Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காய்கறி சாப்பிடுங்கள்!

காய்கறி சாப்பிடுங்கள்!

காய்கறி சாப்பிடுங்கள்!

பிரேஸிலிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“ச்சீ, அது கசக்கும்.” “அந்த டேஸ்ட்டே பிடிக்காது.” “இதுவரைக்கும் அத சாப்டதே இல்ல.”

காய்கறிகளை அநேகர் சாப்பிடாததற்கான அல்லது சாப்பிட மறுப்பதற்கான சில காரணங்கள்தான் இவை. நீங்கள் எப்படி? தினந்தோறும் காய்கறிகளை சாப்பிடுகிறீர்களா? காய்கறிகளை சிலர் விரும்பி சாப்பிடுவதற்கும் சிலர் காய்கறிகள் என்றாலே முகம் சுளிப்பதற்கும் என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்ள விழித்தெழு! அநேகரை பேட்டி கண்டது. அதன் முடிவை தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

முதலில் காய்கறிகளை விரும்பி சாப்பிடுபவர்கள்: காய்கறிகள், பயறு வகைகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது மிக அவசியம் என்பதை அவர்களுடைய பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே சொல்லிக் கொடுத்ததாக சொன்னார்கள். அதற்கு மாறாக, காய்கறிகளை விரும்பி சாப்பிடாதவர்கள், தாங்கள் சிறுவயதிலிருந்தே காய்கறிகளை சாப்பிட்டு பழக்கப்படவில்லை என சொன்னார்கள். இவர்கள் நொறுக்குத் தீனிகளாலேயே தங்கள் வயிற்றை நிரப்பியிருக்கின்றனர். ஆனாலும், உடல் ஆரோக்கியத்தை காத்துக்கொள்வதற்கு காய்கறிகளை சாப்பிடுவது மிக முக்கியம் என்பதை இவர்களும் வாயளவில் ஒப்புக்கொண்டனர்.

பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுக்கு இந்நிலை ஏற்படாமலிருக்க காய்கறிகளை சாப்பிட பழக்கப்படுத்துங்கள்! எப்படி? குழந்தைகளுக்கு தாய்ப் பாலையோ புட்டிப் பாலையோ கொடுத்தபின், சுமார் ஆறு மாதத்திலிருந்தே ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, காய்கறியை நன்கு வேகவைத்து, தோல் உறித்து, மாவுபோல குழைத்து கொடுக்க வேண்டும். இந்த அறிவுரையை கொடுப்பது ஐநா குழந்தைகள் நல அமைப்பால் வெளியிடப்பட்ட வாழ்க்கையின் உண்மைகள் என்ற ஆங்கில புத்தகம். எந்தளவுக்கு வகைவகையான உணவுகளை கொடுக்கிறீர்களோ அந்தளவுக்கு குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தை பிறந்து இரண்டு வருடங்களுக்கு, பாலே முக்கிய உணவு; ஆனால் அதனுடன் மற்ற உணவுகளை சேர்த்து கொடுப்பதால் “வித்தியாசப்பட்ட சுவைகளை குழந்தையால் கண்டுகொள்ள முடியும்” என்கிறார் பிரேஸிலைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவர் வாக்நர் லாபேடா.

மெடிசினா​—⁠மிடோல் வை வெர்டாடெஸ் (மருத்துவம்​—⁠கட்டுக்கதைகளும் உண்மைகளும்) என்ற புத்தகத்தில், மேலே குறிப்பிட்ட காலத்திற்கும் முன்பாகவே குழந்தையின் உணவில் சிறிதளவு ஆரஞ்சு ஜூஸ், (வாழை, ஆப்பிள், பப்பாளி போன்ற) பழங்களாலான களி, சீரியல், காய்கறி சூப் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம் என கர்லா லியோனெல் ஆலோசனை சொல்கிறார். ஆனாலும் இவ்விஷயத்தில் வித்தியாசப்பட்ட கருத்துகள் இருப்பதால் நீங்கள் உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

(g01 1/08)