, சுமார் 24,000 பழத்துண்டுகளை கொண்டுவந்து கொடுத்தது தெரியவந்தது!

எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும் ஆல்பட்ராஸ் பறவையும் இப்படித்தான். அடைகாக்கும் தன் துணைக்கு உணவு கொண்டுவருவதற்காக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்கிறது. அது திரும்பி வரும்வரையில் அடைகாக்கும் துணை ஆவலுடன் பொறுமையாக காத்துக் கொண்டிருக்கிறது.

பாலைவனப் பகுதிகளில் வாழும் சில பறவைகள் தங்கள் குஞ்சுகளின் தாகத்தை தீர்ப்பதற்காக கருத்தைக் கவரும் ஒரு முறையை பயன்படுத்துகின்றன. இவை தண்ணீர் இருக்கும் இடத்திற்கு பறந்து சென்று, மார்பு பக்கம் உள்ள இறகுகளை தண்ணீரில் நன்றாக முக்குகின்றன. பிறகு கூட்டிற்கு திரும்புகின்றன. அங்கு குஞ்சுகள் அவற்றின் ஈரமான இறகுகளிலிருந்து தண்ணீரை உறிஞ்சிக்கொள்கின்றன.

சில பறவை இனங்களில், தாய் பறவையால் எல்லா குஞ்சுகளுக்கும் உணவு அளிக்க முடியாதபோது, மற்ற பறவைகளை உதவிக்கு அழைக்கின்றன. பெரும்பாலும் இவ்வாறு உதவி செய்ய வரும் பறவைகள் அதே தாய் பறவையின் வளர்ந்த ‘பிள்ளைகளாகத்தான்’ இருக்கும். இந்தத் “தாதிகள்” புதிய குஞ்சுகளுக்கு உணவு அளிக்கவும் பாதுகாக்கவும் உதவுகின்றன.

பாதுகாக்கும் பெற்றோர்

பறவை ‘பெற்றோர்’ கண்ணும் கருத்துமாய், ஓய்வின்றி வேலை செய்தால்தான் குஞ்சுகளை பாதுகாக்க முடியும். உதாரணத்திற்கு, மழை கொட்டோ கொட்டு என கொட்டும்போது கூட்டிலுள்ள குஞ்சுகளை நனையாமல் பாதுகாக்க பறவை ‘பெற்றோர்’ தங்கள் சிறகுகளை கூட்டின்மீது விரித்து பல சந்தர்ப்பங்களில் குஞ்சுகளுக்கு ‘குடை’ பிடிக்கின்றன. ஸ்டார்லிங் என்ற பறவை ‘வீட்டை’ பராமரிப்பதில் கில்லாடி. பேன், உண்ணி போன்றவற்றிலிருந்து தன் கூட்டை பாதுகாக்க இந்த புத்திசாலிப் பறவை விஷத்தன்மையுள்ள ஒருசில செடிகளின் கிளைகளை கொண்டுவந்து தன் கூட்டிற்கு உள்ளேயும் கூட்டைச் சுற்றியும் வேலியைப்போல் போட்டுவிடுகிறது. இந்த கிளைகள் ஆபத்தான பூச்சிகளை அண்டவிடாமல் தடுக்கின்றன; சில சமயம் கொன்றேவிடுகின்றன.

உட்காக் என்ற பறவை தன் குஞ்சுகளை பாதுகாப்பதில் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுகிறது. ஏதாவது ஆபத்து என்றால், தன் ‘குழந்தையை’ கால்களுக்கும் உடலுக்கும் இடையில் பலமாக அணைத்து பிடித்துக்கொண்டு உடனே பறந்துவிடுகிறது. வேறு பாதுகாப்பான இடத்திற்கு சென்றதும் தன் ‘பொன் குஞ்சுகளை’ இறக்கிவிடுகிறது. சில தைரியசாலி பறவைகள் புத்திசாலித்தனமாகவும் செயல்படுகின்றன. ஆபத்தான விலங்கு ஏதும் வருகிறது என்று தெரிந்தவுடன் அவை, கூட்டிலிருந்து தள்ளி வேறு இடத்திற்கு சென்று அங்கு காயப்பட்ட பறவைபோல தரையில் இறக்கையை அடித்து நடிக்கின்றன. இதைப் பார்க்கும் அந்த விலங்கு, இவற்றை எளிதில் பிடித்துவிடலாம் என அருகில் வந்தவுடன், நடிப்பதை நிறுத்தி பாதுகாப்பான ஒரு இடத்திற்கு பறந்து சென்றுவிடுகின்றன. இவ்வாறு அந்த விலங்கை திசைதிருப்பி தன் குஞ்சுகளை பாதுகாக்கின்றன. ஆபத்தான விலங்குகளை பயமுறுத்தி தலைதெரிக்க ஓடவைக்கும் பறவைகளும் இருக்கின்றன. தரை பொந்துகளில் வாழும் சில பறவைகள் தந்திரமாக வேறு ஓசைகளை எழுப்பி இவ்வாறு பயமுறுத்துகின்றன. வட அமெரிக்க பொந்துகளில் வாழும் ஆந்தைகள் இதற்கு ஒரு உதாரணம். அவற்றுடைய பொந்தின் அருகில் எது சென்றாலும், பாம்பு போல ஓசை எழுப்புகின்றன. முற்காலங்களில் அங்கு வந்து குடியேறியவர்கள், இந்த ஆந்தைகளின் பொந்துகளில் ரேட்டில் பாம்புகளும் (rattlesnakes) குடியிருக்கின்றன என உறுதியாக நம்பினர். அதனால் அந்த பொந்துகள் பக்கமே போக மாட்டார்களாம்!

பாலூட்டிகளின் பராமரிப்பு

விலங்குகளின் சாம்ராஜ்யத்திலேயே பாலூட்டிகள்தான் குட்டிகளை பராமரிப்பதில் எல்லாவற்றிற்கும் மேலாக மிகச்சிறந்து விளங்குகின்றன. யானைகள் தங்கள் குட்டிகள்மீது பொழியும் பாசத்தை என்னவென்று சொல்வது! இந்த பராமரிப்பால், தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் நெருக்கமான பந்தம் கிட்டத்தட்ட 50 வருடங்கள் நீடிக்கிறது. வெயில் கொளுத்தும்போது தாய் யானை தன் குட்டிக்கு அருகில் நின்று அதன்மீது வெயில்கூட படாதவாறு பார்த்துக்கொள்கிறது, பாசத்துடன் பால் கொடுக்கிறது. சில சமயம் தாய் யானை தன் வாயில் இருக்கும் புல் பூண்டுகளை குட்டி அதன் சிறிய தும்பிக்கையால் பிடுங்கி சாப்பிட அனுமதிக்கிறாள். இந்த அன்புத்தாய் தன் செல்லக் குழந்தை மீது தும்பிக்கையால் தண்ணீர் அடித்து அடிக்கடி குளிப்பாட்டுகிறாள், அதன் முதுகையும் தேய்த்துவிடுகிறாள். இவ்வாறு குட்டிகளை வளர்ப்பது ஒரு குடும்ப விவகாரம் என சொல்லலாம்; ஏனென்றால், குட்டிகளுக்கு உணவு, பயிற்சி, பாதுகாப்பு போன்றவற்றை அளிப்பதில் மற்ற தாய்களும் சகோதரிகளும்கூட பங்குகொள்கின்றனர்.

மற்றொரு பெரிய பாலூட்டியான நீர்யானை தண்ணீருக்கு அடியிலும் குட்டி போடும். குட்டிகள் தண்ணீருக்கடியில் இருந்துகொண்டு தாய்ப்பால் குடிக்கின்றன; அச்சமயத்தில் மூச்சு விடுவதற்காக மட்டும் மேலே வந்துவிட்டு உடனே நீருக்கு அடியில் சென்று பால்குடிப்பதை தொடருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தன் குட்டிக்கு ஏதாவது ஆபத்து என்றால் தாய்க்குவரும் கோபத்தை பார்க்கவேண்டுமே, அடேயப்பா அதற்கு வெறிபிடித்துவிடும்!

வெர்வெட் குரங்குகளும் நல்ல தாய்மார்களாக திகழ்கின்றன. ‘குழந்தை’ பிறந்த சில மணிநேரங்களுக்கு தாய் தன் குட்டியை பாதுகாப்பாக அணைத்துக்கொள்கிறது. அதன் ஒரு கையாவது குட்டியின் கழுத்தையோ தோளையோ அணைத்தபடி இருக்கும். முதல் வாரத்தின்போது, பெரும்பாலான சமயம் அந்த குட்டியும் தன்னிச்சையாக தன் தாயின் முடியில் தொங்கிக் கொண்டு அதனுடனேயே செல்லும். மற்ற பெண் குரங்குகளும் இந்தப் புதிய வரவை தொட்டு விளையாட, தலை சீவிவிட, கொஞ்சி மகிழ தாய் குரங்கு அனுமதிக்கும்.

ஆம், “மகா ஞானமுள்ள” அநேக உயிரினங்கள், அதிசயிக்கத்தக்க விதத்தில் தங்கள் பிள்ளை செல்வங்களை பாதுகாத்து பராமரிக்கின்றன. (நீதிமொழிகள் 30:24-28) ஒரு சூழ்நிலையை நன்கு பகுத்துணர்ந்து அதற்கேற்ப ஞானமாக செயல்படும் திறன் நிச்சயம் தானாகவே வந்திருக்க முடியாது. எல்லாவற்றையும் சிருஷ்டித்த புத்தி கூர்மையுள்ள கடவுளாகிய யெகோவாவினுடைய ஞானமான வேலைப்பாட்டால் விளைந்ததுதான் இது.​—சங்கீதம் 104:24.

(g01 1/22)

[பக்கம் 23-ன் படம்]

ஆந்தைக் குஞ்சுகள்

[பக்கம் 24-ன் படம்]

திலேப்பியா மீன்கள் முட்டைகளை வாய்க்குள் வைத்துக் கொள்கின்றன

[படத்திற்கான நன்றி]

நன்றி: LSU Agricultural Center

[பக்கம் 24-ன் படங்கள்]

முதலைகள் குட்டிகளை சுமந்து செல்கின்றன

[படத்திற்கான நன்றி]

◀ © Adam Britton, http://crocodilian.com ▼

[பக்கம் 25-ன் படம்]

ஆல்பட்ராஸும் அதன் குஞ்சுகளும்

[பக்கம் 25-ன் படம்]

ஹார்ன்பில்

[பக்கம் 25-ன் படம்]

ஸ்டார்லிங்

[பக்கம் 25-ன் படம்]

உட்காக்

[பக்கம் 26-ன் படங்கள்]

தாய் நீர்யானைகள் கண்ணுங்கருத்துமாக குட்டிகளை காக்கின்றன

[படத்திற்கான நன்றி]

© Joe McDonald

[பக்கம் 26-ன் படங்கள்]

தாய் பபூன் குரங்குகள் தங்கள் பிள்ளைகளுக்கு தலைவாரி விடுகின்றன

[பக்கம் 26-ன் படங்கள்]

வெர்வெட் குரங்குகள்

[படத்திற்கான நன்றி]

© Joe McDonald