Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அனைவருக்கும் தேவைப்படும் காப்பீடு

அனைவருக்கும் தேவைப்படும் காப்பீடு

அனைவருக்கும் தேவைப்படும் காப்பீடு

நீங்கள் வாழும் இடத்தில் காப்பீட்டு வசதி இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அனைவருக்கும் தேவையானதும் அனைவரும் செய்து வைக்க வேண்டியதுமான ஒருவகை காப்பீடு இருக்கிறது. காப்பீடு என்பது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் ஓர் ஏற்பாட்டை குறிப்பதால், அந்த வகையான காப்பீட்டிலிருந்து நீங்கள் எப்படி பயன் அடையலாம்?

நீங்கள் எதிர்ப்படக்கூடிய இடர்ப்பாடுகளை குறைக்க நடைமுறையான படிகளை எடுப்பதன் மூலம் பயன் அடையலாம். “காலமும் எதிர்பாராத சம்பவமும்” எவரையும் பாதிக்கலாம் என்று பைபிள் குறிப்பிடுகிறது. (பிரசங்கி 9:11, NW) என்றாலும், அநாவசியமாக ஆபத்துக்களுக்கு உள்ளாகாமல் இருப்பதன் மூலம், சேதம் அல்லது இழப்பு ஏற்படுவதை குறைக்கலாம்.

எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்

நடைமுறையான ஞானத்தைக் காட்டுவதுதானே ஒரு பாதுகாப்பாக அமையும். ஓரளவு பொருளாதார செழிப்புள்ள காலத்தில், ஆத்திர அவசரத்திற்கு உதவும்படி எதையாவது சேமித்து வைக்க முடியும். பண்டைய காலத்தில், கடவுள் பயமுள்ள மனிதனாகிய யோசேப்பு, தன்னை ‘விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனாக’ நிரூபித்தார்; அமோக விளைச்சலுள்ள காலத்தில் எகிப்து தேசம் முழுவதற்கும் தேவையான உணவு தானியங்களை சேர்த்து வைப்பதன் மூலமே அவர் அப்படி நிரூபித்தார். தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, யோசேப்பின் செயல்கள் எகிப்தியரின் தேவைகளை மட்டுமல்லாமல் அவரது சொந்த குடும்பத்தாரின் தேவைகளையும் பூர்த்தி செய்தன.​—ஆதியாகமம் 41:33-36.

பொருட்களை மிதமாக பயன்படுத்துவதும் ஒரு பாதுகாப்பாக அமையும். நவீன பாணி, சாதனங்கள், பொழுதுபோக்கு ஆகியவற்றை தொடர்ந்து நாடித் தேடாமல் இருந்தால், பணத்தையும் மிச்சப்படுத்தலாம், அநாவசிய கவலையையும் குறைக்கலாம். நவீனத்தையே நாடும் போக்கு எவ்விதத்திலும் நமக்கு உண்மையான பாதுகாப்பளிக்கப் போவதில்லை. ஏற்கெனவே சிந்தித்த விதமாகவே, ஒருவருக்கு எவ்வளவு அதிகமாக பொருளுடைமைகள் இருக்கிறதோ திருட்டுபோவதற்கும் இழப்பு ஏற்படுவதற்குமான சாத்தியமும் அவ்வளவு அதிகமாக இருக்கும்.​—லூக்கா 12:⁠15.

பாதுகாப்பைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருங்கள்

பாதுகாப்பைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருப்பதன் மூலமே வாழ்க்கையில் எத்தனையோ ஆபத்துக்களுக்கு ஆளாவதைக் குறைக்கலாம். ஒவ்வொருவரும் கவனமாகவும் பாதுகாப்பான வேகத்திலும் கார் ஓட்டிச் சென்றிருந்தால், எத்தனை சோகமான கார் விபத்துக்களை தவிர்த்திருக்கலாம்! மிகவும் அசதியாய் இருக்கையிலோ மது அருந்திய பின்னரோ வண்டி ஓட்டாமல் இருந்தால் எத்தனை உயிர்கள் பாதுகாக்கப்படும் என்பதையும் எண்ணி பாருங்கள். வாகன ஓட்டுதலைக் குறித்ததில், நாம் தவிர்க்கக்கூடிய இடர்ப்பாடுகள் இன்னுமநேகம்.

உதாரணமாக, அநேக நாடுகளில் வாகனம் ஓட்டும்போது செல்லுலர் ஃபோனை பயன்படுத்தக் கூடாது என்று சட்டப்பூர்வமாக தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அப்படி பயன்படுத்தினால் ஒரு விபத்து ஏற்படுவதன் சாத்தியம் நான்கு மடங்கு அதிகரிப்பதாக ஒரு ஆய்வு தெரியப்படுத்தியது. இது, இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவு 0.1 சதவீதமாக இருக்கையில் வாகனம் ஓட்டும்போது விபத்திற்குள்ளாகும் சாத்தியம் எவ்வளவோ அவ்வளவாகும். அநேக இடங்களில், ஒருவர் உடலில் இந்தளவு ஆல்கஹால் இருந்தால், மிக அதிக அளவு குடித்திருப்பதாக கருதப்பட்டு வாகனம் ஓட்ட அனுமதிக்கவே மாட்டார்கள்.

சீட் பெல்ட்டுகளை தவறாமல் பயன்படுத்துவதும் ஓட்டுநரும் பயணிகளும் உயிரிழக்கும் ஆபத்தைக் குறைக்கிறது. சீட் பெல்ட்டுகள், காற்று பைகள் போன்ற பாதுகாப்பு சாதனங்களை வைத்திருப்பதாலோ காப்பீட்டை வைத்திருப்பதாலோ துணிந்து செயல்படலாம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அப்படிப்பட்ட நினைப்பே நிறைய விபத்துகளுக்கு வழிநடத்தியிருப்பதாக ஆய்வு காண்பிக்கிறது.

பாதுகாப்பைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருப்பது வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் பயன்தரும் காப்பீடாக செயல்படும். நீங்கள் வசிக்கிற இடமும் வேலை செய்யும் இடமும் நேர்த்தியாகவும் எளிதில் ஆபத்துக்குட்படாத நிலையிலும் இருக்கின்றனவா? உங்களை சுற்றி ஒரு நோட்டம்விடுங்கள். நடக்கும் வழியில் யாராவது தடுக்கி விழும் வகையில் ஏதாவது கிடக்கிறதா? கூரான பொருட்களோ, அடுப்புகள், ஹீட்டர்கள், இஸ்திரிப் பெட்டிகள் போன்ற சூடான சாதனங்களோ யாரையாவது கீறிவிடும் அல்லது சுட்டுவிடும் இடத்தில் இருக்கின்றனவா? பேப்பரோ ஏதாவது எரியக்கூடிய பொருட்களோ குவிந்து கிடக்கின்றனவா? முக்கியமாக பிள்ளைகளுக்கு அபாயம் ஏற்படுத்தும் காரியங்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். உதாரணமாக, மதுபானங்களையும் சுத்தம் செய்ய பயன்படுத்தும் விஷத்தன்மையுள்ள பொருட்களையும் சிறு பிள்ளைகள் சுலபமாக எடுக்க முடியாத இடங்களில் வைத்திருக்கிறீர்களா?

உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளுங்கள்

உங்கள் உடல்நலத்துக்கு போதிய கவனம் செலுத்துவதன் மூலம், நோய்வாய்ப்படும் அபாயத்தை குறைக்கலாம். இந்த விஷயத்தில், அறிவு ஒருவகையான காப்பீடாக செயல்படும். உங்கள் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் காரியங்களைப் பற்றி தெரிந்து வைத்திருங்கள். ஏதாவது உடல்நல பிரச்சினைகள் எழும்பினால் உடனடியாக கவனியுங்கள். மிக முக்கியமாக, உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்ளும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளுங்கள். “வரும்முன் காப்போம்” என்ற பழஞ்சொல்லை மறந்துவிடாதீர்கள்.

பைபிள் நியமங்களுக்கு இசைவாக வாழ்வதன் மூலம் உடலுக்கு கேடு விளைவிக்கும் பழக்கங்களையும் வாழ்க்கை பாணிகளையும் தவிர்ப்பதற்குரிய நல்ல தகவல்களை விழித்தெழு! பத்திரிகை பல காலமாக அளித்து உற்சாகப்படுத்தி வந்திருக்கிறது. உதாரணமாக, சுத்தமாக இருப்பது, சமசீர் உணவு, போதிய தூக்கம், ஒழுங்கான உடற்பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவம், மன அழுத்தத்தையும் வாழ்க்கையின் வேகத்தையும் கட்டுப்படுத்துவது போன்ற காரியங்கள் விழித்தெழு!-வில் சிந்திக்கப்பட்ட விஷயங்களில் சில.

இன்றியமையாத ஒரு காப்பீடு

இந்த அபூரண உலகில், காப்பீடு என்பது மிகவும் நடைமுறையான ஏற்பாடாக இருக்கும்; ஆனால், எந்தவொரு காப்பீடு பாலிஸியும் நம்மை முழுமையாக பாதுகாக்கவோ நம் இழப்புகளுக்கு முழுவதும் ஈடுசெய்யவோ முடியாது. என்றாலும், காப்பீடு இருந்தாலும் இல்லையென்றாலும், தாங்கள் தனியாக உதவியின்றி விடப்பட மாட்டார்கள் என்று உறுதியாக சில மக்கள் நம்புகிறார்கள். ஏன்? ஏனெனில் பேரழிவுகள் ஏற்படும்போது, இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள், அதாவது இயேசுவின் பிதாவாகிய யெகோவா தேவனை சேவிக்கிறவர்கள், முடிந்தவரைக்கும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து பாரங்களை இலேசாக்குகிறார்கள்.​—சங்கீதம் 83:17; யாக்கோபு 2:15-17; 1 யோவான் 3:16-18.

மேலும், யெகோவா தாமே தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். பைபிள் சங்கீதக்காரர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் [“யெகோவா,” NW] என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (சங்கீதம் 27:10) ஜீவ ஊற்றாக இருக்கிற காரணத்தால், யெகோவாவால் இறந்தவர்களை உயிர்த்தெழுப்ப முடியும்; பைபிள் சொல்லுகிறபடி, உயிர்த்தெழுப்புவதற்கான வல்லமையை அவர் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 36:9; யோவான் 6:40, 44) ஆனாலும், அனைவரும் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள் என்று கடவுளுடைய வார்த்தை குறிப்பிடுகிறது. (யோவான் 17:12) அப்படியென்றால், உயிர்த்தெழுதலில் கடவுள் நம்மை நினைவுகூருவார் என்று நிச்சயப்படுத்திக்கொள்வது எப்படி?

இயேசு தம்முடைய பிரபல மலைப்பிரசங்கத்தில், மிகவும் நம்பகரமான காப்பீட்டை பற்றி சொன்னார். அவர் சொன்னதாவது: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.”​—மத்தேயு 6:19-21.

தவறாமல் பணத்தைச் சேமித்து வருவது, வயதாகும்போது இன்னும் வசதியான வாழ்க்கை வாழ உதவியாக இருக்கும் என்று மக்கள் அடிக்கடி யோசிக்கின்றனர். என்றாலும், உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்கும் ஒரு வகை காப்பீட்டை இயேசு சுட்டிக்காண்பித்தார். அது கணக்கிடமுடியாத மதிப்புடையது; அது ஒருபோதும் ஏமாற்றமளிக்காது! அவர் இவ்வாறு விளக்கினார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”​—யோவான் 17:⁠3.

கடவுளைப் பற்றியும் அவருடைய குமாரனைப் பற்றியும் திருத்தமான அறிவை பெற்று, நாம் கற்றுக்கொள்வதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம், கடவுளிடம் ஒரு நல்ல பதிவை ஏற்படுத்தி வருவோம். (எபிரெயர் 6:10) தங்கள் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் போதனையில் நம்பிக்கை வைத்திருந்த அப்போஸ்தலர்கள் பேதுருவும் யோவானும் இந்த தற்போதைய மனித ஆட்சிமுறை முடிவடையும் என்பதை வலியுறுத்தினர். இருந்தாலும், யோவான் இவ்வாறு விளக்கினார்: “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”​—1 யோவான் 2:17; மத்தேயு 24:3, 14; 2 பேதுரு 3:7, 13.

நாம் கடவுளை சேவித்து வந்து, இறந்துபோனால், அவர் நம்மை உயிர்த்தெழுப்புவார், அல்லது இந்த காரிய ஒழுங்குமுறைக்கு அவர் முடிவைக் கொண்டுவரும் வரை நாம் உயிரோடு இருந்தால், நம்மை பாதுகாத்து அவருடைய நீதியுள்ள புதிய உலகில் வாழ வைப்பார் என்று நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். உண்மையிலேயே, ‘[நம்முடைய] கண்ணீர் யாவையும் துடைத்து, சகலத்தையும் புதிதாக்குவதே’ கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதி. (வெளிப்படுத்துதல் 21:4, 5) கடவுளை சேவிப்பதும் அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதுமே உண்மையில் எல்லா காப்பீடுகளிலும் தலைசிறந்த காப்பீடு. அது அனைவருக்கும் கிடைக்கத்தக்க காப்பீடாகவும் இருக்கிறது.

(g01 2/22)

[பக்கம் 89-ன் படங்கள்]

பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருப்பது ஒருவகை காப்பீடு

[பக்கம் 10-ன் படம்]

கடவுளைப் பற்றி கற்றுக்கொள்வதும் அவருடைய சித்தத்தைச் செய்வதுமே எதிர்காலத்திற்கான மிகச் சிறந்த காப்பீடு