படைப்பாளரை கௌரவிக்க விரும்பிய அறிஞர்
படைப்பாளரை கௌரவிக்க விரும்பிய அறிஞர்
கடந்த நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த அமெரிக்க சிற்பியும் பட்டாம்பூச்சி சேகரிப்பவருமான ஹெர்மன் ஸ்ட்ரெக்கர் என்பவர் இறந்தபோது மிக முக்கியமான அரிய சொத்தை விட்டுச்சென்றார். அவர் சேகரித்திருந்த சுமார் 50,000 பட்டாம்பூச்சி மற்றும் அந்துப்பூச்சி வகைகள்தான் அந்த சொத்து. அமெரிக்காவிலேயே அந்த சமயத்தில் அதுதான் மிகப் பெரிய சேகரிப்பாகும். அ.ஐ.மா, இல்லினாய்ஸ்ஸில், சிகாகோ நகரில் உள்ள ஃபீல்டு மியூஸியத்தில் இவருடைய சேகரிப்புகளில் அநேகத்தை பார்க்கலாம். இவருடைய சேகரிப்பிலுள்ள பூச்சிகளில், தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெயன்ட் சில்க் மாத் என்ற அந்துப்பூச்சி வகைதான் தனிச்சிறப்புமிக்கதாக விளங்கிவருகிறது. அந்த சிறப்பிற்கு அதன் பெயரே காரணம். அப்படிப்பட்ட சிறப்புமிக்க பெயரை ஏன் சூட்டினார் என்பதற்கான காரணத்தை லெபிடோப்டேரா என்ற தன் புத்தகத்தில் திரு. ஸ்ட்ரெக்கரே கூறுகிறார். a யாராவது ஒரு மனிதனுடைய பெயரை வைத்திருந்தால் அவர் இந்த சேகரிப்பாளருக்கு ஒரு விருந்தளித்திருப்பார் அல்லது கடனுதவி செய்திருப்பார். ஆனால் அப்படிப்பட்ட மனிதர்களுடைய பெயரையெல்லாம் சூட்டாமல் படைப்பாளரின் பெயரை சூட்டினார். இந்த “மிக அதிசயமிக்க” பூச்சியினத்தை பார்ப்போர் அனைவரும் இவ்வாறு கடவுளைப் பற்றி சிந்திக்கும்படி தூண்டப்படுவர். இவ்வாறு, படைப்பாளரை மகிமைப்படுத்த வேண்டும் என்ற திரு. ஸ்ட்ரெக்கருடைய விருப்பத்தின் விளைவாக, அந்த அந்துப்பூச்சி கோபியோப்டெர்யக்ஸ் ஜெஹோவா என்ற விஞ்ஞானப் பெயரை பெற்றிருக்கிறது.
இருந்தாலும், கடவுளுடைய பெயரை அந்த இனத்திற்கு திரு. ஸ்ட்ரெக்கர் சூட்டியதை சிலர் எதிர்த்தனர். ஒருவர் இவ்வாறு எழுதினார்: “கருந்தார்ந்து ஆழமாக சிந்திப்பவர்களை இது ஆன்மீக விஷயத்திற்கு திசை திருப்பிவிடுகிறது.” அதற்கு திரு. ஸ்ட்ரெக்கர் அளித்த பதில்: “இதுதான் விஷயமென்றால், அந்த பெயரை தேர்ந்தெடுத்ததற்காக நான் அதிக சந்தோஷப்படுகிறேன். என்னைப் பொறுத்தவரை, கடவுள் பக்கமாக நம் கவனத்தை திருப்பும் எதுவும் . . . சரியாகவே இருக்கும்; சர்வ சக்தியும் படைத்த அந்த படைப்பாளரின் மகிமை மற்றும் சக்திக்கான ஆதாரங்கள் போன்ற ஆன்மீக விஷயங்களை சிந்திப்பதைவிட வேறென்ன சிறந்தது இருக்க முடியும்?” ஸ்ட்ரெக்கர் இவ்வாறு முடிவாக சொன்னார்: “படைப்பாளருடைய மிக அற்புதமான ஒரு படைப்பிற்கு அவருடைய பெயரை பயன்படுத்தக்கூடாது என்பதாக யாராவது சொல்வார்களா? இது நியாயம்தானா, இப்படியும் சொல்வார்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.”
படைப்பாளர்மீது ஸ்ட்ரெக்கர் கொண்டிருந்த பற்றும் மதிப்பும் குறிப்பிடத்தக்கது. இன்றுள்ள கிறிஸ்தவர்களும் யெகோவா என்ற இந்த மகிமையான பெயரை மிக கவனமாகவும் அதற்கு கௌரவத்தை கொண்டுவரும் விதத்திலும் பயன்படுத்துகின்றனர்.
(g01 1/22)
[அடிக்குறிப்பு]
a திரு. ஸ்ட்ரெக்கருடைய ஆங்கில புத்தகத்தின் முழுப் பெயர் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த லெபிடோப்டேரா, ரோபாலோசெரெஸ் மற்றும் ஹெடிரோசெரெஸ் பற்றிய வண்ணப் படங்களுடன்கூடிய விளக்கம் (1872).
[பக்கம் 31-ன் படங்கள்]
ஹெர்மன் ஸ்ட்ரெக்கர்
[படத்திற்கான நன்றி]
Herman Strecker: From the book The Passing Scene, Vol. 8/The Historical Society of Berks County
[பக்கம் 31-ன் படங்கள்]
(உண்மையான அளவு)