பேசுவது யாரோ?
பேசுவது யாரோ?
நாடக மேடையின் திரைச்சீலை விலகுகிறது. மேடையில் ஒருவர் பொம்மையுடன் காட்சியளிக்கிறார். அவர் அந்த பொம்மையிடம் ஜோக் அடிக்கிறார், பொம்மையும் பதிலுக்கு இன்னொரு ஜோக் சொல்கிறது. அனைவருக்கும் ஆச்சரியம், பொம்மை உயிருடன் இருப்பதைப் போலவும், சொந்த குரலில் பேசுவதைப் போலவும் தோன்றுகிறது. உண்மை என்னவெனில் அந்த நபர்தான் பொம்மையின் “குரலில்” பேசுகிறார், இந்தக் கலைஞரை வென்ட்ரிலாக்கிஸ்ட் என்றழைக்கின்றனர். அவ்வாறு அவர் பொம்மையின் குரலில் பேசும்போது கடின முயற்சி எடுத்து தன் உதடுகள் அசையாமல் பார்த்துக்கொள்கிறார்.
இந்த விநோதக் கலையைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? நேக்கோ எஸ்ட்ரடா என்பவர் வென்ட்ரிலாக்கிஸ கலையில் 18 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். உங்களுக்காக விழித்தெழு! இந்த நிபுணரை பேட்டி கண்டது.
வென்ட்ரிலாக்கிஸத்தில் என்னென்ன வகைகள் உள்ளன?
வென்ட்ரிலாக்கிஸ கலையில் பல வகைகள் இருக்கின்றன. வித்தை செய்பவருடைய குரல் அருகில் இருந்து வருவதைப் போல் இருந்தால் அதை அருகாமை வென்ட்ரிலாக்கிஸம் எனவும் தூரத்தில் இருந்து வருவதைப் போல் இருந்தால் அதை தூர வென்ட்ரிலாக்கிஸம் எனவும் அழைக்கின்றனர். உதாரணத்திற்கு, அவரது கால்களின் அருகே இருக்கும் பொம்மையிடமிருந்து அந்த சப்தம் வருவதைப்போல் இருந்தால் அது அருகாமை வகையை சேரும். வென்ட்ரிலாக்கிஸ கலைஞரால், மூடிவைத்திருக்கும் பெட்டிக்குள்ளிருந்து யாரோ முனகுவதைப் போன்ற சப்தம் கொடுக்கவும் முடியும். சில கலைஞர்கள் ஒரு குழந்தை அழுவதைப்போல அல்லது ஒரு மிருகம் கத்துவதைப்போலவும் சப்தம் கொடுப்பார்கள். இந்த வித்தைகளை செய்யும்போது அவர்கள் உதடுகளை அசைப்பதே இல்லை.
இந்தக் கலையில் ஒருவர் நிபுணராக இருந்தால் அவரால் மற்றவர்களை எளிதில் நம்ப வைத்துவிட முடியும். ஒரு வென்ட்ரிலாக்கிஸ்ட் என்ன செய்தார் என்பதைப் பற்றிய பின்வரும் அறிக்கையை கவனியுங்கள்: வைக்கோல் வண்டி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வைக்கோல் கட்டுகளுக்கு கீழிருந்து உதவிக்காக கதறும் ஒரு முனகல் சப்தம். உடனே அருகில் இருந்தவர்கள் வண்டியை நிறுத்தி ‘முனகியவரை’ மீட்பதற்காக வைக்கோல் கட்டுகளை அவசர அவசரமாக இறக்கினர். கட்டுகளுக்குக் கீழே பரிதாபத்திற்குரிய நபர் இருப்பார் என்று எதிர்பார்த்தனர், ஆனால் யாருமே இல்லை! எப்படி இருக்க முடியும்? அதுதான் அந்த வென்ட்ரிலாக்கிஸ்ட்டின் ‘முனகலாயிற்றே.’
இந்த வென்ட்ரிலாக்கிஸம் எவ்வாறு வளர்ந்திருக்கிறது?
இறந்தவர்களோடு தொடர்பு கொள்ள விரும்பும், மூட நம்பிக்கையுள்ள ஜனங்களை ஏமாற்றுவதற்காகவே இந்தக் கலை பல ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகிறது. மனிதனுடைய திறமையின் வெளிக்காட்டே இந்தக் கலை என்பதை காலப்போக்கில் உலகம் அறிந்துகொண்டது. அதன் பின் பொழுதுபோக்கில் வென்ட்ரிலாக்கிஸத்திற்கு ஓர் அழியாத இடம் கிடைத்தது. இன்று சிலசமயங்களில் கல்வி கற்பிப்பதற்கும் இந்தக் கலை பயன்படுத்தப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக, இந்தக் கலைஞர்கள் தங்கள் விநோதத் திறமையை பார்வையாளர் முன் வித்தியாசப்பட்ட முறைகளில் வெளிக்காட்டினர். 20-ஆம் நூற்றாண்டில் இந்தக் கலைஞர்கள் மர பொம்மையோடு பேசும் முறை பிரபலமானது.
வென்ட்ரிலாக்கிஸத்தில் உங்களுக்கு எவ்வாறு ஈடுபாடு வந்தது?
இதைக் கற்றுக்கொள்வதன் மூலம் ஜனங்களை சந்தோஷமாக சிரிக்க வைக்க முடியும் என்பதை புரிந்துகொண்டதால் இந்தக் கலையில் ஈடுபாடு வந்தது. சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் இருந்த ஒரு வியாபாரி இந்தக் கலையைப் பற்றி விளக்கினார்; “வென்ட்ரிலாக்கிஸ்ட்” என்ற வார்த்தை லத்தீன் மொழியிலிருக்கும் வென்டர், லாக்கி என்ற வார்த்தைகளிலிருந்து வந்தது என்பதையும் அதன் அர்த்தம் “வயிற்றிலிருந்து பேசுவது” என்பதையும் அவர் சொன்னபோது சுவாரஸ்யமாக கேட்டேன். ஏனெனில், வயிற்றை வித்தியாசமாக உபயோகிப்பதன் மூலம் இந்தக் கலையை செயல்படுத்த முடியும் என்பதாக முன்பு நினைத்தனர். சில அடிப்படை விஷயங்களை அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார்.
அடுத்த நாளே கற்ற வித்தையை பரிசோதிக்க முடிவு செய்தேன். தூரத்திலிருந்து குரல் வருவதைப் போன்ற வென்ட்ரிலாக்கிஸ முறையை பயன்படுத்தி பள்ளியில் இருந்த ஒலிபெருக்கியில் என் பெயர் கூப்பிடப்படுவதைப் போன்ற சத்தத்தை ஏற்படுத்தினேன். கைமேல் பலன்
கிடைத்தது! வகுப்பிலிருந்து யாரும் சந்தேகிக்காத வண்ணம் வெளியே வந்து விட்டேன். அதன் பின்னர் வென்ட்ரிலாக்கிஸத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள அஞ்சல் வழி கல்வி மூலம் பயிற்சி பெற்றேன், பின்னர் அதையே தொழிலாக செய்ய ஆரம்பித்தேன்.வென்ட்ரிலாக்கிஸ கலையில் உங்கள் பங்கு?
விருந்துகளிலும், வென்ட்ரிலாக்கிஸ மாநாடுகளிலும், டெலிவிஷனிலும் சில சமயம் நான் வென்ட்ரிலாக்கிஸ நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன்; இருந்தாலும் பிரதானமாக நான் பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்கே என் திறமைகளை பயன்படுத்துகிறேன். இதற்காக, பள்ளிகளில் பிள்ளைகளையும் ஆசிரியர்களையும் கூட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வார்கள். இந்நிகழ்ச்சிகளில் நகைச்சுவைதான் முக்கிய பாகம் வகிக்கும். ஒரு சமயம், உடல் சுத்தம் அவசியம் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக ஒரு நிகழ்ச்சி. அதில் நான் என் மரபொம்மையான மக்லோவியோவோடு பேசுவதைப் போன்ற ஒரு காட்சி. என் பொம்மையை பிள்ளைகளிடம் காட்டி, இவன் காலையில் முட்டைதான் சாப்பிட்டான்னு என்னால கரெக்டா சொல்ல முடியும், ஏன்னா, அவன் பல்லே விளக்கல்ல என்பேன். உடனடியாக மக்லோவியோ, “ஐய்யையோ, தப்பு தப்பு . . . அது நான் நேத்து சாப்பிட்ட முட்டை!” என்பான்.
வென்ட்ரிலாக்கிஸ வித்தையின் இரகசியம் என்ன?
வென்ட்ரிலாக்கிஸ கலைஞர்களாகிய நாங்கள் குரலை வேறு இடத்திலிருந்து வர வைக்கிறோம் என்பதாக சொல்லப்படுகிறது. அது உண்மையல்ல. நாக்கை குறிப்பிட்ட நிலைகளில் வைத்து பேசுவதன் மூலம் உதட்டசைவால் மட்டுமே வெளிப்படும் எழுத்துக்களின் சப்தத்தை உதட்டை அசைக்காமல் வெளிப்படுத்துகிறோம். மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் தசைப் பகுதியிலிருந்து மூச்சுவிட்டுப் பழகுவது ஒரு கலை. அவ்வாறு மூச்சு விடுவதால் சப்தம் வேறு எங்கிருந்தோ கேட்பதாக தோன்றும்.
சப்தம் எங்கிருந்து வருகிறது என்பதையும் எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறது என்பதையும் தெளிவாக தெரிந்துகொள்ள பொதுவாக ஜனங்களின் காதுகள் பயிற்றுவிக்கப்படவில்லை. இந்த விஷயங்களை தெரிந்து கொள்ள அவர்கள் தங்கள் கண்களின் தயவையே நாடுகின்றனர். அதனால்தான் ஜனங்களிடம் வென்ட்ரிலாக்கிஸ வித்தை பலிக்கிறது. இதை பின்வரும் உதாரணத்தின் மூலம் விளக்கலாம்: ஆம்புலன்ஸ் வண்டியின் சைரன் சத்தம் கேட்கும்போது அந்த வண்டி தூரத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறது என்ற செய்தியை உங்கள் காதுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த வண்டி தற்போது எவ்வளவு தொலைவில் இருக்கிறது? எந்த திசையிலிருந்து வந்துகொண்டிருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு பதில் வேண்டும் என்றால் அந்த வண்டியின் விளக்குகளை உங்கள் கண்களால் பார்த்தாக வேண்டும்.
இதை நன்கு அறிந்த வென்ட்ரிலாக்கிஸ கலைஞர் குறிப்பிட்ட அளவில் சப்தம் செய்கிறார். பிறகு, எந்த இடத்திலிருந்து சப்தம் வந்ததாக ஜனங்கள் நினைக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அந்த இடத்திற்கு அவர்கள் கவனத்தைத் திருப்புகிறார்.
வென்ட்ரிலாக்கிஸ கலையை கற்க விரும்புவோருக்கு நீங்கள் கொடுக்கும் ஆலோசனை?
முதலாவது உங்கள் குறிக்கோளை கண்டுணர வேண்டும். உங்கள் குறிக்கோளை தடுக்கும் எதையும் குறுக்கே வர நீங்கள் அனுமதிக்கக்கூடாது. இதை நான் குறிப்பிடுவதற்கான முக்கிய காரணம், மற்ற பொழுதுபோக்கு அம்சங்களைப் போலவே வென்ட்ரிலாக்கிஸத்தையும் கீழ்த்தரமாக பயன்படுத்த முடியும். அன்பையும் வேடிக்கையையும் வெளிப்படுத்துவதற்கு வென்ட்ரிலாக்கிஸ கலையில் நிறைய வாய்ப்பு இருக்கிறது என்பதால்தான் எனக்கு இந்தக் கலை மீது அலாதி பிரியம். எனவே இந்த நோக்கத்திற்கு இசைவான வசனங்களையும் காட்சிகளையும் மட்டுமே அமைத்துக்கொள்வேன்.
வென்ட்ரிலாக்கிஸ கலையில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றால் இந்தக் கலையின் நுணுக்கம், கற்பனை, பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நுணுக்கங்களை புத்தகங்கள் மூலமாக அல்லது வீடியோ மூலமாக கற்றுக்கொள்ளலாம். அடுத்ததாக, உங்கள் கற்பனையை பயன்படுத்தி உங்கள் பொம்மைக்கு ஒரு பெயர் சூட்டி, அது உயிருள்ள நபர்போல் தோன்றும் வண்ணம் செய்வது அவசியம். கடைசியாக செய்ய வேண்டியது பயிற்சி. எந்தளவிற்கு நீங்கள் பயிற்சி செய்கிறீர்களோ அந்தளவிற்கு அதில் கரைகண்ட நிபுணராகலாம்.
(g01 1/08)